Tuesday, October 31, 2017

03.05.003 – பொது - மயலினாலும் மதனின் அஞ்சு - (வண்ணம்)

03.05.003 – பொது - மயலினாலும் மதனின் அஞ்சு - (வண்ணம்)

Verse and Meaning in English - Please see the bottom half of this page.

2006-08-19

3.5.3) மயலினாலும் மதனின் அஞ்சு - (பொது)

------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த .. தனதான);

(முறுகு காள விடம யின்ற - திருப்புகழ் - சுவாமிமலை)


மயலி னாலு(ம்) மதனின் அஞ்சு

.. .. மலர்க ளாலு(ம்) மிகமெ லிந்து

.. .. வரையி லாது வினைபு ரிந்து .. தினமோடி

.. வயதும் ஏறி வலுவி ழந்து,

.. .. மறதி கூடி, மகனும் அன்பு

.. .. மனைவி கூட இகழ நொந்து, .. படுநாளில்


இயம தூதர் எனைநெ ருங்கி

.. .. இடர்செ யாமுன், உருகி உன்றன்

.. .. இனிய நாம(ம்) நவிலு கின்ற .. மதிதாராய்;

.. இகலு(ம்) மூவர் திரிபு ரங்கள்

.. .. எரியில் வேவ நகைபு ரிந்த

.. .. இறைவ நீலம் இலகு கண்டம் .. உடையானே;


உயரம் ஏறு மலையி டந்த

.. .. உரமு லாவு புயவி லங்கை

.. .. உடைய கோனை மிகவ ருந்த .. நெரிதேவா;

.. ஒருக பாலம் அதனில் உண்ப

.. .. துடைய னாகி உலகில் எங்கும்

.. .. உணவை நாடி உழலு கின்ற .. திருவாளா;


அயிலு லாவு நுனையி லங்கும்

.. .. அரிய வேலு(ம்) மழுவும் அங்கை

.. .. அமரும் ஈச பிறைய ணிந்த .. சடையானே;

.. அலையில் நாக அணைமு குந்தன்

.. .. அலரின் மேலன் அவர்வ ணங்க

.. .. அழல தாகி அளவி றந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

மயலினாலும் மதனின் அஞ்சு

.. .. மலர்களாலும் மிக மெலிந்து,

.. .. வரை இலாது வினை புரிந்து, .. தினம் ஓடி,

.. வயதும் ஏறி, வலு இழந்து,

.. .. மறதி கூடி, மகனும் அன்பு

.. .. மனைவி கூட இகழ நொந்து, .. படு-நாளில்


இயம தூதர் எனை நெருங்கி

.. .. இடர்செயாமுன், உருகி உன்றன்

.. .. இனிய நாமம் நவிலுகின்ற .. மதி தாராய்;

.. இகலும் மூவர் திரிபுரங்கள்

.. .. எரியில் வேவ நகை-புரிந்த

.. .. இறைவ; நீலம் இலகு கண்டம் .. உடையானே;


உயரம் ஏறு மலை இடந்த,

.. .. உரம் உலாவு புய, இலங்கை

.. .. உடைய கோனை மிக வருந்த .. நெரி-தேவா;

.. ஒரு கபாலம்-அதனில் உண்பது

.. .. உடையனாகி உலகில் எங்கும்

.. .. உணவை நாடி உழலுகின்ற .. திருவாளா;


அயில் உலாவு நுனை இலங்கும்

.. .. அரிய வேலும் மழுவும் அங்கை

.. .. அமரும் ஈச; பிறை அணிந்த .. சடையானே;

.. அலையில் நாக-அணை முகுந்தன்

.. .. அலரின் மேலன் அவர் வணங்க,

.. .. அழலதாகி அளவு இறந்த .. பெருமானே.


மயலினாலும் மதனின் அஞ்சு மலர்களாலும் மிக மெலிந்து - அறியாமையாலும் மன்மதனின் ஐந்து மலர்க்கணைகளாலும் மிகவும் வருந்தி; (மயல் - மயக்கம்); (மெலிதல் - வருந்துதல்);

வரை இலாது வினை புரிந்து தினம் ஓடி - அளவின்றிக் கொடிய வினைகளைச் செய்து தினமும் அலைந்து, நாள்களும் விரைந்தோடி; (வரை - அளவு); (ஓடுதல் - விரைந்துசெல்லுதல்; கடத்தல்);

வயதும் ஏறி, வலு இழந்து, மறதி கூடி, மகனும் அன்பு மனைவி கூட இகழ நொந்து படுநாளில் - முதுமை அடைந்து, உடல்வலிமை குன்றி, நினைவாற்றலும் குறைந்து, மனைவி மக்கள் எல்லாரும் இகழ்ந்து பேச, அதனைக் கேட்டு மனம் நொந்து, படுக்கையிற் கிடக்கின்ற காலத்தில், இறக்கின்ற நாளில்; (படுதல் - சாதல்); (படுத்தல் - கிடத்தல்);


இயம தூதர் எனை நெருங்கி இடர் செயாமுன், உருகி உன்றன் இனிய நாமம் நவிலுகின்ற மதி தாராய் - எமதூதர்கள் என்னை அடைந்து துன்புறுத்துவதன் முன்னமே, மனம் உருகி உன் இனிய திருப்பெயரைச் சொல்லுகின்ற அறிவைத் தந்து அருள்வாயாக;

இகலும் மூவர் திரிபுரங்கள் எரியில் வேவ நகைபுரிந்த இறைவ - பகைத்த மூன்று அசுரர்களது திரிகின்ற முப்புரங்கள் தீயில் வேகும்படி சிரித்த இறைவனே; (இகல்தல் - பகைத்தல்);

நீலம் இலகு கண்டம் உடையானே - கண்டத்தில் கருமை ஒளிர்கின்றவனே; (இலகுதல் - விளங்குதல்);


உயரம் ஏறு மலைடந்த, உரம் உலாவு புய, லங்கை உடைய கோனை மிக வருந்த நெரி தேவா - உயரம் மிகுந்த கயிலைமலையைப் பெயர்த்த, வலிமை மிக்க புஜங்களை உடைய, இலங்கையை ஆள்கின்ற அரசனான இராவணனை மிகவும் வருந்துமாறு நசுக்கிய தேவனே; (இடத்தல் - பெயர்த்தல்); (உரம் - வலிமை); (நெரித்தல் - நசுக்குதல்);

ஒரு கபாலம் அதனில் உண்பதுடையனாகி உலகில் எங்கும் உணவை நாடி உழலுகின்ற திருவாளா - ஒரு மண்டையோட்டில் உண்பவனாகி உலகில் எங்கும் பிச்சைக்காக உழல்கின்ற திருவாளனே;


அயில் உலாவு நுனை இலங்கும் அரிய வேலும் மழுவும் அங்கை அமரும் ஈச - கூர்மை திகழும் முனைகள் திகழும் வெற்றி மிகுந்த சூலத்தையும் மழுவையும் கையில் விரும்பி ஏந்திய ஈசனே; (அயில் - கூர்மை); (நுனை - நுனி); (வேல் - சூலம்); (அமர்தல் - விரும்புதல்; பொருந்துதல்);

பிறை அணிந்த சடையானே - சடையில் சந்திரனை அணிந்தவனே;

அலையில் நாக-அணை முகுந்தன் அலரின் மேலன் அவர் வணங்க அழலது ஆகி அளவு இறந்த பெருமானே - கடலில் பாம்புப் படுக்கையை உடைய திருமால், பூமேல் இருக்கும் பிரமன், என்ற அவ்விருவரும் வணங்குமாறு சோதி ஆகி எல்லை கடந்த பெருமானே; (அலை - கடல்); (அணை - படுக்கை); (இறத்தல் - கடத்தல்);

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

madisūḍi 3.5.3) mayalinālum madanin añju (podu)

--------------------------------------------------------------

(tanana tāna tanana tanda

tanana tāna tanana tanda

tanana tāna tanana tanda .. tanadāna ----- Rhythm);

(muṟugu kāḷa viḍama yiṇḍra - tiruppugaḻ - suvāmimalai)


mayalinālum madanin añju

.. .. malargaḷālum miga melindu

.. .. varaiyilādu vinai purindu .. tinamōḍi

.. vayadum ēṟi valuviḻandu,

.. .. maṟadi kūḍi, maganum anbu

.. .. manaivi kūḍa igaḻa nondu, .. paḍunāḷil


iyama tūdar enai neruṅgi

.. .. iḍar seyāmun, urugi uṇḍran

.. .. iniya nāmam navilugiṇḍra .. madi-tārāy;

.. igalum mūvar tiri-puraṅgaḷ

.. .. eriyil vēva nagai-purinda

.. .. iṟaiva; nīlam ilagu kaṇḍam .. uḍaiyānē;


uyaram ēṟu malai iḍanda

.. .. uram ulāvu puyavilaṅgai

.. .. uḍaiya kōnai miga varunda .. neridēvā;

.. oru kabālam adanil uṇbadu-

.. .. uḍaiyanāgi ulagil eṅgum

.. .. uṇavai nāḍi uḻalugiṇḍra .. tiruvāḷā;


ayil ulāvu nunai ilaṅgum

.. .. ariya vēlum maḻuvum aṅgai

.. .. amarum īsa; piṟai aṇinda .. saḍaiyānē;

.. alaiyil nāga aṇai mugundan

.. .. alarin mēlan avar vaṇaṅga

.. .. aḻaladāgi aḷaviṟanda .. perumānē.


mayalinālum madanin añju malargaḷālum miga melindu - suffering due to my ignorance and Kama's five floral arrows;

varai ilādu vinai purindu tinam ōḍi - and endlessly doing actions that increase my karma, for a long time;

vayadum ēṟi, valu iḻandu, maṟadi kūḍi, maganum anbu manaivi kūḍa igaḻa nondu paḍunāḷil - with age increasing, strength decreasing, forgetfulness increasing, with even son and loving wife showing disregard, feeling hurt, on dying bed;


iyama tūdar enai neruṅgi iḍar seyāmun, urugi uṇḍran iniya nāmam navilugiṇḍra madi tārāy - before Yama's servants reach me to take away my life, may You give me deep devotion in my heart to chant Your holy name!

igalum mūvar tiri-puraṅgaḷ eriyil vēva nagai-purinda iṟaiva - O Lord, who laughed to burn the three forts of the Asuras!

nīlam ilagu kaṇḍam uḍaiyānē - kaṇḍattil karumai oḷirgiṇḍravanē - O Siva, with a shining dark throat!


uyaram ēṟu malai iḍanda, uram ulāvu puya, ilaṅgai uḍaiya kōnai miga varunda neri dēvā - O Deva, who crushed the strongs arms of Ravana, the king of Lanka, when he lifted the tall Kailasa mountain!

oru kabālam adanil uṇbadu uḍaiyanāgi ulagil eṅgum uṇavai nāḍi uḻalugiṇḍra tiruvāḷā - O Siva, who roams the worlds seeking alms holding a skull as the begging bowl!


ayil ulāvu nunai ilaṅgum ariya vēlum maḻuvum aṅgai amarum īsa - O Lord, who holds a sharp trident and a battle-axe!

piṟai aṇinda saḍaiyānē - O Wearer of the moon on Your matted locks! (Chandrasekhara)

alaiyil nāga aṇai mugundan alarin mēlan avar vaṇaṅga aḻaladu āgi aḷavu iṟanda perumānē - O Swami, who stood as endless flame worshiped by Vishnu (who sleeps on a snake-bed in the ocean) and Brahma (who dwells in a lotus flower)!

======================

03.05.002 – பொது - இடைவஞ்சி நுடங்கு மடந்தையர் - (வண்ணம்)

03.05.002 – பொது - இடைவஞ்சி நுடங்கு மடந்தையர் - (வண்ணம்)

2006-08-16

3.5.2 – இடைவஞ்சி நுடங்கு மடந்தையர் - (பொது)

------------------------

(வண்ணவிருத்தம்;

தனதந்தன தந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன .. தனதான )

(கனகந்திரள் கின்றபெ ருங்கிரி - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


இடைவஞ்சிநு டங்கும டந்தையர்

... இடுமுண்பலி கொண்டுந டஞ்செயும்

... இடமென்றுடல் வெந்திடும் அம்பலம் .. மகிழ்வோனை,

மடமங்கையொர் பங்கென ஒன்றிட,

... வருகங்கையி ருஞ்சடை நின்றிட,

... மறியுந்துடி யுந்தழ லுந்தரி .. பெருமானை,

அடையண்டர்கள் அஞ்சிய நஞ்சினை

அமுதென்றுவி ரும்பிய கண்டனை,

அளிகொண்டிசை வண்டமிழ் சண்பையர் .. பதிபாடக்

குடமொன்றிலி ருந்தவெ லும்பணி

குழலின்குரல் ஒண்டொடி என்றுயிர்

கொளவன்றருள் இன்பனை எந்தையை .. மறவேனே.


பதம் பிரித்து:

இடை-வஞ்சி நுடங்கு மடந்தையர்

... இடும் உண்பலி கொண்டு, நடஞ்செயும்

... இடம் என்று உடல் வெந்திடும் அம்பலம் மகிழ்வோனை,

மடமங்கை ஒர் பங்கு என ஒன்றிட,

... வரு-கங்கை இருஞ்சடை நின்றிட,

... மறியுந் துடியுந் தழலுந் தரி பெருமானை,

அடை-அண்டர்கள் அஞ்சிய நஞ்சினை

அமுது என்று விரும்பிய கண்டனை,

அளிகொண்டு இசை-வண்-தமிழ் சண்பையர் பதி பாடக்,

குடம் ஒன்றில் இருந்த எலும்பு அணி-

குழல் இன்-குரல் ஒண்-தொடி என்று உயிர்

கொள அன்று அருள் இன்பனை, எந்தையை மறவேனே.


இடைவஞ்சி நுடங்கு மடந்தையர் இடும் உண்பலி கொண்டு, நடம் செயும் இடம் என்று உடல் வெந்திடும் அம்பலம் மகிழ்வோனை - துவளுகின்ற வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய பெண்கள் இடும் பிச்சையை ஏற்றுக், கூத்தாடும் இடம் என்று உடல்கள் வெந்து சாம்பலாகும் சுடுகாட்டை விரும்பியவனை; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (நுடங்குதல் - துவளுதல்); (இடைவஞ்சி நுடங்கு = "நுடங்கு வஞ்சி இடை" என்று இயைத்துப் பொருள்கொள்க);


மடமங்கை ஒர் பங்கு என ஒன்றிட, வரு கங்கை இரும் சடை நின்றிட, மறியும் துடியும் தழலும் தரி பெருமானை - இளமங்கையான உமை ஒரு பாகமாகத் திருமேனியில் பொருந்தவும், வந்த கங்கை பெரிய சடையில் நிலையாகத் தங்கிடவும், மான் கன்றையும் உடுக்கையையும் தீயையும் கையில் ஏந்திய பெருமானை;


அடை அண்டர்கள் அஞ்சிய நஞ்சினை அமுது என்று விரும்பிய கண்டனை - சரணடைந்த தேவர்கள் அஞ்சிய ஆலகாலத்தை அமுதம்போல் விரும்பி உண்ட நீலகண்டனை;


அளிகொண்டு இசை வண் தமிழ் சண்பையர் பதி பாடக், குடம் ஒன்றில் இருந்த எலும்பு அணி-குழல் இன்-குரல் ஒண்-தொடி என்று உயிர்கொள அன்று அருள் இன்பனை, எந்தையை மறவேனே - அன்போடு இசைத்தமிழும் வண்மை மிக்க தமிழுமான தேவாரத்தைச் சண்பை என்ற பெயரும் உடைய சீகாழியின் தலைவரான திருஞானசம்பந்தர் பாடவும், (மயிலாப்பூரில்) ஒரு குடத்தில் இருந்த எலும்பு அழகிய கூந்தலும் இனிய குரலும் உடைய இளம்பெண்ணாக உயிரோடு எழுந்திருக்குமாறு முன்பு அருள்செய்த இன்பவடிவினனை, எம் தந்தையான சிவபெருமானை நான் மறக்கமாட்டேன்; (அளி - அன்பு); (பதி - தலைவன்); (சண்பையர் பதி - காழியர்கோன் - திருஞானசம்பந்தர்); (தொடி - கைவளை; ஒண்டொடி - ஒண் தொடி - ஒளி திகழும் வளையல் அணிந்த பெண்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, October 29, 2017

03.05.001 – பொது - ஓதம் அதுபுடை சூழும் உலகினில் - (வண்ணம்)

03.05.001 – பொது - ஓதம் அதுபுடை சூழும் உலகினில் - (வண்ணம்)

2006-08-14

3.5.1 - ஓதம் அதுபுடை சூழும் - (பொது)

-------------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான )

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


ஓதம் அதுபுடை சூழும் உலகினில்

.. .. ஊசல் எனமனம் .. அசையாமல்

.. ஊனம் அறுதிரு நாமம் அனுதினம்

.. .. ஓதி அடியிணை .. தொழுவேனே;

தீதை இழையமண் மாய வருமொரு

.. .. தீரர் நதியினில் .. இடுமேடு

.. சேடு திகழ்திசை ஏகி வெலவருள்

.. .. தேவ; ஒளிகிளர் .. புரிநூலா;

வேத(ம்) மொழிதிரு நாவ; எயிலெரி

.. .. வீர; உமையவள் .. ஒருகூறா;

.. வேலை விடமொரு நீல மணியென

.. .. மேவி அணிமிட .. றுடையானே;

பாத மலர்தனை நால்வர் அருளிய

.. .. பாடல் அவைகொடு .. தொழுவார்கள்

.. பாரை இனியடை யாத படிவினை

.. .. பாற இனிதருள் .. பெருமானே.


பதம் பிரித்து:

ஓதம்அது புடை சூழும் உலகினில்

.. .. ஊசல் என மனம் .. அசையாமல்,

.. ஊனம் அறு திருநாமம் அனுதினம்

.. .. ஓதி அடியிணை .. தொழுவேனே;

தீதை இழை-அமண் மாய வரும் ஒரு

.. .. தீரர் நதியினில் .. இடும் ஏடு

.. சேடு திகழ் திசை ஏகி வெல அருள்

.. .. தேவ; ஒளி கிளர் .. புரிநூலா;

வேத(ம்) மொழி திருநாவ; எயில் எரி

.. .. வீர; உமையவள் .. ஒரு கூறா;

.. வேலை-விடம் ஒரு நீலமணி

.. .. மேவி அணி மிடறு டையானே;

பாதமலர்தனை நால்வர் அருளிய

.. .. பாடல் அவை-கொடு .. தொழுவார்கள்

.. பாரை இனி டையாதபடி வினை

.. .. பாற இனிது-அருள் .. பெருமானே.


ஓதம்அது புடை சூழும் உலகினில் ஊசல் என மனம் அசையாமல் - கடல் நாற்புறமும் சூழும் உலகில் ஒரு ஊஞ்சல் போல் என் மனம் இங்கும் அங்கும் அசைந்து கலங்காமல்; (ஓதம் - கடல்); (அசைதல் - இயங்குதல்; கலங்குதல்);

ஊனம் அறு திரு நாமம் அனுதினம் ஓதி அடியிணை தொழுவேனே - குற்றத்தையெல்லாம் தீர்க்கின்ற திருநாமத்தைத் தினமும் ஓதி உன் இரு திருவடிகளை வணங்குவேன்; (ஊனம் - குற்றம்); (அறுத்தல் - நீக்குதல்; இல்லாமற் செய்தல்);


தீதை இழை-அமண் மாய வரும் ஒரு தீரர் நதியினில் இடும் ஏடு சேடு திகழ் திசை ஏகி வெலருள் தேவ - தீங்கையே செய்த சமணர்கள் அழியுமாறு வந்த ( / அவதரித்த) ஒப்பற்ற திட்பம் உடையவரான திருஞான சம்பந்தர் வைகையில் இட்ட ஏடு உயரம் திகழும் திசையில் (ஆற்றை எதிர்த்து மேல் நோக்கிச்) சென்று வெல்ல அருளிய தேவனே; (அமண் - சமணமதம்; சமணர்); (மாய்தல் - அழிதல்); (தீரர் - தீரம் உடையவர் - இங்கே சம்பந்தர்; தீரம் - தைரியம்; வலிமை; அறிவு); (சேடு - உயரம்); (ஏகுதல் - போதல்); (வெல - வெல்ல - இடைக்குறையாக வந்தது);

ஒளி கிளர் புரிநூலா - ஒளி வீசும் முப்புரிநூல் அணிந்தவனே;


வேதம் மொழி திரு நாவ - வேதங்களைப் பாடியருளியவனே;

எயில் எரி வீர - முப்புரங்களை எரித்த வீரனே; (எயில் - கோட்டை);

உமையவள் ஒரு கூறா - உமை ஒரு கூறு ஆனவனே; (உமையவள் - உமை; அவள் - பகுதிப்பொருள்விகுதி);

வேலை-விடம் ஒரு நீலமணி மேவி அணி மிடறுடையானே - கடல்விடத்தை விரும்பி உண்டு ஒரு கரிய மணி போல அணிந்த கண்டத்தை உடையவனே; (வேலை - கடல்); (மேவுதல் - உண்ணுதல்; விரும்புதல்);


பாதமலர்தனை நால்வர் அருளிய பாடல் அவைகொடு தொழுவார்கள் பாரை இனிடையாதபடி வினை பாற இனிது அருள் பெருமானே - உன் திருவடித்தாமரையைச் சமயக் குரவர் நால்வர் பாடல்களால் வழிபடும் பக்தர்கள் இனிப் பூமியில் பிறவாதபடி அவர்களது வினைகள் அழிய அருளும் பெருமானே; (பார் - பூமி); (பாறுதல் - அழிதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

04.04 – சேறை (திருச்சேறை)

04.04சேறை (திருச்சேறை)



2013-08-10
சேறை (திருச்சேறை)
----------------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம் - 'தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்.
ஒரோவழி 'தான' என்பது 'தனன' என்று வரும்.
இப்பாடல்களில், ஈற்றடிதோறும் 3-ஆம் சீரிலும் எதுகை அமைந்துள்ளது.)
(சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்")
(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்")



1)
தொல்வி னைத்தொடர் இம்மை யிற்பல
.. துன்ப மேதரக் கண்டுநான்
வெல்வி டைக்கொடி வேந்த னேசரண்
.. வேண்டி வந்தடி போற்றினேன்
வில்வ ளைத்தெரி அம்பி னைப்புரம்
.. வேவ எய்தமுக் கண்ணனே
செல்வ னேயருள் நல்கி டாய்அணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



தொல்வினைத்தொடர் இம்மையிற் பல துன்பமே தரக் கண்டு நான் - பழவினைகளின் தொகுதி இப்பிறப்பில் பல துன்பங்களைத் தருவதை உணர்ந்து நான்; (தொல்வினை - பழவினை); (இம்மை - இப்பிறவி);
வெல்விடைக்கொடி வேந்தனே, சரண் வேண்டி வந்து அடி போற்றினேன் - வெற்றியுடைய இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய அரசனே, அடைக்கலம் வேண்டி வந்து உன் திருவடியை வழிபட்டேன்; (சரண் - அடைக்கலம்);
வில் வளைத்து எரி அம்பினைப் புரம் வேவ எய்த முக்கண்ணனே - முப்புரங்களும் வெந்து அழியும்படி மேருமலையை வில்லாக வளைத்து எரிக்கின்ற கணை ஒன்றை ஏவிய நெற்றிக்கண்ணனே; (எரி அம்பினை - எரிக்கின்ற கணையை);
செல்வனே அருள் நல்கிடாய் அணி சேறைச் செந்நெறி அப்பனே - செல்வனே, அழகிய திருச்சேறையில் உறையும் செந்நெறி அப்பனே, அருள்வாயாக; (அணி - அழகிய);



2)
ஆவி யைத்தொடர் முன்வி னைத்தொடர்
.. அல்ல லேதரக் கண்டுநான்
நாவி னில்திரு வைந்தெ ழுத்தினை
.. நம்பி வைத்துனைப் போற்றினேன்
பாவி னால்புகழ் பாடு வார்க்கருள்
.. பண்ப னேகறைக் கண்டனே
தீவி னைக்கொரு தீர்வி னைத்தரும்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
ஆவியைத் தொடர் முன்வினைத்தொடர் அல்லலே தரக் கண்டு நான்
நாவினில் திரு ஐந்தெழுத்தினை நம்பி வைத்து உனைப் போற்றினேன்;
பாவினால் புகழ் பாடுவார்க்கு அருள் பண்பனே; கறைக்கண்டனே;
தீவினைக்கு ஒரு தீர்வினைத் தரும் சேறைச் செந்நெறி அப்பனே.


ஆவி - ஆன்மா;
அல்லல் - துன்பம்;
நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்;
தொடர்தீவினைத்தொடர் - தொடர்கின்ற தீவினைச் சங்கிலி;
கறைக்கண்டன் - நீலகண்டன்;
தீர்வு - நீங்குகை (Removal, separation); பரிகாரம் (Antidote, remedy);



3)
துன்னி வல்வினை துன்ப மேதரத்
.. தொய்யும் என்குறை தீர்த்திடாய்
முன்னம் வானவர் வந்தி றைஞ்சவும்
.. முப்பு ரம்பொடி ஆக்கினாய்
மின்னல் நுண்ணிடை மாதி னுக்கிடம்
.. மேனி யில்தரும் அன்பினாய்
சென்னி யிற்பிறை பின்ன ராவணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
துன்னி வல்வினை துன்பமே தரத் தொய்யும் என் குறை தீர்த்திடாய்,
முன்னம் வானவர் வந்து இறைஞ்சவும் முப்புரம் பொடி ஆக்கினாய்;
மின்னல் நுண்-இடை மாதினுக்கு இடம் மேனியில் தரும் அன்பினாய்;
சென்னியிற் பிறை, பின்னு அரா அணி சேறைச் செந்நெறி அப்பனே.


துன்னுதல் - நெருங்குதல்; அடைதல்;
தொய்தல் - இளைத்தல்; சோர்தல்;
பொடி ஆக்கினாய் - சாம்பலாக்கியவனே;
மின்னல் நுண்-இடை மாதினுக்கு இடம் மேனியில் தரும் அன்பினாய் - மின்னல் போன்ற சிற்றிடை உடைய உமைக்குத் திருமேனியில் இடப்பக்கத்தைத் தந்த அன்பனே;
பின்னுதல் - பின்னிப் பிணைதல் (entwine); தழுவுதல் (To embrace;);
சென்னி - தலை;
பிறை பின்னராவணி - பிறை பின்னு அரா அணி - பிறைச்சந்திரனையும், பின்னிப் பிணைகின்ற பாம்பையும் அணிகின்ற;



4)
பாவ மாயின பாற வேவுனைப்
.. பாடி வந்தடி போற்றினேன்
மேவ லர்புரம் வேவ அன்றொரு
.. மேரு வில்லினை ஏந்தினாய்
சேவ லார்கொடிச் சேந்த னைத்தரும்
.. தேச னேஉமை நேசனே
சேவ தேறிய தேவ னேஅணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
பாவம் ஆயின பாறவே உனைப் பாடி வந்து அடி போற்றினேன்,
மேவலர் புரம் வேவ அன்று ஒரு மேரு வில்லினை ஏந்தினாய்;
சேவல் ஆர் கொடிச் சேந்தனைத் தரும் தேசனே; உமை நேசனே;
சே-அது ஏறிய தேவனே; அணி சேறைச் செந்நெறி அப்பனே.


பாற - அழிய; (பாறுதல் - அழிதல்; நிலைகெட்டு ஓடுதல்);
மேவலர் - பகைவர்;
சேவல் ஆர் கொடிச் சேந்தன் - சேவற்கொடி உடைய முருகன்;
தேசன் - ஒளியுருவினன்; (தேசு - தேஜஸ் - ஒளி);
சே - இடபம்;



5)
நித்த லுந்துயர் நல்கு தீவினை
.. நீங்க நின்னடி போற்றினேன்
கத்து மாகடல் கக்கு நஞ்சினைக்
.. கண்டம் இட்டிருள் காட்டினாய்
மத்த னேமதி சூடி னாய்மழு
.. வாளி னாய்சரண் நீயெனச்
சித்தம் ஒன்றிய பத்தர் ஏத்திடும்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
நித்தலும் துயர் நல்கு தீவினை நீங்க நின் அடி போற்றினேன்;
"கத்து மா-கடல் கக்கு நஞ்சினைக் கண்டம் இட்டு இருள் காட்டினாய்;
மத்தனே; மதி சூடினாய்; மழு வாளினாய்; சரண் நீ" எனச்
சித்தம் ஒன்றிய பத்தர் ஏத்திடும் சேறைச் செந்நெறி அப்பனே.


நித்தலும் - தினமும்;
கத்து மா கடல் - அலைகள் ஆர்ப்பரிக்கும் பெரிய பாற்கடல்;
கக்கு நஞ்சு - உமிழ்ந்த விஷம்;
நஞ்சினைக் கண்டம் இட்டு இருள் காட்டினாய் - விஷத்தைக் கண்டத்தில் வைத்து அங்கே கறுப்புநிறத்தைக் காட்டியவனே;
மத்தன் - உன்மத்தன் (பித்தன்); 'ஊமத்தை மலரைச் சூடியவன்' எனலுமாம்;
சித்தம் ஒன்றிய பத்தர் - ஒன்றியிருந்து நினையும் அன்பர்கள்; (அப்பர் தேவாரம் - 4.81.2 - "ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை" -- ஒன்றியிருந்து நினைதல் - சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சாய் இடைவிடாது நினைத்தல். ஊனம் - குறை. );



6)
கெழுமு தீவினை யாவும் வேரொடு
.. கெட்டு நற்கதி எய்தவே
கழும லத்தவர் கோன்த மிழ்த்தொடை
.. காத லாய்நினைந் தேத்தினேன்
மழுவி னாய்தொழு மாணிக் காநமன்
.. மாள வீசிய தாளினாய்
செழுவ யல்புடை தழுவு சீரணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
கெழுமு தீவினை யாவும் வேரொடு கெட்டு நற்கதி எய்தவே,
கழுமலத்தவர் கோன் தமிழ்த்தொடை காதலாய் நினைந்து ஏத்தினேன்;
மழுவினாய்; தொழு மாணிக்கா நமன் மாள வீசிய தாளினாய்;
செழு-வயல் புடை தழுவு சீர்-அணி சேறைச் செந்நெறி அப்பனே.


கெழுமுதல் - பொருந்துதல் (To attain, join, unite); கிட்டுதல் (To approach);
கெடுதல் - அழிதல்;
நற்கதி எய்த - நான் நன்னிலை அடைய;
கழுமலத்தவர்கோன் தமிழ்த்தொடை - கழுமலம் என்ற பெயரும் உடைய சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பாடியருளிய தமிழ்ப்பாமாலையான தேவாரம்;
காதலாய் - காதலாகி; (சம்பந்தர் தேவாரம் - 3.49.1 - "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது....");
தொழு மாணிக்கா நமன் மாள வீசிய தாளினாய் - தொழுத மார்க்கண்டேயரைக் காப்பதற்காக எமன் மாளுமாறு அவன் மார்பில் உதைத்தவனே;
செழு-வயல் - செழுமையான வயல்கள்;
புடை - பக்கம்;
தழுவுதல் - சூழ்தல் (To surround);
சீர் அணி - அழகிய; பெருமையுடைய; (சீர் - அழகு; பெருமை);



7)
அரித்த லேபுரி பண்டை வல்வினை
.. அற்றி டப்பரி வெய்திடாய்
தரித்த கங்கையின் நீர்ந னைத்திடு
.. சங்க ராமத மாகரி
உரித்த தோலது போர்வை ஆகிய
.. உம்பர் நாயக பக்கெனச்
சிரித்து மூவரண் எரித்த சேவக
.. சேறைச் செந்நெறி யப்பனே.



அரித்தலே புரி பண்டை வல்வினை அற்றிடப் பரிவு எய்திடாய் - என்னை இமிசிக்கும் பழைய வலிய வினைகள் தீருமாறு இரங்கி அருள்வாயாக; (அரித்தல் - இமிசித்தல்; தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அழித்தல்; To corrode, consume, as acids; துருமுதலியன தின்னுதல்); (பரிவு - இரக்கம்; அன்பு);
(அப்பர் தேவாரம் - 5.1.3 - "அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்");
தரித்த கங்கையின் நீர் நனைத்திடு சங்கரா - முடிமேல் தங்கிய கங்கைப் புனல் நனைக்கின்ற சங்கரனே;
மத மாகரி உரித்த தோலது போர்வை ஆகிய உம்பர் நாயக - மதம் உடைய பெரிய ஆண்யானையின் உரித்த தோலைப் போர்வையாகப் போர்த்துக்கொண்ட தேவர்தலைவனே;
பக்கெனச் சிரித்து மூ அரண் எரித்த சேவக - வாய்விட்டுச் சிரித்து முப்புரங்களையும் எரித்த வீரனே; (பக்கெனல் - onomatopoeic expression of bursting, as with sudden laughter; சிரிப்பின் ஒலிக்குறிப்பு); (மூ அரண் - மூன்று கோட்டைகள்); (சேவகன் - வீரன்);
சேறைச் செந்நெறி அப்பனே - திருச்சேறையில் செந்நெறியப்பன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானே;



8)
அலையெ னத்தொடர் தீவி னைத்துயர்
.. அற்று நான்மகிழ் வெய்தவே
கலையை ஏந்திய கையி னாய்மிகு
.. காத லோடுனை ஏத்தினேன்
மலையை ஆட்டிய வல்ல ரக்கனின்
.. வாய்கள் பத்தழ ஓர்விரல்
சிலையின் மேலிடு தலைவ னேஅணி
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
அலை எனத் தொடர் தீவினைத் துயர் அற்று நான் மகிழ்வு எய்தவே,
கலையை ஏந்திய கையினாய், மிகு காதலோடு உனை ஏத்தினேன்;
மலையை ஆட்டிய வல்-அரக்கனின் வாய்கள் பத்து அழ ஓர் விரல்
சிலையின்மேல் இடு தலைவனே; அணி சேறைச் செந்நெறி அப்பனே.


கலை - மான்;
வல்-அரக்கன் - இராவணன்;
சிலை - மலை;



9)
கரிய மாலொடு போதின் மேலவன்
.. காண்கி லாவணம் ஓங்கிய
எரியன் வெள்விடை ஏறி வெண்டலை
.. ஏந்தி உண்பலி ஏற்பவன்
பெரியன் வெண்பிறை சூடு பிஞ்ஞகன்
.. பெண்ணொர் பங்கினன் எங்கணும்
திரியும் முப்புரம் எரிய எய்தவன்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



போதின் மேலவன் - பூவின்மேல் வீற்றிருக்கும் பிரமன்; (போது - பூ);
காண்கிலாவணம் - காண இயலாதபடி;
எரியன் - சோதியன்;
பெரியன் - பெரியவன் - மகாதேவன்; (அப்பர் தேவாரம் - 5.12.8 - "எரியினார் இறையார் ...
பெரியனார் ....");
பிஞ்ஞகன் - தலைக்கோலம் அணிந்தவன்;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;
எங்கணும் - எங்கும்;



10)
பொக்க மேமலி நெஞ்சர் நீற்றினைப்
.. பூசி டார்உரை பொய்வழி
துக்க மேதரும் என்ப தால்அவர்
.. சொல்லை விட்டொழி மின்களே
நக்க னேஉமை நாத னேஅருள்
.. நல்கி டாய்எனில் காப்பனே
செக்கர் வானினை ஒக்கும் மேனியெம்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



பதம் பிரித்து:
பொக்கமே மலி நெஞ்சர், நீற்றினைப் பூசிடார் உரை பொய்வழி
துக்கமே தரும் என்பதால் அவர் சொல்லை விட்டு-ஒழிமின்களே;
"நக்கனே, உமை நாதனே, அருள் நல்கிடாய்" எனில் காப்பனே,
செக்கர் வானினை ஒக்கும் மேனி எம் சேறைச் செந்நெறி அப்பனே.


பொக்கம் - பொய்; வஞ்சகம்;
நீற்றினைப் பூசிடார் - திருநீற்றைப் பூசாதவர்கள்;
அவர் சொல்லை விட்டொழிமின்கள் - அவர்கள் சொற்களை மதிக்க வேண்டா. விட்டு நீங்குங்கள்; (விடுதல் - நீங்குதல்; ஒழிதல் - நீங்குதல்);
நக்கன் - நிர்வாணி;
காப்பன் - காப்பான்; (அப்பர் தேவாரம் - 5.42.3 - "வேட்களத்துறை வேதியன் ... காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே.")
செக்கர்வான் - செவ்வானம்;



11)
வென்றி வெள்விடை ஊர்தி யான்மத
.. வேளை நீறெழ நோக்கினான்
என்றும் உள்ளவன் ஈர வேணியன்
.. ஏழை பங்கினன் ஆடக
மன்றில் ஆடலன் துன்று வல்வினை
.. மாய வண்டமிழ் வாயராய்ச்
சென்று போற்றிட நன்ற ளிப்பவன்
.. சேறைச் செந்நெறி யப்பனே.



வென்றி வெள்விடை ஊர்தியான் - வெற்றி பொருந்திய இடபத்தை வாகனமாக உடையவன்;
மதவேளை நீறு எழ நோக்கினான் - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (மதவேள் - மன்மதன்; காமன்);
என்றும் உள்ளவன் - அழிவற்றவன்;
ஈர வேணியன் - சடையில் கங்கையை உடையவன்; (வேணி - சடை);
ஏழை பங்கினன் - உமைபங்கன்;
ஆடக மன்றில் ஆடலன் - பொன்னம்பலத்தில் ஆடுகின்றவன்; (ஆடக மன்று - பொற்சபை; ஆடகம் - பொன்); (ஆடலன் - ஆடுதலைச் செய்பவன்); (அப்பர் தேவாரம் - 5.19.8 - "அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்");
துன்று வல்வினை மாய வண்-தமிழ் வாயராய்ச் சென்று போற்றிட நன்று அளிப்பவன் சேறைச் செந்நெறி அப்பனே - னம்மைச் சூழும் வலிய வினைகளெல்லாம் அழியத் தேவாரம் திருவாசகம் பாடி வழிபட்டால் நன்மை செய்பவன் திருச்சேறையில் உறைகின்ற செந்நெறியப்பனான சிவபெருமான்; (துன்றுதல் - பொருந்துதல்; நெருங்குதல்); (வண்டமிழ் - வண் தமிழ் - வளம் மிக்க தமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன);



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) திருச்சேறை - சாரபரமேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1002
திருச்சேறை - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=139

----------- --------------