Saturday, November 12, 2016

03.04.009 - சிவன் - புலி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்


2006-03-24
9) சிவன் - புலி - சிலேடை
----------------------------------------------
தேகமெங்கும் பட்டை தெரிந்திடும் கைப்பற்றும்
வேகமா ஓடுகின்ற மானையும் ஏகமாய்க்
காட்டினட மாடிக் கனல்விழி காட்டுவதால்
பாட்டில் புலியீசன் பார்.



பட்டை - பட்டைக்கோடு (stripe);
வேகமா = வேகமாக;
ஏகமாய் = 1) மிகுதியாக; / 2) ஒன்று ஆகி; ஒப்பற்ற பொருள் ஆகி;
காட்டினடமாடி = காட்டில் நடமாடி;
நடமாடுதல் - 1) உலாவுதல்; சஞ்சரித்தல்; 2) நடனம் ஆடுதல்; கூத்தாடுதல்;
கனல் - நெருப்பு;
கனல்தல் - எரிதல்; சினத்தல்; சிவத்தல்;
பாட்டில் - இந்தப் பாடலில்;



புலி:
உடல் எங்கும் வரிகள் தோன்றும். விரைந்து ஓடுகின்ற மானையும் (துரத்திப்) பிடிக்கும். அதிக எண்ணிக்கையில் காட்டில் திரியும். சினத்தைக் காட்டுகின்ற, நெருப்புப் போன்ற கண்களை உடையது.
(திருவாசகம் - அச்சப் பத்து - 8.35.8 - "தறிசெறி களிறும் அஞ்சேன் ... தழல்விழி உழுவை அஞ்சேன்")



சிவன்:
உடலில் பட்டை பட்டையாக விபூதி அணிந்திருப்பான். அவனது கை ஒரு மானைப் பிடித்திருக்கும். (ஒப்பற்ற) ஒருவன் ஆவான். சுடுகாட்டில் திருநடம் ஆடுவான். தீ உமிழும் நெற்றிக்கண் உடையவன்;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment