Saturday, May 16, 2020

03.04.076 - விநாயகன் - சிவன் - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2008-09-03

3.4.76 - விநாயகன் - சிவன் - சிலேடை - 1

-------------------------------------------------------

என்னானை நல்வடிவத் தானை இனியமறை

சொன்னவனை மூத்தவனைத் தோத்திரிப்பார்க் - கின்னமுதைத்

தந்தஇறை யைக்கொம்பை ஓர்பால் உடையானை

வந்திமுக்கண் ணன்மைந்தன் என்று.


சொற்பொருள்:

என்னானை - 1. என் ஆனை; / 2. என்னவனை;

வடிவம் - உருவம்; அழகு;

சொன்னவனை - 1. உரைத்தவனை; / 2. சொல் நவனை;

நவன் - புதியவன்; (சுந்தரர் தேவாரம் - 7.72.2 - "புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்" - திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும், புதியவனும்);

மூத்தவன் - 1. அண்ணன்; தமையன்; / 2. தொன்மையானவன்;

தந்த இறை - 1. தந்தத்தை உடைய இறைவன்; / 2. கொடுத்த இறைவன்;

கொம்பு - 1. தந்தம்; / 2. பூங்கொம்பு; (அப்பர் தேவாரம் - 4.66.4 - "கொம்பனாள் பாகர் போலும்");

உடையான் - 1. உடைத்தல் செய்யாதவன்; / 2. உடையவன்;

வந்தித்தல் - வணங்குதல்;

மைந்தன் - 1. மகன்; / 2. வீரன்;


விநாயகன்:

என் ஆனை நல் வடிவத்தானை, இனிய மறை

சொன்னவனை, மூத்தவனைத், தோத்திரிப்பார்க்கு இன் அமுதைத்,

தந்த இறையைக், கொம்பை ஓர்பால் உடையானை,

வந்தி முக்கண்ணன் மைந்தன் என்று.


நல்ல யானை உருவம் கொண்டவனை, இனிய வேதங்கள் துதிக்கின்றவனை, மூத்தவனை (முதல் மகனை / முருகனுக்கு அண்ணனை), வணங்குபவர்களுக்கு இனிய அமுதம் போன்றவனைத், தந்தம் உடைய கடவுளை, ஒரு பக்கம் தந்தத்தை ஒடித்தல் செய்யாதவனை (/ஒரு பக்கம் தந்தத்தை உடையவனை), மூன்று கண் உடைய சிவனது மகன் என்று வந்திப்பாயாக.


சிவன்:

என்னானை, நல் வடிவத்தானை, இனிய மறை

சொல் நவனை, மூத்தவனைத், தோத்திரிப்பார்க்கு இன் அமுதைத்

தந்த இறையைக், கொம்பை ஓர்பால் உடையானை,

வந்தி, "முக்கண்ணன், மைந்தன்" என்று.


என்னவனை, நல்ல அழகனை, இனிய வேதங்களைப் பாடியருளிய புதியவனைத் (/ வேதங்கள் துதிக்கும் புதியவனைத்), தொன்மையானவனை, வணங்கிய தேவர்களுக்கு இனிய அமுதைத் தந்த இறைவனை (நீலகண்டனைப்), பூங்கொம்பு போன்ற உமையாளைத் தன் உடலில் ஒரு பக்கம் உடையவனை, "முக்கண்ணன், வீரன்" என்று வந்திப்பாயாக.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment