Sunday, September 20, 2026

T.248 - வழுவூர் - நஞ்சென எழுநசைகள்

2020-08-28

T.248 - வழுவூர் - நஞ்சென எழுநசைகள்

-----------

(வண்ணவிருத்தம்;

தந்தன தனதனன தாத்தன

தந்தன தனதனன தாத்தன

தந்தன தனதனன தாத்தன .. தனதான)

(Similar to - சஞ்சல சரித பரநாட்டர்கள் - திருப்புகழ் - கருவூர் - but with slightly different seer-split of the same syllabic pattern sequence)


நஞ்சென எழுநசைகள் ஆர்த்திள

.. .. நங்கையர் மயலதனில் வீழ்த்திட

.. .. நன்றென உரைசெயல்கள் ஆற்றிட .. நினையாமல்

.. நந்திட விரையுமடி யேற்கணி

.. .. நந்தன வனமலர்க ளாற்றின(ம்)

.. .. நம்பியு னடிபரவி ஏத்திடு(ம்) .. மனமீயாய்

குஞ்சரம் உரிவலவ பூத்திரள்

.. .. கொண்டுனை வழிபடுநி லாப்புனை

.. .. குஞ்சியின் மிசையரவும் ஏற்றிய .. திரிசூலா

.. கொண்டலின் உயரு(ம்)முடி காட்டிடு

.. .. குன்றெடு மடையன்வலி தீர்த்தருள்

.. .. கொண்டொரு படைநல்கிய கீர்த்திமை .. உடையானே

அஞ்சிய சுரரதிடர் தீர்த்திட

.. .. அன்றினர் எயில்களெரி மூட்டியொர்

.. .. அன்பரை முடுகியடை கூற்றுதை .. கழலானே

.. அன்றரி பிரமனிகல் வார்த்தைகள்

.. .. நின்றிட உனதடியை வாழ்த்திட

.. .. அங்கியின் உருவிலெழு மூத்தவ .. மழுவாளா

வஞ்சிநு ணிடையுடைய பார்ப்பதி

.. .. மங்கையை மகிழ்நுதலில் நேத்திர

.. .. வன்புலி அதளரையில் வீக்கிய .. விறலானே

.. மஞ்சடை பொழிலிலிசை ஆர்த்தடை

.. .. வண்டின(ம்) மகிழுமிட மாய்த்திகழ்

.. .. வண்பதி புரிசைவழு வூர்ச்சிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

நஞ்சு என எழு-நசைகள் ஆர்த்து இள-

.. .. நங்கையர் மயலதனில் வீழ்த்திட,

.. .. நன்று என உரை-செயல்கள் ஆற்றிட .. நினையாமல்,

.. நந்திட விரையும் அடியேற்கு அணி

.. .. நந்தனவன மலர்களால் தின(ம்)

.. .. நம்பி உன் அடி-பரவி ஏத்திடு(ம்) .. மனம் ஈயாய்;

குஞ்சரம் உரி-வலவ; பூத்திரள்

.. .. கொண்டு உனை வழிபடு நிலாப் புனை

.. .. குஞ்சியின்மிசை அரவும் ஏற்றிய .. திரிசூலா;

.. கொண்டலின் உயரு(ம்)முடி காட்டிடு

.. .. குன்று எடு மடையன் வலி தீர்த்து, அருள்

.. .. கொண்டு ஒரு படை நல்கிய கீர்த்திமை .. உடையானே;

அஞ்சிய சுரரது இடர் தீர்த்திட,

.. .. அன்றினர் எயில்கள் எரி மூட்டி, ஒர்

.. .. அன்பரை முடுகி அடை கூற்று உதை .. கழலானே;

.. அன்று அரி பிரமன் இகல் வார்த்தைகள்

.. .. நின்றிட, உனது அடியை வாழ்த்திட,

.. .. அங்கியின் உருவில் எழு மூத்தவ; .. மழுவாளா;

வஞ்சி-நுண் இடையுடைய பார்ப்பதி

.. .. மங்கையை மகிழ், நுதலில் நேத்திர;

.. .. வன்-புலி அதள் அரையில் வீக்கிய .. விறலானே;

.. மஞ்சு அடை பொழிலில் இசை ஆர்த்து அடை

.. .. வண்டின(ம்) மகிழும் இடமாய்த் திகழ்

.. .. வண்-பதி புரிசை-வழுவூர்ச் சிவ .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

ஞ்சு என எழு நசைகள் ஆர்த்து இள-நங்கையர் மயல் அதனில் வீழ்த்திட - விஷம் போல எழுகின்ற ஆசைகள் கட்டி இளம்பெண்கள்மேல் மயக்கம் என்பதில் தள்ள; (நசை - ஆசை); (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்); (மயல் - மயக்கம்);

நன்று என உரை செயல்கள் ஆற்றிட நினையாமல் - நற்செயல் என்று சொல்லப்படும் செயல்களைச் செய்ய எண்ணாமல்;

நந்திட விரையும் அடியேற்கு - அழிய விரையும் எனக்கு; (நந்துதல் - கெடுதல்; சாதல்);

அணி நந்தனவன மலர்களால் தின(ம்) நம்பி உன் அடிபரவி ஏத்திடு(ம்) மனம் ஈயாய் - அழகிய பூந்தோட்டத்து மலர்களால் தினமும் விரும்பி உன் திருவடியை வணங்கும் மனத்தைத் தந்து அருள்வாயாக; (அணி - அழகு); (நந்தனவனம் - பூந்தோட்டம்); (நம்புதல் - விரும்புதல்); (பரவுதல் - புகழ்தல்; பாடுதல்; துதித்தல்); (ஏத்துதல் - துதித்தல்);

குஞ்சரம் உரி வலவ - யானையை உரித்த வல்லவனே; (குஞ்சரம் - ஆனை); (உரித்தல் - தோலை உரித்தல்); (வலவன் - வல்லவன்);

பூத்திரள்கொண்டு உனை வழிபடு நிலாப் புனை குஞ்சியின்மிசை அரவும் ஏற்றிய திரிசூலா - பல பூக்களால் உன்னை வழிபாடு செய்த திங்களைப் புனைந்த திருமுடியின்மேல் பாம்பையும் வைத்த சூலபாணியே; (குஞ்சி - சென்னி);

கொண்டலின் உயரு(ம்) முடி காட்டிடு குன்று எடு மடையன் வலி தீர்த்து, அருள்கொண்டு ஒரு படை நல்கிய கீர்த்திமை உடையானே - மேகங்களினும் உயர்கின்ற சிகரத்தை உடைய கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த அறிவீனனான இராவணனது வலிமையை அழித்துப், பின் அவனுக்கு இரங்கி ஒப்பற்ற சந்திரஹாஸம் என்ற வாளையும் வரமருளிய புகழை உடையவனே; (கொண்டல் - மேகம்); (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு); (வலி - வலிமை); (படை - ஆயுதம்; இங்கே, சந்திரஹாஸம் என்ற வாள்); (கீர்த்திமை - புகழ்);

அஞ்சிய சுரரது இடர் தீர்த்திட, அன்றினர் எயில்கள் எரி மூட்டி - அச்சம்கொண்ட தேவர்களது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டுப், பகைத்த அசுரர்களது முப்புரங்களை எரித்து; (அன்றினர் - பகைவர்); (எயில் - கோட்டை);

ஒர் அன்பரை முடுகிடை கூற்றுதை கழலானே - ஒப்பற்ற பக்தரான மார்க்கண்டேயரை விரைந்து நெருங்கிய காலனைத் திருவடியால் உதைத்தவனே; (ஒர் - ஓர் - ஒப்பற்ற; குறுக்கல் விகாரம்); (முடுகுதல் - விரைந்துசெல்லுதல்; நெருங்கிவருதல்);

அன்று அரி பிரமன் இகல் வார்த்தைகள் நின்றிட, உனது அடியை வாழ்த்திட, அங்கியின் உருவில் எழு மூத்தவ - முற்காலத்தில் திருமால் பிரமன் இருவரும் தம்மில் மாறுபாடுகொண்டு பேசிய வாது ஒழியும்படியும், உன் திருவடியை வணங்கும்படியும், (அவர்களால் அடிமுடி அறிய ஒண்ணாத) ஜோதி வடிவில் உயர்ந்த மேலோனே; (இகல்தல் - மாறுபடுதல்); (நிற்றல் - ஒழிதல்); (அங்கி - நெருப்பு); (மூத்தவன் - மேலோன்);

மழுவாளா - மழுவை ஏந்தியவனே;

வஞ்சி நுண்- டையுடைய பார்ப்பதி மங்கையை மகிழ், நுதலில் நேத்திர - கொடி போன்ற சிற்றிடையை உடைய பார்வதியை விரும்பும் நெற்றிக்கண்ணனே; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (பார்ப்பதி - பார்வதி); (மகிழ்தல் - விரும்புதல்); (நுதல் - நெற்றி); (பார்ப்பதி மங்கை - உமைமங்கை என்று வருவதுபோல்); (அப்பர் தேவாரம் - 5.9.7 - "உருவினாள் உமைமங்கையொர் பாகமாய் மருவினாய்");

வன்-புலி-அதள் அரையில் வீக்கிய விறலானே - வலிய புலியின் தோலை அரையில் ஆடையாகக் கட்டிய பெருமையுடையவனே; (வன்மை - வலிமை); (அதள் - தோல்); (வீக்குதல் - கட்டுதல்); (விறல் - வெற்றி; வீரம்; பெருமை);

மஞ்சு அடை பொழிலில் இசை ஆர்த்து அடை வண்டின(ம்) மகிழும் இடமாய்த் திகழ் வண்-பதி புரிசை வழுவூர்ச் சிவபெருமானே - மேகம் அடையும் சோலையில் இசை பாடி அடையும் வண்டுகள் இன்புறும் இடமாகித் திகழும் வளம் மிக்க தலமும் மதிலால் சூழப்பெற்றதுமான வழுவூரில் உறைகின்ற சிவபெருமானே; (அணி - அழகு); (மஞ்சு - மேகம்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (வண் - வளம்); (புரிசை - மதில்); (சம்பந்தர் தேவாரம் - 2.3.3 - "செழும்புரிசைத் தெளிச்சேரியீர்");


வி. சுப்பிரமணியன்

-----------


No comments:

Post a Comment