Saturday, December 19, 2015

02.52 – திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)

02.52 – பெருந்துறை (திருப்பெருந்துறை) - (ஆவுடையார் கோயில்)


2012-07-28
திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)
---------------------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம்" என்ற அரையடி வாய்பாடு);
(கலிவிருத்த அமைப்பில் 4 விளச்சீர்கள் அமைந்த தேவார உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்")



1)
அணிமயில் அனஉமை இடம்அமர் பதியினை
.. அலைநதி கலைமதி மலரொடு தலைமிசை
அணிகிற ஒருவனை அடியிணை பணிகிற
.. அடியவர் மடிகிற தினம்என உயிர்கொள
நணுகிய நமன்தனை உதைத்தருள் இறைவனை
.. நடுங்கிய சுரர்தொழ விடத்தினை மிடற்றடை
மணியினைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



அன - அன்ன - போன்ற;
ஒருவன் - ஒப்பற்றவன்;
நணுகுதல் - சமீபித்தல்; நெருங்குதல்;
நடுங்குதல் - அஞ்சுதல்;
சுரர் - தேவர்கள்;
மருந்து - அமுதம்;


அணி மயில் அன உமை இடம் அமர் பதியினை - அழகிய மயில் போன்ற உமையம்மையை ஒரு கூறாக உடைய தலைவனை;
அலைநதி கலைமதி மலரொடு தலைமிசை அணிகிற ஒருவனை - அலையுடைய கங்கையையும் ஒற்றைக்கலை உடைய பிறைச்சந்திரனையும் பூக்களோடு தன் தலைமேல் சூடும் ஒப்பற்றவனை;
அடியிணை பணிகிற அடியவர் மடிகிற தினம் என உயிர்கொள நணுகிய நமன்தனை உதைத்தருள் இறைவனை - ஈசனின் இரு திருவடிகளை வணங்கும் மார்க்கண்டேயரின் ஆயுள் முடிகிற நாள் என்று எண்ணி அவரைக் கொல்வதற்காக நெருங்கிய காலனை உதைத்த கடவுளை;
நடுங்கிய சுரர் தொழ விடத்தினை மிடற்று அடை மணியினைப் - அஞ்சிய தேவர்கள் அடிதொழவும், நஞ்சைக் கண்டத்தில் அடைத்த மாணிக்கத்தை;
பெருந்துறைக் குருந்து அடி இருந்து அருள் மருந்தினைப் பொருந்திடில் அரும் துணை ஆவனே - திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.



2)
மதியுடை அமைச்சரை மதுரைமன் னவன்மிகு
.. வலியுள குதிரைகள் கொளவென அனுப்பிட
நிதியொடு வருமவர்க் கருள்நிதி தரவரும்
.. நிமலனை மணிமொழி அவர்சொலத் தில்லையில்
முதியவர் உருவினில் வந்ததை எழுதிய
.. முதல்வனை அற்புதக் கூத்தனை முடிமிசை
மதியனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



* மாணிக்கவாசகர்க்கு அருளிய வரலாற்றைச் சுட்டியது.
(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 2 - "... அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே ...");


அறிவிற் சிறந்த மந்திரியைப் பாண்டிய மன்னன் மிகுந்த வலிமையுடைய குதிரைகள் வாங்கிவருமாறு அனுப்பிய போது, பெருநிதியோடு வரும் அவ்வாதவூரருக்கு அருளாகிய நிதியைத் தரவந்த நின்மலனைப், பின்னர்த் தில்லையில் ஒரு முதியவர் உருவில் அவரிடம் போய் அவர் மாணிக்கவாசகம் சொல்ல அதனை ஏட்டில் எழுதிய முதல்வனை, அற்புதக் கூத்தனைத், திருமுடிமேல் சந்திரனைச் சூடியவனைத், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.



3)
பறையொடு முழவுகள் அறைசெயப் பாரிடம்
.. பாடிடக் காடிட மாநடம் ஆடியைத்
துறைபல சென்றடை இறைவனை நறைமலர்
.. துணிமதி அணிசெயும் சடையனைத் தொழுசுரர்
குறையறக் கொடுவிடம் உறைகறை மிடறனைக்
.. குற்றமில் புகழனைப் பெற்றமு கக்கிற
மறையனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



பாரிடம் - பூதம்; (சம்பந்தர் தேவாரம் - 1.100.3 - ".... பாரிடம் பாட இனிதுறை கோயில் பரங்குன்றே.");
காடிடமாநடம் ஆடி - காடு இடமா நடம் ஆடி - சுடுகாடே இடமாகக்கொண்டு நடம் ஆடுபவன்;
துறை - வழி;
துறை பல சென்று அடை இறைவனை - (பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்...." - CKS விளக்கம்: ....வேதநெறி காட்டக் கண்டு சென்றடையும் சமயத்துறைகளும் பலப்பல. அவற்றுள்ளே சைவத்துறையே எத்தகைய குறைபாடுமின்றி மிக்கது என்பார் மிகு சைவத்துறை என்றார்.)
நறை - தேன்; வாசனை;
துணிமதி - பிளவுபட்ட சந்திரன் - பிறை; (துணித்தல் - வெட்டுதல்);
சுரர் - தேவர்;
பெற்றம் - எருது;


பறைகளும் முழவுகளும் ஒலிக்கப் பூதகணங்கள் பாடச் சுடுகாட்டில் நடம் ஆடுபவனைப், பல வழிகளும் சென்று அடையும் இறைவனைத், தேன்மலர்களும் பிறைச்சந்திரனும் அழகுசெய்யும் சடையினனைத், தொழுத தேவர்களின் குறை தீரக் கொடிய நஞ்சு உறைகிற கரிய கண்டனைக், குற்றமற்ற புகழ் உடையவனை, இடப வாகனனை, வேதவடிவினனைத், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.



4)
தலையினிற் பலிகொளும் தலைவனை வானவர்
.. தமக்கிடர் செய்திரி புரங்களை எரித்திடச்
சிலையினை ஏந்திய வீரனை மூவரைத்
.. தீயிடைக் காத்தருள் தீர்த்தனைச் செல்வனை
அலைபுனற் சடையனை மலைமகள் பங்கனை
.. அழகனைக் குழகனை மழைதவழ் கயிலைநன்
மலையனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



தலையினிற் பலிகொளும் தலைவனை - பிரமனது மண்டையோட்டினில் பிச்சை ஏற்கும் ஐயனை; (பலி - பிச்சை);
சிலை - வில்;
தீர்த்தன் - பரிசுத்தன்; (தீர்த்தம் - பரிசுத்தம்);
குழகன் - இளைஞன்; (குழகு - இளமை);
மழை - மேகம்;


* முப்புரங்களை எரித்தபோது அங்கிருந்த மூன்று சிவபக்தர்களுக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது.
(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர் ... மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார்");



5)
செழுமலர் ஆயிரம் சேவடி தனிலிடு
.. செங்கணன் அங்கொரு பங்கயம் குறையவன்
பெழுமனத் தொடுவிழி ஒன்றினை இடந்தடி
.. இடத்திகி ரிப்படை உடனருள் விடையனை
எழுதிடு மறைமணி வாசகம் தில்லையில்
.. ஏட்டினில் ஒருபடி கூட்டுமுந் நாட்டனை
மழுவனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



செங்கணன் - செங்கண்ணன் - திருமால்;
பங்கயம் குறையவன் பெழுமனத் தொடுவிழி - பங்கயம் குறைய, அன்பு எழு மனத்தொடு விழி;
இடத்தல் - தோண்டுதல்;
திகிரிப்படை - சக்கராயுதம்;
படி - பிரதி;
நாட்டம் - கண்; (முந்நாட்டன் - முக்கண்ணன்);


திருவீழிமிழலையில் செழுமையான தாமரைப்பூக்கள் ஆயிரத்தால் ஈசன் சேவடியைத் திருமால் வழிபட்டுவரும்போது ஒரு நாள் ஒரு தாமரைப்பூக் குறையவும், அன்பு பொங்கும் மனத்தோடு தன் கண்ணையே தோண்டிப் பூவாக இட்டு அர்ச்சிக்கவும், அதற்கு மகிழ்ந்து சக்கராயுதத்தை அருள்செய்த இடபவாகனனை, எழுதப்படும் தமிழ்மறையான திருவாசகத்தைத் தில்லையில் மாணிக்கவாசகர் சொல்ல அதை ஏட்டில் ஒரு பிரதி எழுதிய முக்கண்ணனை, மழுவேந்தியைத், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.



6)
முன்னிமை யோரெலாம் முறைமுறை போற்றியம்
.. மூவெயி லார்தரு பேரிடர் தீரென
வன்னியும் காற்றரி சேரொரு வாளியும்
.. வரைசிலை யும்கொடு புரமெரி மைந்தனைப்
பின்னிய அரவொரு பூணென வாகிடும்
.. பிறைமதி சூடியைக் கயிலையில் உறைகிற
மன்னனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



இமையோர் - தேவர்;
முறைமுறை போற்றி - பலமுறை தொழுது;
அம் மூ எயில் - அந்த முப்புரங்கள்; அழகிய முப்புரங்கள்;
மூவெயிலார் தரு பேரிடர் - முப்புரத்து அசுரர்கள் தரும் பெரும் துன்பம்;
வன்னி - நெருப்பு; அக்கினி;
காற்று - வாயு;
அரி - திருமால்;
வாளி - அம்பு;
வரை - மலை;
சிலை - வில்;
மைந்தன் - வீரன்;
பூண் - ஆபரணம்;



7)
எண்ணிய அமுதினை அடைந்திடக் கடைந்தவர்
.. எரிவிடம் பரவிடக் கண்டடி பரவிட
உண்ணரு நஞ்சினை உண்டிருள் கண்டனை
.. உமையொரு பங்கனைக் கங்கையஞ் சடையனைக்
கண்ணுதற் கடவுளை ஒண்மழுப் படையனைக்
.. கந்தனைத் தந்தருள் எந்தையை அந்தியின்
வண்ணனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



பரவுதல் - 1) பரந்திருத்தல் (To spread); 2) துதித்தல் (To worship);


விரும்பிய அமுதத்தை அடையலாம் என்று கடலைக் கடைந்த தேவர்கள், அப்போது எரிக்கும் விஷம் தோன்றி எங்கும் பரவவும், அதனைக் கண்டு அஞ்சித் திருவடியைத் துதித்தபோது, அவர்களுக்கு இரங்கி, உண்ணலாகாத கொடிய விடத்தை உண்டு அதனால் நீலகண்டம் உடையவனைப், பார்வதியை ஒரு பாகமாக உடையவனைக், கங்கை தங்கும் அழகிய சடையனை, நெற்றிக்கண் உடைய கடவுளை, ஒளிவீசும் மழுவாயுதம் ஏந்தியவனை, முருகனைத் தந்தருள் எம் தந்தையை, மாலைக்கால வானம் போன்ற செம்மேனியனாகிய ஈசனைத், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.



8)
விரைகிற தேரது தரையினில் இறங்கவும்
.. மிகச்சினம் அகத்தெழத் தசமுகன் விசையொடு
வரையினை இடக்கவும் விரைகமழ் மலர்விரல்
.. மலைமிசை வைத்துநெ ரித்தருள் அத்தனை
வரமருள் வள்ளலைத் துள்ளலை வெள்ளமின்
.. மதுமலர் மதிபுனை பதியினைக் கையினில்
மரையனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



தசமுகன் - இராவணன்;
வரை - மலை;
இடத்தல் - பெயர்த்தல்;
அத்தன் - அப்பன்;
துள்ளு அலை வெள்ளம் இன் மதுமலர் மதி - துள்ளும் அலையுடைய கங்கையையும் இனிய தேன் பொருந்திய பூக்களையும் திங்களையும்;
துள்ளுதல் - குதித்தல்; துள்ளல் - கூத்து; கூத்தன்;
(அப்பர் தேவாரம் - 4.42.6 - "... வள்ளலை வான வர்க்குங் காண்பரி தாகி நின்ற துள்ளலைத் துருத்தி யானைத் ...");
(அப்பர் தேவாரம் - 4.27.6 - "புள்ளலைத்துண்ட ஓட்டில் உண்டு ... வெள்ளேற்றுத் துள்ளலைப் ... " - ஏற்றின்மேல் துள்ளி ஏறும் பெருமானைத் துள்ளல் என்றார்.)
மரை - மான்;


வான்வழியே விரைந்துசெல்லும் தன் தேர் கயிலைமேல் செல்லாமல் தடைப்பட்டுத் தரையில் இறங்கியதால், மனத்தில் கோபம் பொங்கியெழ இராவணன் விரைந்து சென்று கயிலைமலையைப் பெயர்க்க முயன்றபோது, மணம்கழும் மலர்போன்ற விரல் ஒன்றை மலைமேல் இட்டு அவனை நசுக்கிய அப்பனைப், பின் இராவணன் அழுது இசைபாடக் கேட்டு அவனுக்கு வரம் அருளிய வள்ளலை, ஏற்றின்மேல் துள்ளி ஏறுபவனைத், துள்ளும் அலையுடைய கங்கையையும் இனிய தேன் பொருந்திய பூக்களையும் திங்களையும் சூடிய தலைவனைக், கையில் மானை ஏந்தியவனைத், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.



9)
செய்யவந் தாமரை மேலமர் நான்முகன்
.. திரைமிசைப் பாம்பணை மேல்துயில் மாலிவர்
கைதொழ அவரிடை ஓங்கிய சோதியைக்
.. கருத்தனை நிருத்தனை அருத்தியொ டருச்சனை
செய்திடு பத்தர கத்தனைச் சேவமர்
.. தேவனை மடக்கொடி இடத்தனை மிடற்றினில்
மையனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



செய்யவந் தாமரை - செய்ய அம் தாமரை;
செய்ய - சிவந்த;
அம் - அழகிய;
திரை - அலை;
கருத்தன் - கர்த்தா - தலைவன்;
நிருத்தன் - ஆடுபவன்;
அருத்தி - அன்பு;
பத்தர் அகத்தன் - பக்தர்கள் மனத்தில் இருப்பவன்;
சே - எருது;
மடக்கொடி - இளம் கொடி - ஆகுபெயராகப் பார்வதியைக் குறித்தது;
மை - கருமை;


சிவந்த அழகிய தாமரைமேல் இருக்கும் பிரமனும் கடலில் பாம்பின்மேல் துயிலும் திருமாலும் கைதொழும்படி அவர்களுக்கு இடையே சோதியாக ஓங்கியவனைக், தலைவனைக், எல்லாம் செய்பவனைக், கூத்தனை, அன்போடு அர்ச்சனை செய்யும் பக்தர்கள் மனத்தில் இருப்பவனை, ஏற்றின்மேல் அமரும் தேவனை, இளங்கொடி போன்ற பார்வதியை இடப்பாகத்தில் உடையவனைக், கண்டத்தில் கருமை திகழ்பவனைத், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.



10)
எத்தினை நித்தமு ரைத்துழல் மிண்டரின்
.. இழிவழிக் குழிவிழு மொழிகளை ஒழிமினே
அத்தனை முத்தனை என்பணி இன்பனை
.. அன்பருக் கன்பனை மண்சுமந் தடிபடும்
பித்தனைச் சித்தனை நித்தனை முத்தமிழ்ப்
.. பிரியனைப் பெருமத கரியதன் உரியனை
மத்தனைப் பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



எத்து - வஞ்சகம் (seducing, deceiving);
மிண்டர் - கல் நெஞ்சர்;
விழுத்தல் - விழச்செய்தல் (To cause to fall; to throw down);
அத்தன் - தந்தையாயிருப்பவன்;
முத்தன் - அநாதி முத்தன்; இயல்பாகவே பாசங்களின் நீங்கியோன்;
பித்தன் - பேரன்புடையவன்;
சித்தன் - சிந்தையைக் கோயிலாகக் கொண்டவன்;
நித்தன் - நித்தியன்; அழிவற்றவன்;
மத கரி - ஆண் யானை;
உரி - தோல்;
மத்தன் - ஊமத்த மலர் அணிந்தவன்;


தினமும் வஞ்சகமே பேசி உழலும் கல் நெஞ்சர்கள் சொல்லும் இழிந்த வழி என்ற குழியில் விழச்செய்யும் சொற்களைப் பொருட்படுத்தவேண்டா; அப்பனை, முக்தனை, எலும்பை அணியும் இன்பவடிவினனை, அன்பர்களுக்கு அன்புபூண்டவனைப், பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபடும் பித்தனைச், சிந்தையில் குடிகொள்பவனை, அழிவற்றவனை, முத்தமிழை விரும்புபவனைப், பெரிய யானையின் தோலைப் போர்த்தவனை, ஊமத்தமலரைச் சூடியவனைத், திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.



11)
வண்டமிழ் மாலைகள் காலையும் மாலையும்
.. மலரடிச் சாத்திடும் அடியவர்க் கினியனைப்
பண்டொரு பரிமிசைச் சேவக னாய்வரும்
.. பண்பனைத் தண்புனல் தங்கிய சடைமிசை
இண்டைவெண் மதியனை ஏற்றனை நீற்றனை
.. இம்பரும் உம்பரும் அன்புசெய் நம்பனை
வண்டறை பெருந்துறைக் குருந்தடி இருந்தருள்
.. மருந்தினைப் பொருந்திடில் அருந்துணை ஆவனே.



வண்டமிழ் - வண் தமிழ் - வளப்பமான தமிழ்;
சாத்துதல் - சூட்டுதல்;
பண்டு - முன்பு;
பரி - குதிரை;
சேவகன் - வீரன்;
இண்டை - தலையில் அணியும் ஒரு மாலைவகை;
இம்பர் - மண்ணுலகத்தவர்;
உம்பர் - வானோர்;
நம்பன் - சிவன் திருப்பெயர்களுள் ஒன்று;
வண்டு அறை பெருந்துறைக் குருந்து அடி - வண்டுகள் ஒலிக்கும் திருப்பெருந்துறைக் குருந்த மரத்தின்கீழ்;


காலையும் மாலையும் செந்தமிழ்ப் பாமாலைகளை மலர்ப்பாதத்தில் சூட்டி வழிபடும் பக்தர்களுக்கு இனியவனை, முன்னொருநாள் குதிரைமேல் வீரனாகி மதுரைக்கு வந்தவனைக், குளிர்ந்த கங்கைநதி தங்கிய சடைமேல் இண்டை மாலையாக வெண்பிறைச்சந்திரனை அணிந்தவனை, இடப வாகனனைத், திருநீறு பூசியவனை, மண்ணவரும் விண்ணவரும் போற்றும் நம்பனாகிய சிவபெருமானை, வண்டுகள் ஒலிக்கும் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் அமர்ந்து அருளும் அமுதினை அடைந்தால் அப்பெருமான் நமக்கு அரிய துணை ஆவான்.


(8.13.20 - திருவாசகம் - திருப்பூவல்லி -
மாவார ஏறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ.


- மாவார ஏறி மதுரைநகர் புகுந்தருளி - திருப்பெருந்துறையான், குதிரையைப் பொருந்த ஏறி, மதுரை நகரத்தில் புகுந்தருளி;)


(8.36.1 - திருவாசகம் - 36 திருப்பாண்டிப் பதிகம் -
பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற் போதிறைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவறி யாதென்றன் உள்ளமதே.


- பரி மேற்கொண்ட சேவகனார் - குதிரையின் மேல் வந்த வீரருமாகிய சிவபெருமான்;)



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
  • எண்சீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம்" என்ற அரையடி வாய்பாடு.
  • 4 விளச்சீர்கள் அமையும் கலிவிருத்தம் போன்ற அமைப்பில் சம்பந்தர் சில பதிகங்கள் பாடியுள்ளார். (உதாரணம் - 3.36.1 - "சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்"). அப்பதிகங்களின் அடி அமைப்பை இரட்டித்தால் இவ்வகை எண்சீர் விருத்தம் அமையும்
2) சம்பந்தர் தேவாம் - 3.25.1 -
மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே
3) திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) ஆத்மநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=641

-------------- --------------