Monday, April 18, 2022

06.01.115 - சிவன் - மரம் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்


2010-03-12

06.01.115 - சிவன் - மரம் - சிலேடை

-----------------------------------------------

காய்க ணிகழ்வதால் கல்லால் அடியுளதால்

நோய்மருந் தாவதால் நுண்ணறிவோர் - ஆய்வதால்

ஏறும் கொடிமேல் இருப்பதால் நன்மரம்

ஆறு புனைந்த அரன்.


சொற்பொருள்:

காய்கணிகழ்வதால் - 1. காய்கள் நிகழ்வதால்; / 2. காய் கண் நிகழ்வதால்;

காய்கண் - வினைத்தொகை - காய்கின்ற கண் - நெற்றிக்கண்;

நிகழ்தல் - 1. சம்பவித்தல்; / 2. விளங்குதல்;

கல்லால் அடி - 1. கற்களால் அடிக்கப்பெறுதல்; / 2. கல்லால மரத்தின் கீழ்;

ஏறும் கொடிமேல் - 1. படர்கின்ற கொடி மேலே ஏறுதல்; / 2. இடபச்சின்னம் கொடியின்மேல் இருக்கும்;


மரம்:

காய்கள் நிகழ்வதால் - காய்கள் காய்க்கும்;

கல்லால் அடி உளதால் - (காய், பழம் இவற்றை விரும்வோர் எறியும்) கற்களால் அடிபடும்;

நோய்மருந்து ஆவதால் - (இலை, கொட்டை, பட்டை, வேர், போன்றன) வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படும்;

நுண்ணறிவோர் ஆய்வதால் - விஞ்ஞானியர் ஆராய்ச்சி செய்வர்;

ஏறும் கொடி மேல் இருப்பதால் - படர்ந்து ஏறுகிற கொடிகள் மேலே இருக்கும்.

நன்மரம் - நல்ல மரம்;


சிவன்:

காய்கண் நிகழ்வதால் - சுட்டெரிக்கும் நெற்றிக்கண் இருக்கும்;

கல்லால் அடி உளதால் - (தட்சிணாமூர்த்தியாகக்) கல்லால மரத்தின் கீழ் இருப்பார்; (சாக்கிய நாயனார் கல் எறிந்து வழிபட்டதும் இங்கே பொருந்தும்);

நோய்மருந்து ஆவதால் - பிறவிப்பிணிக்கு மருந்து ஆவார்;

நுண்ணறிவோர் ஆய்வதால் - ஞானியர் சிந்தை செய்வார்கள்;

ஏறும் கொடி மேல் இருப்பதால் - அவர் கொடியின்மேல் இடபச் சின்னம் இருக்கும்; (உம் - அசை);

ஆறு புனைந்த அரன் - கங்கையை அணிந்த ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment