Saturday, July 18, 2020

03.05.097 – பொது - கணக்கிலதாய் மிக்கெழும் - (வண்ணம்)

03.05.097 – பொது - கணக்கிலதாய் மிக்கெழும் - (வண்ணம்)

2009-01-25

3.5.97) கணக்கிலதாய் மிக்கெழும் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தானத் .. தனதான )

(உரத்துறை போதத் தனியான - திருப்புகழ் - வைத்தீசுரன்கோயில் )


கணக்கில தாய்மிக் .. கெழுமாசை

.. கலக்கிட வாடிப் .. பலநாளாய்

நிணக்குடில் நீறுற் .. றழியாமுன்

.. நினைத்துதி பாடிச் .. சுகியேனோ

மணத்திரு நாளிற் .. கிழவோனாய்

.. வழக்கினில் ஓலைத் .. துணிவாலே

பிணக்குடை ஓர்பத் .. தரைஆளாப்

.. பிடித்திடு நேயப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கணக்கு இலதாய் மிக்கு எழும் ஆசை

.. கலக்கிட, வாடிப், பலநாள் ஆய்,

நிணக்-குடில் நீறு-உற்று அழியாமுன்,

.. நினைத் துதி பாடிச் சுகியேனோ;

மணத் திருநாளில் கிழவோனாய்,

.. வழக்கினில் ஓலைத்-துணிவாலே

பிணக்கு-உடை ஓர் பத்தரை ஆளாப்

.. பிடித்திடு நேயப் பெருமானே.


* அடி 3, 4 - சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்டதைச் சுட்டியது.


கணக்கு இலதாய் மிக்கு எழும் ஆசை கலக்கிட, வாடிப், - அளவின்றி மிகுத்து எழுகின்ற ஆசைகள் என் மனத்தைக் கலக்க, வருந்தி;

பலநாள் ஆய், நிணக்-குடில் நீறு-உற்று அழியாமுன், - என் வாழ்வில் பல காலம் சென்று, இந்த மாமிசக்-குடிசையான உடம்பு எரிந்து சாம்பலாகி அழிவதன்முன்னமே; (ஆய் - ஆகி); (நிணம் - மாமிசம்); (குடில் - குடிசை; வீடு);

நினைத் துதி பாடிச் சுகியேனோ - உன்னைத் துதிபாடி நான் இன்புற அருள்வாயாக; (சுகித்தல் - சுகமாயிருத்தல்);

மணத் திருநாளில் கிழவோனாய் - சுந்தரரது திருமணத் தினத்தில் அவரை அடிமையாக உடைய ஒரு முதிய அந்தணர் உருவில்; (கிழவோன் - முதியவன்; தலைவன்; உரியவன்);

வழக்கினில் ஓலைத்-துணிவாலே - (திருவெண்ணெய்நல்லூரில்) வழக்கில் ஓலைச்சுவடியின் ஆதாரத்தால்; (துணிவு - நிச்சயம்; முடிவு);

பிணக்கு-உடை ஓர் பத்தரை ஆளாப் பிடித்திடு நேயப் பெருமானே - (தான் அடிமை அல்லன் என்று) மாறுபாடு கொண்டிருந்த ஒப்பற்ற பக்தரான சுந்தரரை அடிமையாக ஆட்கொண்ட அன்பு மிக்க சிவபெருமானே; (பிணக்கு - பிணக்கம் - மாறுபாடு); (ஓர் - ஒப்பற்ற); (ஆளா - ஆளாக – கடைக்குறை); (ஆள் - அடிமை; தொண்டன்); (பிடித்தல் - அகப்படுத்துதல்); (நேயம் - அன்பு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment