06.01 – சிவன் சிலேடைகள்
2009-12-24
06.01.108 - சிவன் - வாழை இலை - புறச்சமயிகள் - சிலேடை
-----------------------------------------------
(இப்பாடலை மூன்று விதமாகப் பொருள்கொள்ளல் ஆம்)
கூறார்மெய் வண்ணங் கொடுதரையை உற்றாலு
மாறா மதியோடு வந்தவர் - வேறாப்
பொருள்பட வென்றும் புகல்வார் சடையோ
டிருப்பவர்வான் வாழையிலை யென்று.
சொற்பொருள்:
கூறு - பாதி; பங்கு;
கூறுதல் - சொல்லுதல்;
ஆர்தல் - பொருந்துதல்;
மெய் - 1) உடல்; 2) உண்மை;
வண்ணம் - குணம்; இயல்பு; நிறம்; வடிவு;
கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமையுருபு;
தரை - பூமி; நிலம்;
உறுதல் - அடைதல்;
மாறுதல் - வேறுபடுதல்; சரிப்படுதல்;
மாறு - வேறுபாடு (Mutation, change);
மதி - 1) சந்திரன்; 2) அறிவு;
ஆ - இடபம்; எருது;
ஓடு - மூன்றாம் வேற்றுமையுருபு;; மண்டையோடு;
வேறு - 1. பிறிது (Other, that which is different); 5. எதிரிடையானது (That which is opposite); 8. சிறப்புடையது (That which is special or distinct; that which is distinguished or particularised);
புகல்தல் - சொல்லுதல்;
வார்தல் - நெடுமையாதல்;
வான் - வானுலகம்; பெருமை; அழகு; நன்மை;
ஐ - தலைவன்; அரசன்;
அயில் - ஐயில் என வந்தது; ஐயில் - அயில் - முதற்போலி. (மயல் - மையல் என வருவது போன்றது). (கம்பராமாயணம் - "பெருகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணவர்" - ஐயில் - அயில் - முதற்போலி); (Digital Tevaram on IFP site: சம்பந்தர் தேவாரம் - 3.114.2 - "பரந்து இலங்கு ஐயில் சூலம் (அது) என்பதே" - ஐயில் - அயில் (போலி: syllable or letter resembling another in sound));
அயில் - வேல்; இங்கே மூவிலை வேல் - திரிசூலம்;
ஐயில் ஐ - சூலபாணி; / தலைவரில் தலைவன்; ('இல்', 'இன்' - ஐந்தாம் வேற்றுமை உருபு);
வாழை இலை:
கூறு ஆர் மெய் வண்ணம் கொடு தரையை உற்றாலும்,
மாறா மதியோடு வந்தவர், வேறாப்
பொருள்பட என்றும் புகல்வார் --- சடையோடு
இருப்பவர் --- வான் வாழை இலை என்று.
(முழு இலையாக அல்லாமல்) ஒரு பகுதியாக இருக்கும் வடிவத்தோடு (ஏடு), (பசிய) நிறத்தோடு, (பந்தியில்) தரையை வந்தடைந்தாலும், நிலையான ஞானத்தோடு வந்தவர்களான சடையுடையவர்கள் (தவசிகள்), அதனைச் சிறப்பித்து 'உயர்ந்த வாழை இலை" என்று சொல்வார்கள்.
(அது தரையில் இருந்தாலும், அதனை 'வான் இலை' என்றே சொல்வார்கள்.
(பச்சைநிறம் அல்லாமல் வேறு நிறத்தோடு உள்ள சருகை உண்கலமாக இட்டாலும் சிறப்பாக ஏற்பர் - என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
புறச்சமயிகள்:
கூறார் மெய்; வண்ணம்கொடு தரையை உற்றாலும்,
மாறு ஆம் மதியோடு வந்து, அவர் வேறாப்
பொருள்பட என்றும் புகல்வார் --- "சடையோடு
இருப்பவர் வான் வாழ் ஐ இலை" என்று.
உண்மையைச் சொல்லமாட்டார்கள்; (இறைவன் சகுணமாகி) உருவத்தோடு பூமியில் தோன்றினாலும், முரண்பட்ட கருத்தோடு (திரிந்த அறிவோடு) அவர்கள் வேறுவிதமாகப் பேசுவார்கள் - "சடையோடு இருப்பவர் வானுலகில் உறையும் தலைவன் இல்லை" என்று.
சிவன்:
கூறு ஆர் மெய் வண்ணம்கொடு தரையை உற்றாலும்,
ஆறு ஆ மதி ஓடு உவந்தவர்; வேறாப்
பொருள்பட, என்றும் புகல், "வார் சடையோடு
இருப்பவர், வான் வாழ் ஐயில் ஐ" என்று.
அர்த்தநாரீஸ்வரக் கோலத்தோடு பூமியில் தோன்றினாலும், கங்கையையும் இடபத்தையும் சந்திரனையும் பிரமன் மண்டையோட்டையும் விரும்புபவர்; "நீண்ட சடையோடு இருப்பவர்; வானுலகில் இருக்கின்ற, சூலம் ஏந்தும் தலைவர்" என்று அவரைச் சிறப்பித்து என்றும் சொல்வாயாக. ("ஐயில் ஐ - தலைவரின் தலைவர்" என்றுகொண்டு, தேவர் கோவிற்கும் தலைவன் என்றும் கொள்ளலாம்)
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment