03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-11
3.4.22 - சிவன் - பஞ்சபூதம் - சிலேடை
-------------------------------------------------------------
ஆய்வார்மெய் யாகிய தஞ்சாகும் என்பதால்
சேய்மதி காட்டுதலால் தீவண்ணச் செம்மையால்
பாய்நதி மேலோடக் கால்காட்டில் ஆடுவதால்
காய்கணரன் ஐம்பூதம் காண்.
சொற்பொருள்:
ஆய்வார்மெய் யாகிய தஞ்சாகும் என்பதால் - 1. ஆய்வார் மெய் ஆகியது அஞ்சு ஆகும் என்பதால்; / 2. ஆய்வார் மெய் ஆகிய தஞ்சு ஆகும் என்பதால்;
மெய் - 1. உடல்; / 2. சத்தியம்; உண்மை;
தஞ்சு - தஞ்சம்;
சேய் - 1. செவ்வாய்; தூரம்; / 2. இளமை;
மதி - நிலவு;
கால் - 1. காற்று; / 2. பாதம்;
காட்டில் - 1. வனத்தில்; / 2. சுடுகாட்டில்;
ஆடுதல் - 1. சஞ்சரித்தல்; / 2. நாட்டியம் ஆடுதல்;
காய்கணரன் - காய் கண் அரன் - எரிக்கும் கண்ணுடைய ஹரன்;
காண் - முன்னிலை அசை;
ஐம்பூதம்:
ஆராய்பவர்கள், இந்த உடல் ஆகியது அஞ்சு (பூதங்கள் சேர்க்கையால்) ஆனது என்பர்.
ஐம்பூதத்தில்: (ஆகாசம்) செவ்வாய், சந்திரன் இவற்றையெல்லாம் உடையது; (தூரத்தே சந்திரனைக் காட்டும் - என்றும் பொருள்கொள்ளல் ஆம்); தீ செம்மை நிறம் உடையது; (நிலத்தின்) மேல் நதி (நீர்) பாய்ந்து ஓடும்; காற்று காட்டில் சஞ்சரிக்கும்.
பஞ்சபூதங்கள்.
சிவன்:
ஞானிகள் (சிவனை) உண்மையான பற்றுக்கோடு ஆவான் என்பர். இளமதியை அணிபவன். அவனது வண்ணம் தீயைப் போன்ற செம்மை உடையது. அவனது சடையில் கங்கை பாயும். அவனது திருப்பாதம் சுடுகாட்டில் நடம் ஆடும்.
சுட்டெரிக்கவல்ல (நெற்றிக்)கண்ணை உடைய அரன்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment