Saturday, May 16, 2020

03.04.081 - சிவன் - முருகன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-10-31

03.04.081 - சிவன் - முருகன் - சிலேடை

-------------------------------------------------------

மயிலைமகிழ் மைந்தனிரு மாதரோ டென்றும்

பயில்வான் மதியான் பணியும் - முயங்கமுடி

வைத்தான் அழிப்பான்இவ் வையமெல்லாம் காக்கின்றான்

மைத்தகண்டன் கந்தனென்றே வாழ்த்து.


சொற்பொருள்:

மயில் - முருகனின் வாகனம்;

மயிலை - மயிலாப்பூர்;

மகிழ்தல் - விரும்புதல்;

மைந்தன் - 1. மகன்; இளைஞன்; / 2. வீரன்;

பயில்தல் - நிகழ்தல்; பொருந்துதல்; தங்குதல்;

பயில்வான்மதியான் - 1. பயில் வால் மதியான்; / 1. பயில்வான் மதியான்; (இலக்கணக் குறிப்பு: "ல்+= ன்ம" என்று புணர்ச்சியில் திரியும்);

வால் - தூய்மை; வெண்மை; இளமை;

வான் - வானம்; அழகு;

வால் மதியான் - வால் அறிவன் - தூய அறிவினன் - கடவுள்;

வான் மதியான் - அழகிய திங்கள் அணிந்தவன்; வானில் விளங்கும் சந்திரனை அணிந்தவன்;

பணி - 1. தொண்டு; / 2. பாம்பு;

முயங்குதல் - 1. செய்தல்; / 2. தழுவுதல்; பொருந்துதல்;

முடிவைத்தான் - 1. முடிவைத் தான்; / 2. முடி வைத்தான்;

முடிவு - மரணம்;

முடி - தலை; உச்சி;

தான் - அவன்/அவள்/அது (படர்க்கை ஒருமைப் பெயர்);

மைத்தல் - கறுத்தல்; (மைத்த கண்டன் - நீலகண்டன்)


முருகன்:

மயிலை மகிழ் மைந்தன் - மயில் வாகனத்தை விரும்பும் சிவகுமரன்;

இரு மாதரோடு என்றும் பயில் வால் மதியான் - என்றும் வள்ளி தெய்வயானையோடு இருக்கும் தூய அறிவினன்;

பணியும் முயங்க முடிவைத் தான் அழிப்பான் - (பக்தர்கள் மனத்தில் தியானிப்பதோடு பிற) தொண்டுகளும் செய்ய, இறப்பை அவன் அழிப்பான்; (அடியார்களுக்கு இறப்பில்லாப் பேரின்ப நிலையை அருள்வான்); (உம் - அசை என்றும் கொள்ளல் ஆம்);

இவ் வையம் எல்லாம் காக்கின்றான் - இவ்வுலகங்கள் எல்லாவற்றையும் காப்பவன்;

கந்தன் - முருகன்;


சிவன்:

மயிலை மகிழ் மைந்தன் - மயிலாப்பூர் என்ற தலத்தில் விரும்பி உறையும் வீரன்;

இரு மாதரோடு என்றும் பயில் வான் மதியான் - என்றும் உமையோடும் கங்கையோடும் இருப்பவன். அழகிய திங்களைச் சூடியவன்;

பணியும் முயங்க முடி வைத்தான் - (சந்திரனைப்) பாம்பும் பின்னி இருக்கும்படி அதனைத் தன் தலையில் வைத்தவன்;

அழிப்பான் இவ் வையமெல்லாம் - எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்பவன்;

காக்கின்றான் மைத்த கண்டன் - இவ்வுலகங்களையெல்லாம் காக்கின்றவன், நீலகண்டன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment