06.02.118 – மயிலாப்பூர் - உலகமிதில் நாளும் - (வண்ணம்)
2009-12-05
6.2.118) உலகமிதில் நாளும் (மயிலாப்பூர்)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதான )
(எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)
உலகமிதில் நாளும் நிலையிலதி லாசை
.. .. உடையனென வாகி .. அதனாலே
.. உறுபிணிக ளோடு மிகுதுயர னாகி
.. .. உழலுமடி யேனை .. மறவாதே
இலயமிடு தூய மலரனைய தாளை
.. .. இனியதமிழ் மாலை .. அவையோடே
.. இருபொழுது மோதி, இடர்களில னாகி
.. .. இருநிலனில் வாழ .. அருளாயே;
தலைமலியு மாலை மணமலர்க ளாறு
.. .. தலையிலழ காக .. அணிவோனே
.. தலைகலனு மாக இடுபலியை நாடு
.. .. தலைவதிரு நீல .. மிடறோனே
மலைமகளொர் பாதி எனமகிழு மீச
.. .. மழவிடைய தேறி .. வருவோனே
.. வலியவினை தீர எளியவழி யாகி
.. .. மயிலைநகர் மேவு .. பெருமானே.
பதம் பிரித்து:
உலகம் இதில் நாளும் நிலை இலதில் ஆசை
.. .. உடையன் என ஆகி அதனாலே,
.. உறு பிணிகளோடு மிகு துயரனாகி
.. .. உழலும் அடியேனை மறவாதே;
இலயம் இடு தூய மலர் அனைய தாளை
.. .. இனிய தமிழ் மாலை அவையோடே
.. இரு பொழுதும் ஓதி, இடர்கள் இலன் ஆகி
.. .. இருநிலனில் வாழ அருளாயே;
தலை மலியும் மாலை, மண மலர்கள், ஆறு,
.. .. தலையில் அழகாக அணிவோனே;
.. தலை கலனும் ஆக, இடு பலியை நாடு
.. .. தலைவ; திரு நீல மிடறோனே;
மலைமகள் ஒர் பாதி என மகிழும் ஈச;
.. .. மழ விடையது ஏறி வருவோனே;
.. வலிய வினை தீர எளிய வழி ஆகி,
.. .. மயிலை நகர் மேவு பெருமானே.
சொற்பொருள்:
நிலை இலதில் - நிலை இல்லாததில்;
உறு - மிகுந்த;
பிணி - பந்தம்/கட்டு; நோய்;
மறவாதே - மறந்துவிடாதே; மறவாமல்;
இலயம் - கூத்து (A dance);
இருநிலன் - இருநிலம் - பரந்த உலகம்;
மலிதல் - மிகுதல்;
தலை மலியும் மாலை - கரோடி - சிரமாலை (Garland of skulls);
கலன் - கலம் - உண்கலன்; பிச்சைப்பாத்திரம்;
நீல மிடறோன் - நீலகண்டன்;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;
மழ விடை - இளைய எருது;
உலகம் இதில் நாளும் நிலை இலதில் ஆசை உடையன் என ஆகி அதனாலே - இவ்வுலகில் நிலையில்லாதவற்றின்மேல் எப்பொழுதும் ஆசை கொண்டு, அதனால்;
உறு பிணிகளோடு மிகு துயரனாகி உழலும் அடியேனை மறவாதே - மிகுந்த பந்தங்களுக்கு ஆட்பட்டுப் பெரும் துயரம் உடையவன் ஆகி வருந்தும் என்னை மறந்துவிடாதே; (அப்பர் தேவாரம் - 5.57.1 - "திருக்கோளிலி மன்னனே அடியேனை மறவலே" - மறவல் = மறவாதே);
இலயம் இடு தூய மலர் அனைய தாளை இனிய தமிழ் மாலை அவையோடே இரு பொழுதும் ஓதி - கூத்தாடும் உன் தூய மலர் போன்ற திருவடிகளைக் காலையும் மாலையும் இனிய தமிழ்ப் பாமாலைகளால் போற்றி;
இடர்கள் இலன் ஆகி இருநிலனில் வாழ அருளாயே - எவ்வித இடரும் இன்றி இப்பரந்த உலகில் வாழ்வதற்கு அருள்வாயாக!
தலை மலியும் மாலை, மண மலர்கள், ஆறு, தலையில் அழகாக அணிவோனே - மண்டையோடுகளால் ஆன மாலையையும், வாசம் கமழும் பூக்களையும், கங்கையையும் தலையில் அழகுறச் சூடுபவனே;
தலை கலனும் ஆக, இடு பலியை நாடு தலைவ - பிரமனது கபாலத்தைப் பாத்திரமாகக் கொண்டு அதில் இடப்படும் பிச்சையை விரும்பும் தலைவனே; (அப்பர் தேவாரம் - 4.9.1 - "தலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்");
திரு நீல மிடறோனே - திருநீலகண்டனே;
மலைமகள் ஒர் பாதி என மகிழும் ஈச - பார்வதியை உடலில் ஓர் கூறாக உடையவனே;
மழ விடையது ஏறி வருவோனே - இளைய எருதினை வாகனமாக உடையவனே;
வலிய வினை தீர எளிய வழி ஆகி, மயிலை நகர் மேவு பெருமானே - வலிய வினைகள் எல்லாம் தீர்வதற்கு ஓர் எளிய வழியாகி மயிலாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment