Saturday, July 4, 2020

03.05.089 – கோயில் (சிதம்பரம்) - இல்லை நாடிய வறியோரை - (வண்ணம்)

03.05.089 – கோயில் (சிதம்பரம்) - இல்லை நாடிய வறியோரை - (வண்ணம்)

2009-01-22

3.5.89) இல்லை நாடிய வறியோரை (கோயில் - சிதம்பரம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தய்ய தானன .. தனதான )

(அல்லில் நேருமி னதுதானும் - திருப்புகழ் - வள்ளியூர்)


இல்லை நாடிய .. வறியோரை

.. இல்லை போவென .. உரையேனாய்க்

கொல்லை ஏறமர் .. உடையாய்பூக்

.. கொய்து னார்கழல் .. இடுவேனோ

முல்லை ஆர்நகை .. உமைகூறா

.. மொய்கு ராமலர் .. மதிசூடும்

செல்வ மாமறை .. ஒலியோவாத்

.. தில்லை மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

இல்லை நாடிய வறியோரை

.. "இல்லை போ" என உரையேனாய்க்,

கொல்லை ஏறு அமர் உடையாய், பூக்

.. கொய்து, உன் ஆர்கழல் .. இடுவேனோ;

முல்லை ஆர் நகை .. உமைகூறா

.. மொய் குராமலர் .. மதி சூடும்

செல்வ; மா மறை .. ஒலி ஓவாத்

.. தில்லை மேவிய .. பெருமானே.


இல்லை நாடிய வறியோரை "இல்லை போ" என உரையேனாய்க் - என் வீட்டை அடைந்து யாசிப்பவர்களுக்கு ஒன்றும் கொடாதவனாக இராமல் அவர்களுக்கு இயன்றபடி ஈந்து; (இல் - வீடு); (அப்பர் தேவாரம் - 4.38.10 - "இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார்");

கொல்லை ஏறு அமர் உடையாய் - முல்லைநிலத்திற்குரிய இடபத்தை வாகனமாக உடைய சுவாமியே; (கொல்லை - முல்லைநிலம்); (அமர்தல் - விரும்புதல்); (உடையாய் - சுவாமியே);

பூக் கொய்து உன் ஆர் கழல் இடுவேனோ - பூக்களைக் கொய்து, ஒலிக்கும் கழல் அணிந்த உன் திருவடியில் இட்டு வணங்க அருள்வாயாக; (ஆர்த்தல் - ஒலித்தல்);

முல்லை ஆர் நகை உமைகூறா - முல்லையரும்பு போன்ற பற்களையுடைய உமையை ஒரு கூறாக உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

மொய் குராமலர் மதி சூடும் செல்வ - வண்டுகள் மொய்க்கும் குராமலரையும் திங்களையும் சூடிய செல்வனே;

மா மறை ஒலி ஓவாத் தில்லை மேவிய பெருமானே - வேதத்தின் ஒலி எப்பொழுதும் கேட்கும் தில்லையில் உறைகின்ற பெருமானே; (ஓவுதல் - ஒழிதல்; முடிதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment