Saturday, September 3, 2016

03.03-91 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
91) உடை
--------------
உடைதலையில் உண்பலி ஏற்கின்ற முக்கட்
கடவுளுக்குத் தோலே உடை.



உடைதலை - உடைந்த கபாலம்;
முக்கட் கடவுள் - முக்கண்ணன் ஆகிய சிவன்;
தோலே உடை - தோலே ஆடை ஆகும்;



2009-06-22
92) செல்
--------------
செல்லரித்த ஏடாகித் தேகம் விழுமுன்னே
தில்லைச்சிற் றம்பலம் செல்.



செல் - 1) கறையான்; 2) போ;



93) நேர்
-----------
நேர்வழிச் செல்லாத நீசருக் கெட்டாத
வார்சடையா னுக்குண்டோ நேர்!



பதம் பிரித்து:
நேர்வழிச் செல்லாத நீசருக்கு எட்டாத
வார்சடையானுக்கு உண்டோ நேர்!


நேர் வழி - சரியான பாதை;
வார் சடையான் - நீண்ட சடையை உடைய சிவன்;
உண்டோ நேர் - இணை உண்டா? (நேர் - ஒப்பு);



94) பார்
-----------
பார்வணங்கும் முக்கட் பரன்புரியும் ஆடலைச்
சீர்மிகுசிற் றம்பலம்போய்ப் பார்.



பார் - 1) உலகத்தவர்கள்; 2) காண்;
முக்கட் பரன் - முக்கண் உடைய பரம்பொருளான சிவபெருமான்;
சீர் - செல்வம்; நன்மை; அழகு;



95) ஆர்
-----------
ஆரமுதாய் அன்பர்க்குத் தித்திக்கும் ஐயனுக்குக்
காரடை கண்டற்கொப் பார்?



பதம் பிரித்து:
ஆரமுது ஆய் அன்பர்க்குத் தித்திக்கும் ஐயனுக்குக்,
கார் அடை கண்டற்கு ஒப்பு ஆர்?


ஆர் - 1) அரிய; 2) யார்;
ஆரமுதாய் - ஆர் அமுது ஆய் - அரிய அமுது ஆகி;
கார் அடை கண்டற்கு - கருமை அடைந்த கழுத்தை உடையவனுக்கு; (கண்டற்கு - கண்டன் + கு - கண்டனுக்கு);
ஒப்பு ஆர் - யார் சமம்?



96) பலி (updated 2015-03-16)
------------
பலியிடம் யாசித்தான் பன்றியாய்த் தேடு
புலியதளற் கோட்டிற் பலி.



பதம் பிரித்து:
பலியிடம் யாசித்தான் பன்றி ஆய்த் தேடு
புலி அதளற்கு ஓட்டில் பலி.


பலி - 1) மஹாபலி சக்கரவர்த்தி; 2) பிச்சை;
பலியிடம் யாசித்தான் பன்றி ஆய்த் தேடு - மஹாபலியிடம் சென்று மண் இரந்த திருமால் பன்றி ஆகித் தேடிய;
புலியதளற்கு - புலி+அதளன்+கு - புலித்தோல் அணிந்த சிவபெருமானுக்கு; (அதள் - தோல்);
(அப்பர் தேவாரம் - 4.80.2 - "பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன்");
ஓட்டில் பலி - பிரமனது மண்டையோட்டில் பிச்சை;



97) கலி
------------
கலிமதுரை ஆலவாய் கண்டு தொழுதால்
நலியாதே நம்மைக் கலி.



கலி - 1) ஒலி; ஆரவாரம்; 2) துன்பம்; தரித்திரம்;
மதுரை ஆலவாய் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை; (3.108.11 - "கூட லாலவாய்க் கோனை விடைகொண்டு" - கூடல் ஆலவாய் - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை);
நலியாது - துன்புறுத்தாது; வருத்தாது;



98) மாடு (updated 2015-01-20)
-------
மாடுவரு கூற்றுதைத்து மாணிக் கருளரன்சீர்
பாடுமடி யார்க்குவரும் மாடு.



பதம் பிரித்து:
மாடு வரு-கூற்று உதைத்து மாணிக்கு அருள் அரன் சீர்
பாடும் அடியார்க்கு வரும் மாடு.


மாடு - 1) பக்கம்; அருகு; 2) செல்வம்;
கூற்று - யமன்;
மாணி - மார்க்கண்டேயர்;
சீர் - புகழ்;



99) காய்
------------
காய்விடம்உண் கண்டனைப் போற்றார் கனியிருப்பப்
போய்க்கவர்வார் கைக்கின்ற காய்.



காய் விடம் - எரிக்கும்/அழிக்கும் ஆலகால விஷம்; (காய்தல் - எரித்தல்/அழித்தல்);
கைக்கின்ற காய் - கசக்கின்ற காய்;



100) பற்று
--------------
பற்றுவிட வேண்டினெஞ்சே பால்வெண் மதிசூடும்
கொற்றவன் தாளிணையைப் பற்று.



பதம் பிரித்து:
பற்று விடவேண்டில் நெஞ்சே, பால் வெண் மதி சூடும்
கொற்றவன் தாள் இணையைப் பற்று.


பற்று - 1) அபிமானம் (attachment); 2) பிடி (to grasp; to hold);
பால் வெண்மதி - பால்போலும் வெண்ணிறத்தை உடைய திங்கள்;
கொற்றவன் - அரசன்;
தாள் இணை - இரு திருவடிகள்;



101) கேள்
---------------
கேளிது நெஞ்சமே கீற்றுமதி சூடிஎண்
தோளிறையை அன்றியுண்டோ கேள்?



பதம் பிரித்து:
கேள் இது, நெஞ்சமே; கீற்று-மதி சூடி, எண்-
தோள் இறையை அன்றி உண்டோ கேள்?
கேள் - 1) செவியால் கேட்பது; 2) உறவு;   இறை - இறைவன்;



102) புகார்
---------------
புகார்ச்சாய்க்காட் டீசனன்பர் போற்றியுய்வர்; நெஞ்சு
நெகார்போல் கருப்பைப் புகார்.



பதம் பிரித்து:
புகார்ச் சாய்க்காட்டு ஈசன் அன்பர் போற்றி உய்வர்; நெஞ்சு
நெகார்போல் கருப்பைப் புகார்.


புகார் - 1) காவிரிப்பூம் பட்டினம் என்ற ஊர்; 2) புகமாட்டார்;
சாய்க்காடு - பூம்புகார் நகரில் உள்ள திருச்சாய்க்காடு என்ற தலம்;
நெஞ்சு நெகார் - மனம் உருகாதவர்; (நெகுதல் - இளகுதல்; உருகுதல்; கரைதல்)
கருப்பைப் புகுதல் - கர்ப்பப்பையில் புகுதல் - மீண்டும் பிறவி அடைதல்;


(சம்பந்தர் தேவாரம் - 2.41.1 - "மண்புகார் வான்புகுவர் ... தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே")
திருவாசகம் - அச்சப் பத்து - 7 - "தகைவிலாப் பழியும் அஞ்சேன் .... அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே")



2009-07-01
103) தாழ்
--------------
தாழ்அப்பர் தண்தமிழ்கேட் டீசன் திறந்தான்காச்
சூழ்அம் மறைக்காட்டில் தாழ்.



பதம் பிரித்து:
தாழ் அப்பர் தண்தமிழ் கேட்டு ஈசன் திறந்தான் காச்
சூழ் அம் மறைக்காட்டில் தாழ்.


* திருமறைக்காட்டில் மறைக்கதவம் தாழ் திறக்க வேண்டித் திருநாவுக்கரசர் பாடியதைச் சுட்டியது.


தாழ் - 1) தாழ்தல் - வணங்குதல்; 2) தாழ்ப்பாள்;
அப்பர் - திருநாவுக்கரசர்;
தண் தமிழ் - குளிர்ந்த தமிழாகிய தேவாரம்;
கா - சோலை;
அம் - அழகு;
காச் சூழ் அம் மறைக்காடு - சோலைகள் சூழ்ந்த அழகிய வேதாரண்யம்;
(இலக்கணக் குறிப்பு - ஓரெழுத்துச் சொல் பின் வல்லொற்று மிகும்)



2009-07-02
104) கரு
-----------
கருநஞ்சை உண்டமுக் கண்ணனைப் போற்றி
இருபுகாய் இன்னோர் கரு.



கரு - 1) கரிய; 2) கருப்பம்; பிறவி;
முக்கண்ணனைப் போற்றி இரு - சிவபெருமானை வணங்கி வாழ்;
புகாய் இன்னோர் கரு - இனி ஒரு பிறவியில் புக மாட்டாய்;



2009-07-02
105) விடாய்
-----------------
விடாய்மிகும் நெஞ்சுதந்து, வேணியனே, கேடு
படாஉன்தாள் எண்ண விடாய்.



விடாய் - 1) தாகம்; ஆசை; 2) விடமாட்டாய்;
வேணியன் - சடையினன்;
கேடுபடா - அழிவற்ற;


(அப்பர் தேவாரம் - 4.112.4 - "நின்னையெப் போது நினையவொட் டாய்நீ..." - இறைவனே! உன்னை எப்போதும் நினைத்திருக்குமாறு செய்ய நீ இசைகின்றாய் அல்லை.)
(திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.7 - "சட்டோ நினைக்க மனத்தமுதாம் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை...")



106) கா
-------------
காவினைசெய் ஈசனுக்குக் கைவினை செய்துவளர்,
பூவினை நல்குகிற கா.



கா - 1) காத்தல்; (Preservation, protection; பாதுகாப்பு); 2) நந்தவனம்; சோலை;
கா வினை செய் ஈசனுக்கு - காக்கும் தொழிலைச் செய்யும் சிவபெருமானுக்கு;
கைவினை செய்து - கிரியைகளாகிய சிவப்பணிகளைச் செய்து;
வளர் பூவினை நல்குகிற கா - மலர்களை அளிக்கும் நந்தவனத்தை வளர்ப்பாயாக;
(சம்பந்தர் தேவாரம் - 1.116.2: "காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்...." - நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு ....)



107) தீ
-----------
தீவினையைத் தீர்க்கும் சிவனார் கரத்திலும்
தீநெற்றிக் கண்ணிலும் தீ.



தீ - 1) தீமை; (தீ வினை - பாவம்); 2) நெருப்பு;



108) போர்
---------------
போர்விடையான் பொற்றாள் தொழநீறாம் ஈசனருட்
பார்வையினால் நம்பாவப் போர்.



பதம் பிரித்து:
போர்விடையான் பொற்றாள் தொழ, நீறு ஆம், ஈசன் அருட்
பார்வையினால், நம் பாவப் போர்.
போர் - 1) சண்டை (battle; war); 2) குவியல் (Heap; accumulation);
போர்விடை - போர்செய்யும் தன்மையுடைய இடபம்; வீரம் மிகுந்த எருது;
நீறாம் - நீறு ஆம் - சாம்பல் ஆகும்;
(திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.16 - "திண்போர் விடையான்");
(அப்பர் தேவாரம் - 5.47.7 - "மூக்கு வாய்செவி ... ஆப்பை அவிழ்த்து அருள் நோக்குவான்...")



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

03.03-81 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
81) அளி
-------------
அளியென் றிரக்கின் அரன்அருள்வான்; என்றும்
களிக்கநெஞ்சே ஈசற் களி.



பதம் பிரித்து:
"அளி" என்று இரக்கின் அரன் அருள்வான்; என்றும்
களிக்க, நெஞ்சே, ஈசற்கு அளி.


அளி - 1) அளித்தல் - கொடுத்தல்; காத்தல்; 2) அளிதல் - குழைதல்; கனிதல்; பிரியமாயிருத்தல்;
அளி என்று இரக்கின் - அருள்புரியாய் என்று வேண்டினால்;
ஈசற்கு அளி - ஈசனுக்கு அன்புசெய்;



82) நிழல்
-------------
நிழல்போல நின்றருள்வான் நெஞ்சமே சேர்வாய்
மழவிடையான் பாத நிழல்.



நிழல் - 1) சாயை (Shade, shadow); 2) தானம் (Place);
மழ - இளமை;
நிழல்போல நின்றருள்வான் - (அடியவரை அவர்தம்) நிழலைப் போலப் பிரியாமல் இருந்து காத்தருள்வான்; (-- அல்லது -- சுட்டெரிக்கும் வினை நம்மைத் தாக்காமல் அதைத் தடுக்கும் நிழல் போல நம்மைக் காப்பான்);
நெஞ்சமே சேர்வாய் மழவிடையான் பாத நிழல் - (அதனால்) மனமே, இளைய ஏற்றின்மீது வரும் சிவபெருமான் திருவடித் தலத்தை அடைவாய்.


(11.32.9 - கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - "மாயவன் .... தாயவன் தன்பொற் கழலென் தலைமறை நன்னிழலே." - வெயிலைத் தடுத்துத் தலையைக் காக்கின்ற நிழல் போல, வினையைத் தடுத்துக் காக்கும் காப்பு );



83) ஏறு
-----------
ஏறுடையான் மார்பில்வெண் ணீறுடையான், ஏழையொரு
கூறுடையான், வானவர் ஏறு.



பதம் பிரித்து:
ஏறு உடையான்; மார்பில் வெண்ணீறு உடையான்; ஏழை ஒரு
கூறு உடையான்; வானவர் ஏறு.


ஏறு - 1) எருது; 2) ஆண்சிங்கம்;
இடப வாகனனும், மார்பில் வெண் திருநீறு பூசியவனும் உமை ஒரு பங்கினனும் ஆன சிவபெருமான். தேவர்களுக்குத் தலைமை உடைய ஆண்சிங்கம் போன்றவன்;
அப்பர் தேவாரம் -6.47.1 - "திருவேஎன் செல்வமே ... ஆவடுதண் துறைஉறையும் அமரர் ஏறே".



84) அன்று
---------------
அன்றுமதில் மூன்றெரித்த அண்ணலடி போற்றாமல்
சென்றதினம் நல்லதினம் அன்று.



அன்று - 1) அந்நாள் (That day, then); 2) அல்லாமை (Reciprocal negation or difference, negation of identity);
அன்று மதில் மூன்று எரித்த அண்ணல் அடி போற்றாமல் சென்ற தினம் - முன்னர் முப்புரங்களை எரித்த ஈசனுடைய திருவடியை வழிபடாது கழித்த நாள்;
நல்லதினம் அன்று - நல்ல நாள் ஆகாது;
(சுந்தரர் தேவாரம் - 7.48.2 -
"இட்டன் உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்டநாள் கெட்ட நாள் இவை என்றலால் கருதேன் .......")



85) இணை
----------------
இணையில்லா இன்பம்வந் தெய்திட நெஞ்சே
அணைவாய் அரன்தாள் இணை.



இணை - 1) ஒப்பு; 2) இரட்டை (pair);
இன்பம் வந்து எய்திட - இன்பம் நம்மை வந்து சேர்ந்திட;
அணைதல் - சார்தல் (To approach, come near);
தாள் இணை - இரு திருவடிகள்;



2009-06-09
86) மெய்
-------------
மெய்ப்பொருளாம் வெள்விடையான் கோயில் தனைவலம்
செய்தேத்தப் பெற்றாய்இம் மெய்.



மெய் - 1) உண்மை; 2) உடல்;
வெள் விடையான் - வெள்ளை எருதின் மேல் வரும் சிவபெருமான்;
(அப்பர் தேவாரம் - 4.9.8 - திருஅங்கமாலை -
"ஆக்கை யால்பயன்என் - அரன் கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றிஎன் னாதஇவ் வாக்கை யால்பயன்என்.")



2009-06-10
87) களை
-------------
களைபொலியத் திங்களணி கண்ணுதலான் அன்பால்
தளையாம் வினையைக் களை.



களை - 1) அழகு; 2) "நீக்கு" என்ற ஏவல் வினை; (களைதல் - நீக்குதல்);
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
தளை - கட்டு; பந்தம்; விலங்கு;



2009-06-12
88) புரி
----------
புரிசடைப் புண்ணியன் பொற்றாள் இணைக்குப்
பிரியமாய்த் தொண்டு புரி.



புரி சடை - திரண்டு சுருண்ட சடை (tangled, matted locks); (புரிதல் - To be twisted; to curl; முறுக்குக்கொள்ளுதல்.);
பொற்றாள் - பொன்னடி;
தொண்டு புரி - பணி செய்;



2009-06-16
89) செலவு
---------------
செலவுவர வென்றுசிவன் சேவடிபோற் றார்க்குப்
பலனற்ற வாழ்க்கைச் செலவு.



பதம் பிரித்து:
செலவு வரவு என்று, சிவன் சேவடி போற்றார்க்குப்
பலன் அற்ற வாழ்க்கைச் செலவு.


செலவு வரவு - 1) போவதும் வருவதும் - இறப்பும் பிறப்பும்; 2) வருவாய், பணவிரயம் (income and expense);
வாழ்க்கைச் செலவு - வாழ்க்கைப் பயணம்; (செலவு - பயணம் (journey));
பலன் - பயன்;


(அப்பர் தேவாரம் - 6.95.6 -
திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
.. தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
.. உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
.. அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
.. பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
)



2009-06-21
90) வழி
---------------
வழிகண்ணீ ரோடு மகாதேவன் தாளை
வழிபடலே உய்யும் வழி.



வழிகண்ணீர் - வினைத்தொகை - வழிகின்ற கண்ணீர்;
உய்யும் வழி - நற்கதி பெறும் உபாயம்;



அன்போடு,

வி. சுப்பிரமணியன்

03.03-71 – அடியும் முடியும் - (பொது)

03.03 – அடியும் முடியும் - (பொது)



2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
2009-04-17
71) பதம்
-----------
பதம்தூக்கி நட்டம் பயிலிறையை நெஞ்சில்
நிதம்போற்ற ஆம்நற் பதம்.



பதம் - 1) கால்; பாதம்; 2) இடம்; நிலை; ('சிவபதம்')
நட்டம் பயில்தல் - நடம் ஆடுதல்;
இறை - இறைவன்;
ஆம் - ஆகும் - கிட்டும்;



72) அலை
--------------
அலைமனத்தைச் செற்றார் அகத்துறையும் ஐயன்
தலைமிசைக் கங்கை அலை.



அலைமனத்தைச் செற்றார் அகத்து உறையும் - அலைகின்ற மனத்தை வென்றவர்கள் நெஞ்சத்தில் உறைகின்ற; (செறுதல் - அடக்குதல்; வெல்லுதல்);
ஐயன் தலைமிசைக் கங்கை அலை - தலைவன் தலைமேல் கங்கையின் அலை;



73) பதி
-------------
பதியைப் பரனைப் படர்சடை தன்னில்
நதியனை நெஞ்சில் பதி.



பதி - கடவுள்; தலைவன்;
பரன் - மேலானவன்;
படர்சடை தன்னில் நதியனை - படரும் சடையில் கங்கையை உடையவனை;
பதித்தல் - நாட்டுதல்;

74) நிலவு
--------------
நிலவும் புகழை உடைய நிருத்தன்
தலைமேல் ஒளிரும் நிலவு.



நிலவுதல் - நிலைத்திருத்தல் (To be permanent, fixed);
நிருத்தன் - நாட்டியம் ஆடுபவன்;
நிலவு - நிலா; திங்கள்;



75) இறந்து
---------------
இறந்துபிறக் கின்ற இடர்தீர்க்கும் முக்கண்
இறைவனுள்ளான் சொல்லை இறந்து.



இறத்தல் - 1. சாதல்; 2. கடத்தல் (To go beyond, transcend);
(திருவாசகம் - குயிற்பத்து - "கீதம் இனிய குயிலே ..... சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை ......" - அவனது ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்குளது? என்று சொல்லப்புகின், அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற பழமையுடையது எனப்படும்.)



2009-05-12
76) உளன்
---------------
உளன்அன்றும் இன்றுமென்றும், ஒண்மதி சூடி,
களங்கமிலாத் தொண்டர் உளன்.



உளன் - 1) உள்ளவன் - இருப்பவன்; 2) உள்ளத்தில் இருப்பவன்; (உள் - உள்ளம்);
ஒண் மதி சூடி - ஒளியுடைய திங்களைச் சூடியவன்;



2009-05-23
77) வழக்கு
-----------------
வழக்காடி ஆள்இறையைப் பித்தனென்று வாழ்த்தி
அழைப்ப துலக வழக்கு.



வழக்கு - 1) வாதம் (Dispute); 2) வழக்கம் (Usage, practice; habit, custom);
வழக்காடி ஆள் இறை - அடிமை என்று வாதம் செய்து சுந்தரரை ஆட்கொண்ட சிவபெருமான்;
பித்தன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;
வாழ்த்துதல் - துதித்தல்;
உலக வழக்கு - உலக வழக்கம்;



78) பிழை
-------------
பிழைசெய் துழலும் மனமே பெருமான்
கழலை வழுத்திப் பிழை.



பிழை - 1) குற்றம்; 2) உய்வு பெறு; வாழ்;
உழல்தல் - அலைதல்; நிலைகெடுதல்;
கழல் - கழல் அணிந்த திருவடி;
வழுத்துதல் - துதித்தல்;



79) குழை
--------------
குழையொரு காதில் அணியும் குழகன்
கழல்நினைந்து நெஞ்சே குழை;



குழை - 1) காதில் அணியும் குழை; 2) குழைதல் - உருகுதல் இளகுதல்;
கழல் - திருவடி;
குழகன் - இளைஞன்;



2009-05-26
80) அணை
--------------
அணையா விளக்கே அருள்என்று பாடிப்
புணையாம் அரன்தாள் அணை.



அணைதல் - 1) அவிதல் (To be extinguished); 2) சார்தல் (To approach, come near);
புணை - தெப்பம்; படகு;
(சுந்தரர் தேவாரம் - 7.21.1 - "நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன் ..." - அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே)



அன்போடு,

வி. சுப்பிரமணியன்