06.01 – சிவன் சிலேடைகள்
2009-12-20
06.01.107 - சிவன் - தமிழ்நாட்டுப் பேருந்து (Bus in Tamil Nadu) - சிலேடை
-----------------------------------------------
ஓர்பக்கம் பெண்ணுக்கென் றுண்டுவந் தூரேறும்
பாரிடம் போற்றுமுன்னும் பின்னுமுறும் - பேரிருக்கும்
ஆர்க்கும் அரவம் அமரும் இருக்கைமலி
நீர்ச்சடையன் பேருந்து நேர்.
சொற்பொருள்:
உண்டுவந்தூரேறும் - 1) உண்டு; வந்து ஊர் ஏறும்; 2) உண்டு; உவந்து ஊர் ஏறும்;
ஊர் ஏறும் - 1) ஊர் மக்கள் ஏறுவர்; 2) ஊர்கின்ற இடபமும்;
பாரிடம் - 1) பூமி; தேசம்; 2) பூதகணம்;
முன் - 1) இடத்தால் முன்; 2) காலத்தால் முன்;
பின் - 2) இடத்தால் பின்; 2) காலத்தால் பின்;
உறுதல் - இருத்தல்;
பேர் - 1) பெயர்; 2) புகழ்;
ஆர்த்தல் - 1) ஒலித்தல்; 2) கட்டுதல்;
அரவம் - 1) ஒலி; சத்தம்; 2) பாம்பு;
அமர்தல் - 1) இருத்தல் (உட்கார்தல்); 2) விரும்புதல்;
இருக்கை - 1) ஆசனம்; 2) வேதத்தை; (இருக்கு - ரிக்வேதம்; வேதம்);
மலிதல் - மிகுதல்;
பேருந்து - Bus;
நேர் - ஒப்பு;
தமிழ்நாட்டுப் பேருந்து:
ஓர் பக்கம் பெண்ணுக்கு என்று உண்டு - பெண்களுக்கு ஒரு பக்கத்து இருக்கைகளை ஒதுக்கியிருப்பர்;
வந்து ஊர் ஏறும் - ஊர்மக்கள் வந்து ஏறுவார்கள்;
பாரிடம் போற்றும் - நாட்டிலுள்ளோர் போற்றுவர்; (பார் - பூமி; தேசம்); (சம்பந்தர் தேவாரம் - 2.104.4 - "பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை" - உலகில் பல இடங்களிலும் உள்ள மக்கள் வந்து தொழும் பவளத்தை);
முன்னும் பின்னும் உறும் பேர் இருக்கும் - முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் (நிறுவனத்தின், செல்லும் ஊரின்) பெயர் எழுதப்பெற்றிருக்கும்;
ஆர்க்கும் அரவம் - சத்தம் ஒலிக்கும்;
அமரும் இருக்கை மலி - உட்காரும் ஆசனங்கள் நிறைந்த;
பேருந்து.
சிவன்:
ஓர் பக்கம் பெண்ணுக்கு என்று உண்டு - அர்த்தநாரீஸ்வரன்;
உவந்து ஊர் ஏறும் பாரிடம் போற்றும் - மகிழ்ந்து ஊர்கின்ற இடபத்தையும் உலகம் போற்றும்;
பாரிடம் போற்றும் - பூதகணங்கள் போற்றும்;
முன்னும் பின்னும் உறும் பேர் இருக்கும் - காலத்தைக் கடந்தவன் என்ற புகழ் இருக்கும்;
ஆர்க்கும் அரவம் - பாம்பை (அரைநாணாகக்) கட்டியவன்;
அமரும் இருக்கை - வேதத்தை விரும்பியவன்;
மலி நீர்ச்சடையன் - மிகுந்த நீருடைய கங்கையைச் சடையில் உடைய சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment