06.01 – சிவன் சிலேடைகள்
திருவெம்பாவை ஸ்பெஷல்!
2009-12-28
06.01.109 - சிவன் - குளம் - சிலேடை
-----------------------------------------------
தன்னடைந்தார் தாகந் தணிவிக்கும் மேலும்நீர்
மன்னி யிருக்கும் மலர்களுந் - துன்னுமே
ஆடவரும் பெண்களு மங்கே படியடைவர்
கோடனிலாச் சூடி குளம்.
சொற்பொருள்:
அடைதல் - 1) சேர்தல்; 2) சரண்புகுதல்;
தாகம் - 1) நீர்வேட்கை; 2) ஆசை;
தணிவித்தல் - 1) நீக்குதல்; தீர்த்தல்; 2) பூர்த்திசெய்தல்; நிறைத்தல்; (11.20.5 - "விநாயகனே வேட்கைதணி விப்பான்" - வேட்கை - ஆசை. 'தணிவிப்பான்' என்பதற்கு, 'நிரப்புவான் போக்குவான்' என இரு பொருளும் கொள்க.);
மேலும் - 1) பின்னும்; 2) மேலே; (உம் - அசை);
மன்னுதல் - 1) நிலைபெறுதல்; 2) தங்குதல்; 2) மிகுதல்;
துன்னுதல் - செறிதல்; பொருந்துதல்; நெருங்குதல்;
ஆடுதல் - நீராடுதல்;
ஆடவரும் - 1) நீராட வருகின்ற; 2) ஆண்களும்;
படி - 1) படிக்கட்டு (steps); 2) நிலம்;
கோடனிலா - கோடல் நிலா - 1) வளைந்த பிறைச்சந்திரன்; 2) காந்தள் மலரும் சந்திரனும்;
கோடல் - 1) கோடுதல்; வளைதல்; (சம்பந்தர் தேவாரம் - 3.23.11 - "கோடல்வெண் பிறையனை"); 2) காந்தள் மலர்; (சம்பந்தர் தேவாரம் - 2.29.9 - "கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்");
* திருவெம்பாவை - 13 : "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் ...";
குளம்:
தன் அடைந்தார் தாகம் தணிவிக்கும் - தன்னை அடைந்தவர்களின் தாகத்தைத் தீர்க்கும்;
மேலும், நீர் மன்னியிருக்கும் - அதன்பின்னும், நீர் மிகுந்திருக்கும்;
மலர்களும் துன்னுமே - தாமரை முதலிய பூக்கள் செறிந்திருக்கும்;
ஆட வரும் பெண்களும் அங்கே படி அடைவர் - நீராட வருகிற பெண்களும் அங்கே படிக்கட்டைச் சேர்வார்கள்;
சிவன்:
தன் அடைந்தார் தாகம் தணிவிக்கும் - தன்னைச் சரணடைந்தவர்களின் ஆசைகளைத் தீர்ப்பான்; (அவர்கள் வேண்டும் வரங்கள் தருவான்);
மேலும் நீர் மன்னியிருக்கும்; மலர்களும் துன்னுமே - அவன் உச்சிமேல் கங்கை என்றும் தங்கியிருக்கும்; பூக்களும் பொருந்தி இருக்கும்;
ஆடவரும் பெண்களும் அங்கே படி அடைவர் - ஆண்களும் பெண்களும் நிலத்தில் வீழ்ந்து வணங்குவார்கள்;
கோடல் நிலாச் சூடி - காந்தள் மலரையும் வளைந்த பிறைச்சந்திரனையும் சூடிய சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment