Tuesday, May 13, 2025

V.044 - பாந்தளணி வேந்தனெரி - தனிப்பாடல்

2017-09-21

V.044 - பாந்தளணி வேந்தனெரி - தனிப்பாடல்

---------------------------------

(வெண்பா - முற்றெதுகை & முடுகு)


பாந்தளணி வேந்தனெரி ஆர்ந்தரணம் தீய்ந்தழிய

ஏந்துமலை ஏந்தியவன் தீந்தமிழை ஆய்ந்தபரன்

காந்திமலி மாந்துறையில் ஏந்தலடி சேர்ந்துவினை

தீர்ந்துபயம் மாய்ந்துமகிழ் மாந்து.


பாந்தள் அணி வேந்தன் - பாம்பை அணியும் மன்னன்;

எரி ஆர்ந்து அரணம் தீய்ந்து அழிய ஏந்து மலை ஏந்தியவன் - தீப் பொருந்தி முப்புரங்கள் கருகி அழிய உயர்ந்த மலையை வில்லாக ஏந்தியவன்;

தீம்-தமிழை ஆய்ந்த பரன் - சங்கப்புலவனாக வந்த பரமன்;

காந்தி மலி மாந்துறையில் ஏந்தல் அடி சேர்ந்து, வினை தீர்ந்து, பயம் மாய்ந்து, மகிழ் மாந்து - அழகிய மாந்துறையில் உறைகின்ற பெரியோனான சிவபெருமான் திருவடியை அடைந்து, வினைகள் தீர்ந்து, அச்சம் அழிந்து, இன்புறுவாயாக.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.043 - மின்னலொத்த மென்மருங்குல் - தனிப்பாடல்

2017-09-21

V.043 - மின்னலொத்த மென்மருங்குல் - தனிப்பாடல்

---------------------------------

(வெண்பா - முற்றெதுகை & முடுகு)


மின்னலொத்த மென்மருங்குல் அன்னையஞ்சக் குன்றசைத்த

தென்னிலங்கை மன்னரற்ற முன்னடர்த்துப் பின்னளித்த

பொன்னிறத்தன் வன்னிமத்தம் சென்னிவைத்த நன்னிலத்தன்

இன்னலத்தை உன்னிநித்தம் பன்னு.


மின்னல் ஒத்த மென்-மருங்குல் அன்னை அஞ்சக் குன்று அசைத்த – மின்னல் போன்ற நுண்ணிடையுடைய உமாதேவி அஞ்சுமாறு கயிலைமலையைப் பெயர்த்த;

தென்-இலங்கை மன் அரற்ற முன் அடர்த்துப் பின் அளித்த பொன்-நிறத்தன் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணன் அழுது புலம்பும்படி அவனை முன்பு நசுக்கிப், பின்னர் வரம் அளித்த பெருமான், பொன் போன்ற திருமேனி உடையவன்;

வன்னி மத்தம் சென்னி வைத்த நன்னிலத்தன் இன்-நலத்தை உன்னி நித்தம் பன்னு - வன்னியிலையையும் ஊமத்தமலரையும் முடிமேல் அணிந்தவனும், நன்னிலம் என்ற தலத்தில் உறைபவமுமான, அந்தப் பெருமானது பெருமைகளை எண்ணித் தினமும் அவன் புகழைப் பாடுவாயாக.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.407 - நன்னிலம் - எல்லையிலா வினைக்கடலில்

2017-09-16

P.407 - நன்னிலம்

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர்")


1)

எல்லையிலா வினைக்கடலில் இடர்ப்படுவேற் கிரங்காயோ

தில்லையிலே திருநட்டம் செய்கின்ற சேவடியாய்

வல்லவனே வார்சடையில் வானதியை வைத்தவனே

நல்லவர்கள் தொழுதேத்தும் நன்னிலத்துப் பெருமானே.


எல்லை இலா வினைக்கடலில் இடர்ப்படுவேற்கு இரங்காயோ - ஈசனே, கரைகாண ஒண்ணாத பெரிய வினைக்கடலில் துன்புறும் எனக்கு இரங்கி அருள்புரிவாயாக; (இடர்ப்படுவேற்கு - இடர்ப்படுவேனுக்கு);

தில்லையிலே திருநட்டம் செய்கின்ற சேவடியாய் - தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் நடராஜனே;

வல்லவனே - எல்லாம் வல்லவனே;

வார்-சடையில் வானதியை வைத்தவனே - நீள்சடையில் கங்கையை அணிந்தவனே; (வானதி - கங்கை);

நல்லவர்கள் தொழுதேத்தும் நன்னிலத்துப் பெருமானே - நல்லோர் வழிபடும் நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


2)

நாநலத்தால் உனையோதும் ஞானத்தைத் தந்தருளாய்

பூநலத்தை நாடியளி பொருந்துகொன்றைத் தாரினனே

கூனிலைத்த சந்திரனைக் குளிர்சடைமேல் புனைந்தவனே

நானிலத்தோர் தொழுதேத்தும் நன்னிலத்துப் பெருமானே.


நா நலத்தால் உனை ஓதும் ஞானத்தைத் தந்தருளாய் - என் நாவைக்கொண்டு உன்னைத் துதிக்கின்ற அறிவைத் தந்து அருள்வாயாக;

பூ நலத்தை நாடி அளி பொருந்து கொன்றைத்-தாரினனே - பூக்களின் தேனை நாடி வண்டுகள் அடையும் கொன்றைமாலையை அணிந்தவனே; (தார் - மாலை);

கூன் நிலைத்த சந்திரனைக் குளிர்-சடைமேல் புனைந்தவனே - வளைந்த பிறையைக் (கங்கையைத் தாங்கிய) குளிர்ந்த சடையின்மேல் அணிந்தவனே; (கூன் - வளைவு); (சம்பந்தர் தேவாரம் - 1.118.4 - "கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்");

நானிலத்தோர் தொழுதேத்தும் நன்னிலத்துப் பெருமானே - உலகத்தோர் வழிபடும் நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


3)

பூரணநின் புகழ்பாடும் போதத்தைத் தந்தருளாய்

வாரணத்தின் உரிமூடு மார்பினில்வெண் ணூலினனே

ஆரணத்துப் பொருளானே அன்றொருகண் இடந்திட்ட

நாரணனுக் காழிதந்த நன்னிலத்துப் பெருமானே.


பூரண, நின் புகழ் பாடும் போதத்தைத் தந்தருளாய் - பூரணனே, உன் புகழைப் பாடும் அறிவை எனக்குத் தந்து அருள்வாயாக; (போதம் - அறிவு; ஞானம்);

வாரணத்தின் உரி மூடு மார்பினில் வெண்ணூலினனே - யானைத்தோலால் மூடிய மார்பில் வெண்ணிறப் பூணூல் அணிந்தவனே; (வாரணம் - யானை); (உரி - தோல்);

ஆரணத்துப் பொருளானே - வேதப்பொருளாக விளங்குபவனே; (ஆரணம் - வேதம்);

அன்று ஒரு கண் இடந்து இட்ட நாரணனுக்கு ஆழி தந்த நன்னிலத்துப் பெருமானே - முன்னொரு சமயம் (ஆயிரம் தாமரையில் ஒரு பூக் குறையவும்) தன் கண்ணையே தோண்டிப் பூவாக இட்டு அர்ச்சித்த திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே; (ஆழி - சக்கரம்);


4)

சக்கரம்போல் சுழல்பிறவி தருவினையைத் தீர்த்தருளாய்

அக்கரவம் கொன்றையந்தார் அணிந்தவனே முக்கண்ணா

மிக்கரவம் செய்திமையோர் வேண்டவொரு தேரேறி

நக்கரணம் மூன்றெரித்த நன்னிலத்துப் பெருமானே.


சக்கரம் போல் சுழல்-பிறவி தருவினையைத் தீர்த்தருளாய் - சக்கரம் போலச் சுழன்றுகொண்டேயிருக்கும் பிறவிகளைத் தருகின்ற வினையைத் தீர்த்து அருள்வாயாக;

அக்கு அரவம் கொன்றையந் தார் அணிந்தவனே - எலும்பு, பாம்பு, கொன்றைமாலை இவற்றையெல்லாம் அணிந்தவனே; (அக்கு - எலும்பு);

முக்கண்ணா - நெற்றிக்கண்ணனே;

மிக்கரவம் செய்து இமையோர் வேண்ட, ஒரு தேர் ஏறி, நக்கு அரணம் மூன்று எரித்த நன்னிலத்துப் பெருமானே - பெருத்த ஒலியெழுப்பித் தேவர்கள் இறைஞ்சவும், அவர்களுக்கு இரங்கி, ஒரு தேரின்மேல் ஏறிச் சிரித்தே முப்புரங்களையும் எரித்த, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே; (மிக்கரவம் - மிக்க அரவம்; தொகுத்தல் விகாரம்); (அரவம் - ஒலி); (நகுதல் - சிரித்தல்); (அரணம் - மதில்);


5)

அஞ்சுவினைத் தொடர்நீக்கி அடியேனுக் கருள்புரியாய்

வஞ்சியொரு பங்குடையாய் வஞ்சமிலா மார்க்கண்டர்

துஞ்சலிலா துயிர்வாழக் கூற்றுதைத்த தூயவனே

நஞ்சுதிகழ் மிடறுடையாய் நன்னிலத்துப் பெருமானே.


அஞ்சு வினைத்தொடர் நீக்கி அடியேனுக்கு அருள்புரியாய் - (நான்) அஞ்சுகின்ற வினைத்தொடரை அழித்து அடியேனுக்கு அருள்வாயாக;

வஞ்சி ஒரு பங்கு உடையாய் - உமையொருபங்கனே;

வஞ்சம் இலா மார்க்கண்டர் துஞ்சல் இலாது உயிர் வாழக் கூற்று உதைத்த தூயவனே - தூய அன்பினரான மார்க்கண்டேயர் என்றும் சாவாமல் உயிர்வாழும்படி காலனை உதைத்த நின்மலனே;

நஞ்சு திகழ் மிடறு உடையாய் - விஷத்தை நீலமணியாகக் கண்டத்தில் உடையவனே;

நன்னிலத்துப் பெருமானே - நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


6)

நூறுவிதக் கவலைகளால் நொந்தேனை அஞ்சலென்னாய்

ஆறுமத மத்தமணி அஞ்சடையாய் இன்பத்தேன்

ஊறுமலர்ப் பாதத்தாய் ஒண்டொடியோர் பாகத்தாய்

நாறுமலர்ப் பொழில்சூழ்ந்த நன்னிலத்துப் பெருமானே.


நூறுவிதக் கவலைகளால் நொந்தேனை அஞ்சல் என்னாய் - பல கவலைகளால் வருந்தும் அடியேனை "அஞ்சல்" என்று அருள்வாயாக;

ஆறு, மதமத்தம் அணி அம்-சடையாய் - கங்கை, ஊமத்தமலர் இவற்றை அணிந்த அழகிய சடையினனே; (மதமத்தம் - ஊமத்தை); (சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடி");

இன்பத்தேன் ஊறு மலர்ப்பாதத்தாய் - இன்பத்தேன் சுரக்கும் மலர்த்திருவடி உடையவனே;

ஒண்தொடி ஓர் பாகத்தாய் - அழகிய வளையல் அணிந்த உமையை ஒரு பாகத்தில் உடையவனே; (ஒண்டொடி- ஒண் தொடி - பெண்);

நாறு மலர்ப்பொழில் சூழ்ந்த நன்னிலத்துப் பெருமானே - மணம் கமழும் சோலை சூழ்ந்த நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


7)

இச்சகத்தில் பிறவிதரும் இருவினையைத் தீர்த்தருளாய்

உச்சிமிசைக் கூவிளமும் ஒண்பிறையும் புனைந்தவனே

பச்சிலையால் தொழுதார்க்கும் பரிந்தருளும் பரம்பரனே

நச்சரவக் கச்சினனே நன்னிலத்துப் பெருமானே.


இச்-சகத்தில் பிறவி தரும் இருவினையைத் தீர்த்தருளாய் - இவ்வுலகில் பிறவியைத் தரும் வினையை அழித்து அருள்வாயாக;

உச்சிமிசைக் கூவிளமும் ஒண்-பிறையும் புனைந்தவனே - திருமுடிமேல் வில்வமும் ஒளிவீசும் பிறையையும் அணிந்தவனே; (கூவிளம் - வில்வம்);

பச்சிலையால் தொழுதார்க்கும் பரிந்தருளும் பரம்பரனே - (மலர்களால் அன்றி) இலையையே தூவி வழிபட்டாலும் அவ்வன்பர்களுக்கு இரங்கி அருளும் பரம்பொருளே; (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்");

நச்சு-அரவக் கச்சினனே - விஷப்பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவனே;

நன்னிலத்துப் பெருமானே - நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


8)

மேல்வினையின் வேரறுத்து மெய்யுணர்வைத் தந்தருளாய்

மால்வரையை இடந்தான்றன் வாய்பத்தும் இசைபாடக்

கால்விரலை ஊன்றியடர் கண்ணுதலே கல்லால்கீழ்

நால்வருக்கு மறைவிரித்த நன்னிலத்துப் பெருமானே.


மேல்வினையின் வேர்-அறுத்து மெய்யுணர்வைத் தந்தருளாய் - ஆகாமிய வினையை வேரோடு அழித்து மெய்ஞ்ஞானத்தைத் தந்து அருள்வாயாக; (மேல்வினை - ஆகாமியம்); (உணர்வு - அறிவு);

மால்-வரையை இடந்தான்தன் வாய் பத்தும் இசை பாடக் கால்விரலை ஊன்றி அடர் கண்ணுதலே - பெரிய மலையான கயிலையைப் பெயர்த்த இராவணனது பத்துவாய்களும் இசைபாடித் துதிக்கும்படி கால்விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய, நெற்றிக்கண்ணனே; (மால் - பெரிய); (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (அடர்த்தல் - நசுக்குதல்);

கல்லால்கீழ் நால்வருக்கு மறை விரித்த நன்னிலத்துப் பெருமானே - கல்லால மரத்தின்கீழ்ச் சனகாதியர் நால்வருக்கும் மறைப்பொருளை உபதேசித்த, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


9)

அள்ளலிலே அழுத்துவினை அழித்தடியேற் கருள்புரியாய்

துள்ளுமறி துடிமழுவாள் சுடர்சூலம் தரித்தவனே

புள்ளிவரும் மால்பிரமன் போற்றநின்ற பரஞ்சுடரே

நள்ளிருளில் நட்ட(ம்)மகிழ் நன்னிலத்துப் பெருமானே.


அள்ளலிலே அழுத்து வினை அழித்து அடியேற்கு அருள்புரியாய் - பிறவி என்ற சேற்றில் அழுத்துகின்ற வினையை அழித்து அடியேனுக்கு அருள்வாயாக; (அள்ளல் - சேறு; நரகம்); (சுந்தரர் தேவாரம் - 7.34.8 - "பூம்புகலூரைப் பாடுமின் புலவீர்காள் அள்ளற்பட் டழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவில்லையே");

துள்ளு மறி, துடி, மழுவாள், சுடர், சூலம் தரித்தவனே - துள்ளும் மான்கன்று, உடுக்கை, மழு, நெருப்பு, திரிசூலம் இவற்றையெல்லாம் கையில் ஏந்தியவனே; (சுடர் சூலம் - 1. சுடரும் சூலமும்; 2. சுடர்கின்ற சூலம் என்று வினைத்தொகை);

புள் இவரும் மால் பிரமன் போற்ற நின்ற பரஞ்சுடரே - (கருடன் என்ற) பறவையை வாகனமாக உடைய திருமாலும் பிரமனும் துதிக்கும்படி ஓங்கிய பரஞ்சோதியே; (புள் - பறவை); (இவர்தல் - ஏறுதல்);

நள்ளிருளில் நட்டம் மகிழ் நன்னிலத்துப் பெருமானே - இருளில் (சர்வசம்ஹார காலத்தில்) திருநடம் செய்கின்ற, நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமானே;


10)

வீணரவம் செய்துழலும் மிண்டருரை பொய்விடுமின்

பேணடியார் துயர்தீர்க்கும் பேரின்பன் பெண்ணெனவும்

ஆணெனவும் ஆயபரன் அரணெய்ய அரவொன்றை

நாணெனவிற் கோத்தபிரான் நன்னிலத்துப் பெருமானே.


வீணர் அவம் செய்து (/வீண் அரவம் செய்து) உழலும் மிண்டர் உரை பொய் விடுமின் - வீணர்களும் அவமே செய்து உழல்கின்ற கல்நெஞ்சர்களுமான அவர்கள் சொல்கின்ற பொய்யை நீங்குங்கள்; ("வீண் அரவம் செய்து உழலும்" என்று பிரித்துப் பொருள்கொண்டால் - "பயனின்றிச் சத்தமிட்டுத் திரிகின்ற"); (மிண்டர் - கல் நெஞ்சர்; உருகாத மனம் உடையவர்கள்);

பேணு அடியார் துயர் தீர்க்கும் பேரின்பன் - போற்றும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கின்றவன், பேரின்பம் உடையவன்; பேரின்பத்தைத் தருபவன்;

பெண் எனவும் ஆண் எனவும் ஆய பரன் - அர்த்தநாரீஸ்வரன் ஆன பரமன்;

அரண் எய்ய அரவு ஒன்றை நாண் என விற் கோத்த பிரான் - முப்புரங்களை எய்வதற்காக மேருமலையை வில்லாக்கி அதில் வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டியவன்;

நன்னிலத்துப் பெருமானே - நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமான்;


11)

அம்புதொடு மன்மதனை அனங்கனென ஆக்கியவன்

கொம்பியலும் மாதினையோர் கூறுடையான் ஏறுடையான்

வம்பியலும் பாமாலை மறவாத வாயினராய்

நம்பியவர் நற்றுணைவன் நன்னிலத்துப் பெருமானே.


அம்பு தொடு மன்மதனை அனங்கன் என ஆக்கியவன் - மலர்க்கணையை ஏவிய காமனை உருவம் அற்றவன் என்று செய்தவன்; (ஆக்குதல் - செய்தல்);

கொம்பு இயலும் மாதினை ஓர் கூறு உடையான் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்; (இயல்தல் - ஒத்தல்);

ஏறு உடையான் - இடபவாகனம் உடையவன்;

வம்பு இயலும் பாமாலை மறவாத வாயினராய் நம்பியவர் நற்றுணைவன் - மணம் கமழும் தமிழ்ப்பாமாலைகளை என்றும் பாடி விரும்பி வழிபடும் அன்பர்களுக்கு நல்ல துணையாக உள்ளவன்; (வம்பு - வாசனை); (இயல்தல் - பொருந்துதல்); (நம்புதல் - 1. விரும்புதல். 2. நம்பிக்கை வைத்தல்);

நன்னிலத்துப் பெருமானே - நன்னிலத்தில் உறைகின்ற சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, May 10, 2025

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

2017-08-06

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

---------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தனானா தனானா தனானா தனானா - சந்தம்; இந்தச் சந்தத்தை வடமொழியில் புஜங்கம் என்பர்)


* முற்குறிப்பு : சிவாஷ்டகங்கள் சில உள்ளன. அவற்றுள் "ப்ரபும் ப்ராணநாதம்" என்று தொடங்கும் சிவாஷ்டகம் பலரும் கேட்டுள்ள / கேள்விப்பட்டுள்ள ஒன்று. பல துதிப்பாடல்களில் நிகழ்வதுபோல இதனிலும் சில பாடபேதங்கள் உள்ளன. இந்தச் சிவாஷ்டகம் வடமொழியில் புஜங்கம் என்ற யாப்பமைப்பில் உள்ளது.

இந்தச் சிவாஷ்டகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாக அதே புஜங்கச் சந்தத்தில் அமைந்த அஷ்டகம் இது.


1)

பிரானெம்மு யிர்க்கோன் அகன்ஞால நாதன்

முராரிக்கு மையன் அறாவின்ப னாகி

இராவிற்கு மப்பால் உளன்பூத நாதன்

.. சிவன்சங்க ரன்சம் புதாள்போற்றி போற்றி.


பதம் பிரித்து:

பிரான்; எம் உயிர்க்-கோன்; அகன் ஞால நாதன்;

முராரிக்கும் ஐயன்; அறா இன்பன் ஆகி,

இராவிற்கும் அப்பால் உளன்; பூத-நாதன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பிரான் - தலைவன்;

எம் உயிர்க்-கோன் - எம் உயிர்க்குத் தலைவன்;

அகன் ஞால நாதன் - அகன்ற உலகங்களுக்குத் தலைவன்; (ஞாலம் - உலகம்);

முராரிக்கும் ஐயன் - திருமாலுக்கும் தலைவன்; (முராரி - முரன் என்ற அசுரனைக் கொன்றவன் - திருமால்);

அறா இன்பன் ஆகி - என்றும் தீராத, அழியாத பேரின்ப வடிவன் ஆகி; (அறுதல் - இல்லாமற் போதல்; தீர்தல்);

இராவிற்கும் அப்பால் உளன் - காலத்தைக் கடந்தவன்; அன்றும் இன்றும் என்றும் உள்ளவன்; (இரா - இரவு - மஹா சம்ஹார காலம்); (அற்புதத் திருவந்தாதி - 11.4.25 - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும்");

பூத-நாதன் - பூதகணங்களுத் தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு - ஈசன் திருநாமங்கள்;

தாள் போற்றி போற்றி - திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


2)

சிரங்கள்பு னைந்தான் அராவார்ந்த ஆகன்

இருங்கூற்று தைத்தான் விசும்போர்ப்பு ரந்தான்

பெருங்கங்கை மோதும் படர்செஞ்ச டைக்கோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சிரங்கள் புனைந்தான்; அரா ஆர்ந்த ஆகன்;

இருங்கூற்று உதைத்தான்; விசும்போர்ப் புரந்தான்;

பெருங்கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சிரங்கள் புனைந்தான் - தலைமாலை அணிந்தவன்; (சிரம் - தலை; கபாலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.44.2 - "கனல்சுடரால் இவர் கண்கள் தலையணி சென்னியர்");

அரா ஆர்ந்த ஆகன் - பாம்புகளை உடம்பில் அணிந்தவன்; (அரா - பாம்பு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அணிதல்); (ஆகம் - உடம்பு);

இரும்-கூற்று உதைத்தான் - பெரிய கரிய நமனை உதைத்தவன்; (இருமை - பெருமை; கருமை); (அப்பர் தேவாரம் - 6.85.6 - "பெருங்கூற்றைச் சேவடியினால் செற்றவன்காண்"); (அப்பர் தேவாரம் - 4.109.1 - "இருங்கூற்றகல"); (குலோத்துங்க சோழனுலா - "பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன்");

விசும்போர்ப் புரந்தான் - தேவர்களைக் காப்பவன்; (விசும்பு - வானுலகு; விசும்போர் - தேவர்கள்): (புரத்தல் - காத்தல்; பாலனம் செய்தல்; அருள்செய்தல்); (புரந்தான் என்ற இறந்தகாலப் பிரயோகம் - சில பாடல்களில் அது போல இறந்தகாலப் பிரயோகம் வருவதுண்டு. உதாரணம்: அப்பர் தேவாரம் - 6.68.7 - "தொண்டர் வல்வினைவே ரறும்வண்ணம் மருந்துமாகித் தீர்த்தானை"); (இலக்கணக் குறிப்பு - "விசும்போர்ப் புரந்தான்" - உயர்திணையில் இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

பெரும்-கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன் - பெரிய கங்கைநதியின் அலைகள் மோதுகின்ற, படர்ந்த செஞ்சடையை உடைய தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


3)

மகிழ்ச்சிக்கொ ரூற்றாய் மணிக்குள்மி ளிர்ந்தான்

நிகர்ப்பில்லி அண்டன் பொடிப்பூசு மண்ணல்

தகர்ப்பான்ம யக்கம் வரம்பாதி இல்லான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மகிழ்ச்சிக்கொர் ஊற்றாய், மணிக்குள் மிளிர்ந்தான்;

நிகர்ப்பில்லி; அண்டன்; பொடிப்-பூசும் அண்ணல்;

தகர்ப்பான் மயக்கம்; வரம்பு-ஆதி இல்லான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மகிழ்ச்சிக்கு ஒர் ஊற்று ஆய் - ஒப்பற்ற இன்ப ஊற்று ஆகி; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்; ஓர் - ஒப்பற்ற);

மணிக்குள் மிளிர்ந்தான் - அழகுக்கு அழகுசெய்து திகழ்பவன்; (மணி - நவரத்தினங்கள்; ஆபரணம்; அழகு); (மிளிர்தல் - பிரகாசித்தல்); ("மணிக்குள் மிளிர்ந்தான்" - மணியுள் மிளிர்ந்தான் என்பது சந்தம் கருதி இப்படி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.6.7 - "சோதியாய் நிறைந்தான் சுடர்ச்-சோதியுட் சோதியான்"); (அபிராமி அந்தாதி - 24 - "மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே");

நிகர்ப்பு-இல்லி, அண்டன் - ஒப்பற்றவன், அண்டன்; (நிகர்ப்பு - ஒப்பு); (அண்டன் - பிரபஞ்சத்தின் தலைவன்);

பொடிப் பூசும் அண்ணல் - திருநீற்றைப் பூசிய பெருமான்; (பொடிப்பூசு, பொடிபூசு - என்று இருவகைப் பிரயோகங்களையும் தேவாரத்தில் காணலாம். இவ்விடத்தில் சந்தம் கருதிப், "பொடிப்பூசு" என்ற பிரயோகம்); (சம்பந்தர் தேவாரம் - 1.135.7 - "வெண்பொடிப்பூசுவர்");

தகர்ப்பான் மயக்கம் - அறியாமையை அழிப்பவன்;

வரம்பு ஆதி இல்லான் - எல்லையும் முதலும் அற்றவன்; (வரம்பு - எல்லை);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


4)

புரம்வேவ நக்கான் அறஞ்சொல்லு மாலன்

அரும்பாவ நாசன் வளம்பொங்கு தேசன்

பெருந்தேவ தேவன் கணம்போற்று வெற்பன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

புரம் வேவ நக்கான்; அறம் சொல்லும் ஆலன்;

அரும் பாவ நாசன்; வளம் பொங்கு தேசன்;

பெருந்தேவ தேவன்; கணம் போற்று வெற்பன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


புரம் வேவ நக்கான் - முப்புரங்கள் எரியும்படி சிரித்தவன்;

அறம் சொல்லும் ஆலன் - மறைப்பொருளைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;

அரும்-பாவ-நாசன் - தீர்த்தற்கு அரிய பாவங்களை எல்லாம் அழிப்பவன்;

வளம் பொங்கு தேசன் - மேன்மை பொங்குகின்ற ஒளிவடிவினன்;

பெரும்-தேவதேவன் - மஹாதேவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

கணம் போற்று வெற்பன் - பூதகணங்கள் எல்லாம் போற்றுகின்ற கயிலைமலையான்; (வெற்பு - மலை); (அப்பர் தேவாரம் - 4.111.2 - "விஞ்சத் தடவரை வெற்பா");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


5)

மலைப்பாவை ஆகத் திடப்பாக மானான்

அலைப்புண்ட டைந்தார் அலம்தீர்பொ ருப்பன்

கலைப்பாவை கேள்வன் சுரர்போற்று மேலோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மலைப்-பாவை ஆகத்து இடப்-பாகம் ஆனான்;

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன்;

கலைப்-பாவை கேள்வன், சுரர் போற்று மேலோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மலைப்பாவை ஆகத்து இடப்பாகம் ஆனான் - தன் திருமேனியில் இடப்பாகமாக மலைக்கு மகளான உமையை உடையவன்; (ஆகம் - மேனி);

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன் - மிக-வருந்தி வந்து தன்னைச் சரணடைந்தவர்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் கயிலாயன்; (அலைப்பு - வருத்தம்); (அலம் - துன்பம்); (பொருப்பு - மலை);

கலைப்பாவை கேள்வன் சுரர் போற்று மேலோன் - சரஸ்வதி கணவனான பிரமனாலும் பிற தேவர்களாலும் வணங்கப்பெறுகின்ற பரம்பொருள்; (கலைப்பாவை - கலைமகள் - சரஸ்வதி); (கேள்வன் - கணவன்); (சுரர் - தேவர்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


6)

கரத்திற்க பாலம் சுடர்சூல மேந்தி

வரத்தைக்கொ டுப்பான் மலர்த்தாள்வ ணங்கில்

சுரர்க்கோர்பி ரான்தான் பெரும்பெற்ற மூர்ந்தான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

கரத்தில் கபாலம், சுடர்-சூலம் ஏந்தி;

வரத்தைக் கொடுப்பான் மலர்த்-தாள் வணங்கில்;

சுரர்க்கோர் பிரான் தான்; பெரும் பெற்றம் ஊர்ந்தான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


கரத்தில் கபாலம், சுடர் சூலம் ஏந்தி - கையில் கபாலத்தையும், (நெருப்பையும்), ஒளிவீசும் சூலத்தையும் ஏந்தியவன்; (சுடர்தல் - பிரகாசித்தல்); (சுடர் - நெருப்பு);

வரத்தைக் கொடுப்பான் மலர்த்தாள் வணங்கில் - தாமரைத்திருவடியை வணங்கினால் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவன்;

சுரர்க்கு ஓர் பிரான் தான் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவன் அவன்; (தான் - அவன்; தேற்றச்சொல்லாகவோ அசைச்சொல்லாகவோ கொண்டும் பொருள்கொள்ளலாம்);

பெரும்-பெற்றம் ஊர்ந்தான் - பெரிய விடையை வாகனமாக உடையவன்; (பெற்றம் - இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 2.80.1 - "பெரிய விடைமேல் வருவார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "பெற்றமூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மானிவனன்றே");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


7)

சுடர்ச்சோதி ஆகன் கணங்கட்கி னிப்பான்

சுடர்க்கண்ண னீற்றன் குபேரற்கு நண்பன்

மடப்பாவை கேள்வன் திகழ்கின்ற மெய்யன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சுடர்ச்-சோதி ஆகன்; கணங்கட்கு இனிப்பான்;

சுடர்க்-கண்ணன்; நீற்றன்; குபேரற்கு நண்பன்;

மடப்-பாவை கேள்வன்; திகழ்கின்ற மெய்யன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சுடர்ச்-சோதி ஆகன் - சந்திரனது ஒளி போலக் குளிர்ந்த ஒளி திகழும் திருமேனியன்; (சுடர் - சந்திரன்); (சோதி - ஒளி; கிரணம்); (ஆகம் - மேனி);

கணங்கட்கு இனிப்பான் - பூதகணங்களுக்கும் அன்பர் கூட்டங்களுக்கும் இன்பம் தருபவன்; (கணம் - பூதகணம்; கூட்டம்); (இனித்தல் - தித்தித்தல்); (அப்பர் தேவாரம் - "பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்தாகும் அமுதினை" - அண்ணித்தாகும் - இனிக்கும்);

சுடர்க்கண்ணன் - தீயை (நெற்றிக்) கண்ணில் உடையவன்; சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களை மூன்று கண்களாக உடையவன்; (சுடர் - சூரியன்; சந்திரன்; நெருப்பு); (அப்பர் தேவாரம் - 6.90.1 - "மூன்றுசுடர்க் கண்ணானை"); (அப்பர் தேவாரம் - 6.98.4 - " சுடர்நயனச் சோதியையே தொடர்வுற்றோமே");

நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்; (திருநீறு - தூய்மையைக் குறிப்பது); (சம்பந்தர் தேவாரம் - 2.66.7 - "சுத்தமதாவது நீறு");

குபேரற்கு நண்பன் - குபேரனுக்குத் தோழன்; (திருவிசைப்பா - 9.1.7 - "தனதன் நற்றோழா சங்கரா" - தனதன் - குபேரன் - धनदः - an epithet of Kubera);

மடப்பாவை கேள்வன் - உமாதேவி மணவாளன்;

திகழ்கின்ற மெய்யன் - என்றும் இருக்கும் மெய்ப்பொருள்; ஒளிவீசும் திருமேனியை உடையவன்; (திகழ்தல் - விளங்குதல்); (மெய் - உண்மை; உடல்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


8)

அரன்பாம்ப ணிந்தான் மயானத்தி லாடி

பரன்வேத நாதன் பவன்மாற்ற மில்லான்

கருங்காடு றைந்தான் மதன்தன்னை அட்டான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

அரன்; பாம்பு அணிந்தான்; மயானத்தில் ஆடி;

பரன்; வேத நாதன்; பவன்; மாற்றம் இல்லான்;

கருங்காடு உறைந்தான்; மதன்-தன்னை அட்டான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


அரன் - ஹரன்;

பாம்பு அணிந்தான் - நாகத்தை மாலையாகப் பூண்டவன்;

மயானத்தில் ஆடி - மயானத்தில் சஞ்சரிப்பவன்; சுடுகாட்டில் கூத்தன்; (ஆடுதல் - சஞ்சரித்தல்; கூத்தாடுதல்);

பரன் - மேலானவன்;

வேத-நாதன் - வேதத்தலைவன்; வேதப்பொருள் ஆனவன்;

பவன் - என்றும் இருப்பவன்;

மாற்றம் இல்லான் - என்றும் மாறாமல் இருப்பவன் - மெய்ப்பொருள்;

கருங்காடு உறைந்தான் - சுடுகாட்டை வாழும் இடமாக உடையவன்; (கருங்காடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 2.38.2 - "வெண்டலைக் கருங்காடுறை வேதியன்");

மதன்தன்னை அட்டான் - மன்மதனைச் சுட்டெரித்தவன்; (அடுதல் - எரித்தல்); (அப்பர் தேவாரம் - 6.26.1 - "வன்கருப்புச்-சிலைக் காமன்-உடல் அட்டானை");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------