Friday, July 10, 2020

03.05.093 – பொது - அன்பனாய்த் தாளைப் - (வண்ணம்)

03.05.093 – பொது - அன்பனாய்த் தாளைப் - (வண்ணம்)

2009-01-24

3.5.93) அன்பனாய்த் தாளைப் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தனாத் தானத் .. தனதான )

(வண்டுபோற் சாரத் தருள்தேடி - திருப்புகழ் - திருவெஞ்சமாக்கூடல்)


அன்பனாய்த் தாளைப் .. பணியாமல்

.. அந்தனாய்ப் பாசக் .. கடல்மூழ்கித்

துன்பனாய்ப் பாரிற் .. றவியாமல்

.. தொண்டனாய்ப் பாடற் .. கருளாயே

முன்புமாற் காழிப் .. படையீவாய்

.. முன்பினாய்ப் பேசற் .. கரியானே

இன்பநாற் சீலர்க் .. கறமோதீ

.. என்பறாக் கோலப் .. பெருமானே.


பதம் பிரித்து:

அன்பனாய்த் தாளைப் பணியாமல்,

.. அந்தனாய்ப் பாசக் கடல் மூழ்கித்,

துன்பனாய்ப் பாரில் தவியாமல்,

.. தொண்டனாய்ப் பாடற்கு அருளாயே;

முன்பு மாற்கு ஆழிப் படை ஈவாய்;

.. முன் பின் ஆய்ப் பேசற்கு அரியானே;

இன்ப; நாற்சீலர்க்கு அறம் ஓதீ;

.. என்பு அறாக் கோலப் பெருமானே.


அன்பனாய்த் தாளைப் பணியாமல் - பக்தன் ஆகி உன் திருவடியை வணங்காமல்;

ந்தனாய்ப் பாசக் கடல் மூழ்கித் - அறிவற்று, அகக்கண் இழந்த குருடன் ஆகிப், பந்தக்கடலில் ஆழ்ந்து; (அந்தன் - குருடன்; அறிவற்றவன்); (பாசம் - தளை; மும்மலம்);

துன்பனாய்ப் பாரில் தவியாமல் - துன்பமே உறுபவன் ஆகிப் பூமியில் தவித்து வருந்தாமல்;

தொண்டனாய்ப் பாடற்கு அருளாயே - உனக்குத் தொண்டன் ஆகி, உன் புகழைப் பாட அருள்வாயாக;

முன்பு மாற்கு ஆழிப் படைவாய் - முன்னர்த் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளியவனே; (ஆழிப் படை - சக்கராயுதம்);

முன் பின் ஆய்ப் பேசற்கு அரியானே - முன்னும் பின்னும் உள்ளவன் ( = காலத்தைக் கடந்தவன்) ஆகிப், பேசுவதற்கு அரியவனே; (பினாய் - பின்னாய்);

இன்ப - இன்பவடிவினனே;

நாற்சீலர்க்கு அறம் ஓதீ - சனகாதியர் நால்வருக்கு மறைப்பொருளை விரித்து ஓதியவனே; (ஓதீ - ஓதியவனே);

என்பு அறாக் கோலப் பெருமானே - எலும்பை அணிந்த கோலத்தை உடைய பெருமானே; (என்பு - எலும்பு); (அப்பர் தேவாரம் - 6.92.2 - "சுடருருவில் என்பறாக் கோலத் தானை");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment