Saturday, July 4, 2020

03.05.086 – ஆரூர் - எத்திலே மூழ்கி - (வண்ணம்)

03.05.086 – ஆரூர் - எத்திலே மூழ்கி - (வண்ணம்)

2009-01-21

3.5.86) எத்திலே மூழ்கி - (ஆரூர் - திருவாரூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தனா தானனத் .. தனதான )

(பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)


எத்திலே மூழ்கியிப் .. புவிவாழ்வில்

.. எய்ப்பையே நாளுமுய்த் .. தழியாமல்

பத்தியோ டேருடைக் .. கழல்பாடச்

.. சத்திகூ றாவெனக் .. கருளாயே

கத்துமா வாரிகக் .. கியவாலம்

.. கப்பிவா னோர்தமக் .. கமுதீவாய்

நெய்த்தசூ லாயுதப் .. பெருவீரா

.. நித்தவா ரூரினிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

எத்திலே மூழ்கி இப்-புவிவாழ்வில்

.. எய்ப்பையே நாளும் உய்த்து அழியாமல்,

பத்தியோடு ஏருடைக் கழல் பாடச்,

.. சத்திகூறா, எனக்கு அருளாயே;

கத்து மா வாரி கக்கிய ஆலம்

.. கப்பி, வானோர்தமக்கு அமுது ஈவாய்;

நெய்த்த சூலாயுதப் பெருவீரா;

.. நித்த; ஆரூரினில் பெருமானே.


எத்திலே மூழ்கி இப்-புவிவாழ்வில் எய்ப்பையே நாளும் உய்த்து அழியாமல் - நான் வஞ்சனையில் மூழ்கி இந்த உலக வாழ்க்கையில் அதன் விளைவாக எந்நாளும் துன்புற்று வருந்தி, அழியாதபடி; (எத்து - வஞ்சகம்); (எய்த்தல் - இளைத்தல்; வருந்துதல்); (உய்த்தல் - அனுபவித்தல்);

பத்தியோடு ஏர்உடைக் கழல் பாடச், சத்திகூறா, எனக்கு அருளாயே - பக்தியோடு உன் அழகிய திருவடிகளைப் பாடி உய்ய, உமையொரு பங்கனே, எனக்கு அருள்வாயாக; (ஏர் - அழகு); (சத்தி - சக்தி - உமை);

கத்து மா வாரி கக்கிய ஆலம் கப்பி, வானோர்தமக்கு அமுது ஈவாய் - முழங்குகின்ற பெரிய பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அள்ளி உண்டு, தேவர்களுக்கு அமுதை அளித்தவனே; (கத்துதல் - முழங்குதல்); (வாரி - கடல்); (கக்குதல் - வெளிப்படுத்துதல்); (கப்புதல் - கொள்ளுமளவு வாயிலிட்டு வேகமாக விழுங்குதல்);

நெய்த்த சூலாயுதப் பெருவீரா - நெய் பூசப்பெற்ற, பளபளக்கும் சூலாயுதத்தை ஏந்திய பெரிய வீரனே; (நெய்த்தல் - பளபளத்தல்); (சரண கமலாலயத்தில் - திருப்புகழ் - சுவாமிமலை - "உதவிபுரிய வேணும் நெய்த்த வடிவேலா");

நித்த - என்றும் அழியாதவனே; (நித்தன் - என்றும் இருப்பவன்);

ஆரூரினில் பெருமானே - திருவாரூரில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment