06.01 – சிவன் சிலேடைகள்
2009-12-09
06.01.104 - சிவன் - மின்விளக்கு (incandescent lamp) - சிலேடை
-----------------------------------------------
இருளை அகற்றியே கம்பத் திருக்கும்
உருவுண் டருகுறு வேளை - நெருப்பாய்ச்
சுடினு மெரியா தணைவதுண்டு தொண்டர்
மிடிதீர் அரன்மின் விளக்கு.
சொற்பொருள்:
இருள் - 1) மயக்கம்; அஞ்ஞானம்; 2) அந்தகாரம் ( darkness);
கம்பம் - 1) தூண் (post, pillar); 2) விளக்குத்தண்டு (lamp-stand);
ஏகம்பம் - கச்சியில் உள்ள ஏகம்பம் என்ற தலம்;
அருகு - சமீபம்;
உறுதல் - அடைதல் (to approach, reach);
வேளை - 1) காமனை (வேள் - மன்மதன்); 2) பொழுது;
அணைதல் - 1) சார்தல் (to approach, come near); 2) அவிதல் (to be extinguished);
மிடி - துன்பம்; தரித்திரம்;
மின்விளக்கு:
இருளை அகற்றியே கம்பத்து இருக்கும் உரு உண்டு - புற இருளைப் போக்கிக் கம்பத்தில் இருக்கும் வடிவம் உண்டு; (ஏ - அசை);
அருகு உறு வேளை நெருப்பாய்ச் சுடினும் - நெருங்கினால் தீப்போல் சுட்டாலும்;
எரியாது அணைவது உண்டு - (நாம் அணைப்பதனாலோ, மின்சாரம் இல்லாதினாலோ, விளக்குப் பழுதாகிவிட்டதாலோ) எரியாமல் அவிவதும் உண்டு;
மின்விளக்கு - மின்சார விளக்கு (incandescent lamp);
சிவன்:
இருளை அகற்றி ஏகம்பத்து இருக்கும் - அக இருளைப் போக்கிக் கச்சியில் ஏகம்பம் என்ற தலத்தில் உறைபவன்;
உரு உண்டு - உருவம் உண்டு;
("இருளை அகற்றியே கம்பத்து இருக்கும் உரு உண்டு" - என்று கொண்டு - "அயன் திருமால் இவர்களது மயக்கத்தைப் போக்கி ஒளித் தூணாக நிற்கும் வடிவம் உண்டு" என்றும் பொருள் கொள்ளலாம்);
அருகுறு வேளை நெருப்பாய்ச் சுடினும் - அருகில் வந்த காமனை நெற்றிக்கண்ணால் சுட்டாலும்;
எரியாது அணைவது உண்டு - குளிர்ச்சியோடு (அருள் புரிய அடிவர்களை) அடைபவன்; (அப்பர் தேவாரம் - 5.42.9 - "வல்லரண் சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும் சிட்டர்");
தொண்டர் மிடி தீர் அரன் - பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் சிவபெருமான்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment