02.11 – நின்றவூர் - (திருநின்றவூர்)
2011-01-23
திருநின்றவூர்
-----------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு; திருநேரிசை அமைப்பு)
(திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம் இது)
(திருநாவுக்கரசர் தேவாரம் - திருநேரிசை - 4.27.1 - “மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சா”)
1)
கடப்பவன் அண்டம் எல்லாம் கங்கையைச் சடையின் உள்ளே
அடைப்பவன் பூச லாரின் அகத்தளி அண்ணல் தூது
நடப்பவன் ஆரூர் தன்னில் ஞாலமெல் லாமொ டுக்கிப்
படைப்பவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
அகத்தளி
-
மனக்கோயில்;
பதி
-
தலம்;
கடப்பவன்
அண்டம் எல்லாம் -
எல்லா
அண்டங்களையும் கடந்து நிற்பவன்;
கங்கையைச்
சடையின் உள்ளே அடைப்பவன்
-
கங்காதரன்;
பூசலாரின்
அகத் தளி அண்ணல் -
பூசலார்
நாயனாரின் மனக்கோயிலில்
இருக்கும் பெருமான்;
தூது
நடப்பவன் ஆரூர் தன்னில் -
சுந்தரருக்காகத்
திருவாரூரில் தூதனாக நடந்தவன்;
ஞாலம்
எல்லாம் ஒடுக்கிப் படைப்பவன்
மேவுகின்ற பதி திருநின்றவூரே
-
உலகங்களை
எல்லாம் ஒடுக்கிப் பின்
மீண்டும் அவற்றைப் படைப்பவன்.
அச்சிவபெருமான்
எழுந்தருளும் தலம் திருநின்றவூர்.
2)
தோய்ந்தவன் அன்பர் நெஞ்சுள் தூயவே தங்கள் நாலும்
ஆய்ந்தவன் ஆனஞ் சாடி அஞ்சன விழியாட் கோர்பால்
ஈந்தவன் அன்று மாணிக் கிடர்தரு கால னார்மேல்
பாய்ந்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
தோய்ந்தவன்
அன்பர் நெஞ்சுள் -
அன்பர்
நெஞ்சில் கலந்து நிற்பவன்;
தூய
வேதங்கள் நாலும் ஆய்ந்தவன்
-
தூமறைகள்
நான்கும் ஆராய்ந்தவன்;
(அப்பர்
தேவாரம் -
6.65.6 - “ஆய்ந்தவன்காண்
அருமறையோ டங்கம் ஆறும்”);
ஆன்
அஞ்சு ஆடி -
பசுவில்
இருந்து பெறப்படும் ஐந்து
பொருள்களால் அபிஷேகம்
செய்யப்பெறுபவன்;
அஞ்சனம்
-
கண்ணிற்கு
இடும் மை;
அஞ்சன
விழியாட்கு ஓர் பால் ஈந்தவன்
-
மைவிழியாள்
பார்வதிக்கு ஒரு பக்கத்தைக்
கொடுத்தவன்;
மாணிக்கு
இடர்தரு காலனார்மேல்
பாய்ந்தவன் -
மார்க்கண்டேயர்க்கு
துன்பம் செய்த எமனை உதைத்தவன்;
மேவுகின்ற
பதி திருநின்றவூரே
-
அப்பெருமான்
உறையும் தலம் திருநின்றவூர்;
3)
சிறந்தவன் பூச லாரின் சிந்தையுள் நீங்கா தென்றும்
உறைந்தவன் தோற்றம் இல்லான் ஒருமுடி வில்லான் எங்கும்
நிறைந்தவன் மன்னா மாற்று நின்தளி புகுநாள் என்று
பறைந்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
பதம்
பிரித்து:
சிறந்தவன்;
பூசலாரின்
சிந்தையுள் நீங்காது என்றும்
உறைந்தவன்;
தோற்றம்
இல்லான்;
ஒரு
முடிவு இல்லான்;
எங்கும்
நிறைந்தவன்;
"மன்னா,
மாற்று
நின் தளி புகு நாள்"
என்று
பறைந்தவன்
மேவுகின்ற பதி திருநின்றவூரே.
*
பல்லவ
மன்னன் கட்டிய கோயிலில்
இறைவரைத் திருக்கோயிலில்
எழுந்தருளுவித்தற்கென நியமித்த
அந்நாளுக்கு முன்னைய நாளில்
அவன் கனவில் சிவபெருமான்
தோன்றிப்,
"பூசல்
என்ற அன்பன் செய்த கோயிலில்
நாளை நாம் புகுவோம்:
எனவே,
உன்
கோயில் குடமுழுக்கின் நாளை
மாற்றிக் கொள்க"
என்று
கூறினார்.
இவ்வரலாற்றைப்
பெரியபுராணத்திற் காண்க.
4)
கண்பொலி கின்ற நெற்றி கார்பொலி கின்ற கண்டம்
பெண்பொலி கின்ற மேனி பிறைபொலி சென்னி என்று
பண்பொலி கின்ற பாடல் பாடுவார் தமக்கி ரங்கும்
பண்பினன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
பொலிதல்
-
விளங்குதல்;
கார்
-
கருமை;
பண்
-
இசை;
5)
செவித்திறன் கொண்டு நாதன் சீரினைக் கேட்டுக் கைகள்
குவித்திரு போதும் ஈசன் குரைகழல் போற்றும் பத்தர்
புவித்திரும் பாத வண்ணம் பொன்னுல கேற்று கின்ற
பவித்திரன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
திறன்
-
சக்தி;
குரைகழல்
-
ஒலிக்கின்ற
கழல் அணிந்த திருவடி;
புவித்
திரும்பாத வண்ணம் -
உலகில்
மீண்டும் பிறவாதபடி;
பொன்னுலகு
-
சிவலோகம்;
பவித்திரன்
-
தூயவன்;
(சம்பந்தர்
தேவாரம் -
2.31.1 -
"சுற்றமொடு
பற்றவை துயக்கற அறுத்துக்
குற்றமில்
குணங்களொடு கூடுமடி யார்கள்
மற்றவரை
வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ
னிருப்பது கருப்பறிய லூரே.")
6)
வாடினார் பசிக்குக் காசு வழங்கினான் மிழலை தன்னில்;
ஆடினான் தில்லை தன்னுள்; ஆயிழை ஒருகூ றாகக்
கூடினான்; கோல மாகக் குளிர்மதி சூடி; வேதம்
பாடினான் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
*
அடி-1:
திருவீழிமிழலையில்
தொண்டர் குழாத்தின் பசிதீர்க்கப்
படிக்காசு நல்கியதைச்
சுட்டியது.
இவ்வரலாற்றைப்
பெரியபுராணத்திற் காண்க.
(பெரிய
புராணம் -
28 திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார் புராணம் -
# 564 : “உலகியல்பு
நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசிநோய் உமையடையா தெனினும்
….")
மதிசூடி
-
பிறைச்சந்திரனை
அணிந்தவன்;
வழங்கினான்,
ஆடினான்,
கூடினான்,
பாடினான்
-
வழங்கியவன்,
ஆடியவன்,
கூடியவன்,
பாடியவன்;
7)
தேவையன் போடு போற்றிச் செந்தமிழ் பாடு தொண்டர்
தேவையொன் றின்றி வாழச் செல்வமி குத்த ளிப்பான்
ஏவையன் றெய்த ரண்கள் எரித்தமுக் கண்ணன் ஓர்பால்
பாவையன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
பதம்
பிரித்து:
தேவை
அன்போடு போற்றிச் செந்தமிழ்
பாடு தொண்டர்
தேவை
ஒன்று இன்றி வாழச் செல்வம்
மிகுத்து அளிப்பான்;
ஏவை
அன்று எய்து அரண்கள் எரித்த
முக்கண்ணன்;
ஓர்
பால்
பாவையன்
மேவுகின்ற பதி திருநின்றவூரே.
தே
/
தேவு
-
தெய்வம்;
தேவை
-
1) தெய்வத்தை;
2) Compelling need or
necessity;
ஏ
-
அம்பு
(Arrow);
(ஏவை
-
அம்பை);
அரண்கள்
-
கோட்டைகள்
-
முப்புரங்கள்;
ஓர்
பால் பாவையன்
-
ஒரு
பக்கம் பெண் உருவினன்;
8)
ஆர்த்தவன் னெஞ்சப் பேதை அருவரை தன்னை ஓடிப்
பேர்த்தவன் அலறி வீழப் பெருவிரல் ஊன்றும் ஈசன்
போர்த்தவன் ஆனைத் தோலைப் பூங்கணைக் காமன் வேவப்
பார்த்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
பதம்
பிரித்து:
ஆர்த்த
வன் நெஞ்சப் பேதை,
அரு
வரை தன்னை ஓடிப்
பேர்த்தவன்
அலறி வீழப் பெருவிரல் ஊன்றும்
ஈசன்;
போர்த்தவன்
ஆனைத் தோலைப்;
பூங்கணைக்
காமன் வேவப்
பார்த்தவன்
மேவுகின்ற பதி திருநின்றவூரே.
ஆர்த்தல்
-
ஒலித்தல்
(To
shout, roar, bellow);
வன்னெஞ்சம்
-
கொடிய
மனம்;
பேதை
-
அறிவிலி
(ignorant
person);
அரு
வரை -
கயிலாய
மலை;
ஆர்த்த
வன் நெஞ்சப் பேதை,
அரு
வரை தன்னை ஓடிப் பேர்த்தவன்
-
கொடிய
மனமுடையவன்,
அறிவில்லாதவன்,
ஆரவாரம்
செய்து ஓடிப் போய்க் கயிலாய
மலையைப் பெயர்க்க முயன்ற
இராவணன்;
பெருவிரல்
-
கட்டை
விரல் (Thumb
or big toe);
பூங்கணைக்
காமன் -
மலர்
அம்பை ஏவும் மன்மதன்;
9)
பங்கயன் திருமால் அன்று பறந்தும கழ்ந்தும் தேட
அங்கியின் உருவாய் நின்றான் ஆதியோ டந்தம் இல்லான்
திங்களும் புனலும் பாம்பும் செஞ்சடை வைத்தான் மாதோர்
பங்கினன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
பங்கயன்
-
தாமரையில்
இருக்கும் பிரமன்;
பறந்துமகழ்ந்தும்
-
பறந்தும்
அகழ்ந்தும் -
அன்னமாய்
வானில் பறந்தும் பன்றியாய்
நிலத்தைத் தோண்டியும்;
அங்கி
-
நெருப்பு;
ஆதியோடு
அந்தம் இல்லான் -
முதலும்
முடிவும் இல்லாதவன்;
10)
வெற்றுரை பேசி நாளும் வேதமெய்ந் நெறியைத் தூற்றும்
குற்றமார் கொள்கை யாரின் கூச்சலை மதியார் கற்றோர்
நெற்றியில் நீற்ற ராகி நினைபவர் உய்ய வந்து
பற்றுவான் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
வெற்றுரை
-
பொருளற்ற
சொல் (Meaningless
word);
வேத
மெய்ந்நெறி -
வைதிக
மார்க்கமான உண்மைநெறி;
குற்றம்
ஆர் கொள்கையார் -
குற்றம்
பொருந்திய கொள்கையை உடையவர்கள்;
மதியார்
கற்றோர் -
கற்றவர்கள்
மதிக்கமாட்டார்கள்;
நீற்றர்
ஆகி -
திருநீறு
அணிந்தவர்கள் ஆகி;
நினைபவர்
உய்ய வந்து பற்றுவான் -
திருவடியைத்
தியானிப்பவர்கள் வினைக்கடலுள்
ஆழாமல் உய்யும்படி வந்து
அவர்களைப் பற்றுபவன்;
11)
திருப்பதம் அஞ்சை ஓதும் செம்மையர்க் கருளிப் பாவப்
பொருப்பதைப் பொடிசெய் பெம்மான் புண்ணிய மூர்த்தி எந்தை
நெருப்பதன் நிறத்தன் வெள்ளை நீற்றினன் கயிலை என்னும்
பருப்பதன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே.
பதம்
அஞ்சு -
ஐந்தெழுத்து;
(சுந்தரர்
தேவாரம் -
7.83.1 - 'அந்தியும்
நண்பகலும் அஞ்சு பதம்சொல்லி');
(பதம்
-
சொல்;
அஃது
ஆகுபெயராய்,
எழுத்தினை
உணர்த்திற்று);
பொருப்பு
-
மலை;
(பாவப்
பொருப்பு -
மலை
அளவு இருக்கும் பாவம்);
புண்ணிய
மூர்த்தி -
புண்ணியத்தின்
வடிவினன்;
பருப்பதம்
-
மலை;
(கயிலைப்
பருப்பதன் -
கயிலை
மலையான்);
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்புகள் :
1) திருநின்றவூர் - இருதயாலீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=646
2) பூசலார் நாயனார் - சுகி சிவம் உரை: https://www.youtube.com/watch?v=39_fnO91ZF4
----------------- ----------------
OM NAMASIVAYA
ReplyDelete🌹🌹🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏
ஐயா, திரு. வி. சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய திருநின்றவூர், அருள்மிகு ஸ்ரீ இருதயாலீஸ்வரர், அம்பிகை ஸ்ரீ மரகதாம்பிகை, திருக்கோயில் இல் பாட வேண்டிய பூசலார்நாயனார் உள்ளத்தில் கட்டிய கோவில் பதிகங்கள் அழகாக தொகுத்து பதிவு செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் இறைப்பணி தொடர்க. வாழ்க வளத்துடன் என்றும். ஓம் நமசிவாய. அயனின் திருவடிகளே சரணம் சரணம். 🙏🙏🙏
ReplyDelete