Wednesday, February 3, 2021

05.05 – திருத்தவத்துறை

05.05 – திருத்தவத்துறை


2014-12-01

திருத்தவத்துறை (இக்காலத்தில் லால்குடி)

---------------------------

(அறுசீர் விருத்தம் - 'மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.

முதற்சீர் ஈற்றில் குறில்/குறில்+ஒற்று)

(சம்பந்தர் தேவாரம் - 2.106.1 - "என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து");


1)

சேம வைப்பென உள்ளவன் சேவடி தினந்தொழு தெழுகின்ற

தூம னத்தினர் தொல்வினைத் தொடரினைத் துடைத்தருள் புரிநாதன்

நாமம் ஆயிரம் உடையவன் விடையவன் நச்சர வரைநாணன்

சாம வேதியன் தண்வயல் புடையணி தவத்துறைப் பெருமானே.


சேம வைப்பு என உள்ளவன் சேவடி தினம் தொழுதெழுகின்ற தூ மனத்தினர் - சிவந்த திருவடியைத் தினமும் வழிபடும் தூய நெஞ்சுடைய பக்தர்களது வைப்புநிதியாக உள்ளவன்; (சேமவைப்பு - சேமநிதி - வைப்புப்பொருள்);

தொல்வினைத் தொடரினைத் துடைத்துருள்புரி நாதன் - அவர்களது பழவினைப் பந்தத்தைத் தீர்த்து அழித்து அருளும் தலைவன்; (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);

நாமம் ஆயிரம் உடையவன் - ஆயிரம் திருப்பெயர்கள் உடையவன்;

விடையவன் - இடப வாகனன்;

நச்சரவு அரைநாணன் - விடப்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (அர / அரவு - பாம்பு);

சாம வேதியன் - சாமவேதம் ஓதுபவன்;

தண் வயல் புடைணி தவத்துறைப் பெருமானே - குளிர்ந்த வயல் சூழ்ந்த திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


2)

செந்த மிழ்த்தொடை செப்பிய நாவராய்த் திருவடி பணிவார்தம்

பந்தம் அற்றிடப் பரிந்தருள் கின்றவன் பாற்கடல் விடமுண்ட

அந்தம் இல்புகழ் உடையவன் உலகினுக் காதியும் முடிவானான்

தந்தை தாயிலி தனிவிடை ஊர்தியன் தவத்துறைப் பெருமானே.


செந்தமிழ்த்தொடை செப்பிய நாவராய்த் திருவடி பணிவார்தம் பந்தம் அற்றிடப் பரிந்து அருள்கின்றவன் - தமிழ்ப் பாமாலைகள் ஓதி வணங்கும் பக்தர்களது பந்தம் தீர இரங்கி அருள்பவ்ன்;

பாற்கடல் விடம் உண்ட அந்தம் இல் புகழ் உடையவன் - ஆலகாலத்தை உண்ட முடிவற்ற புகழ் உடையவன்;

உலகினுக்கு ஆதியும் முடிவு ஆனான் - எவற்றுக்கும் முதலும் முடிவும் ஆனவன்;

தந்தை தாயிலி - தனக்குத் தந்தை தாய் இல்லாதவன்;

தனி விடை ஊர்தியன் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடையவன்;;

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


3)

கண்ப னித்திடக் கரதலங் குவிந்திடக் கரைமனம் உடையார்தம்

திண்ப வத்தொடர் சிதறிட இனிதருள் செய்திடும் திருவாளன்

விண்ப ராவவும் வெங்கணை ஒன்றினால் மேவலர் புரமெய்தான்

தண்பு னல்சடைத் தாங்கிய சதுரினன் தவத்துறைப் பெருமானே.


கண் பனித்திடக் கரதலம் குவிந்திடக் கரைமனம் உடையார்தம் – கண்கள் நீர் கசியக் கைகள் குவியக் கரையும் மனம் உடைய பக்தர்களது; (சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதி - 11.6.11 - “நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர அஞ்செங் கரதலங் கூம்ப");

திண் பவத்தொடர் சிதறிட இனிது அருள் செய்திடும் திருவாளன் - வலிய பிறவித்தொடர் தீரும்படி இன்னருள் செய்யும் திருவுடையவன்;

விண் பராவவும் வெங்கணை ஒன்றினால் மேவலர் புரம் எய்தான் - தேவர்கள் துதிக்கவும் இரங்கிச் சுடுகணை ஒன்றால் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (பராவுதல் - பரவுதல் - ஏத்துதல்); (மேவலர் - மேவார் - பகைவர்);

தண்புனல் சடைத் தாங்கிய சதுரினன் - குளின்ர்த கங்கையைச் சடையில் தாங்கிய வல்லமையுடையவன்;


4)

ஐய னேஉனை அன்றியார் துணையெனும் அன்பருக் கருளண்ணல்

பைய ராவொடு பால்மதி யந்தனைப் படர்சடை மிசைவைத்தான்

மைய ணிந்தமா மிடற்றினன் வெண்பொடி மார்பினன் மடமான்போல்

தைய லாள்தனைப் பங்கமர் அருத்தியன் தவத்துறைப் பெருமானே.


பைரா - படத்தை உடைய நாகப்பாம்பு;

மை அணிந்த மா மிடற்றினன் - அழகிய நீல கண்டம் உடையவன்;

தையலாள்தனைப் பங்கு அமர் அருத்தியன் - உமையை ஒரு பாகமாக விரும்பும் அன்புடையவன்; (அருத்தி - அன்பு ; ஆசை);


5)

வேந்த னேஒரு வெள்விடை ஏறிய வெல்கொடி உடையானே

ஆர்ந்த நஞ்சினை அருமணி ஆக்கினாய் ஆயிழை ஒருகூறு

சேர்ந்த செல்வனே என்றடி தொழுபவர் சிந்தையில் மகிழ்தேவன்

சாந்த மாகவெண் ணீற்றினைப் பூசிய தவத்துறைப் பெருமானே.


ஒரு வெள்விடை ஏறிய வெல்கொடி உடையானே - ஒப்பற்ற இடபச்சின்னம் திகழும் வெற்றிக்கொடி உடையவனே;

ஆர்ந்த நஞ்சினை அருமணி ஆக்கினாய் - உண்ட விஷத்தை அரிய மணி ஆக்கியவனே; (ஆர்தல் - உண்ணுதல்);

ஆயிழை ஒரு கூறு சேர்ந்த செல்வனே - உமை ஒரு பங்கு ஆகும் செல்வனே;

சாந்தமாக வெண்ணீற்றினைப் பூசிய - சந்தனம்போல் திருநீற்றைப் பூசிய; (சாந்தம் - சந்தனம்); (சுந்தரர் தேவாரம் - 7.49.9 - "சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைகலனா");


6)

அக்கும் ஆமையும் அணிதிரு மார்பினன் அயன்சிரம் கரமேந்தி

நக்க னாய்ப்பலி தேர்ந்துழல் பெருமையன் நம்பனை மதியாத

தக்கன் வேள்வியைத் தகர்த்தவன் தழல்வணன் சடையினிற் சலமேற்றான்

சக்க ரத்தினாற் சலந்தர னைச்செறு தவத்துறைப் பெருமானே.


அக்கு - உருத்திராக்கம்; எலும்பு;

ஆமை - ஆமை ஓடு;

நக்கன் - ஆடை அணியாதவன்;

பலி தேர்தல் - யாசித்தல்;

நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்;

தழல் வணன் - தீவண்ணன்;

சலம் - ஜலம் - கங்கை;

செறுதல் - அழித்தல்;


7)

வாளி ஐந்துடை மன்மதன் அனங்கனா மாறிட விழிசெய்தான்

தோளில் வெண்பொடி துலங்கிடு சுந்தரன் சுடர்மதி புனையீசன்

வாளி லங்கிய மைவிழி பங்கினன் மாணியின் உயிர்காக்கத்

தாளி னால்நமன் தன்னக லத்துதை தவத்துறைப் பெருமானே.


வாளி - அம்பு;

விழிசெய்தல் - நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்து எரித்தல்; (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்");

அனங்கனா - அனங்கனாக - உடலற்றவன் ஆக;

வாள் இலங்கிய மைவிழி பங்கினன் - ஒளியுடைய மையணிந்த கண்களையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (வாள் - ஒளி);

மாணியின் உயிர் காக்கத் தாளினால் நமன்தன்கலத்துதை - மார்கண்டேயரது உயிரைக் காக்கும்பொருட்டுத் திருவடியால் கலனது மார்பில் உதைத்த; (அகலம் - மார்பு);


8)

மிண்ட னாய்அரு வெற்பசை அரக்கனின் விறலற விரலூன்றித்

தொண்ட னாய்அவன் துதிபல செய்தடி தொழவரம் மிகவீந்தான்

பண்டை நான்மறை பாடிய நாவினன் படர்சடை யினன்தாளில்

தண்ட மிழ்த்தொடை சாத்திடு வார்க்கருள் தவத்துறைப் பெருமானே.


மிண்டன் - கல் நெஞ்சன்;

அருவெற்பு - கயிலைமலை;

விறல் அற - வலிமை அழிய;

பண்டை - பழமை;

தண்டமிழ்த்தொடை சாத்திடுவார்க்கு - குளிர்ந்த தமிழ்ப் பாமாலைகளைச் சூட்டும் பக்தர்களுக்கு;


9)

பூவின் மேலயன் புள்ளமர் அரியிவர் போற்றிய உயர்சோதி

ஆவின் அஞ்சுகந் தாடினான் அரையினில் ஐந்தலை அரவார்த்தான்

தேவி பங்கினன் மூவிலை வேலினன் தேசினன் பிறவில்லான்

சாவி லாதவன் தாள்பணி வார்க்கருள் தவத்துறைப் பெருமானே.


பூவின்மேல் அயன் புள்மர் அரிவர் போற்றிய உயர்சோதி - தாமரைமேல் உறையும் பிரமனும் பறவையை (கருடனை) வாகனமாக உடைய திருமாலும் போற்றிய எல்லையிலாச் சோதி;

ஆவின் அஞ்சுகந்து ஆடினான் - பசுவிடத்துப் பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;

அரையினில் ஐந்தலை அரவு ஆர்த்தான் - அரையில் ஐந்து தலைகளையுடைய பாம்பைக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

தேவி பங்கினன் - உமைபங்கன்;

மூவிலை வேலினன் தேசினன் - திர்சூலன், ஒளியுருவினன்; (தேசு - தேஜஸ் - ஒளி);

பிறவு இல்லான் சாவு இலாதவன் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; (பிறவு - பிறத்தல்);

தாள் பணிவார்க்கு அருள் தவத்துறைப் பெருமானே - திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு அருளும் திருத்தவத்துறைப் பெருமான்;


10)

அவமு ரைத்தலை அறமென நினைபவர் அலப்பலை மதியேன்மின்

சிவன்ம லர்க்கழல் தினந்தொறும் நினைந்தவன் திருப்பெயர் தனையோதி

பவம றுத்தருள் பரம்பர னேயெனப் படகெனக் கரைசேர்ப்பான்

தவமி யற்றிய எழுவருக் கருளிய தவத்துறைப் பெருமானே.


பதம் பிரித்து:

அவம் உரைத்தலை அறம் என நினைபவர் அலப்பலை மதியேன்மின்;

சிவன் மலர்க்கழல் தினந்தொறும் நினைந்து அவன் திருப்பெயர்தனை ஓதி

"பவம் அறுத்தருள் பரம்பரனே" எனப், படகு எனக் கரைசேர்ப்பான்;

தவம் இயற்றிய எழுவருக்கு அருளிய தவத்துறைப் பெருமானே.


அலப்பல் - பிதற்றல்;

மதியேன்மின் - நீங்கள் மதிக்கவேண்டா;

பவம் அறுத்து அருள் - பிறவிச்சுழலைப் போக்கி அருள்க;

தவம் இயற்றிய எழுவருக்கு அருளிய தவத்துறைப் பெருமான் - இத்தலவரலாற்றைச் சுட்டியது; சப்தரிஷீஸ்வரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்;


11)

இடையில் வஞ்சியும் நடையினில் அன்னமும் இணையென உடையாளைப்

புடையில் உள்ளவன் பொருவிடை ஏறிய புராதனன் நடுவாகிக்

கடையில் உள்ளவன் கதிர்ப்பொறி நாகமும் கங்கையும் திரிகின்ற

சடையில் ஒண்மதி தங்கிட அருளிய தவத்துறைப் பெருமானே.


இடையில் வஞ்சியும் நடையினில் அன்னமும் இணையென உடையாளைப் புடையில் உள்ளவன் - கொடி போன்ற இடையும் அன்னம் போன்ற நடையும் உடைய உமையை ஒரு பக்கம் பங்காக உடையவன்; (வஞ்சி - கொடி); (புடை - பக்கம்);

பொருவிடை ஏறிய புராதனன் - போர் செய்யவல்ல இடபத்தை வாகனமாக உடைய தொன்மையன்; (பொருதல் - போர்செய்தல்);

நடுகிக் கடையில் உள்ளவன் - (முதலும்) நடுவும் ஆகி முடிவிலும் உள்ளவன்;

கதிர்ப்பொறி நாகமும் கங்கையும் திரிகின்ற சடையில் ஒண்மதி தங்கிட அருளிய தவத்துறைப் பெருமானே - ஒளியுடைய புள்ளிகள் திகழும் நாகமும் கங்கையும் உலவும் சடையில் ஒளியுடைய திங்களை வைத்த திருத்தவத்துறைப் பெருமான்;


அன்போடு,

வி. சுப்பிரமணியன்

--------------------------