Saturday, November 12, 2016

03.04.001 - முருகன் - விநாயகன் - சிவன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்



2006-03-02
1) முருகன் - விநாயகன் - சிவன் - சிலேடை
-----------------------------------------------------------------------
பணிதலை ஏற்கும் பழவிரும்பன் மற்றும்
அணிக்கும் தலைவனாம் மாதின் துணைவனாம்
மாதங்கம் ஆதலால் மாதேவன் ஆறுமுகன்
மோதகக் கையான் மொழி,



பணி = நாகப் பாம்பு;
பழ = பழைய; / கனி;
விரும்பன் = விரும்பப்படுபவன் (நம்பன்); / விரும்புபவன்;
மற்றும் - மேலும்;
அணிக்கும் = அண்ணிக்கும் (தித்திக்கும்); / படைக்கும் (அணி - படை);
மாதின் = பெண்ணின்; / மா + தின் (தின்னுதல் - உண்ணுதல்);
மாதங்கம் = மாது + அங்கம்; / மா + தங்கம்; / யானை;
மோதகம் - கொழுக்கட்டை;



முருகன்:
பக்தர்கள் பணிவதை ஏற்று அருள்புரிவான். பழத்தை விரும்புபவன். (மாம்பழத்திற்காகப் போட்டியில் உலகைச் சுற்றி வந்தவன்)! அது மட்டுமன்றித் தேவர்களின் படைக்கும் தலைவன் ஆவான். வள்ளிக் குறமகளின் கணவன் ஆவான். சிறந்த பொன் போன்றவன் (ஆணிப்பொன்).



விநாயகன்:
பக்தர்கள் பணிவதை ஏற்று அருள்புரிவான். பழத்தை விரும்புபவன். (மாம்பழத்திற்காகத் போட்டியில் தாய்தந்தையரைச் சுற்றி வந்தவன்)! கணபதி. அதிகம் உண்ணும் (நமது) துணைவன் ஆவான். ஆனை முகத்தன். கொழுக்கட்டையைக் கையில் ஏந்திய விநாயகன்.



சிவன்:
நாகத்தைத் தலைமேல் உடையவன். மிகவும் தொன்மையானவன். விரும்பப்படுபவன். பக்தர்களுக்குத் தித்திக்கும் தலைவன். பார்வதி மணாளன். உமையை அங்கமாக (உடலின் ஒரு பாதியாக) உடையவன்.



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment