Monday, December 13, 2021

06.02.119 – மயிலாப்பூர் - மலவிருளு மூடி - (வண்ணம்)

06.02.119 – மயிலாப்பூர் மலவிருளு மூடி - (வண்ணம்)

2009-12-07

6.2.119) மலவிருளு மூடி (மயிலாப்பூர்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தான தனதனன தான

தனதனன தான .. தனதான )


(எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)


மலவிருளு மூடி உளமதனி லாசை

.. .. வரையறையி லாது .. வரநாளும்

.. மடமையொடு பாவ வினைபெருகு மீன

.. .. வழியிலுழ லாது .. பவரோகம்

விலகவெளி தான வழியெனவு ளாயை

.. .. மிகவுநினை நேய .. அடியாரை

.. விரவிஅவ ரோடு திருமுறைக ளோதி

.. .. வினைகளறு மாறு .. மதிதாராய்

அலைகடலில் நீல நிறமலியு மாலம்

.. .. அதுவிளைய ஓல .. மெனவானோர்

.. அவர்பணிய வேலை விடமிடறு பூணும்

.. .. அருமணியு மாக .. அருள்வோனே

மலரவனு மாலு மடிமுடியை நேட

.. .. வளருமெரி யாகி .. வருவோனே

.. வலியதிரை மோது கரையினரு கேர்கொள்

.. .. மயிலைநகர் மேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

மல இருளும் மூடி, உளம் அதனில் ஆசை

.. .. வரையறை இலாது வர, நாளும்

.. மடமையொடு பாவ வினை பெருகும் ஈன

.. .. வழியில் உழலாது, பவரோகம்

விலக எளிதான வழி என உளாயை

.. .. மிகவும் நினை நேய அடியாரை

.. விரவி, அவரோடு திருமுறைகள் ஓதி,

.. .. வினைகள் அறுமாறு மதி தாராய்;

அலை கடலில் நீல நிறம் மலியும் ஆலம்

.. .. அது விளைய ஓலம் .. என வானோர்

.. அவர் பணிய, வேலை விடம் மிடறு பூணும்

.. .. அரு மணியும் ஆக அருள்வோனே;

மலரவனும் மாலும் அடி முடியை நேட,

.. .. வளரும் எரியாகி வருவோனே;

.. வலிய திரை மோது கரையின் அருகு ஏர் கொள்

.. .. மயிலை நகர் மேவு பெருமானே.


சொற்பொருள்:

மல இருள் - மும்மலங்கள்;

வரையறை - அளவு; எல்லை;

ஈன வழி - இழிவு மிகுந்த வழி;

பவரோகம் - பிறவிப்பிணி (பவம் - பிறப்பு. ரோகம் - நோய்.);

உளாயை - உள்ளாயை - உள்ள உன்னை;

விரவுதல் - அடைதல்; கலத்தல்;

மதி - அறிவு;

ஓலம் - அபயம் வேண்டி ஓலமிடுதல்;

வேலை விடம் - கடல் நஞ்சு;

மிடறு - கழுத்து;

மலரவன் - பிரமன்;

நேடுதல் - தேடுதல்

திரை - அலை;

ஏர் கொள் - அழகிய;


மல இருளும் மூடி, உளம் அதனில் ஆசை வரையறை இலாது வர - மும்மலங்கள் சூழ்ந்துகொள்ள, மனத்தில் அளவின்றி ஆசைகள் எழ;

நாளும் மடமையொடு பாவ வினை பெருகும் ஈன வழியில் உழலாது - தினமும் அறியாமையால் பாவம் பெருகுகிற இழிந்த வழியில் சென்று வருந்தாமல்;

பவரோகம் விலக எளிதான வழி என உளாயை மிகவும் நினை நேய அடியாரை விரவி - பிறவிப்பிணி தீரச் சுலபமான வழியாக இருக்கும் உன்னை மிகவும் எண்ணுகின்ற அன்புடைய பக்தர்களை அடைந்து;

அவரோடு திருமுறைகள் ஓதி - அவர்களோடு திருமுறைகளைப் பாடி;

வினைகள் அறுமாறு மதி தாராய் - என் வினைகள் அறும்படி அறிவைத் தருவாயாக;

அலை கடலில் நீல நிறம் மலியும் ஆலம் அது விளைய ஓலம் வானோர் அவர் பணிய - அலைவீசும் பாற்கடலில் கரியநிறம் மிக்க ஆலகால விஷம் தோன்றவும், அஞ்சி "ஓலம்" என்று தேவர்கள் தொழவும்;

வேலை விடம் மிடறு பூணும் அரு மணியும் ஆக அருள்வோனே - அந்தக் கடல் விஷத்தைக் கழுத்தில் அணியும் அரிய நீலமணியாகத் தரித்தவனே;

மலரவனும் மாலும் அடி முடியை நேட, வளரும் எரியாகி வருவோனே - பிரமனும் திருமாலும் அடியும் முடியும் தேடும்படி ஓங்கிய சோதியே;

வலிய திரை மோது கரையின் அருகு ஏர் கொள் மயிலை நகர் மேவு பெருமானே - வலிமையான அலை மோதுகின்ற கடலின் கரையின் அருகே அமைந்த அழகிய மயிலாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment