Monday, January 10, 2022

06.01.111 - சிவன் - சிங்கம் - முருகன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2010-01-09

06.01.111 - சிவன் - சிங்கம் - முருகன் - சிலேடை

-----------------------------------------------

கானில் நடமாடும் கண்ணிற் பொறிபறக்கும்

மான்மேலே பாயுமா றோடுமே - கோனென்று

வான்புகழ்நற் கோலமா மானஞ்சு கண்டமுடை

யான்மிசையூர் மைந்தன் அரி.


சொற்பொருள்:

கான் - 1) சுடுகாடு; 2) காடு;

நடமாடுதல் - 1) திருநடம் செய்தல்; 2) சஞ்சரித்தல்;

பொறிபறத்தல் - 1) தீப்பொறி சிதறுகை; 2) சினத்தோடு பார்த்தல்;

மான் - 1) ஒரு விலங்கு - Deer; 2) பெரியோன் - e.g. "எம்மான்";

பாயுமாறு - 1) பாயும் ஆறு; 2) பாயும்படி;

ஓடு - 1) மண்டையோடு; 2) ஓடுதல்;

- அம்பு;

மே - மேம்பாடு (Excellence);

வான் புகழ் - 1) வானோர் புகழும்; 2) பெரும் புகழ் உடைய;

கோலம் - 1) வேடம்; 2) உருவம்; அழகு; தன்மை;

கோலமா மானஞ்சு - 1) கோலம் ஆம், மால் நஞ்சு/ஆல் நஞ்சு; 2) கோலம் ஆம், மான் அஞ்சு/ஆன் அஞ்சு;

மால் - 1) கருமை (Blackness); 2) பெருமை (greatness);

ஆல் - ஓர் அசைநிலை;

ஆல் நஞ்சு - ஆலகால விஷம்;

மால் நஞ்சு - கரிய விடம்;

ஆன் - 1) இடபம்; 2) எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண்;

கண்டம் - 1) தொண்டை; கழுத்து; 2) குரல்; 3) பேராபத்து;

ஆன் மிசை ஊர் - இடபத்தின்மேல் செல்லும்;

மைந்தன் - 1) வீரன்; 2) மகன்; 3) இளையோன்;

அரி - சிங்கம்;


(மால் நஞ்சு = மானஞ்சு --- இலக்கணக் குறிப்பு - 154/155 காண்க.

கோலம் ஆம் மான் அஞ்சு = கோலமா மானஞ்சு --- இலக்கணக் குறிப்பு - 146 காண்க.

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்:

146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.

154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.

155. தனிக்குற்றெழுத்தைச் சாராத ல ளக்கள், இரு வழியிலும், வரு நகரந் திரிந்த விடத்துக் கெடும்.)


சிங்கம்:

கானில் நடமாடும் - காட்டில் சஞ்சரிக்கும்;

கண்ணிற் பொறிபறக்கும் - சினத்தோடு பார்க்கும் - மிகுந்த கோபம் உடையது;

மான் மேலே பாயுமாறு ஓடுமே - மான் மீது பாயும்படி ஓடும்;

கோன் என்று வான்புகழ் நற் கோலம் ஆம் - காட்டுக்கு அரசன் என்று சொல்லும்படி பெரும்புகழ் உடைய வடிவம்/தன்மை இருக்கும்;

மான்/ஆன் அஞ்சு கண்டம் உடை - மிருகங்கள் அஞ்சி நடுங்கும்படி குரலை உடைய;

அரி - சிங்கம்;


முருகன்:

கானில் நடமாடும் கண்ணில் பொறிபறக்கும் மான் மேலே பாயுமாறு ஓடுமே - (மான் - மான் போன்ற வள்ளி) - காட்டில் வாழ்கின்ற, கோபிக்கும் கண்ணைக் காட்டும், மான் போன்ற வள்ளி அஞ்சித் தன் மேல் பாய்ந்து கட்டிக்கொள்ளும்படி அங்கே விரைபவன்;

கோன் என்று வான் புகழ் நற் கோலம் ஆமால் - தலைவன் என்று தேவர்கள் புகழும் கோலம் பூண்பவன்;

நஞ்சு கண்டம் உடையான் மிசை ஊர் மைந்தன் - (குழந்தையாக) நீலகண்டன்மேல் ஏறி அமர்ந்து வரும் (விளையாடும்) மகன்;


சிவன்:

கானில் நடமாடும் - சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;

கண்ணிற் பொறிபறக்கும் - நெற்றிக்கண்ணில் தீப்பொறி பறக்கின்றவன்;

மான், மேலே பாயும் ஆறு, ஓடுமே கோன் என்று வான் புகழ் நற் கோலம் ஆம் - அரசன் என்று தேவர்கள் எல்லாம் புகழும் வேடமாக மானையும் தலைமேல் பாயும் கங்கையையும் பிரமனின் மண்டையோட்டையுமே தாங்குவார்; (--அல்லது-- "கண்ணிற் பொறிபறக்கும் மான், மேலே பாயும் ஆறு ஓடுமே" - நெற்றிக்கண்ணில் தீப்பொறி பறக்கும் சுவாமி மேல் பாயும் கங்கை ஓடும் - என்றும் கொள்ளலாம்).;

மால்/ஆல் நஞ்சு கண்டம் உடை - கரிய ஆலகால விடம் இருக்கும் நீலகண்டம் உடைய;

ஆன் மிசை ஊர் மைந்தன் - இடபத்தின்மேல் வரும் வீரனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Wednesday, January 5, 2022

06.01.110 - சிவன் - இணையக்குழு (internet group) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-01-02

06.01.110 - சிவன் - இணையக்குழு (internet group) - சிலேடை

-----------------------------------------------

பித்தரென்றே பேசிப் பெரிதுவக்கு மன்பருளர்

பத்திரம் தாமிட்டுப் பார்த்திருப்பர் - எத்தனையோ

பேர்திகழப் பெண்ணாணும் ஆவர்காண் ஓர்குழு

வார்சடைமேல் வன்னியணி வார்.


சொற்பொருள்:

பித்தர் - பைத்தியம்;

பத்திரம் - 1) கடிதம் / மடல் (letter / posting); /1) இலை;

பார்த்தல் - 1) எதிர்பார்த்தல்; /1) வணங்குதல்; 2) கண்ணால் நோக்குதல்;

பேர் - 1) பெயர்; நாமம்; 2) மனிதர்கள்;

காண் - 1) காணுதல்; / 2) முன்னிலை அசைச்சொல்;


இணையக்குழு (an internet group):

பித்தர் என்றே பேசிப் பெரிது உவக்கும் அன்பர் உளர் - மடலாடல்களில் தமக்கு ஏற்பில்லாத கருத்தைச் சொல்வோரை ஏசி மகிழ்வோரும் உள்ளனர்; (--அல்லது-- பித்தரைப் போலவே தொடர்பின்றிப் பேசி வாதம் செய்து மகிழ்வோரும் இருப்பார்கள் --அல்லது-- chat முதலியவற்றில் பெரும்பித்தாக இருப்போர் உள்ளனர்);

பத்திரம் தாம் இட்டுப் பார்த்திருப்பர் - பல மடல்களை இட்டுப் பின்னூட்டத்தை எதிர்பார்த்திருப்பர்;

எத்தனையோ பேர் திகழப் பெண்ணாணும் ஆவர் - ஒருவரே பல பெயர்களில் (இஷ்டப்படித் தங்களுக்குப் பெயர்சூட்டிக்கொண்டு), ஆணும் பெண்போல், பெண்ணும் ஆண்போல் குழுவில் உலவுவதும் உண்டு; குழுக்களில் ஆண்கள் பெண்கள் எனப் பலர் இருப்பார்கள்;

காண் ஓர் குழு - இப்படிக் காண்பது ஓர் இணையக் குழு;


சிவன்:

பித்தர் என்றே பேசிப் பெரிது உவக்கும் அன்பர் உளர் - "பித்தரே" என்று போற்றி மகிழும் பக்தர்கள் உள்ளனர்;

பத்திரம் தாம் இட்டுப் பார்த்திருப்பர் - வில்வம் போன்ற இலைகளைத் திருவடியில் இட்டு வணங்குவர்;

எத்தனையோ பேர் திகழப் பெண்ணாணும் ஆவர் காண் - எண்ணற்ற நாமங்கள் உடையவர்; அர்த்தநாரீஸ்வரர்;

வார்சடைமேல் வன்னி அணிவார் - நீண்ட சடைமேல் வன்னியை அணியும் சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


6.3.45 - இழுக்குமொழி - நஞ்சுகந்தான் - மடக்கு

06.03 – மடக்கு

2009-12-30

6.3.45) இழுக்குமொழி - நஞ்சுகந்தான் - மடக்கு

--------------

இழுக்குமொழி பேசுவிழிப் பெண்களையும், என்றும்
இழுக்குமொழி சொல்வோர்கூட் டென்னும் - இழுக்குமொழி
நஞ்சுகந்தான் தாளிணையை நாளும் தொழுநிலைக்கும்
நஞ்சுகந்தான் தீரும் நலிவு.

பதம் பிரித்து:
இழுக்கும் மொழி பேசு விழிப் பெண்களையும், என்றும்
இழுக்கு-மொழி சொல்வோர் கூட்டு என்னும் - இழுக்கும் ஒழி;
நஞ்சு உகந்தான் தாளிணையை நாளும் தொழு; நிலைக்கும்
நம் சுகம் தான்; தீரும் நலிவு.

இழுக்குமொழி - 1. இழுக்கும் மொழி (ஈர்க்கின்ற மொழி); 2. இழுக்கு மொழி (வழு/குற்றம் உடைய சொற்கள்); 3. இழுக்கும் ஒழி (குற்றத்தையும் நீங்கு);
கூட்டு - உறவு; சினேகம்;
நஞ்சுகந்தான் - 1. நஞ்சு உகந்தான் (ஆலகால விஷத்தை விரும்பிய சிவபெருமான்); 2. நம் சுகம் தான்;
நலிவு - துன்பம்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------