Wednesday, June 27, 2018

3.6.26 - 3.6.30 - இருவரை - மாவில் - மடக்கு


03.06 – மடக்கு



2007-10-05
3.6.26) இருவரை - மாவில் - மடக்கு
-------------------------------------------------
இருவரை பேரரக்கன் எய்க்க அடர்த்தாய்
இருவரை ஏற்றாய்என் உள்ளத் திருவரை
மாவில் லெனக்கொண்டு மாற்றார் புரமெரித்தாய்
மாவில் லமைத்தேன் மனத்து.



பதம் பிரித்து:
இரு-வரை பேர் அரக்கன் எய்க்க அடர்த்தாய்!
இருவரை ஏற்றாய்! என் உள்ளத்து இரு; வரை
மா வில் எனக் கொண்டு மாற்றார் புரம் எரித்தாய்!
மா இல் அமைத்தேன் மனத்து!


இரு - 1) பெரிய (இருமை); 2) இரண்டு;
வரை - மலை;
பேர்த்தல் - பெயர்த்தல்;
எய்த்தல் - இளைத்தல்;
அடர்த்தல் - நசுக்குதல்;
ஏற்றல் - சுமத்தல்;
மா = 1) பெரிய; 2) அழகிய; சிறந்த;
மாவில் = 1) மா + வில் (பெரிய வில்) / 2) மா + இல் (அழகிய இல்லம்);
மாற்றார் - பகைவர்;
அடர்த்தாய், ஏற்றாய், எரித்தாய் - இவை, 'அடர்த்தவனே', 'ஏற்றவனே', 'எரித்தவனே' என்ற விளிகள்;
இரு வரை பேர் அரக்கன் எய்க்க அடர்த்தாய் - கயிலாய மலையைப் பெயர்த்த இராவணன் வருத்தம் உற, அவனை விரலால் நசுக்கியவனே;
இருவரை ஏற்றாய் - பார்வதி, கங்கை என்ற இருவரைத் தாங்கியவனே;
வரை மா வில் எனக்கொண்டு மாற்றார் புரம் எரித்தாய் - (மேரு) மலையைப் பெரிய வில்லாகக் கொண்டு பகைவர்களின் முப்புரங்களை எரித்தவனே;
என் உள்ளத்(து) இரு - எனது உள்ளத்தில் உறைவாயாக!
மா இல் அமைத்தேன் மனத்து - (உனக்கு என்) மனத்தில் சிறந்த இடம் அமைத்தேன்.
---------------------
2007-10-12
3.6.27) என்பார்க்கும் - கண்மறைக்கும் - மடக்கு
-------------------------------------------------
என்பார்க்கும் ஈசனவன் எங்குளன் காட்டுவாய்
என்பார்க்கும் இங்கே இயம்பலாம் என்பார்க்கும்
கண்மறைக்கும் கட்டிருந்தக் கால்?ஆங்கே ஆணவக்
கண்மறைக்கும் கைதொழார் கண்.



பதம் பிரித்து:
"என்பு ஆர்க்கும் ஈசன் அவன் எங்கு உளன்? காட்டுவாய்!"
என்பார்க்கும் இங்கே இயம்பலாம், "என் பார்க்கும்
கண், மறைக்கும் கட்டு இருந்தக்கால்? ஆங்கே, ஆணவக்
கள் மறைக்கும் கைதொழார் கண்.


என்பு - எலும்பு;
ஆர்த்தல் - அணிதல்;
என் - என்ன;
கண் = விழி; ஞானம்;
கால் - பொழுது;
கண்மறைக்கும் = கள் மறைக்கும்; (கள் - Toddy, vinous liquor; மது )
இலக்கணக் குறிப்பு :
(ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் - 154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.)


"என்பு ஆர்க்கும் ஈசன் அவன் எங்கு உளன்? காட்டுவாய்!" என்பார்க்கும் இங்கே இயம்பலாம் - "எலும்பை அணியும் ஈசனான சிவபெருமான் எங்கே இருக்கிறான்? எமக்குக் காட்டுவாயாக!" என்று கேட்பவர்க்கும் இங்கே விடை கூறலாம்;
என் பார்க்கும் கண், மறைக்கும் கட்டு இருந்தக்கால்? - கண்ணால் எதனைப் பார்க்க இயலும், அதனை மறைக்கின்ற ஒரு கட்டு இருக்கும்பொழுது?
ஆங்கே, ஆணவக் கள் மறைக்கும் கைதொழார் கண்! - அதுபோல், இறைவனை வணங்காதவரது அகக்கண்ணை (/அறிவை) ஆணவம் என்ற கள்ளானது (அதனால் உண்டாகும் மயக்கத்தினால்) மறைக்கும்.
---------------------
2007-10-13
3.6.28) திரியும் - நிலைத்துயர் - மடக்கு
-------------------------------------------------
திரியும் மனமே தினமும்சே ஏறித்
திரியும் மகேசன்சீர் செப்பு திரியும்
நிலைத்துயர் நீங்கிடும் நீங்காத அன்பே
நிலைத்துயர் வாழ்வடைவாய் நீ.



திரிதல் - 1) அலைதல்; 2) போதல்; 3) திரும்புதல் (return); / கெடுதல் (perish)
(திருமந்திரம் - முதல் தந்திரம் 5. யாக்கை நிலையாமை: "மன்றத்தே நம்பிதன்....திரிந்திலன் தானே" - .......திரும்பாமலே போய்விட்டான்).
சே - இடபம்; எருது;;
சீர் - புகழ்; பெருமை; இயல்பு;
செப்புதல் - சொல்லுதல்;
நிலை - 1) நிலைமை; தன்மை; 2) உறுதி; நிலைத்து இருத்தல்;
நீங்குதல் - பிரிதல்;


திரியும் மனமே - அலைகின்ற என் மனமே;
தினமும் - தினந்தோறும்,
சே ஏறித் திரியும் மகேசன் சீர் செப்பு - இடபத்தின்மேல் ஏறிச் செல்லும் சிவபெருமானது புகழைப் பாடுவாயாக;
திரியும் நிலைத் துயர் நீங்கிடும் - (இவ்வுலகில்) மீண்டும் வரும் (பிறக்கும்) நிலைமை என்ற துயரம் விலகிடும்; (-- அல்லது -- இழிந்து அழியும் நிலைமை என்ற துயரம் விலகிடும்);
நீங்காத அன்பே நிலைத்து உயர் வாழ்வு அடைவாய் நீ - என்றும் மாறாத அன்பே நிலைபெற்றுப், பேரின்ப வாழ்வைப் பெறுவாய் நீ!
---------------------
2007-10-15
3.6.29) துருத்திக்காற்று - அத்தனையும் - மடக்கு
-------------------------------------------------
துருத்திக்காற் றாக்கும் சுடுகனலை இங்கோ
துருத்திக்காற் றோடஅனல் சூழும் துருத்திக்காற்
த்தனையும் வீண்என்றிந்தின்றே நம்மையாற்
த்தனையும் அம்மையையும் போற்று.



தம் பிரித்து:
துருத்திக்காற்று ஆக்கும் சுடுகனலை; இங்கோ
துருத்திக்காற்று ஓட, அனல் சூழும்! துருத்திக்கு ஆற்று
அத்தனையும் வீண் என்று அறிந்து, இன்றே நம்யாற்று
அத்தனையும் அம்மையையும் போற்று.


துருத்திக்காற்று - துருத்தி + காற்று / துருத்திக்கு + ஆற்று;
துருத்தி - 1) உலை ஊது கருவி (bellows); 2,3) தோற்பை - உடலுக்கு ஆகுபெயர்;
காற்று - 1) வாயு; 2) மூச்சுக்காற்று; சுவாசம்; உயிர்ப்பு;
ஆற்றுதல் - செய்தல்;
ஆக்குதல் - செய்தல்;
கனல் - நெருப்பு;
ஓடுதல் - செல்லுதல்;
அனல் - தீ;
அத்தனையும் - அத்தனை + உம் / அத்தன் + + உம்;
அத்தன் - தந்தை; சிவன்;
அத்தனையும் - 1) அவ்வளவும்; எல்லாமும்; 2) சிவனையும்;
நம்மையாற்று - நம் + ஐயாற்று / நம்மை + ஆற்று;
ஐயாற்று - திருவையாற்றில்;
ஆற்றுதல் - தாங்குதல்;
அம்மை - தாய்; பார்வதி;


துருத்திக் காற்று ஆக்கும் சுடு கனலை - (கொல்லனது) துருத்தியிலிருந்து வரும் காற்றுச், சுடுகிற நெருப்பை நன்கு எரியச் செய்யும்;
இங்கோ துருத்திக் காற்று ஓட, அனல் சூழும் - (ஆனால்), இங்கே, தோற்பை ஆகிய உடலிலுள்ள உயிர்ப்புச் சென்றுவிட, (தனைச்) சுற்றித் தீ இருக்கும்;
துருத்திக்கு ஆற்று அத்தனையும் வீண் என்று அறிந்து - (எனவே, இந்த) உடலுக்குச் செய்யும் எல்லாம் பயன் அற்றன என்று உணர்ந்து;
இன்றே நம்யாற்று அத்தனையும் அம்மையையும் போற்று - இப்பொழுதே, திருவையாற்றில் எழுந்தருளும் நம் அம்மையப்பனை வணங்குவாயாக! (-- அல்லது -- இப்பொழுதே, நம் அனைவரையும் தாங்கும் அப்பனையும் அன்னையையும் வணங்குவாயாக!)
("மனமே!" என்ற விளி தொக்கு நிற்கின்றது).
---------------------
2007-10-16
3.6.30) தொடுத்தசரம் - அந்தத்தில் - மடக்கு
-------------------------------------------------
தொடுத்தசரம் ஒன்றால் எயில்மூன்று சுட்டான்,
தொடுத்தசரம் சூடிய தூயன் தொடுத்தசரம்
அந்தத்தில் தன்னுள் அடங்க ஒடுக்குவதும்,
அந்தத்தில் ஆடும் அவன்!



தொடுத்தல் - 1) எய்தல்; 2) பூ முதலியவற்றை இணைத்தல்; 3) படைத்தல்;
சரம் - 1) மாலை; 2) அம்பு; 3) நடப்பன/அசைவன/இயங்குவன. உயிர்கள்; (அசரம் - நிற்பன; இங்கே தொக்கு நிற்கின்றது).
எயில் - கோட்டை; மதில்;
சூடுதல் - அணிதல்;
அந்தம் - 1) முடிவு; 2) இருட்டு;
ஒடுக்குதல் - லயிக்கச்செய்தல் (to cause to merge one in another);


தொடுத்த சரம் ஒன்றால் எயில் மூன்று சுட்டான் - எய்த ஓர் அம்பினால் முப்புரங்களையும் சுட்டு எரித்தான்;
தொடுத்த சரம் சூடிய தூயன் - தொடுத்த மலர் மாலைகள் அணிந்த புனிதன்;
தொடுத்த சரம் அந்தத்தில் தன்னுள் அடங்க ஒடுக்குவதும் - படைத்த உயிர்கள் முடிவில் தன்னுள்ளே அடங்கும்படி (அவற்றை) ஒடுக்குபவனும்
அந்தத்தில் ஆடும் அவன் - இருட்டில் நடம் ஆடும் அவனே!
("ப்பெருமானை வணங்குவாயாக" என்பது தொக்கு நிற்கின்றது).
---------------
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------

Thursday, June 21, 2018

3.6.21 - 3.6.25 - அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு


03.06 – மடக்கு



2007-07-19
3.6.21) அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு
-------------------------------------------------
அம்மையும் அப்பனும் ஆனவன் அன்பர்கட்
கம்மையும் ஆவான் துணைகண்டத் தம்மையும்
உண்ணஞ்சால் உண்டான தோயா தடிபோற்றி
உண்ணஞ்சால் உண்டேயிங் குய்வு!



பதம் பிரித்து:
அம்மையும் அப்பனும் ஆனவன் அன்பர்கட்கு
அம்மையும் ஆவான் துணை; கண்டத்து அம்-மையும்
உண் நஞ்சால் உண்டானது; ஓயாது அடிபோற்றி
உள் நஞ்சால் உண்டே இங்கு உய்வு!


அம்மை - 1) தாய்; 2) வருபிறப்பு (இனி வரும் பிறப்பு);
மை - கருநிறம்;
உண்ணஞ்சால் - 1) உண் நஞ்சால்; 2) உள் நஞ்சால்;
உள் - உள்ளம்;
நஞ்சு - 1) விடம்; 2) நைந்து (உள் நைந்து - மனம் உருகி);
(சம்பந்தர் தேவாரம் - 3.97.5 - "...பெற்றிகொள் பிறைமுடி யீருமைப் பேணிநஞ் சற்றவ ரருவினை யிலரே" - நஞ்சு - நைந்து, மனம் குழைந்து. நஞ்சு - போலி)


அம்மையும் அப்பனும் ஆனவன் - அம்மையப்பன்;
அன்பர்கட்கு அம்மையும் ஆவான் துணை - பக்தர்களுக்கு இனி வரும் பிறவியிலும் துணை ஆவான்; (சம்பந்தர் தேவாரம் - 3.22.6 - தும்மல் இருமல்... அம்மையினும் துணை அஞ்செழுத்துமே)
கண்டத்து அம் மையும் உண் நஞ்சால் உண்டானது - (அவனுடைய) கழுத்தில் இருக்கும் அந்தக் கருநிறமும் (தேவர்கள் வேண்ட) உண்ட ஆலகால விடத்தால் உண்டானது.
ஓயாது அடி போற்றி உள் நஞ்சால் உண்டே இங்கு உய்வு - சதா அவனது திருவடியைப் போற்றி உள்ளம் உருகினால், உய்வு பெறலாம்.
---------------------
2007-07-24
3.6.22) கற்பனை - அந்தன் - மடக்கு
-------------------------------------------------
கற்பனை கல்லால்கீழ்க் கற்பிக்கும் முக்கணனைக்
கற்பனை என்றுரைப்பார் காணாரே கற்பனை
அந்தன் எனவாக்கும் ஆணவம்! தாள்தொழ
அந்தன் இடரும்போம் அங்கு.



கற்பனை - 1) போதனை; கல்வி; 2) இல்லாததை இருப்பதாக எண்ணுவது; 3) கற்பன்+
கற்பன் - கல்வியுள்ளவன்;
- இரண்டாம் வேற்றுமை உருபு;
அந்தன் - 1) அறிவில்லாதன்; குருடன்; 2) எமன்;


கற்பனை கல்லால்கீழ்க் கற்பிக்கும் முக்கணனைக் கற்பனை என்று உரைப்பார் காணாரே - சனகாதியருக்கு ஞானத்தைக் கல்லால மரத்தின்கீழ்ப் போதித்த முக்கண்ணனை இல்லை என்று உரைப்பவர்களால் காண இயலாது.
கற்பனை அந்தன் எனவாக்கும் ஆணவம் - படித்தவனையும் ஆணவம் குருடன் ஆக்கும்;
தாள் தொழ அந்தன் இடரும் போம் அங்கு - ஈசன் திருவடியை வணங்கினால் எமபயமும் நீங்கும்;
---------------------
2007-07-24
3.6.23) திரையடை - ஒற்றி - மடக்கு
-------------------------------------------------
திரையடை நாள்வரும்ஊர் சேர்ந்தழவுன் ஆட்டத்
திரையடை நாள்வரும்; சிந்தி! திரையடை
ஒற்றி தனில்நெஞ்சே, ஓர்பங்கில் பார்வதி
ஒற்றி உறைஇறையை ஓது!



திரை - 1) சுருக்கம்; 20 திரைச்சீலை(curtain); 3) அலை/கடல்;
அடைதல் - எய்துதல்; கிட்டுதல்;
அடைத்தல் - மூடுதல்;
ஒற்றி - திருஒற்றியூர்;
ஒற்றுதல் - பொருந்துதல்; ஒன்றிற்படும்படி சேர்த்தல்; தழுவுதல்;
ஒற்றி - ஒன்றாகி; ஒன்றுபட்டு; (அப்பர் தேவாரம் - 5.24.1 - ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை)
ஓதுதல் - பாடுதல்;


திரை அடை நாள் வரும் - (தோல்) சுருக்கம் அடையும் காலம் வரும்; (மூப்பு வந்துவிடும்);
ஊர் சேர்ந்து அழ உன் ஆட்டத் திரை அடை நாள் வரும் - சுற்றமும் ஊரும் கூடி அழும்படி ((எமன் வரவால் இந்த உலக மேடையில்) உன் ஆட்டம் ஆகித் திரையை மூடும் காலம் வரும்;
சிந்தி நெஞ்சே - மனமே! எண்ணிப் பார்!
திரை அடை ஒற்றிதனில் ஓர் பங்கில் பார்வதி ஒற்றி உறை இறையை ஓது - கடல்அலை அடைகின்ற திருஒற்றியூரில் ஒரு பங்காக உமையம்மை பொருந்தி இருக்கும் இறைவனைப் பாடு!
---------------------
2007-07-31
3.6.24) மஞ்சளை - பூசி - மடக்கு
-------------------------------------------------
மஞ்சளை மாகயிலை மன்னனைப் பாடாது
மஞ்சளை மங்கையே! வந்திடுவாய்! மஞ்சளைப்
பூசி மடுவிற் புகுந்தாடிப் பொன்னடியைப்
பூசி! வினைஅற்றுப் போம்.



மஞ்சு - 1) மேகம்; 2) கட்டில்;
அளைதல் - தழுவுதல்; கலத்தல்; துழாவுதல்;
மா - அழகிய; சிறந்த; பெருமை;
பூசுதல் - தடவுதல்;
மடு - நீர்நிலை;
ஆடுதல் - குளித்தல்;
பூசித்தல் - பூசை செய்தல்;


(குறிப்பு: திருவெம்பாவையை ஒட்டிய கருத்து).
மஞ்சு அளை மா கயிலை மன்னனைப் பாடாது மஞ்சு அளை மங்கையே! - மேகம் தழுவும் அழகிய கயிலை மலையில் உறையும் அரசனாகிய சிவபெருமானைப் பாடாமல், கட்டிலைத் தழுவும் (உறங்கும்) பெண்ணே!
மஞ்சளைப் பூசி மடுவில் புகுந்(து) ஆடிப் பொன் அடியைப் பூசி! - மஞ்சளை (உடலில்) பூசி, நீர்நிலையில் குளித்து, (அவனுடைய) பொன் போன்ற திருவடிகளைப் பூசை செய்! (அப்படிச் செய்தால்) வினைகள் அழிந்து போகும்.
---------------------
2007-09-29
3.6.25) விண்டு - மதுவார் - மடக்கு
-------------------------------------------------
விண்டு தொழநீள் வியன்தழலைப் போற்றவினை
விண்டு விடும்நெஞ்சே மென்மலர்கள் விண்டு
மதுவார் சிறைவண்டு வந்தறையும் தில்லை
மதுவார் சடையன்தாள் வாழ்த்து.



பதம் பிரித்து:
விண்டு தொழ நீள் வியன் தழலைப் போற்ற வினை
விண்டு விடும்! நெஞ்சே! மென் மலர்கள் விண்டு,
மது ஆர் சிறை வண்டு வந்து அறையும் தில்லை
மது, வார் சடையன் தாள் வாழ்த்து.


விண்டு - 1) திருமால்; 2) நீங்கி; 3) மலர்ந்து; (விள்ளுதல் - நீங்குதல்; மலர்தல்; சொல்லுதல்);
மதுவார் = மது + ஆர் / மது + வார்;
மது - 1) தேன்; 2) அமுதம்;
ஆர்தல் - 1) உண்ணுதல்; நிறைதல்; பொருந்துதல்; அணிதல்;
வார்தல் - 1) நெடுமையாதல்; 2) ஒழுகுதல்/சொரிதல்;
சிறை - இறகு;
தில்லை மது - தில்லையில் உள்ள அமுதம்/தேன் - கூத்தப்பிரான். (அப்பர் தேவாரம் - திருமுறை 4.39.1 - "குண்டனாய்ச் சமண ரோடே ...திருவையாறு அமர்ந்த தேனே...");
வார் சடை - நீண்ட சடை;
மது ஆர் சடை - தேன் (மலர்கள்) பொருந்திய சடை;
மது வார் சடை - (அப்பர் தேவாரம் 5.85.1 - மட்டுவார் குழலாள்...);
தில்லை மதுவார் சடையன் - தில்லை மது, வார் சடையன் / தில்லை மது ஆர் சடையன்;


விண்டு தொழ நீள் வியன் தழலைப் போற்ற - விஷ்ணு (அடி தேடிக் காணாது) வணங்குமாறு ஓங்கிய பெரிய சோதியைத் துதித்தால்;
வினை விண்டு விடும் - வினை நீங்கிவிடும்;
நெஞ்சே - (அதனால்) மனமே!
மென் மலர்கள் விண்டு - மென்மையான் மலர்கள் மலர்ந்து;
மது ஆர் சிறை வண்டு வந்து அறையும் - தேன் உண்ணும், சிறகுகளை உடைய வண்டுகள் வந்து ரீங்காரம் செய்யும்;
தில்லை மது வார் சடையன் தாள் வாழ்த்து - தில்லையில் உறையும் தேன்/அமுதம் ஆன, நீண்ட சடையை உடைய, சிவன் திருவடியை வணங்கு; (--அல்லது-- தில்லையில் உறையும், இன்பத் தேன் சொரியும், சடை உடைய சிவன் திருவடியை வணங்கு) (--அல்லது-- தில்லையில் உறையும், தேன் பொருந்திய மலர்களை அணிந்த சடை உடைய சிவன் திருவடியை வணங்கு);
(பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - திருமுறை 12.242: - "மன்றுள் ஆடு மதுவின் நசையாலே மறைச்சுரும்பு அறை புறத்தின் மருங்கே ...");
---------------
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------