06.01 – சிவன் சிலேடைகள்
2009-11-18
06.01.103 - சிவன் - சீப்பு - சிலேடை
-----------------------------------------------
தலையாய தான மலையும் கரத்திற்
கலையும் கருங்குழலி யோர்பால் - நிலைகொள்ளும்
பல்லுருக் கொள்கின்ற பண்பிருக்கும் ஏற்றின்மேற்
செல்லும் சிவபெருமான் சீப்பு.
சொற்பொருள்:
தானம் - இடம்; உறைவிடம்;
அலை - 1) அலைதல்; / 2) நதியின் அலை;
கலை - 1) கலைதல் (குலைதல்); / 2) மான்;
கருங்குழலியோர் - 1) கரிய கூந்தலை உடைய பெண்கள்; / 2) பார்வதி ஒரு;
பால் - 1) வேற்றுமை உருபு - இடம்; 2) பக்கம்; பகுதி
பல் - 1) சீப்புப்பல் (tooth of a comb); / 2) பல
ஏற்றின் - 1) உயர்த்தினால்; தூக்கினால்; / 2) ஏறு - எருது;
சீப்பு:
தலை ஆய தானம் அலையும் - தலை என்ற இடத்தில் அங்குமிங்கும் செல்லும்;
கரத்தில் கலையும் கருங்குழலியோர்பால் நிலைகொள்ளும் - கலையும் கரிய கூந்தலை உடைய பெண்களிடம் கையில் இருக்கும்;
பல் உருக் கொள்கின்ற பண்பு இருக்கும் - சீப்புப்பல் இருக்கும்;
ஏற்றின் மேல் செல்லும் - உயர்த்தினால் மேலே போகும்; (-- அல்லது -- 'ஏற்றின்மேற் செல்லும்' என்பதைச் சிவனுக்கு மட்டுமே பொருத்திக்கொள்ளலாம்);
சீப்பு.
சிவன்:
தலை ஆய தானம் அலையும் / மலையும் - திருமுடிமேல் (கங்கையின்) அலையும்; (-- அல்லது-- தலையாய உறைவிடமாகக் கயிலை மலையும்);
கரத்தில் கலையும் - கையில் மானும்;
கருங்குழலி ஓர் பால் நிலைகொள்ளும் - கரிய கூந்தலை உடைய பார்வதி ஒரு பக்கமும் இருக்கும்;
பல் உருக் கொள்கின்ற பண்பு இருக்கும் - பல்வேறு வடிவங்கள் கொள்ளும் இயல்பும் இருக்கும்;
ஏற்றின்மேல் செல்லும் சிவபெருமான் - இடபவாகனனாகிய சிவபெருமான்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment