Wednesday, July 1, 2020

03.05.075 – பொது - ஞாலத்திற் பிறந்து - (வண்ணம்)

03.05.075 – பொது - ஞாலத்திற் பிறந்து - (வண்ணம்)

2009-01-15

3.5.75) ஞாலத்திற் பிறந்து - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானத்தத் தனந்த தத்தந் .. தனதான )


ஞாலத்திற் பிறந்து சித்தந் .. தடுமாறி

.. நாணற்றுத் திரிந்து குற்றம் .. புரியாதுன்

சீலத்தைப் புகழ்ந்து நித்தந் .. தமிழ்பாடிச்

.. சேவிக்கக் குணங்கொ டுத்திங் .. கருளாயே

காலத்தைக் கடந்து நிற்குந் .. தனிநாதா

.. கானத்திற் சுழன்று நட்டம் .. புரிவோனே

ஆலத்தைத் தெரிந்தெ டுத்துண் .. டதனாலே

.. ஆகத்திற் களங்க றுக்கும் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஞாலத்தில் பிறந்து, சித்தம் தடுமாறி,

.. நாண் அற்றுத் திரிந்து, குற்றம் புரியாது, உன்

சீலத்தைப் புகழ்ந்து நித்தம் தமிழ் பாடிச்

.. சேவிக்கக் குணம் கொடுத்து இங்கு அருளாயே;

காலத்தைக் கடந்து நிற்கும் தனி-நாதா;

.. கானத்தில் சுழன்று நட்டம் புரிவோனே;

ஆலத்தைத் தெரிந்தெடுத்து உண்டதனாலே

.. ஆகத்தில் களம் கறுக்கும் பெருமானே.


ஞாலத்தில் பிறந்து, சித்தம் தடுமாறி, நாண் அற்றுத் திரிந்து, குற்றம் புரியாது - உலகில் பிறந்து, மனம் மயங்கிப், பழிக்கு அஞ்சாமல் குற்றங்கள் செய்து உழலாமல்; (ஞாலம் - பூமி); (சித்தம் - மனம்); (தடுமாறுதல் - மனம்கலங்குதல்; தவறுதல்); (நாண் - நாணம்; வெட்கம்);

ன் சீலத்தைப் புகழ்ந்து நித்தம் தமிழ் பாடிச் சேவிக்கக் குணம் கொடுத்து இங்கு அருளாயே - நான் உன் குணங்களைப் புகழ்ந்து என்றும் தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்குமாறு நற்குணத்தை எனக்கு இங்கு அருள்வாயாக; (சீலம் - தன்மை); (சேவித்தல் - வணங்குதல்); (இங்கு - இவ்விடம்); (சம்பந்தர் தேவாரம் - 1.94.2 - "ஆல வாயிலார் சீலமே சொலீர் காலன் வீடவே");

காலத்தைக் கடந்து நிற்கும் தனி-நாதா - காலத்திற்கு அப்பாற்பட்டவனே; ஏகனாக இருப்பவனே; ஒப்பற்ற தலைவனே; (தனி - தனித்து இருத்தல்; ஒப்பின்மை)

கானத்தில் சுழன்று நட்டம் புரிவோனே - சுடுகாட்டில் சுழன்று திருக்கூத்து ஆடுபவனே; (கானம் - காடு - சுடுகாடு); (நட்டம் - நடனம்; கூத்து);

ஆலத்தைத் தெரிந்தெடுத்து ண்டதனாலே ஆகத்தில் ம் கறுக்கும் பெருமானே - ஆலகால விஷத்தை விரும்பி உண்டருளியதால் திருமேனியில் கண்டம் கறுக்கின்ற பெருமானே; (ஆலம் - விஷம்); (தெரிதல் - அறிதல்; தெரிந்தெடுத்தல் - தேர்ந்தெடுத்தல்); (ஆகம் - உடல்); (களம் - கண்டம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment