Monday, December 13, 2021

06.01.105 - சிவன் - அணு - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2009-12-13

06.01.105 - சிவன் - அணு - சிலேடை

-----------------------------------------------

அளப்பரும் சத்தியோ டுள்ளபொருள் ஆகி

வளப்பநல்கும் மாய்விடம் மன்னும் - களத்தையும்

காட்டும் நிறைந்தும் கரந்திருக்கும் கானகத்தே

ஆட்டுகந்த அண்ணல் அணு.


சொற்பொருள்:

சத்தி - சக்தி - 1) ஆற்றல்; 2) உமை;

உள்ள பொருள் - 1) இருக்கின்ற பொருள்; 2) மெய்ப்பொருள்;

வளப்பம் - நன்மை;

மாய்த்தல் - மறைத்தல்; கொல்லுதல்; அழித்தல்;

மாய்வு - சாவு;

மாய்விடம் - 1) மாய்வு இடம்; 2) மாய் விடம் - வினைத்தொகை - கொல்லும் விஷம்; மறைத்த விஷம்;

மன்னுதல் - நிலைபெறுதல்; மிகுதல்;

களம் - 1) இடம்; போர்க்களம்; 2) கழுத்து; கருமை;

கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்;

கானகம் - சுடுகாடு;

ஆட்டு - ஆடல்; கூத்து;


அணு:

அளப்பு அரும் சத்தியோடு உள்ள பொருள் ஆகி - அளவற்ற ஆற்றலை உள்ளடக்கிய வஸ்து ஆகி;

வளப்பம் நல்கும் - பல நன்மைகள் செய்யும்;

மாய்வு இடம் மன்னும் களத்தையும் காட்டும் - (குண்டின் வடிவத்தில்) சாவின் இடம் நிலைத்த போர்க்களத்தையும் காட்டும்;

நிறைந்தும் கரந்து இருக்கும் - எப்பொருளிலும் நிறைந்தாலும் காண இயலாதபடி (மிகவும் நுண்ணியதாக) இருக்கும்;

அணு.


சிவன்:

அளப்பு அரும், சக்தியோடு உள்ள பொருள் ஆகி - "அளப்பு அரும் பொருள் & சக்தியோடு உள்ள பொருள் ஆகி" - அளவில்லாதவன் ஆகி, உமையோடு கூடி இருக்கும் மெய்ப்பொருள் ஆகி;

வளப்பம் நல்கும் - நன்மை அளிப்பவன்;

மாய் விடம் மன்னும் களத்தையும் காட்டும் - கொல்லும் விஷம் தங்கிய கழுத்தைக் காட்டுபவன்;

நிறைந்தும் கரந்து இருக்கும் - எங்கும் நிறைந்து இருந்தாலும் காணற்கு அரியவன்;

கானகத்தே ஆட்டு உகந்த அண்ணல் - சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.81.6 - "சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment