Saturday, May 16, 2020

03.06.041 - மாவினை - நச்சு - மடக்கு

 03.06 – மடக்கு

2008-06-01
3.6.41 - மாவினை - நச்சு - மடக்கு
-------------------------
மாவினை ஒத்துத் திரியும் மடநெஞ்சே
மாவினை மாய்ந்தின்பம் மல்குமே - மாவினை
நச்சு திருக்கச்சி ஏகம்பன் நன்மைசெய்யும்
நச்சு மிடற்றானை நம்பு.

மாவினை ஒத்துத் திரியும் மடநெஞ்சே - விலங்கைப் போலத் திரிகின்ற பேதைமனமே;
மா வினை மாய்ந்து இன்பம் மல்குமே - பெரிய வினைகளெல்லாம் அழிந்து இன்பம் மிகும்;
மாவினை நச்சு திருக்கச்சி ஏகம்பன் - மாமரத்தை விரும்பும் கச்சி ஏகம்பன்; (காஞ்சிபுரத்துத் தலமரம் - மாமரம்); (நச்சுதல் - விரும்புதல்);
நன்மைசெய்யும் நச்சு மிடற்றானை நம்பு - நலம் அருள்பவனும் விடம் தங்கிய கழுத்தை உடையவனுமான பெருமானை விரும்பித் தொழு; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);

(சம்பந்தர் தேவாரம் - 1.86.10 - "நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை எச்சும் அடியார்கட் கில்லை இடர்தானே.");

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment