Friday, September 9, 2022

06.05.024 - திருமால் - கண்ணப்பன் - சிலேடை

06.05 – பலவகை

2012-07-05

06.05.024 - திருமால் - கண்ணப்பன் - சிலேடை

-------------------------------------------------------

கரிய திருமேனி கையில்வில் ஏந்தி

திரிதரு பன்றியு மானான் - அரிநாடி

வான்மதி சூடிமகிழ் வண்ணம்தன் கண்ணிடந்தான்

கான்வதிகண் ணப்பன்மால் காண்.


சொற்பொருள்:

அரி - 1. சிங்கம்; / 2. சக்கரம் (Wheel, discus); ஆயுதம் (Weapon);

ஏந்தி - ஏந்துபவன்;

திரிதரு - 'தரு' என்றது துணைவினை; (An auxiliary added to verbs);

பன்றியுமானான் - 1. பன்றியும் மான் ஆன்; / 2. பன்றியும் ஆனான்;

நாடி - 1. நாடுபவன்; / 2. 'விரும்பி' என்ற வினையெச்சம்;

வான்மதி சூடி - வானில் விளங்கும் அழகிய பிறையைச் சூடியவன் - சிவபெருமான்;

இடத்தல் - தோண்டுதல்;

கான் - காடு;

வதிதல் - உறைதல்; தங்குதல்;


திருமால்:

கரிய திருமேனி - கரிய னிறம் திகழும் திருமேனி உடையவன்;

கையில் வில் ஏந்தி, திரிதரு பன்றியும் ஆனான் - கையில் வில்லை ஏந்தியவனான இராமனும், திரியும் பன்றியும் ஆனவன்; (பன்றி - வராஹ அவதாரம்; அடிமுடி தேடியபொழுது பன்றி வடிவம் கொண்டவன்);

அரி நாடி வான்மதிசூடி மகிழ்வண்ணம் தன் கண்டந்தான் - சக்கராயுதத்தைப் பெற விரும்பிச், சந்திரனைச் சூடிய சிவன் மகிழுமாறு தாமரைமலர் போலத் தன் கண்ணைப் பெயர்த்து இட்டு அர்ச்சித்தவன்; (திருவீழிமிழலைத் தலவரலாற்று நிகழ்ச்சி);

மால் - விஷ்ணு;


கண்ணப்பன்:

கரிய திருமேனி - கரிய மேனியன்;

கையில் வில் ஏந்தி - கையில் வில் ஏந்தியவன் (வேடன்);

திரிதரு பன்றியும் மான் ஆன் அரி நாடி - திரிகின்ற பன்றியையும், மானையும், ஆனினத்தையும், சிங்கத்தையும் (வேட்டைக்கு) நாடியவன்;

வான்மதிசூடி மகிழ்வண்ணம் தன் கண்டந்தான் - வான்பிறை சூடிய ஈசன் மகிழுமாறு தன் கண்ணை இடந்து அப்பியவன்;

கான் வதி கண்ணப்பன் - காட்டில் வாழ்ந்த கண்ணப்பன்;


பிற்குறிப்புகள்:

1. தருதல் என்ற துணைவினை தேவாரத்தில் பல பாடல்களில் வரும். உதாரணமாகச்:

சம்பந்தர் தேவாரம் - 3.86.3

புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்

எரிதரும் உருவினர் இடபம தேறுவர் ஈடுலா

வரிதரு வளையினர் அவரவர் மகிழ்தர மனைதொறும்

திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.


2) -------- Some Q&A on this song -------

Q) வாசகர் ஒருவர் எழுப்பிய வினாக்கள்:

a) கண்ணப்பர் கரிய நிறத்தவரா? இலக்கியச் சான்றுகள் உள்ளனவா?

b) சிங்கங்கள் பொதுவாக ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே உள்ளன. கிர் காடுகளில் உள்ள சிங்கங்கள் ஆசியாட்டிக் வகையைச் சேர்ந்தவை என்பது கூற்றளவிலே மட்டுமே உள்ளது. கண்ணப்பர் சிங்கத்தை வேட்டைக்கு நாடியது எங்ஙனம்?


My response:

பொதுவாக வேடர்கள் கரிய மேனியர். சிவனார் அருச்சுனனுக்கு அருள்செய்ய வேட்டுவ வடிவில் வந்தபோது செம்மேனியரான அப்பெருமானும் கரிய வடிவம் தாங்கிவந்தார்.


பாடலை எழுதும்போது, கண்ணப்பர் கரிய மேனியர் என்பதற்கும், அவர் சிங்கத்தை வேட்டை ஆடினார் என்பதற்கும் ஆதாரங்கள் உளவா என்று சிந்தித்திலேன்! உங்கள் வினாவால் இன்று தேடினேன்! அவ்வாறு தேடியதில் அற்புதமான உவமைகள் அடங்கிய இப்பாடலைக் கண்டேன்!


பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார் புராணம் - பாடல் 82

கருவரையொரு தனுவொடுவிசை கடுகியதென முனைநேர்

குரிசில்முன்விடும் அடுசரமெதிர் கொலைபயில்பொழு தவையே

பொருகரியொடு சினவரியிடை புரையறவுடல் புகலால்

வருமிரவொடு பகலணைவன எனமிடையுமவ் வனமே.


கரிய பெருமலை, கையில் ஒரு வில்லுடன் விரைவாக ஓடுகின்றதெனப், பொருந்தும்படியாக வனத்தின் முன்னாக நேர்ந்து வரும் திண்ணனார், முன் விடுகின்ற கொலை புரியும் அம்புகள் எதிர்வந்த மிருகங்களைக் கொலை செய்கின்ற அமையத்து, அவ்வம்புகள் போரிடும் யானையோடு சினமுடைய சிங்கங்களின் வயிற்றிலும் இடையீடு இன்றிப் புகுதலால், இறந்து வீழ்ந்து கிடக்கும் அம்மிருகங்கள் இரவின் பின்னால் பகல் தொடர்கின்றது எனும்படி அவ்வனம் காட்சியளித்தது


யானை இரவுக்கும் சிங்கம் பகலுக்கும் உவமையாயின.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.04.021 – மாணிக்க வாசகர் துதி - கள்ளாரும் கடிமலர்மேல்

06.04.021 – மாணிக்க வாசகர் துதி கள்ளாரும் கடிமலர்மேல்

2012-06-24

06.04.021 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2012

----------------------------------------

1) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----

கள்ளாரும் கடிமலர்மேல் உறைவானும் கரியானும்

புள்ளேன மாய்ப்பறந்தும் புவியிடந்தும் காண்பரிய

வெள்ளேற்றன் மென்மலர்த்தாள் மிகநினைந்து மனமுருகித்

தெள்ளேணம் பாடுமணி வாசகர்சே வடிபோற்றி.


கள் ஆரும் கடி-மலர்மேல் உறைவானும் கரியானும் - தேன் நிறைந்த வாசம் மிகுந்த தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும்; (கரியான் - திருமால்);

புள் ஏனம் ஆய்ப் பறந்தும் புவி இடந்தும் காண்பரிய - பறவையும் பன்றியும் ஆகிப் பறந்து சென்றும் நிலத்தை அகழ்ந்தும் காண ஒண்ணாத;

வெள் ஏற்றன் மென்-மலர்த்தாள் மிக நினைந்து மனம் உருகித் - வெள்ளை இடபத்தின்மேல் வரும் சிவபெருமானது மென்மையான மலர்ப்பாதத்தை மிகவும் எண்ணி மனம் உருகி;

தெள்ளேணம் பாடு மணிவாசகர் சேவடி போற்றி - திருவாசகத்தில் ஒரு பகுதியான திருத்தெள்ளேணத்தைப் பாடியருளிய மாணிக்கவாசகரது சிவந்த திருவடிகளுக்கு வணக்கம்;


2) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----

ஆத்தங்கொள் மனத்தாலே அரிவையொரு பாகத்தன்

பூத்துன்று சடையான்றன் பொன்னடிக்கே சென்றூதாய்

கோத்தும்பீ என்றென்று கோதில்லாத் தமிழ்மாலை

கோத்தீந்த வாதவூர்க் கோமான்றன் தாள்போற்றி.


ஆத்தம் - ஆப்தம் - அன்பு;

அரிவைரு பாகத்தன் - உமைபங்கன்;

பூத் துன்று சடையான் - பூக்கள் செறிந்திருக்கும் சடையினன்;

கோத்தும்பீ - அரசவண்டே; (திருக்கோத்தும்பி - திருவாசகத்தில் ஒரு பகுதி);

கோத்து ஈந்த - தொடுத்து அளித்த;

கோமான் - பெருமையிற் சிறந்தோன்; குரு;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.04.020 – திருஞான சம்பந்தர் துதி - குறை மலிந்த மொழி

06.04.020 – திருஞான சம்பந்தர் துதி - குறை மலிந்த மொழி

2012-06-04

06.04.020 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2012

----------------------------------

1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

குறைமலிந்த மொழிகளையே கூறியுழல் மதியீனர்

மறைவழியைப் பழித்தலைவார் வஞ்சனையை முறியடித்துப்

பிறைமதியம் சூடியுமை பிரியாத சிவபெருமான்

கறைமிடறன் புகழ்பாடு காழியர்கோன் கழல்போற்றி.


குற்றம் மிகுந்த பேச்சையே பேசி உழலும் அறிவீனர்கள் வேதநெறியைப் பழித்து அலைபவர்கள். அவர்களது வஞ்சனையை வென்று, சந்திரமௌலியும் அர்த்தநாரீஸ்வரனும் நீலகண்டனும் ஆன சிவபெருமான் புகழைப் பாடியருளிய சீகாழிப் பிள்ளையார் திருஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்குகின்றேன்.


2) --- (அறுசீர் விருத்தம் -- '5 மா + காய்' என்ற வாய்பாடு) --

கையைப் பிசைந்து கலங்கி அழுது காழி நகர்தன்னில்

ஐயன் ஆகம் பாகம் உடையாள் அளித்த பாலுண்டு

கையில் தாளம் பெற்று நாளும் காதல் மிகப்பாடி

வையம் தன்னிற் சைவம் தழைக்க வந்தார் கழல்போற்றி.


காழி - சீகாழி;

ஆகம் - மேனி;

வையம் தன்னிற் சைவம் தழைக்க வந்தார் கழல்போற்றி - உலகில் சைவநெறி தழைக்க அவதரித்தவரான திருஞான சம்பந்தரின் திருவடிகளை வணங்குகின்றேன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.05.023 - திருத்தமிழ் கற்க! - (மாலைமாற்று)

06.05 – பலவகை

2012-05-25

06.05.023 - திருத்தமிழ் கற்க! - (மாலைமாற்று)

----------------------------------------

(குறள்வெண்செந்துறை)


மேருவன சீர்வருவ கற்க தேந்தமிழ் வால்விடைய ரேதே

தேரே யடைவில்வாழ் மிதந்தே கற்க வருவர்சீ னவருமே.


பதம் பிரித்து:

மேரு அன சீர் வருவ; கற்க, தேம் தமிழ்; வால் விடையரே தே,

தேரே; அடைவில் வாழ் மிதந்தே; கற்க வருவர் சீனவருமே.


சொற்பொருள் / குறிப்புகள்:

சீர் வருவ - நன்மை, செல்வம், புகழ்,,,, எனப் பலவகைச் சீர்களைச் சுட்டியது. எனவே 'வருவ' என்ற பன்மை வினைமுற்றுப் பெற்றது. ஒருமை பன்மை மயக்கம் என்றும் கொள்ளலாம்.

தேம் தமிழ் - இனிய தமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன;

வால் - வெண்மை;

விடை - இடபம்;

தே - தெய்வம்;

தேரேயடைவில் = 1. தேரே அடைவில்; 2. தேர் ஏய் அடைவில்

தேர் - அறி; (தேர்தல் - அறிதல்; ஆராய்தல்; சிந்தித்தல்);

- அசை;

ஏய்தல் - பொருந்துதல்; தகுதல்;

அடைவு - துணை; புகலிடம்;

சீனவர் - சீனம் முதலிய நாட்டினர்;


மேரு மலையைப் போலப் பொன்னும் புகழும் நன்மையும் வருவன! (அத்தகைய திருவைத் தரும்) இனிய தமிழைக் கற்க! வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவரே தெய்வம்; அறி; அவரைப் புகலடைந்து அவர் துணையால் (வினைக்கடலுள் ஆழாமல் / இன்பத்தில்) மிதந்து வாழ்! அத்தகைய திருத்தமிழைக் கற்கச் சீனர் முதலிய வெளிநாட்டவரும் வருவர்!


(இலக்கணக் குறிப்பு: அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினைமுற்று:

, - இவ்விரு விகுதியினையும் இறுதியாக உடைய மொழிகள் அஃறிணைப் பன்மைப்படர்க்கை வினைமுற்றும் குறிப்புமுற்றும் ஆம். இவற்றுள் ஆகாரம் எதிர்மறை வினைக் கண்ணது ஆமன்றி உடன்பாட்டு வினைக்கண் வாராது.


உதாரணம்: நடந்தன, நடந்த; நடவாநின்றன, நடவாநின்ற; நடப்பன, நடப்ப; கரியன, கரிய: அவை எனவும் நடந்தில, நடவாநின்றில, நடவா: அவை எனவும் வரும்.)


பிற்குறிப்பு:

மாலைமாற்று - ஆங்கிலத்தில் Palindrome. ஒரு பாடலை எழுத்தெழுத்தாக முதலிலிருந்து இறுதிவரை படித்தாலும், கடையிலிருந்து முதல்வரை படித்தாலும் ஒரே செய்யுளாக அமைவது.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Thursday, September 8, 2022

06.02.170 – எறும்பியூர் (திருவெறும்பூர்) - சினமலிந்து மாசடைந்து - (வண்ணம்)

06.02.170 – எறும்பியூர் (திருவெறும்பூர்) - சினமலிந்து மாசடைந்து - (வண்ணம்)

2012-05-06

06.02.170 - சினமலிந்து மாசடைந்து - எறும்பியூர் (திருவெறும்பூர்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தந்த தான தந்த

தனன தந்த தான தந்த

தனன தந்த தான தந்த .. தனதான )


சினம லிந்து மாச டைந்து

..... சிதடர் தங்க ளோடு ழன்று

..... தெருவி லங்கு போல ஒன்றும் .. அறியாமல்

.. செடிமி குந்த தேபு ரிந்து

..... திரியும் இந்த வாழ்வி னின்று

..... தெருள டைந்து தாளி ரண்டை .. மறவாத

மனம டைந்து நாவில் உன்றன்

..... மணமி குந்த பேர ணிந்து

..... மகிழ்வு பொங்க ஏழை பங்க .. அருளாயே

.. மறைமொ ழிந்த தேவ கொன்றை

..... மலரும் இண்டை போல்வி ளங்கு

..... மதியும் வெங்க ணாகம் ஒன்றும் .. அணிவோனே

முனம டைந்த தேவர் கெஞ்ச

..... முரணு கின்ற மூவ ரண்கள்

..... முடிய அம்பை ஏவு கின்ற .. சிலையானே

.. முதலை உண்ட பாலன் அன்று

..... முழுமை கொண்டு மீள அன்பர்

..... மொழிந யந்து வாழ்வு தந்த .. அவிநாசீ

தினமு வந்து பாடு தொண்டர்

..... செயல்வி ரும்பி வான்வ ணங்கு

..... திருவி ளங்க ஈயும் அன்ப .. மதுநாடித்

.. தெனன வென்று தேன்மு ரன்று

..... திரளு கின்ற சீரி லங்கு

..... திருவெ றும்பி யூர மர்ந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

சினம் மலிந்து, மாசு அடைந்து,

..... சிதடர் தங்களோடு உழன்று,

..... தெருவிலங்கு போல ஒன்றும் அறியாமல்,

.. செடி மிகுந்ததே புரிந்து

..... திரியும் இந்த வாழ்வினின்று

..... தெருள் அடைந்து, தாள் இரண்டை மறவாத

மனம் அடைந்து, நாவில் உன்றன்

..... மணம் மிகுந்த பேர் அணிந்து

..... மகிழ்வு பொங்க, ஏழை பங்க, அருளாயே;

.. மறை மொழிந்த தேவ; கொன்றை

..... மலரும், இண்டை போல் விளங்கு

..... மதியும், வெங்கண் நாகம் ஒன்றும் அணிவோனே;

முனம் அடைந்த தேவர் கெஞ்ச,

..... முரணுகின்ற மூவரண்கள்

..... முடிய அம்பை ஏவுகின்ற சிலையானே;

.. முதலை உண்ட பாலன் அன்று

..... முழுமை கொண்டு மீள, அன்பர்

..... மொழி நயந்து, வாழ்வு தந்த அவிநாசீ;

தினம் உவந்து பாடு தொண்டர்

..... செயல் விரும்பி, வான் வணங்கு

..... திரு விளங்க ஈயும் அன்ப; மது நாடித்

.. "தெனன" என்று தேன் முரன்று

..... திரளுகின்ற சீர் இலங்கு

..... திருவெறும்பியூர் அமர்ந்த பெருமானே.


* அடி-3: திருப்புக்கொளியூர் அவிநாசியில் முதலை உண்ட சிறுவனைச் சுந்தரர் பதிகம் பாடி வரவழைத்ததைச் சுட்டியது.


சினம் மலிந்து, மாசு அடைந்து, சிதடர் தங்களோடு உழன்று தெருவிலங்கு போல ஒன்றும் அறியாமல் - கோபம் முதலிய மன அழுக்குகள் மிகுந்து, ஒன்றும் அறியாமல் அறிவிலிகளோடு கூடி ஒரு விலங்கேபோல் உழன்று; (சிதடன் - அறிவிலி);

செடி மிகுந்ததே புரிந்து திரியும் இந்த வாழ்வினின்று தெருள் அடைந்து - பாவங்களே செய்யும் இந்த வாழ்க்கையிலிருந்து தெளிவு அடைந்து; (செடி - பாவம்; தீமை); (வாழ்வினின்று - வாழ்க்கையிலிருந்து); (தெருள் - தெளிவு);

தாள் இரண்டை மறவாத மனம் அடைந்து நாவில் உன்றன் மணம் மிகுந்த பேர் அணிந்து மகிழ்வு பொங்க, ஏழை பங்க அருளாயே - உன் திருவடிகளை மறவாத மனத்தைப் பெற்று, என் நாவில் உன் மணம் மிகுந்த திருநாமத்தைத் தரித்து இன்பம் பெருகுமாறு, உமைபங்கனே, அருள்வாயாக; (ஏழை பங்கன் - மாதொரு பாகன்); (ஏழை - பெண்; பார்வதி);


மறை மொழிந்த தேவ - வேதங்களைப் பாடியருளிய தேவனே;

கொன்றைமலரும், இண்டை போல் விளங்கு மதியும், வெங்கண் நாகம் ஒன்றும் அணிவோனே - கொன்றைமலர், இண்டை என்ற முடிமாலை போல் விளங்கும் பிறைச்சந்திரன், கொடிய பாம்பு இவற்றையெல்லாம் சூடுபவனே; (துண்ட மதி - மதித்துண்டம் - பிறைச்சந்திரன்);

(இண்டை - தலையில் அணியும் மாலை); (வெங்கண் - கொடுமை); ( சம்பந்தர் தேவாரம் - 2.118.4 - "கங்கை திங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம் வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்");


முனம் அடைந்த தேவர் கெஞ்ச, முரணுகின்ற மூ அரண்கள் முடிய அம்பை ஏவுகின்ற சிலையானே - முன்பு உன்னைச் சரண் அடைந்து தேவர்கள் இறைஞ்சவும், பகைத்த முப்புரங்கள் அழியும்படி அம்பை ஏவிய வில்லை ஏந்தியவனே; (முரண்தல் - பகைத்தல்); (அரண் - கோட்டை); (முடிதல் - அழிதல்); (சிலை - வில்);


முதலை உண்ட பாலன் அன்று முழுமை கொண்டு மீள, அன்பர் மொழி நயந்து, வாழ்வு தந்த அவிநாசீ - திருப்புக்கொளியூர் அவிநாசியில் சுந்தரர் பதிகம் பாடி வேண்டவும், அதற்கு மகிழ்ந்து, அதற்குச் சில ஆண்டுகள்முன் முதலை உண்ட சிறுவன் மீண்டும் உயிர்பெற்று வருமாறு அருள்புரிந்த அவிநாசியே (அழிவற்றவனே). (அவிநாசீ - அவிநாசியே என்ற விளி); (அவிநாசி - அழிவில்லாதவன்);

தினம் உவந்து பாடு தொண்டர் செயல் விரும்பி வான் வணங்கு திரு விளங்க ஈயும் அன்ப - தினமும் மகிழ்ந்து பாடும் அன்பர்களின் செய்கையை விரும்பி, அவர்களுக்கு வானுலகும் வணங்கும் மேலான பதத்தை அளிக்கும் அன்பனே!


மது நாடித் "தெனன" ன்று தேன் முரன்று திரளுகின்ற சீர் இலங்கு திருவெறும்பியூர் அமர்ந்த பெருமானே - பூக்களில் மது உண்ண விரும்பித், "தெனன" என்று வண்டுகள் ரீங்காரம் செய்து கூடும் அழகிய திருவெறும்பியூர் (திருவெறும்பூர்) மலைமேல் விரும்பி உறையும் பெருமானே. (தேன் - வண்டு); (சீர் - அழகு; பெருமை); (அமர்தல் - விரும்புதல்);


பிற்குறிப்பு:

கிட்டிய திருப்புகழ்ப் பாடல்களில் இந்தச் சந்தக்குழிப்பில் பாடல் இல்லை. ஓரளவு இதனை ஒட்டிய (திஸ்ர நடையில்), "தனன தான தான தத்த" என்னும் அமைப்பிலும் ("துடிகொள் நோய்க ளோடு வற்றி" - பழமுதிர்சோலை), "தனன தான தனன தந்த" என்னும் அமைப்பிலும் ("முறுகு காள விடம யின்ற" - சுவாமிமலை) பாடல்கள் உள்ளன.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Wednesday, September 7, 2022

06.02.169 – தவத்துறை (லால்குடி) - தனத்தை நித்தலும் - (வண்ணம்)

06.02.169 – தவத்துறை (லால்குடி) - தனத்தை நித்தலும் - (வண்ணம்)

2012-05-12

06.02.169 - தனத்தை நித்தலும் - திருத்தவத்துறை (லால்குடி)

(லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தத்தன தனதன தனதன

தனத்த தத்தன தனதன தனதன

தனத்த தத்தன தனதன தனதன .. தனதான )

(சினத்தி லத்தினை சிறுமண லளவுடல் - திருப்புகழ் - திருத்தணிகை)


தனத்தை நித்தலும் நினைமட மனமிது

.. .. தருக்கி இத்தரை மிசையிடர் உறவரு

.. .. சழக்கர் நட்பினில் விழுவண மயலுறு .. வதனாலே

.. தவத்தி னைச்சிறி தளவிலும் முயல்வது

.. .. தடுத்தி டக்கடல் அனவினை யதுதரு

.. .. சனிப்பி றப்பினில் உழல்வுறு நிலையுடை .. அடியேனும்

அனத்தை ஒத்திடு நடையுடை மலைமகள்

.. .. அவட்கி டத்தினை அளியொடு தருமுன

.. .. தடித்த லத்தினில் நறுமண மலிதரும் .. எழிலாரும்

.. அலர்ச்ச ரத்தொடு விதவித ஒலிமலி

.. .. அமைப்பில் உற்றிடும் அழகிய தமிழினை

.. .. அருத்தி மிக்கிடும் அறிவினை உறவருள் .. புரியாயே

கனைத்த லைத்திடு கடலுமிழ் விடமது

.. .. கறுத்த அற்புத மணியென அணிதிகழ்

.. .. கழுத்தில் இட்டமு தமரர்கள் அவருண .. அருள்வோனே

.. கணைக்கு மட்டலர் தொடுமதன் உடலது

.. .. கணத்தி னிற்பொடி படமுனி இறையவ

.. .. கருத்த கற்சிலை கொடுதிரி புரமவை .. எரிவீரா

சினப்பொ ருப்பென வருமத களிறது

.. .. செகுத்து ரித்திடு விறலின துடியொடு

.. .. திருக்க ரத்தினில் ஒளிமழு மறியிவை .. உடையானே

.. சிரைத்த லைக்கலன் இடுபலி மகிழ்பவ

.. .. தெருக்க ளிற்கலி மிகுபரு மதிலணி

.. .. திருத்த வத்துறை தனிலெழு முனிதொழு .. பெருமானே.


பதம் பிரித்து:

தனத்தை நித்தலும் நினை மட மனமிது,

.. .. தருக்கி, இத்தரைமிசை இடர் உற வரு

.. .. சழக்கர் நட்பினில் விழுவணம் மயல் உறுவதனாலே,

.. தவத்தினைச் சிறிது அளவிலும் முயல்வது

.. .. தடுத்திடக், கடல் அன வினையது தரு

.. .. சனிப்பு இறப்பினில் உழல்வுறு நிலையுடை அடியேனும்,

அனத்தை ஒத்திடு நடையுடை மலைமகள்

.. .. அவட்கு இடத்தினை அளியொடு தரும் உனது

.. .. அடித்தலத்தினில் நறுமணம் மலிதரும் எழில் ஆரும்

.. அலர்ச்சரத்தொடு, விதவித ஒலி மலி

.. .. அமைப்பில் உற்றிடும் அழகிய தமிழினை

.. .. அருத்தி மிக்கு இடும் அறிவினை உற அருள் புரியாயே;

கனைத்து அலைத்திடு கடல் உமிழ் விடமது

.. .. கறுத்த அற்புத மணி என அணி திகழ்

.. .. கழுத்தில் இட்டு, அமுது அமரர்கள் அவர் உண அருள்வோனே;

.. கணைக்கு மட்டு-அலர் தொடு மதன் உடலது

.. .. கணத்தினிற் பொடிபட முனி இறையவ;

.. .. கருத்த; கற்சிலை கொடு திரிபுரம்-அவை எரி வீரா;

சினப்-பொருப்பு என வரு மத-களிறது

.. .. செகுத்து உரித்திடு விறலின; துடியொடு

.. .. திருக்கரத்தினில் ஒளி-மழு மறி இவை உடையானே;

.. சிரைத்தலைக்கலன் இடுபலி மகிழ்பவ; == பவ = பவனே

.. .. தெருக்களிற் கலி மிகு, பரு-மதில் அணி

.. .. திருத்-தவத்துறைதனில் எழு-முனி தொழு பெருமானே.


தனத்தை நித்தலும் நினை மட மனமிது, தருக்கி, இத்தரைமிசைடர் உ வரு சழக்கர் நட்பினில் விழுவணம் மயல் உறுவதனாலே - பணத்தைத் தினமும் நினைக்கின்ற இந்தப் பேதைமனம், இப்பூமியில் துன்புறுமாறு வருகின்ற தீயோர் நட்பில் விழும்படி மயங்குவதால்; (மடமை - பேதைமை); (தருக்குதல் - ஆணவம்/கர்வம் கொள்ளுதல்); (சழக்கன் - தீயவன்); (மயல் - மயக்கம்);

தவத்தினைச் சிறிது அளவிலும் முயல்வது தடுத்திடக் - சிறிதளவும் தவம்செய்யவிடாமல் தடுப்பதால்;

கடல் அன வினையது தரு சனிப்பு இறப்பினில் உழல்வுறு நிலையுடை அடியேனும் - கடல் போல் வினை தருகின்ற பிறப்பு இறப்பில் சுழல்கின்ற நிலையை உடைய நானும்; (சனிப்பு - பிறப்பு); (உழல்வுறுதல் - சுழல்தல்);


அனத்தை ஒத்திடு நடையுடை மலைமகள் அவட்கு இடத்தினை அளியொடு தரும் உது டித்தலத்தினில் - அன்னம் போன்ற நடையை உடைய உமைக்கு இடப்பாகத்தை அன்போடு தரும் உன்னுடைய திருவடியில்; (அனம் - அன்னம்); (அவட்கு - அவள்+கு - அவளுக்கு); (அளி - அன்பு);

நறுமணம் மலிதரும் எழில் ஆரும் அலர்ச்சரத்தொடு, விதவித ஒலி மலி அமைப்பில் உற்றிடும் அழகிய தமிழினை - வாசனையும் அழகும் மிக்க பூமாலைகளோடு, பலவிதச் சந்தநயம் மிக்க அழகிய தமிழ்ப்பாமாலைகளை; (அலர் - பூ);

அருத்தி மிக்கு இடும் அறிவினை உறருள் புரியாயே - அன்பு மிகுந்து இட்டு வழிபடும் அறிவைப் பெற அருள்வாயாக; (அருத்தி - அன்பு);


கனைத்து அலைத்திடு கடல் உமிழ் விடமது கறுத்த அற்புத மணின அணி திகழ் கழுத்தில் இட்டு, முது அமரர்கள் அவர் உஅருள்வோனே - ஒலித்து அலைக்கின்ற பாற்கடல் கக்கிய ஆலகால விடத்தைக் கரிய அற்புதமான மணியாக அழகிய கண்டத்தில் வைத்து, அமுதினைத் தேவர்கள் உண்ண அருளியவனே; (கனைத்தல் - ஒலித்தல்); (அணி - அழகு);

கணைக்கு மட்டு-லர் தொடு மதன் உடலது கணத்தினிற் பொடிபட முனி இறையவ - அம்புகளாக வாசமலர்களை ஏவும் மன்மதனது உடம்பு ஒருநொடியளவில் சாம்பலாகுமாறு கோபித்து எரித்த இறைவனே; (கணை - அம்பு); (மட்டு - தேன்; வாசனை); (மதன் - காமன்); (பொடி - சாம்பல்); (இறையவன் - இறைவன்); (முனிதல் - கோபித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.41.7 - "காமனைப் பொடிபட நோக்கிப்");

கருத்த - கடவுளே; (கருத்தன் - கர்த்தா - கடவுள்)

கற்சிலை கொடு திரிபுரம்-வை எரி வீரா - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எரித்த வீரனே; (கல் - மலை); (சிலை - வில்);


சினப்-பொருப்பு என வரு மத-களிறது செகுத்து ரித்திடு விறலின - கோபம் மிக்க மலை போல வந்த மதயானையைக் கொன்று அதன் தோலை உரித்த வெற்றியுடையவனே; (பொருப்பு - மலை); செகுத்தல் - கொல்லுதல்); (விறல் - வெற்றி; வலிமை);

துடியொடு திருக்கரத்தினில் ஒளி-மழு மறிவை உடையானே - கையில் உடுக்கை, ஒளியுடைய மழுவாள், மான்கன்று, இவற்றையெல்லாம் ஏந்தியவனே; (துடி - உடுக்கை); (மறி - கன்று - மான்கன்று);

சிரைத்தலைக்கலன் இடுபலி மகிழ்பவ - மயிர் இல்லாத மண்டையோடு என்ற உண்கலனில் இடும் பிச்சையை விரும்பும் பவனே (/ விரும்புபவனே); (சிரை - மயிர்நீக்கம்); (பலி - பிச்சை); (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்); (அப்பர் தேவாரம் - 6.5.3 - "சிரைத்தலையில் ஊணா போற்றி");

தெருக்களிற் கலி மிகு, பரு-மதில் அணி திருத்-தவத்துறைதனில் எழு-முனி தொழு பெருமானே - தெருக்களில் ஆரவாரம் மிகுந்த, பெரிய மதில் சூழ்ந்த திருத்தவத்துறை என்ற தலத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட பெருமானே; (கலி - ஒலி); (திருத்தவத்துறை - லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில்); (எழுமுனி - ஏழு முனிவர்கள் - அத்ரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், ஆங்கீரசர், மரீசி - Athri, Bhrigu, Pulasthya, Vasishta, Gauthama, Angeerasa, and Mareechi worshiped Siva here. Hence, Saptharisheeswarar);

இலக்கணக் குறிப்பு: "சினப்-பொருப்பு என வரு மத-களிறு" - இல்பொருளுவமை.

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------