Thursday, July 2, 2020

03.05.077 – இடைமருதூர் - தணியாது நெஞ்சிலெழு - (வண்ணம்)

03.05.077 – இடைமருதூர் - தணியாது நெஞ்சிலெழு - (வண்ணம்)

2009-01-16

3.5.77) தணியாது நெஞ்சிலெழு (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தந்ததன தனதான தந்ததன

தனதான தந்ததன .. தனதான )

(சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு - திருப்புகழ் - திருவாவினன்குடி)


தணியாது நெஞ்சிலெழு புலனாசை உந்தவது

..... தரியாமல் என்றுமிரு .. நிலமீது

.. தன(ம்)நாடி மங்கையர்கள் தமைநாடி நொந்துநிலை

..... தடுமாறி வெந்துயரில் .. அமிழாமல்

பிணிதீரு கின்றவழி சிவமான அன்புநெறி

..... பிறழாது சந்த(ம்)மலி .. தமிழாரும்

.. பெருமாலை கொண்டுதொழ மறவாத சிந்தையது

..... பெறவேயி ரங்கியருள் .. புரியாயே

பணியோடு கொன்றைமலர் அலைவீசு கங்கையணி

..... பதியேம ணங்கமழு(ம்) .. மலர்தூவிப்

.. பணிதேவர் உய்ந்தமுதம் உணமாவி டம்பருகு

..... பரமாஅ லங்கலணி .. மணிமார்பா

அணியாக வந்துதொழும் அடியார்கள் இன்பமுற

..... அரணாகி முந்தைவினை .. களைவானே

.. அழகேறு கின்றவிடை மருதூரில் வஞ்சியிடை

..... அவளோடு நின்றசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

தணியாது நெஞ்சில் எழு புலனாசை உந்த, அது

..... தரியாமல் என்றும் இருநிலமீது

.. தனம் நாடி, மங்கையர்கள்தமை நாடி, நொந்து, நிலை

..... தடுமாறி, வெந்துயரில் .. அமிழாமல்,

பிணி தீருகின்ற வழி சிவமான அன்பு நெறி

..... பிறழாது, சந்தம் மலி .. தமிழ் ஆரும்

.. பெருமாலை கொண்டு தொழ மறவாத சிந்தையது

..... பெறவே இரங்கி அருள் .. புரியாயே;

பணியோடு, கொன்றைமலர், அலை வீசு கங்கை அணி

..... பதியே; மணம் கமழும் .. மலர் தூவிப்

.. பணி தேவர் உய்ந்து அமுதம் உண, மா விடம் பருகு

..... பரமா; அலங்கல் அணி .. மணி மார்பா;

அணியாக வந்து தொழும் அடியார்கள் இன்பமுற

..... அரண் ஆகி முந்தைவினை .. களைவானே;

.. அழகு ஏறுகின்ற இடைமருதூரில் வஞ்சி-இடை

..... அவளோடு நின்ற சிவபெருமானே.


தணியாது நெஞ்சில் எழு புலனாசை உந்த, து தரியாமல் என்றும் இருநில(ம்)மீது - குறையாமல் மனத்தில் பொங்குகின்ற ஐம்புலன் ஆசை என்னைத் தள்ள, அதனைத் தாளாமல் எந்நாளும் இவ்வுலகில் இயங்கி; (எழுதல் - தோன்றுதல்; மேல் எழும்புதல்); (உந்துதல் - தள்ளுதல்); (தரித்தல் - பொறுத்தல்; அடக்குதல்); (இருநிலம் - பெரிய பூமி);

னம் நாடி, மங்கையர்கள்தமை நாடி, நொந்து, நிலை தடுமாறி, வெந்துயரில் அமிழாமல் - பொருளையும் பெண்களையும் விரும்பி, மனம் வாடி, நிலைகெட்டுக் கொடிய துன்பத்தில் மூழ்காமல்; (தனம் - பொருள்; பொன்);

பிணி தீருகின்ற வழி சிவமான அன்பு நெறி பிறழாது - பந்தங்கள் தீரும் வழியான மங்கலம் மிக்க அன்பு நெறி தவறாமல்; (சிவம் - மங்கலம்; நன்மை);

சந்தம் மலி தமிழ் ஆரும் பெருமாலை கொண்டு தொழ மறவாத சிந்தையது பெறவே இரங்கி அருள் புரியாயே - அழகிய, சந்தம் மிக்க தமிழ் நிறைந்த (தேவாரம் முதலிய) சிறந்த பாமாலைகளால் உன்னை என்றும் தொழும் மனத்தை நான் பெறுமாறு எனக்கு இரங்கி அருள்புரிவாயாக; (சந்தம் - செய்யுளின் ஒலிநயம்; அழகு);

பணியோடு கொன்றைமலர் அலை வீசு கங்கை அணிதியே - பாம்பு, கொன்றைமலர், அலை வீசும் கங்கையாறு இவற்றையெல்லாம் சூடிய தலைவனே; (பணி - பாம்பு);

மணம் கமழும் மலர் தூவிப் பணி தேவர் உய்ந்து அமுதம் உண, மா விடம் பருகு பரமா - வாசமலர்களைத் தூவி உன்னை வழிபட்ட தேவர்கள் உய்ந்து அமுத்தை உண்ணுமாறு அவர்களுக்கு அருளி, ஆலகால விடத்தை உண்ட பரமனே; (உண – உண்ண – இடைக்குறை விகாரம்);

அலங்கல் அணி மணி மார்பா - மாலையணிந்த அழகிய மார்பினனே; (அலங்கல் - மாலை); (மணி - அழகு);

அணியாக வந்து தொழும் அடியார்கள் இன்பமுற அரண் ஆகி முந்தைவினை களைவானே - குழாமாகி வந்து தொழும் பக்தர்கள் இன்புறும்படி அவர்களுக்குப் பாதுகாவல் ஆகி அவர்களது பழவினையைத் தீர்ப்பவனே; (அணி - கூட்டம்; குழாம்); (அரண் - காவல்); (களைவான் - களைபவன்);

அழகு ஏறுகின்றடைமருதூரில் வஞ்சிஇடை வளோடு நின்ற சிவபெருமானே - அழகிய திருவிடைமருதூரில் வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமையோடு உறைகின்ற சிவபெருமானே; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (வஞ்சியிடை - ஆகுபெயர் - உமை); (நிற்றல் - தங்குதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment