Friday, May 15, 2020

03.08.004 - செய்யாதிரு (யமகம்)

03.08 – பலவகை

2008-05-02

3.8.4 - செய்யாதிரு (யமகம்)

----------------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா)


செய்யாதிரு வாரூருறை செல்வாவெனப் போற்றி

செய்யாதிரு ஞாலத்துள தினம்வீண்செய லாமா?

செய்யாதிரு விழிமேலொரு தீக்கண்ணுளன் தொண்டே

செய்யாதிரு வினைதான்செயும் சிவன்தாள்தொழ வீடே.


பதம் பிரித்து:

"செய்யா, திரு-ஆரூர் உறை செல்வா" எனப் போற்றி

செய்யாது, இருஞாலத்து உள தினம் வீண் செயலாமா?

செய்யாது, இரு-விழிமேல் ஒரு தீக் கண் உளன் தொண்டே

செய்; யாது இருவினைதான் செயும்? சிவன் தாள் தொழ வீடே.


"செய்யா, திரு ஆரூர் உறை செல்வா" எனப் போற்றி செய்யாது - "செம்மேனியனே, திருவாரூரில் உறையும் செல்வனே" என்று துதியாமல்; (செய்யன் - செம்மேனியன்); (போற்றிசெய்தல் - துதித்தல்);

இருஞாலத்து உள தினம் வீண் செயலாமா? - பெரிய பூமியில் உள்ள நாள்களை (வாழ்நாளை) வீணாக்கலாமா? (இருஞாலம் = இருமை+ஞாலம்; இருமை - பெருமை; ஞாலம் - பூமி); (உள - உள்ள - இடைக்குறை விகாரம்);

செய்யாது, இரு-விழிமேல் ஒரு தீக் கண் உளன் தொண்டே செய் - அப்படி வீண் செய்யாமல், இரண்டு கண்களுக்கு மேல் ஒரு தீ உமிழும் கண் (நெற்றிக்கண்) உடையவனான சிவபெருமான் திருத்தொண்டே செய்;

யாது இருவினைதான் செயும்? சிவன் தாள் தொழ வீடே - கொடிய வினைதான் என்ன செய்யும்? சிவனது திருவடியைத் தொழுதால் வினை அழியும்; தொழுதால் முக்தி கிட்டும்; (யாது - என்ன); (இருவினை - நல்வினை தீவினை; பெரிய/கொடிய வினை); (வீடு - வினைநீக்கம்; முக்தி); (சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "ஞானசம்பந்தன்-சொல் விரும்புவார் வினை வீடே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment