Showing posts with label மூவடிமேல் ஓரடி வைப்பு. Show all posts
Showing posts with label மூவடிமேல் ஓரடி வைப்பு. Show all posts

Saturday, May 10, 2025

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

2017-08-06

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

---------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தனானா தனானா தனானா தனானா - சந்தம்; இந்தச் சந்தத்தை வடமொழியில் புஜங்கம் என்பர்)


* முற்குறிப்பு : சிவாஷ்டகங்கள் சில உள்ளன. அவற்றுள் "ப்ரபும் ப்ராணநாதம்" என்று தொடங்கும் சிவாஷ்டகம் பலரும் கேட்டுள்ள / கேள்விப்பட்டுள்ள ஒன்று. பல துதிப்பாடல்களில் நிகழ்வதுபோல இதனிலும் சில பாடபேதங்கள் உள்ளன. இந்தச் சிவாஷ்டகம் வடமொழியில் புஜங்கம் என்ற யாப்பமைப்பில் உள்ளது.

இந்தச் சிவாஷ்டகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாக அதே புஜங்கச் சந்தத்தில் அமைந்த அஷ்டகம் இது.


1)

பிரானெம்மு யிர்க்கோன் அகன்ஞால நாதன்

முராரிக்கு மையன் அறாவின்ப னாகி

இராவிற்கு மப்பால் உளன்பூத நாதன்

.. சிவன்சங்க ரன்சம் புதாள்போற்றி போற்றி.


பதம் பிரித்து:

பிரான்; எம் உயிர்க்-கோன்; அகன் ஞால நாதன்;

முராரிக்கும் ஐயன்; அறா இன்பன் ஆகி,

இராவிற்கும் அப்பால் உளன்; பூத-நாதன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பிரான் - தலைவன்;

எம் உயிர்க்-கோன் - எம் உயிர்க்குத் தலைவன்;

அகன் ஞால நாதன் - அகன்ற உலகங்களுக்குத் தலைவன்; (ஞாலம் - உலகம்);

முராரிக்கும் ஐயன் - திருமாலுக்கும் தலைவன்; (முராரி - முரன் என்ற அசுரனைக் கொன்றவன் - திருமால்);

அறா இன்பன் ஆகி - என்றும் தீராத, அழியாத பேரின்ப வடிவன் ஆகி; (அறுதல் - இல்லாமற் போதல்; தீர்தல்);

இராவிற்கும் அப்பால் உளன் - காலத்தைக் கடந்தவன்; அன்றும் இன்றும் என்றும் உள்ளவன்; (இரா - இரவு - மஹா சம்ஹார காலம்); (அற்புதத் திருவந்தாதி - 11.4.25 - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும்");

பூத-நாதன் - பூதகணங்களுத் தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு - ஈசன் திருநாமங்கள்;

தாள் போற்றி போற்றி - திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


2)

சிரங்கள்பு னைந்தான் அராவார்ந்த ஆகன்

இருங்கூற்று தைத்தான் விசும்போர்ப்பு ரந்தான்

பெருங்கங்கை மோதும் படர்செஞ்ச டைக்கோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சிரங்கள் புனைந்தான்; அரா ஆர்ந்த ஆகன்;

இருங்கூற்று உதைத்தான்; விசும்போர்ப் புரந்தான்;

பெருங்கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சிரங்கள் புனைந்தான் - தலைமாலை அணிந்தவன்; (சிரம் - தலை; கபாலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.44.2 - "கனல்சுடரால் இவர் கண்கள் தலையணி சென்னியர்");

அரா ஆர்ந்த ஆகன் - பாம்புகளை உடம்பில் அணிந்தவன்; (அரா - பாம்பு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அணிதல்); (ஆகம் - உடம்பு);

இரும்-கூற்று உதைத்தான் - பெரிய கரிய நமனை உதைத்தவன்; (இருமை - பெருமை; கருமை); (அப்பர் தேவாரம் - 6.85.6 - "பெருங்கூற்றைச் சேவடியினால் செற்றவன்காண்"); (அப்பர் தேவாரம் - 4.109.1 - "இருங்கூற்றகல"); (குலோத்துங்க சோழனுலா - "பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன்");

விசும்போர்ப் புரந்தான் - தேவர்களைக் காப்பவன்; (விசும்பு - வானுலகு; விசும்போர் - தேவர்கள்): (புரத்தல் - காத்தல்; பாலனம் செய்தல்; அருள்செய்தல்); (புரந்தான் என்ற இறந்தகாலப் பிரயோகம் - சில பாடல்களில் அது போல இறந்தகாலப் பிரயோகம் வருவதுண்டு. உதாரணம்: அப்பர் தேவாரம் - 6.68.7 - "தொண்டர் வல்வினைவே ரறும்வண்ணம் மருந்துமாகித் தீர்த்தானை"); (இலக்கணக் குறிப்பு - "விசும்போர்ப் புரந்தான்" - உயர்திணையில் இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

பெரும்-கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன் - பெரிய கங்கைநதியின் அலைகள் மோதுகின்ற, படர்ந்த செஞ்சடையை உடைய தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


3)

மகிழ்ச்சிக்கொ ரூற்றாய் மணிக்குள்மி ளிர்ந்தான்

நிகர்ப்பில்லி அண்டன் பொடிப்பூசு மண்ணல்

தகர்ப்பான்ம யக்கம் வரம்பாதி இல்லான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மகிழ்ச்சிக்கொர் ஊற்றாய், மணிக்குள் மிளிர்ந்தான்;

நிகர்ப்பில்லி; அண்டன்; பொடிப்-பூசும் அண்ணல்;

தகர்ப்பான் மயக்கம்; வரம்பு-ஆதி இல்லான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மகிழ்ச்சிக்கு ஒர் ஊற்று ஆய் - ஒப்பற்ற இன்ப ஊற்று ஆகி; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்; ஓர் - ஒப்பற்ற);

மணிக்குள் மிளிர்ந்தான் - அழகுக்கு அழகுசெய்து திகழ்பவன்; (மணி - நவரத்தினங்கள்; ஆபரணம்; அழகு); (மிளிர்தல் - பிரகாசித்தல்); ("மணிக்குள் மிளிர்ந்தான்" - மணியுள் மிளிர்ந்தான் என்பது சந்தம் கருதி இப்படி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.6.7 - "சோதியாய் நிறைந்தான் சுடர்ச்-சோதியுட் சோதியான்"); (அபிராமி அந்தாதி - 24 - "மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே");

நிகர்ப்பு-இல்லி, அண்டன் - ஒப்பற்றவன், அண்டன்; (நிகர்ப்பு - ஒப்பு); (அண்டன் - பிரபஞ்சத்தின் தலைவன்);

பொடிப் பூசும் அண்ணல் - திருநீற்றைப் பூசிய பெருமான்; (பொடிப்பூசு, பொடிபூசு - என்று இருவகைப் பிரயோகங்களையும் தேவாரத்தில் காணலாம். இவ்விடத்தில் சந்தம் கருதிப், "பொடிப்பூசு" என்ற பிரயோகம்); (சம்பந்தர் தேவாரம் - 1.135.7 - "வெண்பொடிப்பூசுவர்");

தகர்ப்பான் மயக்கம் - அறியாமையை அழிப்பவன்;

வரம்பு ஆதி இல்லான் - எல்லையும் முதலும் அற்றவன்; (வரம்பு - எல்லை);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


4)

புரம்வேவ நக்கான் அறஞ்சொல்லு மாலன்

அரும்பாவ நாசன் வளம்பொங்கு தேசன்

பெருந்தேவ தேவன் கணம்போற்று வெற்பன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

புரம் வேவ நக்கான்; அறம் சொல்லும் ஆலன்;

அரும் பாவ நாசன்; வளம் பொங்கு தேசன்;

பெருந்தேவ தேவன்; கணம் போற்று வெற்பன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


புரம் வேவ நக்கான் - முப்புரங்கள் எரியும்படி சிரித்தவன்;

அறம் சொல்லும் ஆலன் - மறைப்பொருளைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;

அரும்-பாவ-நாசன் - தீர்த்தற்கு அரிய பாவங்களை எல்லாம் அழிப்பவன்;

வளம் பொங்கு தேசன் - மேன்மை பொங்குகின்ற ஒளிவடிவினன்;

பெரும்-தேவதேவன் - மஹாதேவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

கணம் போற்று வெற்பன் - பூதகணங்கள் எல்லாம் போற்றுகின்ற கயிலைமலையான்; (வெற்பு - மலை); (அப்பர் தேவாரம் - 4.111.2 - "விஞ்சத் தடவரை வெற்பா");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


5)

மலைப்பாவை ஆகத் திடப்பாக மானான்

அலைப்புண்ட டைந்தார் அலம்தீர்பொ ருப்பன்

கலைப்பாவை கேள்வன் சுரர்போற்று மேலோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மலைப்-பாவை ஆகத்து இடப்-பாகம் ஆனான்;

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன்;

கலைப்-பாவை கேள்வன், சுரர் போற்று மேலோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மலைப்பாவை ஆகத்து இடப்பாகம் ஆனான் - தன் திருமேனியில் இடப்பாகமாக மலைக்கு மகளான உமையை உடையவன்; (ஆகம் - மேனி);

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன் - மிக-வருந்தி வந்து தன்னைச் சரணடைந்தவர்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் கயிலாயன்; (அலைப்பு - வருத்தம்); (அலம் - துன்பம்); (பொருப்பு - மலை);

கலைப்பாவை கேள்வன் சுரர் போற்று மேலோன் - சரஸ்வதி கணவனான பிரமனாலும் பிற தேவர்களாலும் வணங்கப்பெறுகின்ற பரம்பொருள்; (கலைப்பாவை - கலைமகள் - சரஸ்வதி); (கேள்வன் - கணவன்); (சுரர் - தேவர்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


6)

கரத்திற்க பாலம் சுடர்சூல மேந்தி

வரத்தைக்கொ டுப்பான் மலர்த்தாள்வ ணங்கில்

சுரர்க்கோர்பி ரான்தான் பெரும்பெற்ற மூர்ந்தான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

கரத்தில் கபாலம், சுடர்-சூலம் ஏந்தி;

வரத்தைக் கொடுப்பான் மலர்த்-தாள் வணங்கில்;

சுரர்க்கோர் பிரான் தான்; பெரும் பெற்றம் ஊர்ந்தான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


கரத்தில் கபாலம், சுடர் சூலம் ஏந்தி - கையில் கபாலத்தையும், (நெருப்பையும்), ஒளிவீசும் சூலத்தையும் ஏந்தியவன்; (சுடர்தல் - பிரகாசித்தல்); (சுடர் - நெருப்பு);

வரத்தைக் கொடுப்பான் மலர்த்தாள் வணங்கில் - தாமரைத்திருவடியை வணங்கினால் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவன்;

சுரர்க்கு ஓர் பிரான் தான் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவன் அவன்; (தான் - அவன்; தேற்றச்சொல்லாகவோ அசைச்சொல்லாகவோ கொண்டும் பொருள்கொள்ளலாம்);

பெரும்-பெற்றம் ஊர்ந்தான் - பெரிய விடையை வாகனமாக உடையவன்; (பெற்றம் - இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 2.80.1 - "பெரிய விடைமேல் வருவார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "பெற்றமூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மானிவனன்றே");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


7)

சுடர்ச்சோதி ஆகன் கணங்கட்கி னிப்பான்

சுடர்க்கண்ண னீற்றன் குபேரற்கு நண்பன்

மடப்பாவை கேள்வன் திகழ்கின்ற மெய்யன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சுடர்ச்-சோதி ஆகன்; கணங்கட்கு இனிப்பான்;

சுடர்க்-கண்ணன்; நீற்றன்; குபேரற்கு நண்பன்;

மடப்-பாவை கேள்வன்; திகழ்கின்ற மெய்யன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சுடர்ச்-சோதி ஆகன் - சந்திரனது ஒளி போலக் குளிர்ந்த ஒளி திகழும் திருமேனியன்; (சுடர் - சந்திரன்); (சோதி - ஒளி; கிரணம்); (ஆகம் - மேனி);

கணங்கட்கு இனிப்பான் - பூதகணங்களுக்கும் அன்பர் கூட்டங்களுக்கும் இன்பம் தருபவன்; (கணம் - பூதகணம்; கூட்டம்); (இனித்தல் - தித்தித்தல்); (அப்பர் தேவாரம் - "பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்தாகும் அமுதினை" - அண்ணித்தாகும் - இனிக்கும்);

சுடர்க்கண்ணன் - தீயை (நெற்றிக்) கண்ணில் உடையவன்; சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களை மூன்று கண்களாக உடையவன்; (சுடர் - சூரியன்; சந்திரன்; நெருப்பு); (அப்பர் தேவாரம் - 6.90.1 - "மூன்றுசுடர்க் கண்ணானை"); (அப்பர் தேவாரம் - 6.98.4 - " சுடர்நயனச் சோதியையே தொடர்வுற்றோமே");

நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்; (திருநீறு - தூய்மையைக் குறிப்பது); (சம்பந்தர் தேவாரம் - 2.66.7 - "சுத்தமதாவது நீறு");

குபேரற்கு நண்பன் - குபேரனுக்குத் தோழன்; (திருவிசைப்பா - 9.1.7 - "தனதன் நற்றோழா சங்கரா" - தனதன் - குபேரன் - धनदः - an epithet of Kubera);

மடப்பாவை கேள்வன் - உமாதேவி மணவாளன்;

திகழ்கின்ற மெய்யன் - என்றும் இருக்கும் மெய்ப்பொருள்; ஒளிவீசும் திருமேனியை உடையவன்; (திகழ்தல் - விளங்குதல்); (மெய் - உண்மை; உடல்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


8)

அரன்பாம்ப ணிந்தான் மயானத்தி லாடி

பரன்வேத நாதன் பவன்மாற்ற மில்லான்

கருங்காடு றைந்தான் மதன்தன்னை அட்டான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

அரன்; பாம்பு அணிந்தான்; மயானத்தில் ஆடி;

பரன்; வேத நாதன்; பவன்; மாற்றம் இல்லான்;

கருங்காடு உறைந்தான்; மதன்-தன்னை அட்டான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


அரன் - ஹரன்;

பாம்பு அணிந்தான் - நாகத்தை மாலையாகப் பூண்டவன்;

மயானத்தில் ஆடி - மயானத்தில் சஞ்சரிப்பவன்; சுடுகாட்டில் கூத்தன்; (ஆடுதல் - சஞ்சரித்தல்; கூத்தாடுதல்);

பரன் - மேலானவன்;

வேத-நாதன் - வேதத்தலைவன்; வேதப்பொருள் ஆனவன்;

பவன் - என்றும் இருப்பவன்;

மாற்றம் இல்லான் - என்றும் மாறாமல் இருப்பவன் - மெய்ப்பொருள்;

கருங்காடு உறைந்தான் - சுடுகாட்டை வாழும் இடமாக உடையவன்; (கருங்காடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 2.38.2 - "வெண்டலைக் கருங்காடுறை வேதியன்");

மதன்தன்னை அட்டான் - மன்மதனைச் சுட்டெரித்தவன்; (அடுதல் - எரித்தல்); (அப்பர் தேவாரம் - 6.26.1 - "வன்கருப்புச்-சிலைக் காமன்-உடல் அட்டானை");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, November 6, 2023

07.16 – பொது - "வினை மாய்த்தருள் ஈசன்" - பொற்பதம் ஏத்து

07.16 – பொது - "வினை மாய்த்தருள் ஈசன்"

2015-12-26

7.16 - பொது - "வினை மாய்த்தருள் ஈசன்"

------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தானன தானன தானன தானா - சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

"லிங்காஷ்டகம்" என்ற துதியின் சந்தத்தில்)


* சந்தம் கெடாத இடங்களில், படிப்போர் வசதி கருதிப், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

பொற்பதம் ஏத்துசு ரர்க்கருள் ஈசன்

வெற்பினை வில்லென ஏந்திய ஈசன்

நற்புனல் அஞ்சடை வைத்தருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பொற்பதம் ஏத்து சுரர்க்கு அருள் ஈசன் - பொன் போன்ற திருவடியைத் துதித்த தேவர்களுக்கு அருளிய ஈசன்;

வெற்பினை வில் என ஏந்திய ஈசன் - மேருமலையை வில்லாக ஏந்திய ஈசன்; - முப்புரம் எரித்ததைச் சுட்டியது; (வெற்பு - மலை);

நற்புனல் அஞ்சடை வைத்தருள் ஈசன் - கங்கையை அழகிய சடையில் தாங்கும் ஈசன்; (அம் - அழகு);

வாழ்த்திடுவோம் வினை மாய்த்து அருள் ஈசன் - நம் வினையையெல்லாம் அழித்து அருளும் ஈசனைப் போற்றுவோம்;


2)

தக்கனை முண்டம ரிந்தருள் ஈசன்

அக்கணி ஆரமெ னப்புனை ஈசன்

சக்கரம் அச்சுத னுக்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


தக்கனை முண்டம் அரிந்து அருள் ஈசன் - தக்கன் செய்த வேள்வியை அழித்து அவன் தலையை வெட்டி அருளிய ஈசன்; (முண்டம் - தலை); (அரிதல் - வெட்டுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.109.6 - "தக்கனைத் தலையரி தழலுருவர்");

அக்கு அணி ஆரம் எனப் புனை ஈசன் - எலும்பை அழகிய மாலை போலப் பூணும் ஈசன்;

சக்கரம் அச்சுதனுக்கு அருள் ஈசன் - திருமாலுக்க்ச் சக்கராயுதத்தை அருளிய ஈசன்;


3)

பொங்கெரி மேனியில் நீறணி ஈசன்

ஐங்கணை வேள்பட நோக்கிய ஈசன்

மங்கல மேவிர திக்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பொங்கு எரி மேனியில் நீறு அணி ஈசன் - பொங்குகின்ற தீப் போன்ற செம்மேனியில் திருநீற்றை அணிந்த ஈசன்; (எரி - நெருப்பு ); (மேனியினீறணி = மேனியில் நீறு அணி); (அப்பர் தேவாரம் - 4.112.5 - "முழுத்தழல் மேனித் தவளப் பொடியன்");

ஐங்கணை வேள் பட நோக்கிய ஈசன் - ஐந்து மலர்க்கணைகள் ஏவும் மன்மதன் அழியும்படி அவனை நெற்றிக்கண்ணால் பார்த்த ஈசன்; (வேள் - காமன்); (படுதல் - அழிதல்; சாதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று");

மங்கலமே இரதிக்கு அருள் ஈசன் - வழிபாடு செய்த இரதிக்கு இரங்கி அவளுக்கு நன்மை (/தாலி பாக்கியம்) அருளி, அவள் கணவனான மன்மதனுக்கு மீண்டும் உயிர் தந்த ஈசன்; (மங்கலமேவிரதிக்கருள் = 1. மங்கலமே இரதிக்கு அருள்; 2. மங்கலம் மேவு இரதிக்கு அருள்); (மங்கலம் - சுபம்; நன்மை; தாலி); (மேவுதல் - விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.60.9 - "காமனை ஈடழித்திட் டவன் காதலி சென்றிரப்பச் சேமமே உன்றனக்கென் றருள் செய்தவன்");


4)

போர்புரி வேழமு ரித்தருள் ஈசன்

நீர்புரி செஞ்சடை ஏற்றருள் ஈசன்

பேர்பல சொல்லடி யார்க்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


போர் புரி வேழம் உரித்தருள் ஈசன் - போர் செய்த யானையின் தோலை உரித்தருளிய ஈசன்;

நீர் புரி செஞ்சடை ஏற்றருள் ஈசன் - கங்கையை முறுக்கேறிய செஞ்சடையில் தாங்கியருளிய ஈசன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல் - To be twisted; to curl); (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "புரிசடையாய் புண்ணியனே");

பேர் பல சொல் அடியார்க்கு அருள் ஈசன் - பல திருநாமங்களையும் சொல்லி வணங்கும் அடியவர்களுக்கு அருள்கின்ற ஈசன்;


5)

வலியச லந்தர னைத்தடி ஈசன்

எலியையு(ம்) மாவலி ஆக்கிய ஈசன்

நலிவிலன் ஓர்விடை ஏறிய ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வலிய சலந்தரனைத் தடி ஈசன் - வலிமை மிகுந்த சலந்தராசுரனை அழித்தவன்; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

எலியையும் மாவலி ஆக்கிய ஈசன் - (திருமறைக்காட்டில், ஈசன் சன்னிதியில் இருந்த விளக்குத் திரியைத் தற்செயலாகத் தூண்டிய) ஓர் எலியைப் பின்னர் மகாபலியாகப் பிறப்பித்தவன்; (மாவலி - மகாபலி); (அப்பர் தேவாரம் - 4.49.8 - "நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக் கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட);

நலிவு இலன் ஓர் விடை ஏறிய ஈசன் - துன்பமும் அழிவும் இல்லாதவன், ஒப்பற்ற இடப வாகனம் உடைய ஈசன்; (நலிவு - துன்பம்; அழிவு); (ஓர் - ஒப்பற்ற; ஒரு);


6)

அந்தக னைச்செறு வேலுடை ஈசன்

மந்திர மாமறை ஓதிய ஈசன்

சந்திர னைத்தரி தாழ்சடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


அந்தகனைச் செறு வேல் உடை ஈசன் - அந்தகாசுரனை அழித்த சூலத்தை உடைய ஈசன்; (அந்தகன் - அந்தகாசுரன்); (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்); (வேல் - திரிசூலம்);

மந்திர மாமறை ஓதிய ஈசன் - மந்திரங்களையுடைய வேதங்களைப் பாடியருளியவன்; வேதமந்திரங்கள் பாடுகின்ற ஈசன்; (சம்பந்தர் தேவாரம் - 3.15.1 - "மந்திர மறையவை வானவரொடும் இந்திரன் வழிபட நின்ற எம்மிறை");

சந்திரனைத் தரி தாழ்சடை ஈசன் - சந்தரனை அணிந்த தாழும் சடையை உடையவன்; (தாழ்சடை - தொங்குகின்ற சடை);


7)

நான்முகன் ஓர்தலை கொய்தருள் ஈசன்

மான்மறி மாமழு ஏந்திய ஈசன்

தேன்மலி மாமலர் ஆர்சடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


நான்முகன் ஓர் தலை கொய்தருள் ஈசன் - பிரமனுடைய தலைகளில் ஒன்றைக் கிள்ளியருளிய ஈசன்; (சம்பந்தர் தேவாரம் - 1.105.7 - "பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே");

மான்மறி மாமழு ஏந்திய ஈசன் - கையில் மான்கன்றையும் பெரிய மழுவையும் ஏந்தியவன் ஈசன்; (மறி - கன்று);

தேன் மலி மாமலர் ஆர் சடை ஈசன் - தேன் நிறைந்த அழகிய மலர்களைச் சடையில் அணிந்த ஈசன்; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; அணிதல்);


8)

பத்துமு கன்தனை ஊன்றிய ஈசன்

மத்திடு மாகடல் நஞ்சணி ஈசன்

சத்தியை வாமமி ருத்திய ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பத்துமுகன்தனை ஊன்றிய ஈசன் - தசமுகனை (இராவணனை) நசுக்கிய ஈசன்; (ஊன்றுதல் - அமுக்குதல்);

மத்திடு மா கடல் நஞ்சணி ஈசன் - கடைந்த பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (மத்திடுதல் - கடைதல்); (மாகடனஞ்சணி = மா கடல் நஞ்சு அணி); (சம்பந்தர் தேவாரம் - 3.69.1 - "மாகடல்விடம் தானமுது செய்தருள் புரிந்தசிவன்");

சத்தியை வாமம் இருத்திய ஈசன் - உமையை இடப்பக்கம் விரும்பி ஏற்ற ஈசன்; (சத்தி - சக்தி - உமை); (வாமம் - இடப்பக்கம்); (இருத்துதல் - இருக்கச்செய்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.33.3 - "மலைமங்கையொரு பாகத் துளங்கொள இருத்திய ஒருத்தன்");


9)

ஏனமும் அன்னமு(ம்) நேடிய ஈசன்

கானக(ம்) மாநடம் ஆடிடும் ஈசன்

போனக மாவிடம் உண்டருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


ஏனமும் அன்னமும் நேடிய ஈசன் - பன்றியும் அன்னமுமாய்த் திருமலும் பிரமனும் அடியும் முடியும் தேடிய ஈசன்; (ஏனம் - பன்றி); (நேடுதல் - தேடுதல்);

கானகம் மா நடம் ஆடிடும் - சுடுகாட்டில் பெரிய திருநடம் செய்கின்ற; (கானகம் - காடு - இங்கே சுடுகாடு); (மா - அழகு; பெருமை);

போனகமா விடம் உண்டருள் ஈசன் - உணவாகக் ஆலகால விடத்தை உண்ட ஈசன்; (போனகம் - உணவு); (போனகமா - போனகமாக - கடைக்குறையாக வந்தது);


10)

புன்னெறி யார்க்கிலன் ஆகிய ஈசன்

தன்னடி யார்க்கொரு நற்றுணை ஈசன்

வன்னம னைக்கழ லாலுதை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


புன்னெறியார்க்கு இலன் ஆகிய ஈசன் - சிறுநெறியாளர்களுக்கு அருள் இல்லாத ஈசன்; சிறுநெறியாளர்களால் அறியப்படாத ஈசன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன்");

தன் அடியார்க்கு ஒரு நல் துணை ஈசன் - தன் பக்தர்களுக்கு ஒப்பற்ற நல்ல துணை ஆன ஈசன்;

வன் நமனைக் கழலால் உதை ஈசன் - கொடிய கூற்றுவனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்த ஈசன்;


11)

வெண்பொடி மார்பிலி லங்கிடும் ஈசன்

தண்புன லைச்சடை வைத்தருள் ஈசன்

பெண்புடை யில்திகழ் அன்புடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வெண் பொடி மார்பில் இலங்கிடும் ஈசன் - வெண்மையான திருநீறு மார்பில் திகழ்கின்ற ஈசன்;

தண் புனலைச் சடை வைத்து அருள் ஈசன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் வைத்த ஈசன்;

பெண் புடையில் திகழ் அன்பு உடை ஈசன் - உமாதேவி ஒரு பக்கத்தில் திகழும்படி அன்பு உடைய ஈசன்;


பிற்குறிப்புகள் :

1) இப்பதிகத்தில் சிவபெருமானின் அட்டவீரட்டச் செயல்களும் சுட்டப்பெறுகின்றன;

திரிபுரம் எரித்தது (திருவதிகை), ஜலந்தரனை வதம் செய்தது (திருவிற்குடி), தக்கன் வேள்வியை அழித்து (திருப்பறியலூர்), மன்மதனை எரித்தது (திருக்குறுக்கை), காலனை அழித்தது (திருக்கடவூர்), யானையை வதம் செய்தது (திருவழுவூர்), அந்தகனை அழித்தது (திருக்கோவலூர்), பிரமன் தலையைக் கொய்தது (திருக்கண்டியூர்) ஆகிய எட்டுத் தலங்களே வீரட்டத் தலங்களாகும்.


2) யாப்புக் குறிப்பு: மூவடிமேல் ஓரடி வைப்பு - இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் மூன்றடிகளால் அமைந்து அதன் மேல் ஓர் அடி (எல்லாப் பாடல்களிலும் அவ்வடியே) அமைந்து வருகின்றது. ஆகவே, "மூவடிமேல் ஓரடி வைப்பு";

எல்லா அடிகளும் "தானன தானன தானன தானா" என்ற சந்தம். வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

சில பாடல்களில் முதற்சீர் "தனதன" என்றும் வரலாம்.

தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின / மெல்லின ஒற்றுகள் அலகிடப்படா.

ஐகாரக் குறுக்கம் நிகழும் இடங்களில் அது குறில் போல அலகிடப்படும்.


3) திருமுறைகளில் நாலடிமேல் வைப்பு, ஈரடிமேல் வைப்பு, போன்ற அமைப்பு உடைய பதிகங்களைக் காணலாம். உதாரணமாக:

சம்பந்தர் தேவாரம் - 3.4.1 - "இடரினும் தளரினும் எனதுறுநோய்";

சம்பந்தர் தேவாரம் - 3.6.1 - "கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர்";

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்";

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.3.1 - "மாதர்ப் பிறைக்கண்ணி யானை";


4) சமஸ்கிருதத்தில் உள்ள லிங்காஷ்டகம் - அதன் யாப்பு :

Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்ம முராரி சுரார்சித லிங்கம்.

(Lingashtakam meter info provided by J.K. Mohana Rao):

brahma murAri surArchita liMgaM - taraMgaka / dOdhaka

dinakarakOTi prabhAkara liMgaM - kamalavilAsinI / tAmarasa / lalitapadA

suraguru suravara pUjita liMgaM - kamalalOchanA / kamalAkshI / chaMDI

parAtparaM paramAtmaka liMgaM - unknown

Some stanzas like 3, 5, 7 are mixtures of different metres. Such mixed metres are called upajAti in Sanskrit.

last one (phalasruthi) is SlOka


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


V.034 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

2015-12-25

V.034 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

-----------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா - சந்தம்)

( Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)


முற்குறிப்புகள்:

* சந்தம் கெடாத இடங்களில், படிப்போர் வசதி கருதிப், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

* "லிங்கம்" என்பது தமிழ் இலக்கணப்படி "இலிங்கம்" என்று வரும்; ஆயினும், மூலப்பாடலின் சந்த-அமைப்பை ஒட்டி இம்மொழிபெயர்ப்பிலும் "லிங்கம்" என்றே கையாளப்பட்டுள்ளது.


1)

நான்முகன் நாரணன் வான்தொழு லிங்கம்

ஊனமி லாஒளி யாய்த்திகழ் லிங்கம்

வான்பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


நான்முகன் நாரணன் வான் தொழு லிங்கம் - பிரமன், விஷ்ணு, தேவர்கள், எல்லாரும் வணங்கும் லிங்கம்; (நான்முகன் - பிரமன்); (நாரணன் - விஷ்ணு); (வான் - தேவர்); (லிங்கம் - சிவபெருமானின் அருவுருவம்);

ஊனம் இலா ஒளியாய்த் திகழ் லிங்கம் - குற்றமற்ற ஜோதியாகித் திகழும் லிங்கம்; (ஊனம் - குறைவு; குற்றம்);

வான்-பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம் - பெரும்பிணியை (= பிறவிப்பிணியை) நீக்கி அருள்புரியும் லிங்கம்; (வான் - பெரிய);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - 1. (என்) நா நிதம் ஏத்தும் அதே சிவ லிங்கம்; 2. நாம் நிதம் ஏத்தும் அதே சிவலிங்கம்;

(நாநிதம் - 1. நா + நிதம்; 2. நாம் + நிதம்; இவ்விடத்தில் புணர்ச்சியில் முதற்சொல்லின் ஈற்றிலுள்ள ம் கெடும்); (நா - நாக்கு); (நிதம் - நித்தம் - தினமும்; எப்போதும்; அனவரதமும்); (சதா - எப்பொழுதும்);


2)

பன்முனி வான்அடி வாழ்த்திடு லிங்கம்

மன்மத னைப்பொடி ஆக்கிய லிங்கம்

முன்னம ரக்கனை ஊன்றிய லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


பன்முனி வான் அடி வாழ்த்திடு லிங்கம் - பல முனிவர்களூம் தேவர்களும் வணங்கும் லிங்கம்;

மன்மதனைப் பொடி ஆக்கிய லிங்கம் - காமனைச் சாம்பலாக்கிய லிங்கம்; (பொடி - சாம்பல்);

முன்னம் அரக்கனை ஊன்றிய லிங்கம் - முன்பு (தனது ஆணவத்தால் கயிலையைப் பெயர்த்த) இராவணனை நசுக்கி அவனது வலிமையையும் கர்வத்தையும் அழித்த லிங்கம்; (ஊன்றுதல் - அமுக்குதல்; நசுக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.74.10 - "திரண்ட திண்டோள் அரக்கனை ஊன்றி");

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


3)

கந்த(ம்)ம லிந்திடு பூச்சணி லிங்கம்

சிந்தைம யக்கைஅ றுத்தருள் லிங்கம்

அந்தரர் சித்தரெ லாம்பணி லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


கந்த(ம்) மலிந்திடு பூச்சு அணி லிங்கம் - வாசனை மிகுந்த கலவைச்சாந்து முதலியவற்றை அணிந்தருளும் லிங்கம்; (பூச்சு - smearing, anointing; தடவுதல்; பூசுதல்);

சிந்தை-மயக்கை அறுத்து அருள் லிங்கம் - மனமயக்கத்தைத் தீர்த்துத் தெளிவை அளித்து அருளும் லிங்கம்;

அந்தரர் சித்தரெலாம் பணி லிங்கம் - தேவர்கள், சித்தர்கள் முதலிய எல்லாரும் பணிகின்ற லிங்கம்; (அந்தரர் - தேவர்கள்);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


4)

பொன்மணி ஆகமி லங்கிடு லிங்கம்

பன்னக நாணைஅ ரைக்கணி லிங்கம்

முன்னொரு வேள்வித கர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


பொன் மணி ஆகம் இலங்கிடு லிங்கம் - 1. பொன்னும் மணியும் மேனியில் விளங்குகின்ற லிங்கம்; 2. பொன் போல் அழகிய மேனி விளங்குகின்ற லிங்கம்; (மணி - இரத்தினம்; அழகு); (ஆகம் - மேனி; மார்பு); (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே");

பன்னக நாணை அரைக்கு அணி லிங்கம் - பாம்பை அரைநாணாக அணிகின்ற; (பன்னகம் - பாம்பு);

முன் ஒரு வேள்வி தகர்த்து அருள் லிங்கம் - முன்பு (தக்கன் செய்த) ஒரு யாகத்தை அழித்தருளிய லிங்கம்;

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


5)

குங்கும சந்தனம் ஏற்றருள் லிங்கம்

பங்கய மாலை உகந்தருள் லிங்கம்

தங்கிய முன்வினை சாய்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


குங்கும சந்தனம் ஏற்றருள் லிங்கம் - குங்குமம் சந்தனம் முதலிவற்றை ஏற்றருளும் லிங்கம்;

பங்கய மாலை உகந்து அருள் லிங்கம் - தாமரைமாலையை விரும்பி ஏற்கின்ற லிங்கம்;

தங்கிய முன்வினை சாய்த்து அருள் லிங்கம் - எஞ்சியுள்ள வினையையெல்லாம் அழித்தருளும் லிங்கம்; (தங்குதல் - to remain; to exist); (சஞ்சிதம் - அனாதியாய் ஈட்டப்பட்டுள்ள கர்மத்தில் அனுபவித்துத் தீர்ந்ததுபோக எஞ்சியது); (சாய்த்தல் - கெடுத்தல்; அழித்தல்);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


6)

பல்லிமை யோர்கணம் முன்பணி லிங்கம்

நல்லுளம் அன்பொடு நாடிடு லிங்கம்

எல்லியொர் கோடிநி கர்த்தொளிர் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


பல்-இமையோர்-கணம் முன் பணி லிங்கம் - பல தேவர் கூட்டங்கள் வணங்குகின்ற லிங்கம்; (உம்மைத்தொகையாகக் கொண்டு, "பல தேவர்களும் பூதகணங்களும் வணங்குகின்ற லிங்கம்" என்றும் பொருள்கொள்ளலாம்);

நல்-உளம் அன்பொடு நாடிடு லிங்கம் - நல்ல உள்ளம் உடையோர் பக்தியோடு போற்றுகின்ற லிங்கம்;

எல்லி ஒர் கோடி நிகர்த்து ஒளிர் லிங்கம் - ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளிவீசுகின்ற லிங்கம்; (எல்லி - சூரியன்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


7)

எண்மல ரால்தொழு தேத்திடு லிங்கம்

எண்ணிலி அண்டமெ லாம்படை லிங்கம்

மண்ணினர் எண்கலி தீர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


எண்மலரால் தொழுது ஏத்திடும் லிங்கம் - அஷ்டபுஷ்பங்களால் வழிபாடு செய்யப்பெறுகின்ற லிங்கம்; (அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு); (அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி");

எண்ணிலி அண்டம்-எலாம் படை லிங்கம் - எண்ணற்ற அண்டசராசரங்களைப் படைக்கின்ற லிங்கம்; (எண்ணிலி - எண்ணற்ற);

மண்ணினர் எண்கலி தீர்த்துஅருள் லிங்கம் - மனிதர்களுடைய எட்டு வகையான தரித்திரங்களைத் தீர்த்து அருள்கின்ற லிங்கம்; (கலி - தரித்திரம்); (தமிழில் "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்" என்று 16 பேறுகளைக் குறிப்பிடுவதுபோல், வடமொழியில் "அஷ்டைசுவரியம்" - எண்வகைச் செல்வம் - என்பர்; அந்த எட்டுச் செல்வங்களின் இன்மை - அஷ்டதரித்திரம்); (அஷ்டலக்ஷ்மி - இந்த எட்டுச் செல்வங்களை அளிக்கும் லக்ஷ்மிகள் என்று கருதலாம்போல்);

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);


8)

வானவ ருங்குரு வுந்தொழு லிங்கம்

வானல ரால்அடி வாழ்த்திடு லிங்கம்

மானமி லங்கிய வான்பொருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்.


வானவரும் குருவும் தொழு லிங்கம் - தேவர்களும் தேவகுருவும் தொழுகின்ற லிங்கம்;

வான்-அலரால் அடி வாழ்த்திடு லிங்கம் - தேவலோகத்துப் புஷ்பங்களால் திருவடியைப் போற்றுகின்ற லிங்கம்; (அலர் - பூ);

மானம் இலங்கிய வான்-பொருள் லிங்கம் - மேன்மை விளங்கிய பரம்பொருள் லிங்கம்; (மானம் - உயர்வு; பெருமை); (வான் பொருள் - எட்டாத பொருள்) (திருவாசகம் - திருச்சாழல் - 10 - "தானந்தம் இல்லான் ... வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ");

நாநிதம் ஏத்தும் அதே சிவலிங்கம் - (முதற்பாடலில் விளக்கம் காண்க);



-- "நூற்பயன் (பலசுருதி)" -- (திருவாசகம் - சிவபுராணம் - ஈற்றடிகள்) --

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்கச், சிவலோகத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலைபெறுவர்.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

  • முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

  • வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

  • தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின / மெல்லின ஒற்றுகள் அலகிடப்படா.

  • ஐகாரக் குறுக்கம் நிகழும் இடங்களில் அது குறில் போல அலகிடப்படும்.

  • வடமொழிப் பாடல்களில் பொதுவாக எதுகை இராது. இந்தத் தமிழ்மொழிபெயர்ப்பில், தமிழில் எதுகையும் அமையப் பாடப்பெற்றுள்ளது.

-----------