Sunday, May 17, 2020

03.04.082 - சிவன் - வாழைப்பழம் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-11-04

3.4.82 - சிவன் - வாழைப்பழம் - சிலேடை

-------------------------------------------------------

உரிதோலே சூழ்ந்திருக்கும் உள்வெளுத்துக் காணும்

பிரியர்க் கினிக்கும் பெரிதும் - கரிமண்டும்

கண்டவிடம் உண்டு கடையிலும் என்பதால்

பண்டரங்கன் வாழைப் பழம்.


சொற்பொருள்:

உரிதோல் - 1. உரிக்கின்ற தோல்; / 2. உரித்த தோல்;

சூழ்தல் - சுற்றியிருத்தல்;

உள் - 1. உள்ளே; / 2. மனம்;

காணுதல் - 1. கண்ணுக்குத் தெரிதல்; / 2. ஆராய்தல்; வணங்குதல்;

பிரியர் - அன்பர்;

கரி - 1. யானை; / 2. விடம்;

மண்டுதல் - 1. நிரம்ப உண்ணுதல்; / 2. மிகுதியாதல்;

கண்டவிடம் - கண்ட இடம் - 1. பார்த்த இடத்தில்; / 2. கழுத்துப் பகுதி;

கடை - 1. அங்காடி; / 2. முடிவு;

பண்டரங்கன் - பாண்டரங்கக் கூத்தாடுவோன் - சிவபிரான்;


வாழைப்பழம்:

உரிதோலே சூழ்ந்திருக்கும் - உரிக்கின்ற தோல் சுற்றி இருக்கும்;

உள் வெளுத்துக் காணும் - உள்ளே வெண்மையாக இருக்கும்;

பிரியர்க்கு இனிக்கும் பெரிதும் - விரும்புவோர்க்கு மிகவும் இனிக்கும்;

கரி மண்டும் கண்ட இடம் - யானை அதனை எங்கே கண்டாலும் நிரம்ப உண்ணும்;

உண்டு கடையிலும் - அங்காடிகளிலும் இருக்கும்;


சிவன்:

உரிதோலே சூழ்ந்திருக்கும் - (யானையின்) உரித்த தோல் அவனைச் சுற்றியிருக்கும் - யானைத்தோலைப் போர்த்தவன்;

உள் வெளுத்துக் காணும் பிரியர்க்கு இனிக்கும் பெரிதும் - (கள்ளம் இல்லா) வெள்ளை உள்ளத்தோடு வணங்கும் / தியானிக்கும் பக்தர்களுக்கு மிகவும் இனிமை பயப்பான்; (--'உள் வெளுத்துக் காணும்' - என்பதைத் "வெளியே தோலால் மூடப்பட்டிருப்பினும், உள்ளே திருமேனிமேல் நீறு பூசியிருப்பான்" என்றும் பொருள் கொள்ளலாம்);

கரி மண்டும் கண்டவிடம் - கழுத்துப் பகுதியில் விடம் மிகுந்திருக்கும்; (--அல்லது-- கழுத்தில் விடம் கருமை மிகுந்திருக்கும்);

உண்டு கடையிலும் - முடிவிலும் இருப்பவன்;

பண்டரங்கன் - பாண்டரங்கக் கூத்தாடும் சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment