2020-08-23
P.515 - கடம்பூர் (மேலக்கடம்பூர்)
-----------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.47.1 - "மட்டிட்ட புன்னை")
* ஊரின் பெயர் கடம்பூர். கோயிலின் பெயர் கரக்கோயில். (அப்பர் தேவாரம் - 5.19.1 - "கடம்பூர்க் கரக்கோயிலே").
1)
கொடியிலொரு விடையுடையான் கூர்மழுவாட் படையுடையான்
துடியிடையாள் சோதிமின் னம்மையவள் மணவாளன்
கடிபொழிலில் வண்டறையும் கடம்பூர்க் கரக்கோயில்
அடிகளமு தின்னுருவன் அடிமலரைப் புகழ்நாவே.
கொடியில் ஒரு விடை உடையான் - இடபக்கொடியை உடையவன்;
கூர்-மழுவாட்படை உடையான் - கூரிய மழுவாயுதத்தை ஏந்தியவன்;
துடி-இடையாள் சோதிமின்னம்மைஅவள் மணவாளன் - உடுக்கை போன்ற சிற்றிடையை உடையவளும் சோதிமின்னம்மை என்ற திருநாமம் உடையவளுமான உமைக்குக் கணவன்; (* சோதிமின்னம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);
கடிபொழிலில் வண்டு அறையும் கடம்பூர்க் கரக்கோயில் - வாசனை மிகுந்த சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற; (கடி - வாசனை);
அடிகள், அமுதின் உருவன் அடிமலரைப் புகழ் நாவே - சுவாமி, அமுதின் வடிவானவன், அவன் திருவடித்தாமரையை நாவே நீ புகழ்வாயாக; (அமுதின்னுருவன் - ன் ஒற்று விரித்தல் விகாரம்); ("அமுது, இன்-உருவன்" என்று பிரித்தும் பொருள்கொள்ளலாம் - அமுது ஒத்தவன், இனிய உருவம் உடையவன்); (* அமிர்தகடேசுவரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);
2)
தருவொன்றின் கீழிருந்து தருமத்தை விளக்கியவன்
உருவென்றும் அருவென்றும் உரைகடந்து நின்றபரன்
கருவண்டார் பொழில்சூழ்ந்த கடம்பூர்க் கரக்கோயில்
அருவிடமுண் டிருள்கண்டன் அடியிணையைப் புகழ்நாவே.
தரு ஒன்றின்கீழ் இருந்து தருமத்தை விளக்கியவன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருந்து சிவதர்மத்தை உபதேசித்தவன்; (தரு - மரம் - கல்லாலமரம்);
உரு என்றும் அரு என்றும் உரை கடந்து நின்ற பரன் - உருவம் உடையவன் ஆகியும் உருவம் அற்றவன் ஆகியும் சொல்லைக் கடந்த பரமன்;
கருவண்டு ஆர் பொழில் சூழ்ந்த கடம்பூர்க் கரக்கோயில் - கரிய வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற; (ஆர்த்தல் - ஒலித்தல்);
அருவிடம் உண்டு இருள் கண்டன் அடியிணையைப் புகழ் நாவே - கொடிய விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடைய சிவபெருமானது இருதிருவடிகளை, நாவே நீ புகழ்வாயாக;
3)
புதியமலர் பலதூவிப் பொன்னடியை வானவர்கோன்
துதிசெயக்கண் டருள்புரிந்தான் தோடணிந்த செவியுடையான்
கதிர்நுழையாப் பொழில்சூழ்ந்த கடம்பூர்க் கரக்கோயில்
மதியணிசெஞ் சடையண்ணல் மலரடியைப் புகழ்நாவே.
புதிய மலர் பல தூவிப் பொன்னடியை வானவர்கோன் துதிசெயக்கண்டு அருள்புரிந்தான் - நாண்மலர்கள் தூவிப் பொற்பாதத்தை இந்திரன் வணங்க, அவனுக்கு அருள்செய்தவன்; (* இத்தலத்தில் இந்திரன் வழிபட்டதைத் தலவரலாற்றில் காண்க);
தோடு அணிந்த செவி உடையான் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;
கதிர் நுழையாப் பொழில் சூழ்ந்த கடம்பூர்க் கரக்கோயில் - வெயில் புகாத அடர்ந்த சோலை சூழ்ந்த கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற;
மதி அணி செஞ்சடை அண்ணல் மலரடியைப் புகழ் நாவே - சந்திரனைச் செஞ்சடையில் சூடிய பெருமானது மலர்ப்பாதத்தை, நாவே நீ புகழ்வாயாக;
4)
நாமமது மறவாது நாள்தோறும் நினைவார்க்குச்
சேமநிதி ஆகியவன் சேவேறும் செம்பெருமான்
காமருபூம் பொழில்சூழ்ந்த கடம்பூர்க் கரக்கோயில்
தூமதியச் சடையெந்தை துணையடியைப் புகழ்நாவே.
நாமமது மறவாது நாள்தோறும் நினைவார்க்குச் சேமநிதி ஆகியவன் - திருநாமத்தை மறத்தல் இன்றித் தினந்தோறும் தியானிப்பவர்களுக்கு வைப்புநிதி ஆனவன்; (சேமநிதி - வைப்புநிதி);
சே ஏறும் செம்பெருமான் - இடபவாகனம் உடைய செம்மேனிப் பெருமான்; (சே - எருது);
காமரு பூம்பொழில் சூழ்ந்த கடம்பூர்க் கரக்கோயில் - அழகிய பூஞ்சோலை சூழ்ந்த கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற; (காமரு - அழகிய);
தூ-மதியச்-சடை எந்தை துணையடியைப் புகழ் நாவே - தூய வெண்திங்களை அணிந்த சடையுடைய எம் தந்தையின் இருதிருவடிகளை, நாவே நீ புகழ்வாயாக;
5)
நூலணியும் மார்பனது நூறுபத்துப் பேர்சொல்லிப்
பாலனைய நீறணிந்து பதம்போற்று முனிவாழக்
காலனையன் றுதைசெய்தான் கடம்பூர்க் கரக்கோயில்
சேலனைய கண்ணிபங்கன் சேவடியைப் புகழ்நாவே.
நூல் அணியும் மார்பனது நூறுபத்துப்-பேர் சொல்லிப், பால் அனைய நீறு அணிந்து பதம் போற்று முனி வாழக் - பூணூல் அணிந்த திருமார்பனது ஆயிரம் திருநாமங்களைச் சொல்லிப், பால் போன்ற வெண்ணீற்றைப் பூசித், திருவடியை வணங்கிய முனிவரான மார்க்கண்டேயர் இறவாமல் வாழும்படி; (நூறுபத்து - ஆயிரம்);
காலனை அன்று உதைசெய்தான் - காலனை முன்பு உதைத்தவன்;
கடம்பூர்க் கரக்கோயில் - கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற;
சேல் அனைய கண்ணி-பங்கன் சேவடியைப் புகழ் நாவே - சேல்மீன் போன்ற கண்ணுடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமானது சிவந்த திருவடியை, நாவே நீ புகழ்வாயாக;
6)
கொய்ம்மாநன் மலர்தூவிக் கும்பிட்ட அடியார்கள்
இம்மாயப் பிறவியற இனிதருளும் எம்பெருமான்
கைம்மாவின் உரிபோர்த்தான் கடம்பூர்க் கரக்கோயில்
மைம்மான மணிகண்டன் மலரடியைப் புகழ்நாவே.
கொய்ம்-மா-நன்மலர் தூவிக் கும்பிட்ட அடியார்கள் இம்-மாயப்-பிறவி அற இனிது-அருளும் எம்பெருமான் - கொய்த அழகிய நல்ல மலர்களைத் தூவி வணங்கிய பக்தர்கள் இந்த மாயப்பிறவிகள் தீரும்படி இனிதே அருளும் எம்பெருமான்;
கைம்மாவின் உரி போர்த்தான் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கைம்மா - யானை); (உரி - தோல்);
கடம்பூர்க் கரக்கோயில் - கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற;
மைம்-மான மணிகண்டன் மலரடியைப் புகழ் நாவே - கரிய பெருமையுடைய மணி அணிந்த கண்டனது மலர்ப்பாதத்தை, நாவே நீ புகழ்வாயாக; (மை - கருநிறம்) (மானம் - பெருமை); (சுந்தரர் தேவாரம் - 7.38.6 - "மைம்மான மணிநீல கண்டத்தெம் பெருமான்");
7)
குங்கிலியக் கலயருக்குக் குபேரனது செல்வமருள்
சங்கரன்முன் ஒருகணையால் தடமதில்மூன் றெய்தபிரான்
கங்குலினில் நடமாடி கடம்பூர்க் கரக்கோயில்
பொங்கரவ அரைநாணன் பொன்னடியைப் புகழ்நாவே.
குங்கிலியக் கலயருக்குக் குபேரனது செல்வம் அருள் சங்கரன் - திருக்கடவூரில் குங்கிலியக் கலயருக்குக் குபேரனது பெருஞ்செல்வத்தை அருளிய சங்கரன்; (பெரியபுராணம் - குங்கிலியக் கலயர் புராணம் - 12.11.14 - "அன்பர் அங்கிருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன் தன் பெருநிதியம் தூர்த்து .... மன்பெரும் செல்வமாக்கி வைத்தனன் மனையில் நீட");
முன் ஒரு கணையால் தடமதில் மூன்று எய்த பிரான் - முன்பு ஓர் அம்பால் பெரிய முப்புரங்களையும் எய்த பெருமான்; (தடம் - பெரிய);
கங்குலினில் நடமாடி - இரவில் கூத்தாடுபவன்; (கங்குல் - இரவு); (சம்பந்தர் தேவாரம் - 1.73.11 - "கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானை");
கடம்பூர்க் கரக்கோயில் - கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற;
பொங்கு-அரவ அரைநாணன் - சீறுகின்ற பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;
பொன்னடியைப் புகழ் நாவே - அப்பெருமானது பொன் போன்ற திருவடியை, நாவே நீ புகழ்வாயாக;
8)
மலைவீச முயன்றவன்றன் மணிமுடிகள் பத்தடர்த்தான்
வலைவீசும் அதிபத்தர் வானுறைய அருள்செய்தான்
கலைமான்கை ஏந்தியவன் கடம்பூர்க் கரக்கோயில்
அலைசேர்செஞ் சடையண்ணல் அடியிணையைப் புகழ்நாவே.
மலை வீச முயன்றவன்-தன் மணிமுடிகள் பத்து அடர்த்தான் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கியவன்; (அடர்த்தல் - நசுக்குதல்);
வலைவீசும் அதிபத்தர் வான் உறைய அருள்செய்தான் - (நாகப்பட்டினத்தில் வாழ்ந்த) மீனவரான அதிபத்த நாயனார் சிவலோகத்தில் இனிது உறைய அருள்புரிந்தவன்;
கலைமான் கை ஏந்தியவன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;
கடம்பூர்க் கரக்கோயில் - கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற;
அலை சேர் செஞ்சடை அண்ணல் அடியிணையைப் புகழ் நாவே - சிவந்த சடையில் கங்கையைத் தாங்கும் பெருமானது இருதிருவடிகளை, நாவே நீ புகழ்வாயாக;
9)
மண்ணகழ்ந்த மாலோடு மலரவனும் காணொண்ணா
வண்ணமன்று வளர்சோதி வடிவாகி நின்றசிவன்
கண்ணிலங்கு(ம்) நெற்றியினான் கடம்பூர்க் கரக்கோயில்
அண்ணலங்கை எரியேந்தி அடியிணையைப் புகழ்நாவே.
மண் அகழ்ந்த மாலோடு மலரவனும் காணொண்ணா வண்ணம் அன்று வளர்சோதி வடிவு ஆகி நின்ற சிவன் - நிலத்தை அகழ்ந்து தேடிய திருமாலாலும் பூமேல் உறையும் பிரமனாலும் காண ஒண்ணாதபடி முன்பு எல்லையின்றி நீண்ட ஜோதி வடிவில் நின்ற சிவன்; (காணொண்ணா - காண ஒண்ணாத; தொகுத்தல் விகாரம்);
கண் இலங்கும் நெற்றியினான் - நெற்றிக்கண்ணன்;
கடம்பூர்க் கரக்கோயில் - கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற;
அண்ணல் அங்கை எரி ஏந்தி அடியிணையைப் புகழ் நாவே - கையில் தீயை ஏந்தியவனான அப்பெருமானது இருதிருவடிகளை, நாவே நீ புகழ்வாயாக; (ஏந்தி - ஏந்தியவன்);
10)
ஓர்நாளும் உண்மைதனை உரையார்தம் சொல்லொழிந்து
நார்மேவு நெஞ்சோடு நாடியவர் நலிவறுப்பான்
கார்மேவு கண்டத்தன் கடம்பூர்க் கரக்கோயில்
சீர்மேவு சிவபெருமான் திருவடியைப் புகழ்நாவே.
ஓர் நாளும் உண்மைதனை உரையார்தம் சொல் ஒழிந்து - ஒருநாளும் உண்மையைப் பேசாதவர்கள் சொல்லும் பொய்களை நீங்கி;
நார் மேவு நெஞ்சோடு நாடியவர் நலிவு அறுப்பான் - அன்பு பொருந்திய நெஞ்சோடு விரும்பி வழிபடும் அன்பர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (நார் - அன்பு); (மேவுதல் - பொருந்துதல்); (நலிவு - துன்பம்); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்);
கார் மேவு கண்டத்தன் - கருமை பொருந்திய கண்டத்தை உடையவன்;
கடம்பூர்க் கரக்கோயில் - கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற;
சீர் மேவு சிவபெருமான் திருவடியைப் புகழ் நாவே - அழகும் நன்மையும் பொருந்திய சிவபெருமானது திருவடியை, நாவே நீ புகழ்வாயாக; (சீர் - அழகு; நன்மை; செல்வம்);
11)
ஒருமணிபோல் செம்மேனி உடையானே ஓலமென்ற
பருமணியார் முடித்தேவர் பலர்க்கிரங்கி அருள்செய்த
கருமணியார் கண்டத்தன் கடம்பூர்க் கரக்கோயில்
அருமணியின் அடிபரவ அற்றொழியும் அருவினையே.
"ஒரு மணிபோல் செம்மேனி உடையானே, ஓலம்" என்ற - "ஒப்பற்ற பவளம் போலச் சிவந்த திருமேனியை உடையவனே! ஓலம்" என்று இறைஞ்சிய;
பருமணி ஆர் முடித் தேவர் பலர்க்கு இரங்கி அருள்செய்த - பருத்த மணிகள் பொருந்திய கிரீடங்களை அணிந்த தேவர்கள் பலருக்கும் இரங்கி அருளிய;
கருமணி ஆர் கண்டத்தன் - கரிய மணி போல் திகழும் கண்டத்தை உடையவன்;
கடம்பூர்க் கரக்கோயில் - கடம்பூரில் உள்ள கரக்கோயிலில் உறைகின்ற;
அருமணியின் அடி பரவ அற்று-ஒழியும் அருவினையே - அரிய மணி போன்ற சிவபெருமானது திருவடியைப் போற்றிப் புகழ்ந்தால் நம் தீர்த்தற்கு அரிய வினையெல்லாம் தீர்ந்தொழியும்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்); (அற்று ஒழியும் - ஒருபொருட்பன்மொழி);
வி. சுப்பிரமணியன்
-----------