Saturday, November 12, 2016

03.04.003 - சிவன் - மன்மதன் - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்


2006-03-17
3) சிவன் - மன்மதன் - சிலேடை - 1
-----------------------------------------------------------------------
ஆண்பெண் அவனிலக் கம்பெய் தெரித்திடுவான்
நாணங் கரவாம் கனல்விழிக்கு மாண்டவன்
மாவிரதி நெஞ்சினில் வாழ்பவன் மன்மதன்
பாவிரும்பும் முக்கட் பரன்.



அவனிலக் கம்பெய் தெரித்திடுவான் - அவன் இலக்கு அம்பு எய்து எரித்திடுவான்;
இலக்கு = குறி; இலக்ஷியம்;
நாணங்கரவாம் = நாணம்  கரவு ஆம்; / நாண் அங்கு அரவு ஆம்;
கரவு = மறைவு;
கனல்விழிக்குமாண்டவன் = கனல்விழிக்கு மாண்டவன்; / கனல்விழிக்கும் ஆண்டவன்;
மாவிரதி = மா + இரதி; / மா விரதி;
மா - அழகு; பெரிய;



மன்மதன்:
ஆண் பெண் இருபாலாரையும் அவன் குறி வைப்பான். தனது அம்புகளை எய்து (உடலை / உள்ளத்தை) உஷ்ணப்படுத்துவான். (அதன் விளைவாக அவர்களது) நாணம் மறைந்து போகும். (சிவனது) கனல்விழிக்கு இரையாகி மாண்டவன். அழகிய இரதியின் நெஞ்சில் வாழ்பவன் ( - கணவன்).



சிவன்:
அவன் ஆண், பெண் ஆவான். (சமயங்களின்) குறியாக (லட்சியமாக) உள்ளவன். (முப்புரங்களை) ஓர் அம்பை எய்து எரித்தவன். அப்போது பாம்பும் (வில்லுக்கு) நாண் ஆகும். (நெற்றிக்கண்ணால்) கனல்விழிக்கும் ஆண்டவன். பெரும் தவசிகளது உள்ளத்தில் உறைபவன்,
செந்தமிழ்ப் பாக்களை விரும்புகின்ற முக்கட் பரமன்.



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment