Monday, December 13, 2021

06.01.106 - சிவன் - வீரன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2009-12-14

06.01.106 - சிவன் - வீரன் - சிலேடை

-----------------------------------------------

சிலையதன் நாணரவஞ் செய்யும் பகைவர்

அலையுமதில் மாயும் அபயம் - நிலவிடும்

கையில் வளையும் தனுக்காட்டும் ஓர்வீரன்

மையணி கண்டத்தெம் மான்.


சொற்பொருள்:

சிலை - 1) வில்; 2) மலை;

அரவம் - 1) ஒலி; 2) பாம்பு;

அலையுமதில் - 1) அலையும் அதில்; 2) அலையும் மதில்;

வளையும் - 1) வளைகின்ற; 2) வளையலும்;

தனு - 1) வில்; 2) உடல்;

மை - கருமை;


வீரன் வில்:

சிலையதன் நாண் அரவம் செய்யும் - வில்லினது நாண் ஒலி எழுப்பும்;

பகைவர் அலையும் அதில் மாயும் - அலைபோல் வரும் பகைவர் படையும் அதனால் அழியும்;

அபயம் நிலவிடும் - அச்சம் இல்லாத நிலை இருக்கும்;

கையில் வளையும் தனுக் காட்டும் - (அந்த அபய நிலையைக்) கையில் (ஏந்திப் போர்செய்யும்பொழுது) வளைகின்ற வில் காட்டும்;

ஓர் வீரன் வில் - ஒரு வீரன்;


சிவன்:

சிலையதன் நாண் அரவம் செய்யும் - மேருமலை என்ற வில்லினது நாண் பாம்பு ஆகும்;

பகைவர் அலையும் மதில் மாயும் - அசுரர்களது திரிகின்ற மும்மதில்களும் (அந்த வில்லால்) அழியும்;

அபயம் நிலவிடும் - (தேவர்களுக்கு) அச்சமின்மை கிட்டும்;

கையில் வளையும் தனுக் காட்டும் - கையில் வளையலையும் திருமேனி காட்டும்; (அர்த்தநாரீஸ்வரக் கோலம்);

மை அணி கண்டத்து எம்மான் - கருமையைக் கண்டத்தில் அணிந்த எம் பெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment