Tuesday, April 26, 2022

06.01.126 - சிவன் - புகை - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-10-09

06.01.126 - சிவன் - புகை - சிலேடை

-----------------------------------------------

கானகத்துத் தீயினைக் காட்டுமே ஓடுமஞ்சு

வானடையும் காருமணி வண்ணமாம் - ஏனம்

அடையாத வாறிருக்கும் அண்டுவார் கண்ணீர்

மடையாம் அரன்புகை மாண்பு.


சொற்பொருள்:

கானகத்துத் தீ - 1. காட்டுத்தீ; / 2. சுடுகாட்டில் தீ;

ஓடுமஞ்சு - 1. ஓடு மஞ்சு / 2. ஓடும் அஞ்சு;

காருமணி - 1. காரும் அணி; / 2. காரும் மணி;

வான் - 1. வானம்; / 2. தேவர்கள்;

ஏனம் - 1. பாத்திரம்; / 2. பன்றி;

அண்டுதல் - 1. நெருங்குதல்; / 2. சரண் அடைதல்;

மடை - மதகு; ஓடை;

மாண்பு - பெருமை;


புகை:

கானகத்துத் தீயினைக் காட்டுமே - காட்டில் இருக்கும் தீயை உணர்த்தும்;

ஓடு மஞ்சு வான் அடையும் - ஓடுகின்ற மேகம் திகழும் வானைச் சென்று அடையும்;

காரும் அணி வண்ணம் ஆம் - கரிய நிறம் பூண்டிருக்கும்;

ஏனம் அடையாதவாறு இருக்கும் - பாத்திரத்தில் அடைக்க இயலாதபடி இருக்கும்;

அண்டுவார் கண் நீர் மடை ஆம் - நெருங்குபவர்களது கண் நீர் பாயும் மடை ஆகும்;

புகை மாண்பு - புகையின் பெருமை (தன்மை);


சிவன்:

கானகத்துத் தீயினைக் காட்டுமே - சுடுகாட்டில் தீயைக் காட்டுவான்; (தீயினிடை ஆடுபவன்; தீயை ஏந்தி ஆடுபவன்);

ஓடும் அஞ்சு வான் அடையும் - (ஆலகால விஷத்தைக் கண்டு) ஓடுகின்ற பயந்த தேவர்கள் சென்றடைவார்கள்;

காரும் மணி வண்ணம் ஆம் - (அவ்விஷத்தை உண்டதால்) கருமையும் (கழுத்தில்) மணி போல் ஆகும்;

ஏனம் அடையாதவாறு இருக்கும் - (திருமால் பிரமன் இவர்கள் பன்றியும் அன்னமும் ஆகி அடிமுடி தேடியபொழுது பிரமனும்) பன்றியான திருமாலும் அடையாதபடி இருக்கும்;

அண்டுவார் கண் நீர் மடை ஆம் - சரண் புகுந்த பக்தர்களின் கண் நீர் பாயும் மடை ஆகும்;

அரன் மாண்பு - சிவபெருமான் மாட்சிமை;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.125 - சிவன் - காது - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-10-02

06.01.125 - சிவன் - காது - சிலேடை

-----------------------------------------------

ஆடி அமரும் அரவத்தை ஏற்றிருக்கும்

தோடியையும் கேள்வழியாம் சுந்தரமாய் - மாடிருக்கும்

நாந்துஞ்சும் போதழைக்கில் கேட்டுதவும் நம்காது

சேந்தனைத் தந்த சிவன்.


சொற்பொருள்:

ஆடி - 1. கண்ணாடி; (இங்கே பார்வையைச் சரிசெய்ய உதவும் கண்ணாடி); / 2. கூத்தாடுபவன்; அசைந்து;

அமர்தல் - 1. இருத்தல்; / 2. விரும்புதல்;

அரவம் - 1. ஒலி; / 2. பாம்பு;

இயைதல் - பொருந்துதல்;

தோடியையும் - 1. தோடியையும் (ராகம்); / 2. தோடு இயையும் (பொருந்தும்);

கேள் - 1. கேட்டல்; / 2. துணைவன்; உறவு;

மாடு - 1. பக்கம்; பொன்; செல்வம்; 2. எருது (இக்கால வழக்கில்);

துஞ்சுதல் - 1. துயிலுதல்; / 2. இறத்தல்;

சேந்தன் - முருகன்;

தருதல் - மகப்பெறுதல் (To beget);


காது:

ஆடி அமரும் - பார்வையைச் சரிசெய்ய உதவும் 'மூக்குக்' கண்ணாடியைத் தாங்கும்;

அரவத்தை ஏற்றிருக்கும் - ஒலியைக் கேட்கும்;

தோடியையும் கேள் வழி ஆம் - தோடி இராகத்தையும் கேட்கும் புலன் ஆகும்;

சுந்தரமாய் மாடு இருக்கும் - அழகுறத் தலையின் பக்கத்தில் இருக்கும்; (பொன், மணி, போன்றன அழகுசெய்யும்);

நாம் துஞ்சும் போது அழைக்கில் கேட்டு உதவும் - நாம் துயிலும்போது எவரேனும் அழைத்தால் அவ்வொலியைக் கேட்டு நாம் துயிலெழ உதவும்;

நம் காது - நம் செவி;


சிவன்:

ஆடி அமரும் அரவத்தை ஏற்றிருக்கும் - அசைந்து தங்குகின்ற பாம்பை முடிமேல் ஏற்றிருப்பான்; ("ஆடி - கூத்தாடுபவன்" என்றும், "அமரும் அரவத்தை ஏற்றிருக்கும் - பாம்பை விரும்பி முடிமேல், மேனிமேல் ஏற்பவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);

தோடு இயையும் - பெண்கள் அணியும் தோடும் பொருந்தும் - அர்த்தநாரி; (தோடு - தோடும் - உம்மைத்தொகை);

கேள் வழி ஆம் - (உம்மைத்தொகை - கேளும் வழியும்) - அடியவர்களுக்கு உறவும் ஆகி, அவர்கள் செல்லும் நெறியும் ஆவான்;

சுந்தரமாய் மாடு இருக்கும் - அழகுற எருது இருக்கும்;

நாம் துஞ்சும் போது அழைக்கில் கேட்டு உதவும் - நாம் இறக்கும் சமயத்தில் திருநாமத்தைச் சொல்லி அழைத்தால், அது கேட்டு அருள்வான்;

சேந்தனைத் தந்த சிவன். - முருகனை அருளிய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.127 – தஞ்சாவூர் இராசராசேச்சரம் - மந்திரம் ஒன்றையும் - (வண்ணம்)

06.02.127 – தஞ்சாவூர் இராசராசேச்சரம் - மந்திரம் ஒன்றையும் - (வண்ணம்)

2010-09-18

6.2.127) மந்திரம் ஒன்றையும் - தஞ்சாவூர் இராசராசேச்சரம்

-------------------------

(தந்தன தந்தன .. தனதான)

(கிட்டிய திருப்புகழ்ப் பாடல்களில் இச்சந்தத்தில் பாடல் இல்லை என்று எண்ணுகின்றேன்)


மந்திர மொன்றையு .. மறியாமல்

.. .. வந்தடை பண்டைய .. வினைமூடி

.. வஞ்சக ஐம்புலன் .. நசையாலே

.. .. வன்பிணி மண்டிட .. அழிவேனோ

சந்திரன் அம்பணி .. சடையானே

.. .. சங்கர தஞ்சையில் .. அடியார்கள்

.. சந்தம ணங்கமழ் .. தமிழ்பாடத்

.. .. தந்தரு ளும்பெரு .. வுடையானே

கந்தனை அன்றருள் .. எரியாரும்

.. .. கண்டிக ழுந்திரு .. நுதலானே

.. கஞ்சனும் விண்டுவும் .. மிகநேடிக்

.. .. கம்பமு றும்படி .. எழுசோதீ

சந்தத நின்பெயர் .. நினைமாணி

.. .. தன்புடை வந்தடை .. நமன்மாளத்

.. தண்டனை தந்திடு .. கழலானே

.. .. சங்கரி ஒன்றிய .. பெருமானே.


பதம் பிரித்து:

மந்திரம் ஒன்றையும் அறியாமல்,

.. .. வந்து அடை பண்டைய வினை மூடி,

.. வஞ்சக ஐம்புலன் நசையாலே,

.. .. வன்-பிணி மண்டிட அழிவேனோ?

சந்திரன் அம்பு அணி சடையானே;

.. .. சங்கர; தஞ்சையில் அடியார்கள்

.. சந்த மணம் கமழ் தமிழ் பாடத்

.. .. தந்தருளும் பெருவுடையானே;

கந்தனை அன்று அருள் எரி ஆரும்

.. .. கண் திகழும் திருநுதலானே;

.. கஞ்சனும் விண்டுவும் மிக நேடிக்

.. .. கம்பம் உறும்படி எழு சோதீ;

சந்ததம் நின் பெயர் நினை மாணி

.. .. தன் புடை வந்து அடை நமன் மாளத்

.. தண்டனை தந்திடு கழலானே;

.. .. சங்கரி ஒன்றிய பெருமானே.


மந்திரம் ஒன்றையும் அறியாமல் - வேதமந்திரங்கள் எவற்றையும் அறியாமல்; (சுந்தரர் தேவாரம் - 7.100.3 - "மந்திரம் ஒன்றறியேன்");

வந்து அடை பண்டைய வினை மூடி - என்னை வந்து அடைகின்ற பழவினைகள் சூழ்ந்து மூட;

வஞ்சக ஐம்புலன் நசையாலே, வன்-பிணி மண்டிட அழிவேனோ - வஞ்சம் செய்யும் ஐம்புலன் ஆசைகளால் கொடிய பிணி மிகுந்து, அழிந்துவிடாவண்ணம் என்னைக் காத்தருள்வாயாக; (நசை - ஆசை);

சந்திரன் அம்பு அணி சடையானே - சந்திரனையும் கங்கையையும் சடையில் அணிந்தவனே; (அம்பு - நீர்; अम्बु - Water; Same root in the word அம்புஜம் - தாமரை);

சங்கர - சங்கரனே; (சங்கரன் - சுகத்தைச் செய்பவன் - சிவன் திருநாமம்);

தஞ்சையில் அடியார்கள் சந்த மணம் கமழ் தமிழ் பாடத் தந்தருளும் பெருவுடையானே - தஞ்சாவூரில் அடியவர்கள் அழகும் ஓசைநயமும் மிக்க தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வணங்க, அவர்களுக்கு அருள்புரியும் பெருவுடையானே; (சந்தம் - செய்யுளின் வண்ணம்; சந்தனம்; அழகு); (சந்த மணம் கமழ் தமிழ் - "சந்தத் தமிழ், மணம் கமழ் தமிழ்" என்று இயைக்க); (தந்தருளுதல் - ஈதல்; கொடுத்தல்); (பெருவுடையான் - பிரகதீஸ்வரன் - தஞ்சைப் பெரியகோயில் ஈசன் திருநாமம்);

கந்தனை அன்று அருள் எரிரும் கண் திகழும் திருநுதலானே - முன்பு முருகனை அருளிய தீப் பொருந்திய கண் திகழும் நெற்றியை உடையவனே; (எரி - நெருப்பு); (நுதல் - நெற்றி);

கஞ்சனும் விண்டுவும் மிக நேடிக் கம்பம் உறும்படி எழு சோதீ - பிரமனும் திருமாலும் மிகவும் தேடி நடுங்கும்படி உயர்ந்த சோதிவடிவினனே; (கஞ்சன் - பிரமன்); (விண்டு - விஷ்ணு); (நேடுதல் - தேடுதல்); (கம்பம் - நடுக்கம்; அச்சம்);

சந்ததம் நின் பெயர் நினை மாணி தன் புடை வந்து அடை நமன் மாளத் தண்டனை தந்திடு கழலானே - எப்பொழுதும் உன் திருநாமத்தைத் தியானித்த மார்க்கண்டேயரிடம் வந்தடைந்த காலனே இறக்கும்படி அவனைத் தண்டித்த திருவடியினனே; (சந்ததம் - எப்பொழுதும்); (மாணி - மார்க்கண்டேயர்); (புடை - பக்கம்; ஏழாம் வேற்றுமையுருபு); (கழலான் - கழல் அணிந்த திருவடி உடையவன்);

சங்கரி ஒன்றிய பெருமானே - உமை ஒரு பாகமாக இணைந்த பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.124 - சிவன் - தேசியக் கொடி (national flag) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2010-09-25

06.01.124 - சிவன் - தேசியக் கொடி (national flag) - சிலேடை

-----------------------------------------------

மாலை இறக்குவதாற் காலை உயர்த்துவதாற்

கோலத்தைக் கண்டுலகு கும்பிடுஞ் - சீலத்தான்

மாவேறு வண்ணத்தால் வானோங்கு கம்பத்தான்

மாவாறு சூடி கொடி.


சொற்பொருள்:

மால் - திருமால்; அறியாமை;

இறக்குதல் - இறங்கச்செய்தல்; அடக்குதல்;

உலகு - உலகம் - 1. (நாடு முதலிய) நிலப்பகுதி; நாட்டுமக்கள்; 2. பெரியோர்; நன்மக்கள்; ("உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" - சேந்தன் திவாகர நிகண்டு);

சீலம் - தன்மை;

மா - 1. அழகிய; 2. விலங்கு; (இங்கே, எருது); பெரிய;

வேறு - பிறிது (வெவ்வேறு); சிறப்புடையது;

வண்ணம் - குணம்; நிறம்;

கம்பம் - தூண்; கச்சி ஏகம்பம்; (ஏகாம்பரேஸ்வரர் கோயில்);

இலக்கணக் குறிப்பு: புணர்ச்சி விதி: 'ல்' - இதனை அடுத்து மகரத்தில் தொடங்கும் சொல் வந்தால், அந்த 'ல்', 'ன்' ஆகத் திரியும். உதாரணம்: சொல் + மாலை = சொன்மாலை;


தேசியக் கொடி (national flag):

மாலை இறக்குவதால் - சாயங்காலத்தில் இறக்குவார்கள்;

காலை உயர்த்துவதால் - காலை வேளையில் ஏற்றுவார்கள்;

கோலத்தைக் கண்டு உலகு கும்பிடும் சீலத்தால் - அதனைக் கண்டு நாட்டுமக்கள் வணங்குவார்கள்;

மா வேறு/ஏறு வண்ணத்தால் - அழகிய சிறந்த நிறம் கொண்டது; அழகு ஏறும் நிறம் உடையது;

வான் ஓங்கு கம்பத்தால் - உயர்ந்த கம்பத்தில் திகழும்;

கொடி - தேசியக்கொடி;


சிவன்:

மாலை இறக்குவதால் - அடி தேடிய திருமாலை மண் அகழ்ந்து கீழே செல்லச்செய்ததால்; (-- அல்லது -- அறியாமையை அடக்குவதால்/அழிப்பதால்);

காலை உயர்த்துவதால் - நடமிடும்போது திருவடியைத் தூக்குவதால்;

கோலத்தைக் கண்டு உலகு கும்பிடும் சீலத்தால் - திருவுருக் கண்டு மக்கள் வணங்கும் தன்மையால்;

மா ஏறு வண்ணத்தால் - இடபத்தின்மேல் ஏறும் குணத்தால்;

வான் ஓங்கு கம்பத்தான் - வானில் சோதியாய் நீண்ட, கச்சி ஏகம்பத்தில் இருப்பவன்; (-- அல்லது -- வானில் உயர்ந்த ஒளித்தூண் ஆனவன்);

மா ஆறு சூடி - பெரிய கங்கையைச் சூடியவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

06.02.126 – பொது - அகமதில் ஊற்றெனத் - (வண்ணம்)

06.02.126 – பொது - அகமதில் ஊற்றெனத் - (வண்ணம்)


2010-09-14

6.2.126) அகமதில் ஊற்றெனத் - பொது

-------------------------

தனதன தாத்தனத் .. தனதான

(சருவிய சாத்திரத் திரளான - திருப்புகழ் - பொது)


அகமதி லூற்றெனத் .. தினமாசை

.. அவைமிக ஆர்த்தெழச் .. சுழலாமல்

சுகநிலை கூட்டுமத் .. திருநாமம்

.. சொலியுனை ஏத்திடப் .. பெறுவேனோ

இகலிய மாற்கயற் .. கரியானே

.. இடுபலி ஏற்றிடத் .. திரிவோனே

புகழடி யார்க்குநற் .. றுணையானாய்

.. புரிசடை மேற்பிறைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

அகம்-அதில் ஊற்று எனத் தினம் ஆசை

.. அவை மிக ஆர்த்து எழச் சுழலாமல்,

சுகநிலை கூட்டும் அத்-திருநாமம்

.. சொலி உனை ஏத்திடப் பெறுவேனோ?

இகலிய மாற்கு அயற்கு அரியானே;

.. இடுபலி ஏற்றிடத் திரிவோனே;

புகழ்-அடியார்க்கு நற்றுணை ஆனாய்;

.. புரிசடைமேற் பிறைப் பெருமானே.


அகம்-தில் ஊற்று எனத் தினம் ஆசை-அவை மிக ஆர்த்து எழச் சுழலாமல் - என் மனத்தில் ஊற்றுப் போலத் தினமும் ஆசைகள் மிக ஒலித்துப் பொங்கி எழ அதனால் வருந்திக் கலங்காமல்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (சுழல்தல் - மனம் கலங்குதல்);

சுகநிலை கூட்டும் அத்-திருநாமம் சொலினை ஏத்திடப் பெறுவேனோ - இன்பநிலையை அளிக்கும் அந்தத் திருவைந்தெழுத்தைச் சொல்லி உன்னை துதிக்க அருள்வாயாக; (சொலி - சொல்லி - இடைக்குறையாக வந்தது); (உனை - உன்னை);

இகலிய மாற்கு அயற்கு அரியானே - முரண்பட்ட திருமாலுக்கும் பிரமனுக்கும் அறிய ஒண்ணாதவனே; (இகல்தல் - மாறுபடுதல்; போட்டியிடுதல்); (மாற்கு - மால்+கு - மாலுக்கு); (அயற்கு - அயனுக்கு - பிரமனுக்கு);

இடுபலி ஏற்றிடத் திரிவோனே - பிச்சையை ஏற்க உழல்பவனே; (பலி - பிச்சை);

புகழ்-டியார்க்கு நற்றுணைனாய் - புகழும் பக்தர்களுக்கு நல்ல துணை ஆனவனே;

புரிசடைமேற் பிறைப் பெருமானே - முறுக்குண்ட சடைமேல் பிறைச்சந்திரனைச் சூடிய பெருமானே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.125 – பொது - சொந்தங்களுண்டு - (வண்ணம்)

06.02.125 – பொது - சொந்தங்களுண்டு - (வண்ணம்)


2010-09-13

6.2.125) சொந்தங்களுண்டு - பொது

-------------------------

தந்தந் தனந்த தந்தந் தனந்த

தந்தந் தனந்த .. தனதான

(தந்தந்த தந்த தந்தந்த தந்த

தந்தந்த தந்த .. தனதான -- என்றும் கருதலாமோ?)

(சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த - திருப்புகழ் - பொது)


சொந்தங் களுண்டு பந்தங் களுண்டு

.. .. துன்பந் தொடர்ந்து .. தருமாறே

.. துன்றும் புரிந்த தென்றுங் கனன்று

.. .. தொந்தங் கழன்று .. மகிழ்வேனோ

வந்தண் டுமும்பர் நெஞ்சங் கலங்கு

.. .. வஞ்சஞ் செறிந்த .. விடமேவி

.. மஞ்சென் றிலங்கும் ஒண்கண் டமைந்த

.. .. மண்தின் றுமிழ்ந்த .. அரிகாணா

அந்தங் கடந்த உன்றன் பதங்கள்

.. .. அஞ்சும் புகன்று .. தெளிவேனோ

.. அண்டம் பயந்து நின்றுந் தொழும்பர்

.. .. அங்கங் கிறைஞ்ச .. உறைவோனே

சந்தம் பிறங்கு செஞ்சொல் மிடைந்து

.. .. தங்குங் கவின்கொள் .. இசைபாடு

.. சம்பந் தர்நெஞ்சில் என்றுந் திகழ்ந்த

.. .. சங்கம் புனைந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

சொந்தங்கள் உண்டு, பந்தங்கள் உண்டு,

துன்பம் தொடர்ந்து தருமாறே,

துன்றும் புரிந்தது என்றும் கனன்று;

தொந்தம் கழன்று மகிழ்வேனோ?


வந்து அண்டும் உம்பர் நெஞ்சம் கலங்கு

வஞ்சம் செறிந்த விடம் மேவி,

மஞ்சு என்று இலங்கும் ஒண் கண்ட; மைந்த;

மண் தின்று உமிழ்ந்த அரி காணா,


அந்தம் கடந்த உன்றன் பதங்கள்

அஞ்சும் புகன்று தெளிவேனோ?

அண்டம் பயந்து நின்றும், தொழும்பர்

அங்கு அங்கு இறைஞ்ச உறைவோனே;


சந்தம் பிறங்கு செஞ்சொல் மிடைந்து

தங்கும் கவின்கொள் இசை பாடு

சம்பந்தர் நெஞ்சில் என்றும் திகழ்ந்த,

சங்கம் புனைந்த பெருமானே.


சொந்தங்கள் உண்டு, பந்தங்கள் உண்டு, துன்பம் தொடர்ந்து தருமாறே - ஓயாமல் துன்பம் தருமாறு குடும்ப வாழ்க்கையும் (உறவினரும்) பற்றுகளும் உண்டு; (பந்தம் - பற்று; கட்டு);

(துன்பம் தொடர்ந்து தருமாறே) துன்றும் புரிந்தது என்றும் கனன்று - (துன்பம் தொடர்ந்து தருமாறே) புரிந்தது என்றும் கனன்று துன்றும் - ஓயாமல் துன்பம் தருமாறு முன் புரிந்த பழவினை நெருங்கி எப்பொழுதும் சுட்டெரிக்கும்; (துன்றுதல் - நெருங்குதல்; பொருந்துதல்); (கனல்தல் - எரிதல்; சுடுதல்); ("துன்பம் தொடர்ந்து தருமாறே" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

தொந்தம் கழன்று மகிழ்வேனோ - (இத்துன்பம் எல்லம் தீருமாறு) நல்வினை தீவினை என்ற இரண்டும் நீங்கி இன்புறுவேனோ? (தொந்தம் - இரட்டை - நல்வினை தீவினை, விருப்பு வெறுப்பு, இத்யாதி); (அப்பர் தேவாரம் - 5.1.4 - "தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்"); (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - அடி-52 - "அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்");


வந்து அண்டும் உம்பர் நெஞ்சம் கலங்கு வஞ்சம் செறிந்த விடம் மேவி - வந்து சரண்புகுந்த தேவர்கள் மனம் கலங்கும்படி அவர்களை வருத்திய கொடிய ஆலகால விடத்தை விரும்பி உண்டு; (மேவுதல் - விரும்புதல்; உண்ணுதல்);

மஞ்சு என்று இலங்கும் ஒண் கண்ட - மேகம் போல் விளங்கும் ஒளியுடைய கண்டனே; (மஞ்சு - மேகம்); (ஒண்மை - ஒளி);

மைந்த - வீரனே; (மைந்தன் - வீரன்);

மண் தின்றுமிழ்ந்த அரி காணா, அந்தம் கடந்த உன்றன் பதங்கள் அஞ்சும் புகன்று தெளிவேனோ - மண்ணை உண்டு உமிழ்ந்த திருமால் காணாத, முடிவு இல்லாத உன்னுடைய திருவைந்தெழுத்தை ஓதித் தெளிய அருள்வாயாக; (பதம் - சொல்; அஃது ஆகுபெயராய், எழுத்தினை உணர்த்திற்று); (சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி");

அண்டம் பயந்து நின்றும், தொழும்பர் அங்கு அங்கு இறைஞ்ச உறைவோனே - அண்டங்களெல்லாம் படைத்தும், தொண்டர்கள் வணங்குமாறு பல தலங்களில் உறைபவனே; (பயத்தல் - படைத்தல்); (தொழும்பர் - தொண்டர்);


சந்தம் பிறங்கு செஞ்சொல் மிடைந்து தங்கும் கவின்கொள் இசை பாடு - சந்தநயம் (ஒலிநயம்) விளங்கும் சிறந்த தமிழ்ச்சொற்கள் நிறைந்த அழகிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடிய; (சந்தம் - அழகு; செய்யுளின் வண்ணம்); (பிறங்குதல் - விளங்குதல்; சிறத்தல்); (மிடைதல் - செறிதல்; நிறைதல்); (கவின் - அழகு);

சம்பந்தர் நெஞ்சில் என்றும் திகழ்ந்த, சங்கம் புனைந்த பெருமானே - திருஞான சம்பந்தர் மனத்தில் என்றும் நீங்காமல் திகழ்ந்த, வளையலை அணிந்த பெருமானே (அர்தநாரீஸ்வரனே); (சங்கம் - கைவளை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.123 - சிவன் - பிள்ளையார் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2010-09-11

06.01.123 - சிவன் - பிள்ளையார் - சிலேடை

-----------------------------------------------

மூத்தவனைத் தந்த முதல்வனை மாதங்க

மூர்த்தியை மோதகத்தைக் கைகாட்டிக் - காத்தருளும்

அண்ணலை நீற்றை அணிகர மைந்தனை

எண்ணி இருப்பேன் இனி.


சொற்பொருள்:

மாதங்கம் - 1. மாதங்கம் (யானை); / 2. மாது அங்கம்;

மோதகம் - 1. மோதகம் (கொழுக்கட்டை); / 2. மோது அகம்;

கரமைந்தன் - 1. கரம் ஐந்தன்; / 2. கர மைந்தன்;

கரம் - 1. கை; 2. gara. Poison; நஞ்சு.

மைந்தன் - 1. மகன்; / 2. வீரன்;


பிள்ளையார்:

மூத்தவனை - மூத்த குமாரனை;

தந்த முதல்வனை - தந்தத்தை உடைய முதற்பொருளை;

மாதங்க மூர்த்தியை - யானைமுகம் உடையவனை;

மோதகத்தைக் கைகாட்டிக் காத்தருளும் அண்ணலை - கொழுக்கட்டையைக் கையில் வைத்திருக்கும் தலைவனை;

நீற்றை அணி கரம் ஐந்தனை - திருநீற்றைப் பூசிய ஐந்து கரத்தனை;

எண்ணி இருப்பேன் இனி - என்றும் தியானிப்பேன்;


சிவன்:

மூத்தவனைத் தந்த முதல்வனை - பிள்ளையாரை ஈன்ற பெருமானை;

மாது அங்க மூர்த்தியை - உமை ஒரு பாகம் திகழும் அர்த்தநாரீஸ்வரனை;

மோது அகத்தைக் கைகாட்டிக் காத்தருளும் அண்ணலை - (ஆசைகள்) அலைமோதுகின்ற / தாக்குகின்ற மனத்தை அபய-கரத்தைக் காட்டிக் காக்கும் தலைவனை;

நீற்றை அணி கர மைந்தனை - திருநீற்றைப் பூசிய கரங்களை உடைய வீரனை;

(Note: "நீற்றை அணிகர மைந்தனை" என்ற சொற்றொடரில் "அணி" என்ற சொல்லை இருமுறை இயைத்து, "நீற்றை அணி மைந்தனை & அணி கர மைந்தனை" என்று கொண்டு, "அணிகர(ம்) மைந்தனை" = "கரம் அணி மைந்தனை" என்று சொற்களை முன்பின் ஆக்கிப் பொருள்கொள்ளுதலும் கூடும். அப்படிக் கொண்டால் - "திருநீற்றைக் கையில் பூசிய வீரனை & விடத்தை அணிந்த வீரனை");

எண்ணி இருப்பேன் இனி - என்றும் தியானிப்பேன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

06.01.122 - சிவன் - கண்ணன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2010-08-30

06.01.122 - சிவன் - கண்ணன் - சிலேடை

-----------------------------------------------

கோலமாம் கார்கண்ட வண்ணம் குழலூதும்

சீலமாம் ஆனாயன் சேவிக்கு - மாலமர்

நாகமுடி மேலாடும் நம்பிமத வேள்பயந்த

வேகமலி வெள்ளேற்றன் விண்டு.


சொற்பொருள்:

கோலம் - அழகு;

காணுதல் - பெறுதல்; ஒத்திருத்தல்; பார்த்தல்;

கார் கண்ட வண்ணம் - 1. கருமை பொருந்திய நிறம்; / 2. கழுத்தின் நிறம் கருமை;

ஆனாயன் - 1. மாட்டிடையன்; / 2. ஆனாய நாயனார்;

சேவிக்குமாலமர் - 1. சேவிக்கும் மால் அமர்; / 2. சேவிக்கும் ஆல் அமர்;

ஆல் - ஆலமரம்; ஆலகால விஷம்;

அமர்தல் - இருத்தல்; விரும்புதல்;

அமர் - போர்;

நாகமுடிமேல் - 1. நாகத்தின் தலைமேல்; / 2. நாகம் தலைமேல்; (இலக்கணக் குறிப்பு: புணர்ச்சியில் இவ்விடத்தில் மகர ஒற்றுக் கெடும்);

ஆடுதல் - 1. செய்தல்; கூத்தாடுதல்; / 2. அசைதல்;

நம்பி - ஆணிற் சிறந்தவன்; கடவுள்;

பயத்தல் - 1. பெறுதல் (To beget, generate, give birth to); / 2. அஞ்சுதல்;

விண்டு - விஷ்ணு;


கண்ணன்:

கோலம் ஆம் கார் கண்ட வண்ணம் - கருமை பொருந்திய நிறம் அழகு ஆகும்;

குழல் ஊதும் சீலம் ஆம் - புல்லாங்குழல் வாசிப்பவன்;

னாயன் - ஆன் ஆயன் - மாட்டிடையன்;

சேவிக்கும் மால் - பக்தர்கள் வணங்கும் திருமால்;

அமர் நாக முடிமேல் ஆடும் நம்பி - 1. நாம் விரும்புகின்ற காளிங்க நர்த்தனன்; 2. பாம்பின் தலைமேல் ஆடிப் போர்செய்தவன்; (அமராடுதல் - போர்செய்தல்);

மதவேள் பயந்த - மன்மதனைப் பெற்ற;

விண்டு - விஷ்ணு;


சிவன்:

கோலம் ஆம் கார் கண்ட வண்ணம் - கண்ட வண்ணம் கோலம் ஆம் கார் - கழுத்தின் நிறம் அழகு ஆகும் கருமை;

குழல் ஊதும் சீலம் ஆம் ஆனாயன் சேவிக்கும் - புல்லாங்குழல் ஊதி இசையால் வழிபட்ட ஆனாய நாயனார் வணங்கிய;

ஆல் அமர், நாகம் முடிமேல் ஆடும் நம்பி - கல்லால நீழலில் வீற்றிருக்கின்ற (/ஆலகால விடத்தை விரும்பிய), தலைமேல் பாம்பு அசைகின்ற பெருமான்;

மதவேள் பயந்த - மன்மதன் (பாணம் ஏவுவதற்கு) அஞ்சிய;

வேகம் மலி வெள்ற்றன் - விரைந்து செல்லும் வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------