Saturday, July 18, 2020

03.05.100 – கடவூர் - காசை நாடி மால் ஆகி - (வண்ணம்)

03.05.100 – கடவூர் - காசை நாடி மால் ஆகி - (வண்ணம்)

2009-01-29

3.5.100) காசை நாடி மால் ஆகி - கடவூர் - (திருக்கடவூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தான தான தானான தானத் .. தனதான )

(பேர வாவ றாவாய்மை பேசற் கறியாமே - திருப்புகழ் - பொது)

(காதி மோதி வாதாடு - திருப்புகழ் - பொது)


காசை நாடி மாலாகி மாயக் .. கடன்மூழ்கிக்

.. காயம் ஓயு(ம்) நாளாகி நோயுற் .. றதனாலே

நேச மான பேராலும் ஏசப் .. படுவேனோ

.. நீறு பூசி னாயேழை யேனுக் .. கருளாயே

பாசம் வீசி ஓர்மாணி யாரைத் .. தொடர்காலன்

.. பாரில் வீழ ஓர்பாதம் வீசிச் .. செறுகாலா

வாச(ம்) நாறு பூவேறு சோலைக் .. கடவூரா

.. வாம பாக(ம்) மாதான மேனிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

காசை நாடி, மால் ஆகி, மாயக் கடல் மூழ்கிக்,

.. காயம் ஓயும் நாள் ஆகி, நோயுற்று, அதனாலே

நேசமான பேராலும் ஏசப்படுவேனோ;

.. நீறு பூசினாய்; ஏழையேனுக்கு அருளாயே;

பாசம் வீசி ஓர் மாணியாரைத் தொடர் காலன்

.. பாரில் வீழ ஓர் பாதம் வீசிச் செறு காலா;

வாசம் நாறு பூ ஏறு சோலைக் கடவூரா;

.. வாம பாகம் மாது ஆன மேனிப் பெருமானே.


காசை நாடி, மால் ஆகி, மாயக் கடல் மூழ்கி - பணத்தை விரும்பி, மனம் மயங்கி, வஞ்சனைக் கடலில் ஆழ்ந்து; (மால் - மயக்கம்); (மாயம் - மாயை; வஞ்சனை; அஞ்ஞானம்); (மாய்தல் - அழிதல்; சாதல்); (கடன்மூழ்கி - 1. கடல்+மூழ்கி / 2. கடன்+மூழ்கி); (கடன் - கடமை; கடன் loan); ("மாயக் கடன் மூழ்கி" என்று கொண்டால், "மாயக் கடமைகளில் ஆழ்ந்து" / மாயுமாறு கடனில் ஆழ்ந்து);

காயம் ஓயும் நாள் ஆகி, நோயுற்று, அதனாலே - உடல் தளரும் முதுமைப் பருவம் அடைந்து, பல நோய்களால் வாடி, அக்காரணங்களால்; (காயம் - உடல்); (ஓய்தல் - தளர்தல்; முடிதல்; அழிதல்);

நேசமான பேராலும் ஏசப்படுவேனோ - முன்பு பிரியத்தோடு இருந்த குடும்பத்தினராலும் (இப்பொழுது அந்த அன்பு குன்றியதால்) ஏசப்படும் நிலைக்கு ஆளாவேனோ? (நேசமான - நேசம் ஆன – 1. அன்பான / 2. அன்பு தீர்ந்து போன); (ஆதல் - முடிதல்; exhausted); (ஏசுதல் - இகழ்தல்);

நீறு பூசினாய், ஏழையேனுக்கு அருளாயே - திருநீற்றைப் பூசிய சிவபெருமானே, அறிவில்லாத அடியேனுக்கு (நான் அந்த நிலையை அடைவதன் முன்னமே) விரைந்து அருள்புரிவாயாக; (நீறு பூசி - திருநீற்றைப் பூசியவன்); (ஏழையேன் - அறிவில்லாத நான்);

பாசம் வீசி ஓர் மாணியாரைத் தொடர் காலன் பாரில் வீழ ஓர் பாதம் வீசிச் செறு காலா - ஒப்பற்ற மார்க்கண்டேயரைக் கொல்வதற்காகப் பாசத்தை வீசி அவரைத் துரத்திய காலனே நிலத்தில் விழுந்து இறக்கும்படி ஒரு திருவடியை வீசி உதைத்த காலகாலனே; (பாசம் - கயிறு); (மாணியார் - மார்க்கண்டேயர்; மாணி - பிரமசாரி); (செறுதல் - அழித்தல்);

வாசம் நாறு பூ ஏறு சோலைக் கடவூரா - மணம் வீசும் பூக்கள் மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரில் உறைபவனே; (ஏறுதல் - மிகுதல்);

வாம பாகம் மாது ஆன மேனிப் பெருமானே - இடப்பக்கம் பாகமாக உமை இருக்கும் திருமேனியையுடைய பெருமானே; (வாமம் - இடப்பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment