Tuesday, December 14, 2021

06.02.121 – பொது - வேதனைக்கிடமான - (வண்ணம்)

06.02.121 – பொது - வேதனைக்கிடமான - (வண்ணம்)

2009-12-19

6.2.121) வேதனைக்கிடமான - பொது

-------------------------

(வண்ணவிருத்தம்;

தான தத்தன தான தத்தன

தான தத்தன .. தனதான )


(இந்த அமைப்பில் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


வேத னைக்கிட மான இப்புவி

.. .. மீது மற்றொரு .. வடிவோடு

.. மீள வைத்திடு தீவி னைப்பொதி

.. .. வேர றுத்திட .. நினையாயோ

வாதை யற்றுல வாத நற்றிரு

.. .. வாழ்வி லுற்றிட .. நிதமோதாய்

.. மாத வத்தினர் நாந விற்றிட

.. .. வான ளித்திடும் .. அரனாமம்

ஆத ரத்தொடு பூச லுட்செயும்

.. .. ஆக மத்தளி .. மகிழீசன்

.. ஆவி பற்றிடு கால னைக்கழ

.. .. லாலு தைத்தவன் .. அருளாளன்

வேதன் அச்சுதன் நேட மிக்கொளி

.. .. வீசி டத்தழல் .. உருவானான்

.. வேணி யிற்புனல் ஆர உத்தமி

.. .. மேனி யிற்றிகழ் .. பெருமானே.


பதம் பிரித்து:

வேதனைக்கு இடம் ஆன இப்புவி

.. .. மீது மற்றொரு வடிவோடு

.. மீள வைத்திடு தீவினைப்-பொதி

.. .. வேரறுத்திட நினையாயோ?

வாதையற்று உலவாத நற்றிரு

.. .. வாழ்வில் உற்றிட நிதம் ஓதாய்,

.. மாதவத்தினர் நா நவிற்றிட

.. .. வான் அளித்திடும் அரன் நாமம்;

ஆதரத்தொடு பூசல் உட்செயும்

.. .. ஆகமத்-தளி மகிழ் ஈசன்;

.. ஆவி பற்றிடு காலனைக்

.. .. கழலால் உதைத்தவன்; அருளாளன்;

வேதன் அச்சுதன் நேட மிக்கு ஒளி

.. .. வீசிடத் தழல் உரு ஆனான்;

.. வேணியில் புனல் ஆர, உத்தமி

.. .. மேனியில் திகழ் பெருமானே.


* "மனமே" என்ற விளி தொக்கு நின்றது;

* 3-ஆம் அடி - பூசலார்க்கு அருள்செய்ததைச் சுட்டியது.


சொற்பொருள்:

வாதை - துன்பம்;

உலவாத - அழியாத; குறையாத;

வான் - வானுலகம்;

ஆதரம் - அன்பு;

பூசல் - பூசலார் நாயனார்;

உள் - உள்ளம்;

தளி - கோயில்;

நேடுதல் - தேடுதல்;

வேணி - சடை;

ஆர்தல் - பொருந்துதல்;


வேதனைக்கு இம் ஆன இப்புவி மீது மற்றொரு வடிவோடு மீள வைத்திடு தீவினைப்-பொதி வேரறுத்திட நினையாயோ - (மனமே) துன்பங்களுக்கு இடமான இவ்வுலகில் இன்னொரு உடம்பில் மீண்டும் பிறவி அளிக்கும் பாவமூட்டையை முற்றிலும் தீர்ப்பதற்கு எண்ணமாட்டாயா?

வாதைற்றுலவாத நல் திரு வாழ்வில் உற்றிட நிதம் ஓதாய் - வாழ்வில் படும் துன்பங்கள் நீங்கி என்றும் அழியாத பாக்கியத்தைப் பெறுவதற்குத் தினமும் சொல்வாயாக;

மா தவத்தினர் நா நவிற்றி வான் அளித்திடும் அரன் நாமம் - பெரும் தவசிகள் தம் வாயால் சொல்ல, வானுலகத்தை அளிக்கின்ற சிவன் திருநாமம் ஆன நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை;

ஆதரத்தொடு பூசல் உள் செயும் ஆகமத்-தளி மகிழ் ஈசன் - பூசலார் நாயனார் பெருவிருப்போடு தம் உள்ளத்தில் எழுப்பிய ஆகம விதிப்படி அமைந்த கோயிலில் மகிழ்ந்து எழுந்தருளிய ஈசன்; (செயும் - செய்யும்);

ஆவி பற்றிடு காலனைக் கழலால் உதைத்தவன் - (மார்க்கண்டேயரின்) உயிரைக் கொல்ல வரும் எமனைக் காலால் உதைத்தவன்;

அருளாளன் - பேரருள் உடையவன்;

வேதன் அச்சுதன் நேட மிக்கு ஒளி வீசிடத் தழல் உருனான் - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடுமாறு மிகுந்த ஒளி வீசச் சோதியாகி நின்றவன்;

வேணியில் புனல் ஆர, உத்தமி மேனியில் திகழ் பெருமானே - சடையில் கங்கை பொருந்தத், திருமேனியில் உமையை ஒரு கூறாக உடைய பெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment