Tuesday, May 19, 2020

03.08.005 - நித்தனை நித்தனை - மடக்கு

03.08 – பலவகை

2008-12-05

3.8.5 - நித்தனை நித்தனை - மடக்கு

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் விளம் விளம் விளம் மா தேமா)


நித்தனை நித்தனைம் மனத்தொடு வணங்குவார் நிழல்போல் நீங்கா

அத்தனை அத்தனை அமரரின் தலைவனை அன்பு செய்வார்

சித்தனைச் சித்தனை நரிகளைப் பரிகளாச் செய்து காட்டும்

எத்தனை எத்தனை அருளனை எப்படி ஏத்து வேனே.


பதம் பிரித்து:

நித்தனை, நித்தல் நைம்-மனத்தொடு வணங்குவார் நிழல் போல் நீங்கா

அத்தனை, அத்தனை அமரரின் தலைவனை, அன்பு செய்வார்

சித்தனைச், சித்தனை, நரிகளைப் பரிகளாச் செய்து காட்டும்

எத்தனை, எத்தனை அருளனை எப்படி ஏத்துவேனே.


நித்தனை - என்றும் இருப்பவனை; (நித்தன் - அழிவற்றவன்);

நித்தல் நைம் மனத்தொடு வணங்குவார் நிழல்போல் நீங்கா அத்தனை - தினமும் உருகி நைகின்ற மனத்தால் வனங்கும் பக்தர்களை நிழல்போல் என்றும் நீங்காமல் உடன் இருக்கின்ற தந்தையை; (அத்தன் - தந்தை);

அத்தனை அமரரின் தலைவனை - முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் தலைவனை;

அன்பு செய்வார் சித்தனை - பக்தர்களது சித்தத்தில் இருப்பவனை; (சித்தன் - சித்தத்தில் இருப்பவன்);

சித்தனை - சித்திகள் உடையவனை;

நரிகளைப் பரிகளாச் செய்து காட்டும் எத்தனை - நரியைக் குதிரையாகச் செய்யும் வஞ்சகனை; (பரிகளா - பரிகளாக - கடைக்குறை); (எத்தன் - எத்துச் (சூழ்ச்சி/வஞ்சகம்) செய்பவன்);

எத்தனை அருளனை - அளவற்ற அருள் உடையவனை;


இலக்கண குறிப்பு:

"நை + மனம்" என்ற வினைத்தொகை "நைம்மனம்" என்று வரும்.

கை, பை, செய், நெய், பொய்,,, போன்ற சொற்களுக்குப் பின் மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின், புணர்ச்சியில் அம்மெல்லினம் மிகும். (கைம்மா, பொய்ஞ்ஞானம், மெய்ந்நெறி,,).

இது வினைத்தொகைக்கும் பொருந்தும். சில உதாரணங்கள்:

பெரியபுராணம் - மூர்த்தி நாயனார் புராணம் - 12.15.31 - "பெய்ம்மாமுகில்";

பெரியபுராணம் - திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் - 12.19.5 - "காதல்செய்ம் முறைமை";

ஐங்குறுநூறு - "பெய்ம்மழை";

திருக்குறளில் - "செய்ந்நன்றி";


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment