Saturday, December 24, 2016

03.04.033 - சிவன் - மேகம் - சிலேடை - 3

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-20

3.4.33 - சிவன் - மேகம் - சிலேடை - 3

-------------------------------------------------------------

வானத்தில் வாழ்ந்தாலும் மண்ணில் வரும்பொழுதோர்

ஏனத்தில் ஏந்துவதும் உண்டுவே றான

உருவத்தில் மின்னற் கொடியிடை யோடு

மருவுரு காட்டுசிவன் மஞ்சு.


சொற்பொருள்:

ஏனம் - பாத்திரம்;

வேறு - 1. பிறிது; / 2. சிறப்புடையது;

கொடியிடை யோடு மருவுரு - 1. கொடி இடை ஓடும் அருவுரு; / 2. கொடியிடையோடு மருவு உரு;

அருவுரு - சிவலிங்கம்;

மருவுதல் - கலந்து இருத்தல்; தோன்றுதல்;

மஞ்சு - மேகம்;


மேகம்:

வானத்தில் வாழ்ந்தாலும் - மேகமாக வானத்தில் இருக்கும்.

மண்ணில் வரும்பொழுது ஓர் ஏனத்தில் ஏந்துவதும் உண்டு வேறு ஆன உருவத்தில் - பூமிக்கு வரும்பொழுது (மேகத்தினின்றும்) மாறுபட்ட (நீர்) வடிவத்தில் பாத்திரத்தில் (மக்கள்) ஏந்துவதும் உண்டு.

மின்னல் கொடி இடை ஓடும் - (மேகத்தின்) நடுவே மின்னல் வீசும்;

(அருவுரு காட்டு சிவன்) -

மஞ்சு - மேகம்;


சிவன்:

வானத்தில் வாழ்ந்தாலும் - சிவலோகத்தில் (உருவமின்றி) இருந்தாலும்,

மண்ணில் வரும்பொழுது ஓர் ஏனத்தில் ஏந்துவதும் உண்டு வேறு ஆன உருவத்தில் - இவ்வுலகில் வரும்போது, வேறு ஒரு வடிவத்தில் (அழகிய பிச்சாடனர் கோலத்தில்) வந்து, ஒரு (மண்டையோடு என்ற) பிச்சைப் பாத்திரத்தில் பிச்சையேற்பதும் உண்டு.

வேறு ஆன உருவத்தில் மின்னற்கொடி-டையோடு மருவு உரு காட்டு சிவன் - மின்னல்கொடி போன்ற சிற்றிடை உடைய பார்வதியோடு இணைந்து அர்த்தநாரீஸ்வரனாகக் காட்சி தருகின்ற சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.032 - சிவன் - மேகம் - சிலேடை - 2

 03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-18

3.4.32 - சிவன் - மேகம் - சிலேடை - 2

-------------------------------------------------------------

எழும்போது காண இயலாது கீழே

விழும்போது தான்தெரியும் வேளை விழுமாறு

செய்வான் திருவினை வாரி வழங்குமழுக்

கையான் சிவன்மேகம் காண்.


சொற்பொருள்:

எழும்போது - மேலே உயரும் சமயத்தில்

போது - 1. பொழுது; / 2. மலர்;

வேள் - மன்மதன்;

வேளை - காலம்; பருவம்;

விழுமாறு - 1. விழும் ஆறு; / 2. விழும்படி;

வான் - மேகம்; பெருமை; நன்மை; வானுலகு;

வாரி - 1. கடல்; / 2. அள்ளி;

காண் - முன்னிலை அசை;


மேகம்:

எழும்போது காண இயலாது - (கடலிலிருந்து உற்பத்தியாகி நீராவியாக) மேலே எழும் சமயத்தில் நம்மால் காண இயலாது.

கீழே விழும்போதுதான் தெரியும் - மழையாகக் கீழே விழும் சமயத்தில்தான் பார்க்க முடியும்.

வேளை விழும் ஆறு செய் வான் - ஆறுகளை உருவாக்கும் மேகம் பருவத்தில் பெய்யும்.

வான் திருவினை வாரி வழங்கும் - (அந்த) மேலான செல்வத்தைக் கடல் வழங்கும். ("வான்" என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

மேகம் காண் - மேகம்;


சிவன்:

எழும்போது காண இயலாது - (விண்ணுற) உயர்ந்த சமயத்தில் (பிரமன் விஷ்ணுவால் அடிமுடி) காண இயலாது. பிரமன் அன்னமாகி வானில் உயர்ந்தாலும் காண இயலாது;

கீழே விழும் போது தான் தெரியும் - (ஈசன் திருமுடியிலிருந்து) கீழே விழுகின்ற (தாழம்பூ) மலர்தான் (பிரமனுக்குத்) தெரியும்;

வேளை விழுமாறு செய்வான் - (நெற்றிக்கண்ணால்) மன்மதனை (எரிந்து சாம்பலாகி) விழும்படி செய்தான்.

வான் திருவினை வாரி வழங்கும் - (அன்பர்களுக்கு) முக்திச் செல்வத்தை அள்ளிக் கொடுப்பான். (இலக்கணக் குறிப்பு - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று - படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்);

மழுக்-கையான் சிவன் காண் - மழுவைக் கையில் ஏந்தியவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.031 - சிவன் - மேகம் - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-18

3.4.31 - சிவன் - மேகம் - சிலேடை - 1

-------------------------------------------------------------

கருநிறமும் வெண்ணிறமும் காண நினைத்த

உருவம் எடுத்தே உயரத் திருப்பதால்

ஆலத்தை ஆர்ந்துதிகழ் கோலத்தால் மூவிலைச்

சூலத்தன் தண்முகில் சொல்.


சொற்பொருள்:

ஆலம் - 1. நீர்; / 2. விடம்;

ஆர்தல் - உண்தல்;

கோலம் - அழகு; வடிவம்;


மேகம்:

கருநிறமும் வெண்ணிறமும் காண - சில சமயம் கருமையாகவும், சில சமயம் வெண்மையாகவும் தோன்றி;

நினைத்த உருவம் எடுத்தே - (பார்ப்பவர்கள்) நினைத்த உருவமாகத் தோன்றி;

உயரத்து இருப்பதால் - உயரத்தில் இருப்பதால்;

ஆலத்தை ஆர்ந்து திகழ் கோலத்தால் - நீரை உண்டு விளங்குகின்ற வடிவத்தால்;

தண்முகில் சொல் - குளிர்ச்சி பொருந்திய மேகம் என்று கூறு.


சிவன்:

கருநிறமும் வெண்ணிறமும் காண - (கழுத்தில்) கரிய நிறமும், (திருநீற்றுப் பூச்சால்) வெண்ணிறமும் மேனியில் தோன்றும். (அர்த்தநாரீஸ்வரனாக வலப்புறம் திருநீற்றால் வெண்ணிறமும் இடப்புறம் உமையம்மையின் கருநிறமும் காட்டுவான்);

நினைத்த உருவம் எடுத்தே - தான் நினைத்த வடிவம் எடுப்பவன். (பக்தர் எவ்வுருவை வழிபடுகின்றார்களோ அவ்வுருவில் தோன்றுவான்);

உயரத்து இருப்பதால் - வானில் (விண்ணுலகில்) இருப்பவன். மிகவும் உயர்ந்தநிலையில் இருப்பவன்;

ஆலத்தை ஆர்ந்து திகழ் கோலத்தால் - விடத்தை உண்டு (அழியாமல்) விளங்குகின்றவன்; விடத்தை உண்டு விளங்கும் அழகிய நீலகண்டம் உடையவன்;

மூவிலைச் சூலத்தன் சொல் - மூன்று இலை போன்ற நுனிகளையுடைய திரிசூலத்தை ஏந்தியவன் என்று கூறு.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.030 - சிவன் - புல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-17

3.4.30 - சிவன் - புல் - சிலேடை

-------------------------------------------------

உண்டியிட ஓடும் எருதும் விரும்பியங்கே

கண்டவிடம் தோன்றும் களையென்று விண்டுமக்கள்

உச்சிமேல் கொள்வரே கட்டுகளை நாதனொரு

பொச்சம் இலாவரன் புல்.


சொற்பொருள்:

உண்டி - 1. Food of birds and beasts in general; பறவை முதலியவற்றின் இரை; / 2. உணவு; சோறு;

விரும்பி - 1. ஆசைப்பட்டு; / 2. விரும்புபவன்; (சூடி - சூடியவன், என்பது போல்);

அங்கே - 1. அந்த இடத்திற்கு; / 2. அசைச்சொல்;

கண்டவிடம் - 1. கண்ட இடம்; / 2. கண்ட விடம்;

களை - 1. களைச்செடி; / 2. அழகு; குற்றம்;

விள்ளுதல் - சொல்லுதல்;

உச்சி - தலை;

கொள்தல் - 1. வைத்துக்கொள்ளுதல்; / 2. நன்கு மதித்தல்; கொண்டாடுதல்;

கட்டு - 1. Bundle, packet, pack, bale; மூட்டை / 2. பந்தம்;

களைதல் - நீக்குதல்;

பொச்சம் - குற்றம்; பொய்;


புல்:

உண்டி இட ஓடும் எருதும் விரும்பி அங்கே - (மாட்டுக்கு) உணவாகும் அதனை இட, (அது கண்டு, உண்ண) விரும்பி எருதும் அந்த இடத்திற்கு ஓடும்.

கண்ட இடம் தோன்றும் களை என்று விண்டு மக்கள் - எல்லா இடத்திலும் முளைக்கும் களை என்று மக்கள் சொல்லி;

உச்சிமேல் கொள்வரே கட்டுகளை - (அப்புல்லை வெட்டி, அந்தப் புல்லின்) கட்டுகளைத் தலைமேல் சுமப்பர்.

புல் - புல்.


சிவன்:

உண்டி இட ஓடும் எருதும் விரும்பி - (பிறர் பிச்சை) உணவை இடுவதற்காகக் கையில் ஓடு ஏந்துவதையும், (தன் வாகனமாக ஒரு) எருதையும் விரும்புபவன்.

அங்கே கண்ட விடம் தோன்றும் - (அவனது) கண்டத்தில் உள்ள விஷம் (நீலமணியாகத்) தென்படும்.

களை என்று விண்டு மக்கள் உச்சிமேல் கொள்வரே - (அதனை) அழகு என்று பக்தர்கள் சொல்லித் (தங்கள் கரங்களைத்) தலைமேல் வைத்துக் கும்பிடுவார்கள். (-அல்லது- மிகவும் போற்றி மனத்தில் இருத்திக்கொள்வார்கள்).

கட்டு களை நாதன், ஒரு பொச்சம் இலா அரன் - (அடியார்களது) பந்தத்தை நீக்கும் நாதன், எவ்விதக் குற்றமும் இல்லாத ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.029 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை - 2

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-16

3.4.29 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை - 2

--------------------------------------------------------------------------------

கலமேந்தும் கல்லால் அடியுறலும் ஆகும்

உலகுவலம் செய்யும் உயர நலந்திகழக்

காட்சிதரும் தீயுமுருக் காட்டும் செயற்கைக்கோள்

மாட்சி மிகுகயிலை மன்.


சொற்பொருள்:

கலம் - 1. விண்கலம் (Rocket); / 2. உண்கலம் (பிச்சைப் பாத்திரம்);

உறுதல் - 1. அனுபவித்தல்; / 2. இருத்தல்;

கல்லால் அடி உறல் - 1. கல்லினால் அடி வாங்குதல்; / 2. கல்லால் மரத்தின்கீழ் இருத்தல்;

தீதல் - எரிந்துபோதல்;

தீ - நெருப்பு;

உரு - வடிவம்;

மாட்சி - மகிமை; அழகு;

மன் - அரசன்; தலைவன்;


செயற்கைக்கோள்:

கலம் ஏந்தும் - விண்கலம் அதனைத் தாங்கி மேலே கொண்டு செல்லும்.

கல்லால் அடியுறலும் ஆகும் - அங்கு ஆகாசத்தில் பறக்கும் விண்கற்களால் சில சமயம் தாக்கப்படும்.

உலகு வலம் செய்யும் - உலகைச் சுற்றிவரும்.

உயர நலம் திகழக் காட்சி தரும் - (தொலைநோக்கியால் பார்த்தால்) உயரத்தில் அழகாகத் தோன்றும்.

தீயும் உருக் காட்டும் - (அதன் ஆயுள் முடிந்து மீண்டும் காற்றுமண்டலத்துள் நுழையும்பொழுது) எரிகின்ற வடிவத்தைக் காட்டும். (எரிந்துபோகும்);

செயற்கைக்கோள் - மனிதர்கள் செய்து ஏவிய உபக்கிரகம் (Satellite);


சிவன்:

கலம் ஏந்தும் - கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்துவான்.

கல்லால்-அடி உறலும் ஆகும் - 1. சமயத்தில் கல்லால் அடியும் உண்டு. (சாக்கிய நாயனார் வரலாற்றில் காண்க). 2. தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தின்கீழ் இருப்பவன்.

உலகு வலம் செய்யும் உயர - உலகத்தவர் மேன்மைபெற வேண்டி வலம்வந்து வணங்குவார்கள்.

நலந் திகழக் காட்சி தரும் - (அப்படி வணங்கும் சிறந்த பக்தர்களுக்கு) அழகிய தரிசனம் தருவான்.

தீயும் உருக் காட்டும் - 1. தீப் போன்ற செம்மேனியன்; 2. (அடிமுடி தேடிய சமயத்தில்) தீப்பிழம்பாய் நின்றவன். (உம் - அசை);

மாட்சி மிகு கயிலை மன் - மகிமையும் அழகும் மிகுந்த கயிலைநாதன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.028 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை - 1

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-16

3.4.28 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை - 1

--------------------------------------------------------------------------------

விண்ணில் உலாவி வெளியில் இருந்தாலும்

மண்ணில் எதுவும் மறைத்திட ஒண்ணுமோ

ஒன்றும் சுழியுமே உன்னில் இயக்குமெல்லாம்

குன்றவில் லான்செயற்கைக் கோள்.


சொற்பொருள்:

விண் - ஆகாயம்;

உலாவுதல் - 1. சஞ்சரித்தல்; இயங்குதல்; / 2. வியாபித்தல்;

உலாவி - உலாவியவன் - வியாபித்தவன்; (சூடி - சூடியவன்; ஆடி - ஆடியவன்; அவ்வாறே, உலாவி - உலாவியவன்);

வெளி - ஆகாசம்; புறம்; பகிரங்கம்;வெளிப்படை;

ஒண்ணுதல் - இயலுதல்;

ஒன்றுதல் - ஒன்றாதல்;

சுழி - 1. பூச்சியம் (zero); / 2. நீர்ச்சுழி;

உன்னுதல் - நினைத்தல்;


செயற்கைக்கோள்:

விண்ணில் உலாவி வெளியில் இருந்தாலும் - ஆகாசத்தில் சஞ்சரித்துப் பகிரங்கமாக (வெளிப்படையாக) இருந்தாலும்,

மண்ணில் எதுவும் மறைத்திட ஒண்ணுமோ - நம்மால் உலகில் எதனையும் அதனிடமிருந்து மறைக்க முடியாது. (உலகில் உள்ள அனைத்தையும் அது காணும்).

ஒன்றும் சுழியுமே உன்னில் இயக்கும் எல்லாம் - உன்னில் ஒன்றும் சுழியுமே இயக்கும் எல்லாம் - சிந்தித்துப் பார்த்தால், அதன் எல்லாச் செயல்களையும் ஒன்றும் பூச்சியமுமே இயக்கும். ("digital").

செயற்கைக்கோள் - மனிதர்கள் செய்து ஏவிய உபக்கிரகம் (Satellite);


சிவன்:

விண்ணில் உலாவி - ஆகாயத்தில் வியாபித்தவன்;

வெளியில் இருந்தாலும் மண்ணில் ஒன்றை மறைத்திட ஒண்ணுமோ - (அப்படி அவன்) ஆகாசத்தில் இருந்தாலும், பூமியில் நடக்கும் அனைத்தையும் அவன் அறிவான்.

ஒன்றும் சுழியுமே - (அவனது முடியில் கங்கையின்) நீர்ச்சுழியும் பொருந்தியிருக்கும்.

உன்னில் இயக்கும் எல்லாம் - திருவுள்ளம் கொண்ட மாத்திரத்திலேயே (இப்பிரபஞ்சத்தில்) எல்லாவற்றையும் இயக்குபவன்.

குன்றவில்லான் - மேருமலையை வில்லாக ஏந்திய சிவபெருமான். (பெரியபுராணம் - மூர்த்தி நாயனார் புராணம் - 12.15.13 - "நீண்ட மேரு வில்லான்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.027 - சிவன் - செருப்பு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-15

3.4.27 - சிவன் - செருப்பு - சிலேடை

------------------------------------------------------------

பலர்பாதம் பற்றுவதால் காப்பதால் காலை

அலங்கரிக்கக் காண்பதால் ஆக நலந்திகழத்

தையல்சேர் தன்மையால் நைவார்செப் பம்பெறலால்

செய்ய சடையன் செருப்பு.


சொற்பொருள்:

காலை - 1. பாதத்தை; / 2. காலை நேரம்;

ஆகம் - உடம்பு;

நலம் - நன்மை; அழகு;

திகழ்தல் - விளங்குதல்;

ஆகநலந்திகழ – 1. ஆகநலம் திகழத்; / 2. ஆகம் நலம் திகழ;

தையல் - 1. நூல் முதலியவற்றால் தைத்தல்; / 2. பெண்;

நைதல் - 1. நிலைகெடுதல் (நைந்துபோதல்); / 2. மனம் கனிதல்; உருகுதல்; (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்");

வார் - Strap of leather; தோல்வார்;

நைவார் - 1. நைந்த வார்; / 2. மனம் உருகுபவர்கள்;

செப்பம் - 1. சீர்திருத்துகை (repair); / 2. செவ்வை; செவ்விய வழி;

செய்ய – சிவந்த;


செருப்பு:

பலர் பாதம் பற்றுவதால் - பலரது பாதங்கள் அதனைப் பற்றும்.

காப்பதால் (காலை) - அது காலைப் பாதுகாக்கும். (இலக்கணக் குறிப்பு - "காலை" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

காலை அலங்கரிக்கக் காண்பதால் - (சிலர், தாம் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப விதவிதமான செருப்பைக்) காலுக்கு அலங்காரமாக அணிவார்கள்.

ஆகநலம் திகழத் தையல் சேர் தன்மையால் - அதன் வடிவம் நன்கு அமையத் தைத்தல் சேர்ந்திருக்கும்.

நை-வார் செப்பம் பெறலால் - வார் நைந்துவிட்டால் அந்த வாரைச் செப்பம் செய்வார்கள் (repair).

செருப்பு - செருப்பு.


சிவன்:

பலர் பாதம் பற்றுவதால் - பலரும் அவனது பாதத்தைப் பற்றுவார்கள்.

காப்பதால் - காப்பவன்.

காலை அலங்கரிக்கக் காண்பதால் - காலையில் (பூசை செய்து திருவுருவை) அலங்கரிப்பார்கள்.

ஆக(ம்) நலம் திகழத் தையல் சேர் தன்மையால் - திருமேனியில் அழகு திகழ உமை ஒரு பாகமாகச் சேர்ந்து இருப்பாள்; (இலக்கணக் குறிப்பு - புணர்ச்சி - "ஆகம் + நலம்" = "ஆகநலம்" என்று மகர ஒற்றுக் கெட்டுப் புணரும்);

நைவார் செப்பம் பெறலால் - மனம் உருகும் அடியார்கள் நன்னெறி பெறுவார்கள்; செவ்வை பெறுவார்கள்;

செய்ய சடையன் - சிவந்த சடையை உடைய சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.026 - சிவன் - மாட்டுவண்டி - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-14

3.4.26 - சிவன் - மாட்டுவண்டி - சிலேடை

--------------------------------------------------------------------

எருதூர்தி இட்டம்போல் இங்குமங்கும் சென்று

வரும்காட்சி யும்கிட்டும் மக்கள் பருகுவரின்

பச்சிறு மாபொருள் வையார் அறிவுடையோர்

மெச்சுவண்டி வான்கயிலை வேந்து.


சொற்பொருள்:

ஊர்தி - 1. வாகனம்;

இட்டம் - இஷ்டம்;

இங்குமங்கும் - 1. பல இடங்களுக்கும்; / 2. பூலோகமும் வானுலகமும்;

மக்கள் - 1. குழந்தைகள்; / 2. மனிதர்கள்;

பருகுதல் - அனுபவித்தல்;

இன்பு - இன்பம்;

அச்சிறு மாபொருள் - 1. அச்சு இறும் மா பொருள்; அச்சு இறுமா பொருள்; / 2) அச் சிறு மா பொருள்;

இறுமா - இறுமாறு - இறும்படி;

இறுதல் - முறிதல்;

மா - பெரிய;

வையார் - 1. வைக்கமாட்டார்கள்; (வைத்தல்) / 2. இகழமாட்டார்கள் (வைதல்);

மெச்சுதல் - புகழ்தல்;

வேந்து - மன்னன்; இறைவன்;

இலக்கணக் குறிப்பு: "செய்யும்" என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள "உம்" விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.


மாட்டுவண்டி:

எருதூர்தி - காளைமாட்டைக் கொண்டு இயங்கும் வாகனம்.

இட்டம் போல் இங்கும் அங்கும் சென்று வரும் காட்சியும் கிட்டும் - (வண்டியோட்டியின்) விருப்பம் போல அங்குமிங்கும் போய்வரும் காட்சியைக் காணலாம்;

மக்கள் பருகுவர் இன்பு - (அவ்வண்டியில் சென்றால்) குழந்தைகளுக்கு இன்பம் உண்டாகும்;

அச்சு இறுமா பொருள் வையார் அறிவுடையோர் - அறிவுள்ளவர்கள் வண்டியின் அச்சு முறியும்படி பெரும்பொருளை ஏற்றமாட்டார்கள்;

(அறிவுடையோர்) மெச்சு வண்டி - (இவை சுற்றுப்புறத்தை அதிகம் மாசுபடுத்தாமையால், அறிஞர்கள்) புகழ்கின்ற மாட்டுவண்டி;


சிவன்:

எருதூர்தி - இடபவாகனம் உடையவன்;

இட்டம் போல் இங்கும் அங்கும் சென்று வரும் - தன் திருவுள்ளம்போல் எவ்வுலகிற்கும் சென்றுவருவான்;

காட்சியும் கிட்டும் மக்கள் பருகுவர் இன்பு - அவன் தரிசனம் கிட்டும் மக்களுக்குப் பேரின்பம் வரும்;

அச்-சிறு மா பொருள் வையார் அறிவுடையோர் - அந்த நுண்மையும் பெருமையும் உடைய மெய்ப்பொருளை அறிவுடையோர் இகழமாட்டார்கள்; (சம்பந்தர் தேவாரம் - 2.20.8 - "பெரியாய் சிறியாய் பிறையாய்");

(அறிவுடையோர்) மெச்சு வான்-கயிலை வேந்து - அறிவுடையோர் புகழ்கின்ற, அழகிய கயிலைமலைக்கு இறைவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.025 - சிவன் - கடல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-13

3.4.25 - சிவன் - கடல் - சிலேடை

-------------------------------------------------------

வந்து புகுவார் மலத்தினைப் போக்குவதால்

சுந்தரத் தோற்றத்தால் காதலிப்பார் சிந்தை

கவர்வதால் தாங்கும் கலத்தினால் இங்கே

சிவனலை ஆர்க்கின்ற சிந்து.


சொற்பொருள்:

மலம் - 1. அழுக்கு; / 2. மும்மலங்கள்; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.13 - "தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்");

தோற்றம் - 1. காட்சி; / 2. வேடம்; உருவம்;

சிந்தை - மனம்; எண்ணம்;

தாங்குதல் - சுமத்தல்;

கலம் - 1. கப்பல்; படகு; / 2. பாத்திரம்;

ஆர்த்தல் - ஒலித்தல்;

சிந்து - கடல்;


கடல்:

வந்து புகுவார் மலத்தினைப் போக்குவதால் - (அதனுள்) புகுந்து குளிப்பவர்களுடைய அழுக்கைப் போக்கும்.

சுந்தரத் தோற்றத்தால் - பார்க்க மிக அழகான காட்சியாய் இருக்கும்.

காதலிப்பார் சிந்தை கவர்வதால் - காதலிப்பவர்களுடைய மனத்தைக் கவரும். (அவர்கள் கடற்கரையை விரும்புவார்கள்).

தாங்கும் கலத்தினால் - அது கப்பலைத் தாங்கும்.

இங்கே அலை ஆர்க்கின்ற சிந்து - இப்பாடலில், அலை ஒலிக்கின்ற கடல்;


சிவன்:

வந்து புகுவார் மலத்தினைப் போக்குவதால் - அவனைத் தஞ்சம் புகுவாரது மும்மலங்களைப் போக்குவான்.

சுந்தரத் தோற்றத்தால் - அழகிய திருவேடம் கொள்வான்.

காதலிப்பார் சிந்தை கவர்வதால் - பக்தர்களுடைய மனத்தைக் கவர்வான்.

தாங்கும் கலத்தினால் - பிச்சைப் பாத்திரத்தை (நான்முகனது மண்டையோட்டை) ஏந்துவான்;

இங்கே சிவன் - இப்பாடலில், சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.024 - சிவன் - புத்தாண்டு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-13

3.4.24 - சிவன் - புத்தாண்டு - சிலேடை

--------------------------------------------------------

ஆண்டு வருவதால் அங்கொன்று கூடுவதால்

வேண்டும் பொழுது விழவாடி வாழ்த்தலால்

காண்டற் கரிதாகும் மாண்பினால் இங்கொருபுத்

தாண்டெரு தேறும் அரன்.


சொற்பொருள்:

ஆண்டு வருதல் - 1. வருடம் பிறத்தல்; / 2. ஆட்சி செய்திருத்தல்;

காண்டல் - பார்த்தல்;

மாண்பு - மாட்சிமை; பெருமை;


புத்தாண்டு:

ஆண்டு வருவதால் - ஒரு (புதிய) வருடம் பிறத்தலால்;

அங்கு ஒன்று கூடுவதால் - ஆண்டின் எண் ஒன்று ஏறும் (அல்லது வயது ஒன்று கூடும்);

வேண்டும் பொழுது விழவு ஆடி வாழ்த்தலால் - வெவ்வேறு நாட்டவரும் விரும்பியவாறு வெவ்வேறு சமயத்தில் புத்தாண்டு என்று விழாக் கொண்டாடி ஒருவரை ஒருவர் வாழ்த்துவார்கள்;

காண்டற்கு அரிது ஆகும் மாண்பினால் - புத்தாண்டைக் கண்ணால் காண இயலாது;

இங்கு ஒரு புத்தாண்டு - இந்தப் பாடலில் புத்தாண்டு;


சிவன்:

ஆண்டு வருவதால் - உலகனைத்தும் ஆள்பவன்;

அங்கு ஒன்று கூடுவதால் - பார்வதியோடு ஒன்றாய் இணைந்து அம்மையப்பனாய்க் காண்பவன்;

வேண்டும் பொழுது விழவு ஆடி வாழ்த்தலால் - பக்தர்கள் வேண்டிக் கொள்கின்ற சமயத்தில் விழாக் கொண்டாடி அவனை வாழ்த்துவார்கள்;

காண்டற்கு அரிது ஆகும் மாண்பினால் - கண்ணுக்குப் புலப்படாமல் தன்னை ஒளித்துள்ளவன்; (அரி அயனுக்கும், பிறருக்கும் காண அரிதானவன்);

இங்கு எருது ஏறும் அரன் - இந்தப் பாடலில், இடபவாகனம் உடைய சிவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.023 - சிவன் - தமிழ் ஆண்டு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-12

3.4.23 - சிவன் - தமிழ் ஆண்டு - சிலேடை

-------------------------------------------------------------------------

தொன்றுதொட்டுச் சுற்றிப் பலபேர் வலம்வரினும்

என்றும் புதுமை திகழ விடையிலெங்கோ

சென்றாலு மீண்டு வருவதால் தீப்பிழம்பாய்

அன்றோங்கி னான்தமிழ் ஆண்டு.


சொற்பொருள்:

பேர் - 1. நாமம்; / 2. மனிதர்; ஆள்;

திகழ விடையிலெங்கோ சென்றாலு மீண்டு - 1. திகழ இடையில் எங்கோ சென்றாலும் மீண்டு; / 2. திகழ விடையில் எம் கோ சென்றாலும் ஈண்டு;

விடை - இடபம்; எருது;

கோ - தலைவன்;

ஈண்டு - இவ்விடத்தில்; இம்மையில்;


தமிழ் ஆண்டு:

நெடுங்காலமாகப் பல பெயர்கள் (60) சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கும். ஒரு பெயர் பல வருடங்களாகக் காணாமல் போயிருந்தாலும், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே பெயர் திரும்ப வந்தாலும், அதனைப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். தமிழ் ஆண்டு.


சிவன்:

எத்தனையோ யுகங்களாகப் பல பக்தர்கள் வலம்வந்து வணங்குவார்கள். ஆனாலும், என்றும் இளமையோடு இருப்பவன். தனது ஊர்தியான விடையில் எம்முடைய தலைவன் (பல உலகங்களுக்கும்) சென்றாலும், (இங்கு) இம்மையிலே வந்து நமக்கு அருள்புரிபவன்.

(அரியும் அயனும் அடிமுடி தேடியபோது) தீப்பிழம்பாகி எல்லையின்றி ஓங்கி நின்றவன். சிவன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------