Thursday, July 30, 2015

01.33 – பொது

01.33பொது



2008-06-21
பொது
-----------------
(ஆசிரிய இணைக்குறட்டுறை)
(1,3 அடிகளில் 4 சீர்களும், 2,4 அடிகளில் 3 சீர்களும் உள்ள அமைப்பு).
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.58.5 - "பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்")



1)
முந்தைச் செய்வினை முற்றிலும் விட்டிடச்
சிந்தை செய்மட நெஞ்சமே,
வந்த காலனே மாளுமா(று) ஓர்உதை
தந்த சேவடி தன்னையே.



உதை தந்த சேவடி தன்னை - உதை கொடுத்த சிவந்த திருவடியை;
குறிப்பு: மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்த வரலாற்றைச் சுட்டியது.



2)
பாயும் காவிரிப் பக்கமோர் பக்தையின்
தாயும் ஆனவன், தன்னடி
ஆயும் அன்பருக்(கு) அன்பனை, நித்தலும்
நீயும் எண்ணுவாய் நெஞ்சமே.



பக்கம் - அருகு; இடம்; தேசம்;
ஓர்தல் - எண்ணுதல்; ஆராய்தல்;
ஓர் பக்தை - ஒரு பக்தை; / தியானிக்கும் பக்தை;
நித்தலும் - தினம்தோறும்;
குறிப்பு: திருச்சிக்கு அருகில் பக்தைக்காகத் தாய் உருவில் வந்து பிரசவம் பார்த்த வரலாற்றைச் சுட்டியது.



3)
இங்(கு)இன் புற்றிட, எண்ணுவாய் நெஞ்சமே,
செங்கல் பொன்னெனச் செய்பவன்,
பங்கில் இன்மொழிப் பாவையைக் கொண்டநம்
சங்க ரன்மலர்த் தாளையே.



இங்கு - இவ்வுலகில்;
பங்கில் இன்மொழிப் பாவையைக் கொண்ட - இனியமொழி பேசும் பார்வதியை ஒரு கூறாக உடைய;
சங்கரன் - நன்மை செய்பவன்;
குறிப்பு: திருப்புகலூரில், சுந்தரர் தலையணையாக வைத்திருந்த செங்கற்கள் பொன்னாக மாறிய வரலாற்றைச் சுட்டியது. சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.34.1 - "தம்மையே புகழந்து..."



4)
கலங்கும் நெஞ்சமே காணலாம் இன்பமே,
இலங்கும் வெண்பிறை சூடிய
நலம்செய் நாதனின் கோயிலை நாள்தொறும்
வலம்செய்(து) அன்பொடு வாழ்த்தவே.



இலங்குதல் - பிரகாசித்தல்;
நலம் செய் நாதன் - சங்கரன்;
அன்பு - பக்தி;



5)
கரிமு கத்தனைக் கந்தனைப் பெற்றவன்,
திரியும் முப்புரம் செற்றவன்,
பரிவொ(டு) ஆட்செயும் பத்தருக்(கு) உற்றவன்,
எரிவண் ணன்கழல் ஏத்துமே.



கரி முகத்தன் - ஆனை முகத்தன் - பிள்ளையார்;
செற்றவன் - அழித்தவன்;
பரிவு - அன்பு; பக்தி;
ஆட்செய்தல் - தொண்டுசெய்தல்;
உற்றவன் - சுற்றம்/நண்பன் - துணையாக இருப்பவன்;
எரி வண்ணன் - தீவண்ணன் - தீயைப் போன்ற நிறம் உடைவன் - சிவந்த மேனி உடைய சிவன்;
ஏத்தும் - ஏத்துங்கள் - துதியுங்கள்;



6)
பூவின் மாலைகள் போல்நிதம் செந்தமிழ்ப்
பாவின் மாலைகள் பாடுவார்
தீவி னைத்துயர் தீர்சிவன் தாள்நினை
நீவி ரும்பிஎன் நெஞ்சமே.



உரைநடை: "என் நெஞ்சமே, நீ விரும்பி நினை - பூவின் மாலைகள் ... தீர் சிவன் தாள்"


பாடுவார் தீவினைத்துயர் தீர்சிவன் - பாடுகிறவர்களுடைய தீவினை ஆகிய துன்பத்தைத் தீர்க்கும் சிவன்;



7)
கங்கை நாயகா, கண்ணுதல் ஈசனே,
திங்கள் சூடியே, தேவனே,
எங்கள் நாதனே, என்(று)அடி போற்றுவார்
தங்கள் மேல்வினை தங்குமோ.



மேல் வினை - முன்னை வினைகளாகிய சஞ்சிதமும், இப்பிறப்பில் ஈட்டப்படுகின்ற, இனி ஈட்டப்படுவதாகிய ஆகாமிய வினையும்;
அடி போற்றுவார் தங்கள் மேல் வினை தங்குமோ - திருவடியைத் தொழும் பக்தர்களது வினைகள் தங்காது அழியும்.



8)
மலையை ஆட்டுமி லங்கையர் மன்னனின்
தலைகள் பத்தையும் தாள்விரல்
மலர்போல் வைத்துநெ ரித்தவன் அன்பருக்(கு)
இலையே தீவினை இன்னலே.



மலையை ஆட்டும் இலங்கையர் மன்னனின் தலலகள் பத்தையும் - கயிலையைப் பெயர்க்க எண்ணி ஆட்டிய இராவணனின் பத்துத் தலைகளையும்;
தாள்விரல் மலர்போல் வைத்து நெரித்தவன் - தனது திருவடியின் விரல் ஒன்றை மலரைப் போல மென்மையாக வைத்து நசுக்கியவன்;
அன்பருக்(கு) இலையே தீவினை இன்னலே - (அச்சிவனின்) பக்தர்களுக்குத் தீவினைத் துன்பம் இல்லை.



9)
கழலாத் தீவினைக் கட்டுகள் விட்டிடக்
கழறாய் நெஞ்சமே கண்ணனும்
கழலார் சேவடி காண்கிலா வண்ணமோர்
தழலாய் நின்றவன் தன்னையே.



கழலுதல் - நீங்குதல்; நெகிழ்தல்;
கழறுதல் - சொல்லுதல்;
கழல் ஆர் சேவடி - கழல் பொருந்திய சிவந்த திருவடி;
தழல் - நெருப்பு;



10)
பாங்கில் லாமொழிப் பாவியர் பொய்களை
நீங்கிப், போற்றுவோம் நித்தலும்,
ஆங்குச் சென்னிமேல் ஆற்றுடன் திங்களைத்
தாங்கி னான்மலர்த் தாளையே.



பாங்கு இல்லா - நன்மையற்ற; பொருந்தாத;
நீங்குதல் - விலகிச்செல்லுதல்;
சென்னி - தலை;



11)
உய்ய வேண்டில்நீ உள்ளுவாய் நெஞ்சமே,
வையம் ஆளவும் வைத்திடும்
ஐயன், அன்(பு)உரு ஆனவன், பாதிஓர்
தையல் தாங்கினான் தாளையே.



உள்ளுதல் - நினைத்தல்;
வையம் - உலகம்;
பாதி ஓர் தையல் தாங்கினான் - அர்த்தநாரீஸ்வரன்;


(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை 5.60.7 -
"ஐயனே அரனே என்று அரற்றினால்
உய்யலாம் உலகத்தவர் பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே")



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்கள் ஓரளவு "திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பை ஒத்தன – ஆனால், திருமுக்காலுக்கும் இவற்றுக்கும் சில வித்தியாசங்கள்:
1) முதற்சீர் 'தான' என்று வரும் (திருமுக்காலில் முதற்சீர் தானன என்று வரும்);
2) இரண்டாம், மூன்றாம் அடிகள் மடக்கு இன்றி வருவன. (திருமுக்காலில் 2-ஆம் அடி அப்படியே 3-ஆம் அடியில் மீண்டும் வரும்);



இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம். (முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி).
(1,3 அடிகளில் 4 சீர்களும், 2,4 அடிகளில் முச்சீரும் உள்ள அமைப்பு.
மா + 3 கூவிளம்
மா + 2 கூவிளம்
மா + 3 கூவிளம்
மா + 2 கூவிளம்
என்ற அமைப்பு)



(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.58.5 -
பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்
விண்ணி னார்மதில் எய்தமுக்
கண்ணி னான்உறை யும்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.)



01.32 – பொது - (ஈரடி)

01.32பொது - (ஈரடி)



2008-05-23
பொது
-----------------------------
"தான தானனா தான தானனா தான தானனா தான தானனா
தான தானனா தான தானனா தான தானதனா"
(தேவாரத்தில் "ஈரடி" என்ற அமைப்பு - குறள் தாழிசை)



(சம்பந்தர் தேவாரம் - 3.110.1 -
வரமதேகொளா வுரமதேசெயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்(து)
அரனனாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே.)



1)
மாச கற்றிய நேச நெஞ்சினர் வாசப் பூவினால் ஈசன் சேவடி
பூசை செய்திட ஆசை யும்வினைப் பாச மும்விடுமே.



மாசு அகற்றிய - வஞ்சம் இல்லாத;



2)
கடையும் தேவரை அடையும் நஞ்சினை மிட டைத்தவன், இடம டந்தையை
உடைஅ ரன்கழல் அடைய வல்லவர் இடர்க ளேஇலரே.



நஞ்சினை மிடறு அடைத்தவன் - விடத்தைக் கண்டத்தில் அடைத்தவன்; (மிடற்று என்பது ஓசை கருதி மிடறு என்று வந்தது);
இடம் மடந்தையை உடை அரன் - இடப்பக்கம் பார்வதியை உடைய ஹரன்;



3)
யானைத் தோலுடன் ஏனக் கொம்ணி ஆனைக் காவனை, மானை ஏந்துமெம்
மானை, நெஞ்சினில் தேனைப் போல்இனிப் பானைப் பாடுதுமே.



ஏனக் கொம்பு - பன்றிக்கொம்பு;
ஆனைக்காவன் - திருவானைக்காவில் உறையும் சிவன்;
எம்மான் - எம் சுவாமி; எம் தந்தை;
பாடுதும் - பாடுவோம்; (திருவாசகம் - திருவம்மானை - 8.8.1 - “அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்”);



4)
ஆயும் பாலன(து) ஆயுள் ஆனது மாயும் நாள்எனப் பாயும் காலனைக்
காயும் காலனை, நோயும் தீர்ந்திட நீயும் சேர்மனமே.



ஆய்தல் - ஆராய்தல்; சிந்தித்தல்; (திருவடியைச் சிந்தித்தல்);
காயும் காலனை - உதைத்த காலை உடையவனை;
நோய் - பிறவி நோய்;



5)
வேத நாவினன் பூத நாயகன் மாதைப் பங்குடை நாதன் தாள்தனைக்
காத லால்நிதம் ஓதத் தீவினை ஏத மேஇலையே.



வேத நாவினன் - வேதம் ஓதும் திருநாவினன்;
பூத நாயகன் - உயிர்கட்கெல்லாம் தலைவன்;
காதல் - அன்பு;
நிதம் - தினந்தோறும்;
ஏதம் - துன்பம்; குற்றம்;



6)
புவன நாயகன் தவள நீறணி பவள மால்வரைச் சிவனை யேநினை;
கவலை, சூரியன் சுவற்றும் நுண்பனித் திவலை யாய்விடுமே.



புவன நாயகன் - உலகிற்கு இறைவன்;
தவள நீறு அணி - வெள்ளைத் திருநீற்றைப் பூசும்
பவள மால் வரை - பெரிய செம்பவள மலை - சிவந்த திருமேனி;
சுவற்றுதல் - வற்றச்செய்தல் (evaporate); முற்றும் அழித்தல் (to extirpate, destroy utterly);
திவலை - சிறிய நீர்த்துளி;



7)
மனித வாழ்வினில் நனிம கிழ்ந்திடக் "கனியின் சாற்றினும் இனியன்" என்றுநல்
முனிவர் கூறிடும் புனிதன் அஞ்செழுத்(து) இனி வில்மனமே;



நனி - மிகுந்த;
கனியின் சாற்றினும் இனியன் என்று நல் முனிவர் கூறிடும் புனிதன் - (அப்பர் தேவாரம் - 5.14.10 "கனியினும் கட்டிபட்ட கரும்பினும் ...இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே");



8)
இலங்கை மன்னவன் மலையை ஆட்டவும் மலரைப் போல்விரல் நிலத்தில் வைத்(து),அவன்
அலறிப் பாட,வாள், அலகில் நாள்அருள் உலக நாயகனே.



அலகு இல் நாள் - அளவு இல்லாத ஆயுள் - நீண்ட ஆயுள்;



9)
செங்கண் மாலொடு பங்க யத்தவன் எங்கும் நேடிநின்(று) "எங்கள் நாயகா
சங்க ரா"வெனும் துங்கர் தாள்தொழ மங்கும் தீவினையே.



பங்கயத்தவன் - தாமரையில் இருக்கும் பிரமன்;
நேடி - தேடி;
துங்கர் - உயர்ந்தவர்; சிவன்;
மங்குதல் - அழிதல்;



10)
முந்தை நாள்முதல் வந்த நம்வழி நிந்தை செய்பவர் மந்த புத்தியர்;
எந்தை ஈசனை வந்திப் போர்வினை வெந்து போய்விடுமே.



முந்தை நாள் - பழங்காலம்;



11)
பெரிய தேர்அது முரிய ஏறியே திரியும் முப்புரம் எரிய ஓர்நகை
புரியும் ஈசனைப் பிரிய மாய்த்தொழப் பிரியும் வல்வினையே.



முரிய - ஒடிய;
நகை - சிரிப்பு;
பிரிதல் - நீங்குதல்; விட்டு விலகுதல்; கட்டு அவிழ்தல்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
தேவாரத்தில் "ஈரடி" என்ற அமைப்பு - குறள் தாழிசை.
முதல் அடி - எண்சீர் - "தான தானனா" x 4
இரண்டாம் அடி - அறுசீர் - "தான தானனா" x 2 + "தான தானதனா"
சில பாடல்களில் "தான" என்ற இடங்களில் "தனன" வரும்.



யாப்புக் குறிப்பு:
"சமயக் குரவர் காலத்தில் ஈரடிப் பாடல்கள் என்று கூறப்பட்டவை காரிகைக்காலத்தில் பெயர் மாற்றம் பெற்று "அந்தடி குறையும்' குறள் தாழிசைகளாக வகுக்கப்பட்டன.
முதலடி எண்சீர், இரண்டாமடி அறுசீர்.
ஆனால் கட்டளை பெற்று வருவன. (நேர் அசையில் தொடங்கினால் முதலடி 20 எழுத்துகளும் இரண்டாவது அடி 16 எழுத்துகளும் பெற்று நடக்கின்றன. நிரை அசையில் தொடங்கினால் முதலடி 24 எழுத்துகளும் இரண்டாவது அடி 19 எழுத்துகளும் பெற்று நடக்கின்றன).
இப்பாடல்களின் தனிச்சிறப்புச் சீர் எதுகை.”




01.31 – பொது - (திருமுக்கால்)

01.31பொது - (திருமுக்கால்)



2008-05-07
பொது
---------------
(12 பாடல்கள்)
(திருமுக்கால் அமைப்பில்)
(திருஞானசம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.97.1 - 'திடமலி மதிளணி சிறுகுடி மேவிய')



1)
கொல்லையில் கிளிகளும் மறைபயில் குளிர்நகர்
தில்லையில் திருநடத் தீரே
தில்லையில் திருநடத் தீருமைத் தெளிபவர்க்(கு)
எல்லையில் இன்பமும் எளிதே.



கொல்லை - தோட்டம்; முல்லைநிலம்;
மறை - வேதம்;
பயிலுதல் - சொல்லுதல் (to speak, utter, tell, talk); ஒலித்தல் (to utter indistinct sounds, as birds; to sound); கற்றல்;
குளிர்நகர் - வினைத்தொகை - குளிர்ந்த நகரம்; (குளிர்தல் - குளிர்ச்சியுறுதல் (to be cool, refreshing); கண்முதலிய பொறிகளுக்கு இனியதாதல் (to be pleasant to the sense of touch, sight or hearing); )
தெளிதல் - ஆராய்தல் (to consider, investigate); அறிதல் (to know, understand, perceive, experience);
எல்லை இல் - அளவு இல்லாத;
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை 2.61.2 -
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
வேதத்(து) ஒலியால் கிளிசொல் பயிலும் வெண்காடே. )


(திருமுறை 9.20.3 - கண்டராதித்தர் அருளிய திருவிசைப்பா -
"முத்தீயாளர் .... ஓதிய நான்மறையைத்
தெத்தே என்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள் ...")



2)
கருப்புவில் லொடுவரும் காமனை எரிக்கிற
நெருப்புமிழ் கண்ணுடை யீரே
நெருப்புமிழ் கண்ணுடை யீருமை நித்தலும்
விருப்பொடு தொழவினை விடுமே



கருப்பு வில் - கரும்பினால் ஆன வில்;
நித்தலும் - நாள்தோறும்;



3)
பாலன தாருயிர் பறித்திட வருகிற
காலனை உதைத்தருள் வீரே
காலனை உதைத்தருள் வீருமைக் கைதொழும்
சீலருக் கிடர்இலை திடமே.



பாலனது ஆருயிர் - மார்க்கண்டேயரது உயிர்;



4)
திங்களும் அரவமும் திகழ்கிற சடையினில்
கங்கையைக் கரந்தருள் வீரே
கங்கையைக் கரந்தருள் வீருமைக் கருதிட
மங்கிடும் பழவினை மலையே.



அரவம் - பாம்பு;
கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்; கொடாது இருத்தல்;
கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்;
மங்குதல் - கெடுதல் (to decay; to be ruined);



5)
அப்பெருஞ் சிலைதனில் அழல்திகழ் கணைகொடு
முப்புரங் களைஎரித் தீரே
முப்புரங் களைஎரித் தீருமை மொழிபவர்
எப்பழி இடர்களும் இலரே



அப்பெருஞ் சிலைதனில் - அந்தப் பெரிய மலையாகிய வில்லில்; (சிலை – மலை; வில்);
அழல் திகழ் கணைகொடு - நெருப்புத் திகழ்கின்ற அம்பால்;



6)
கானினை நடமிடும் களமெனக் கொண்டொரு
மானினைக் கரமுடை யீரே
மானினைக் கரமுடை யீருமை வணங்கிட
வானினை ஆள்நிலை வருமே



கான் - சுடுகாடு;
களம் - இடம்; சபை;
வான் - வானுலகம்;



7)
படையென மழுவினைப் பற்றிய கரத்தொடு
விடையினில் எழுந்தருள் வீரே
விடையினில் எழுந்தருள் வீருமை விரும்புவார்க்(கு)
இடர்தரும் இருவினை இறுமே.



படை - ஆயுதம்;
விடை - இடபம்; எருது;
இறுதல் - அழிதல்;



8)
இருவரை எடுக்கிற இலங்கையன் செருக்கற
ஒருவிரல் கொடுநெரித் தீரே
ஒருவிரல் கொடுநெரித் தீருமை உள்கிட
அருவினைத் தொடருடன் அறுமே.



இரு வரை - பெரிய மலை - கயிலை மலை;
செருக்கு அற - கர்வம் அழிய;
ஒரு விரல்கொடு - ஒரு விரலால்; (கொடு - கொண்டு);
உள்குதல் - உள்ளுதல் - நினைதல்;
உடன் அறும் - உடனே அற்றுவிடும்;



9)
நான்முகன் மாலிவர் நாணிட எரியென
வான்கடந் தன்றுயர்ந் தீரே
வான்கடந் தன்றுயர்ந் தீருமை வாழ்த்திட
மேன்மையும் வெற்றியும் மிகுமே.



மால் - திருமால்;
எரி - தீ;
வான் கடந்து அன்று உயர்ந்தீர் - அண்டங்களையெல்லாம் தாண்டி ஓங்கினீர்;



10)
பொய்களில் புரள்கிற புல்லருக் கரியராய்
ஐவகைத் தொழில்புரி வீரே
ஐவகைத் தொழில்புரி வீருமை அடைந்தவர்
உய்வகை தனில்நிலை உளரே.



புல்லன் - அறிவீனன் (ignorant person); இழிந்தவன்;
அரியர் - அடைய இயலாதவர்;
ஐவகைத் தொழில் - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் என்ற கடவுளின் ஐந்தொழில்;
அடைதல் - சரண்புகுதல்;
உய் வகை - உய்யும் உபாயம்;


(அப்பர் தேவாரம் - திருமுறை 4.66.7 -
"வஞ்சகர்க்(கு) அரியர் போலும் மருவினோர்க்(கு) எளியர் போலும்" )



11)
சிரமலி மாலையைத் திருமுடி மிசைஅணிந்(து)
அரையினில் அரவசைத் தீரே
அரையினில் அரவசைத் தீருமை அனுதினம்
உரைசெய நலமிக உறுமே.



சிரம் மலி மாலையைத் திருமுடிமிசை அணிந்து - தலைக்குத் தலைமாலை (மண்டையோடுகளால் ஆன மாலை) அணிந்து;
அரையினில் அரவு அசைத்தீரே - அரையில் பாம்பைக் கட்டியவரே; (அசைத்தல் - கட்டுதல்);
அரையினில் அரவு அசைத்தீர் உம்மை அனுதினம் உரைசெய நலம் மிக உறுமே - இடுப்பில் பாம்பைக் கட்டிய்யிருக்கும் உங்களைத் தினந்தோறும் துதித்தால் நன்மைகள் மிகும்; (உறுதல் - அடைதல்; பெறுதல்);


(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.4.1 -
"தலைக்குத்தலை மாலை அணிந்ததென்னே"
சிவபிரான், தலைமாலையை மார்பில் அணிதலே அன்றித் தலையிலும் அணிந்துள்ளான். இது தலையில் அணியும் உருத்திராக்கம் போல்வதாம்.)



12)
கமழலர்க் கணைதொடு காமனைக் காய்ந்துகந்(து)
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீருமை ஓதிட
அமருல காளலாம் அவரே.



கமழ் அலர்க்கணை தொடு காமனைக் காய்ந்து உகந்து உமை ரு கூறு டையீரே - வாச மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்து, விரும்பி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே;
அமருலகு - அமரர் உலகு அமருலகு ஆயிற்று.
(சம்பந்தர் தேவாரம் - 1.63.12 - “...பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்(கு) அடையாவினைகள் உலகில்நாளும் அமருல(கு) ஆள்பவரே”);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் உள்ளன. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம். (முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி).



திருமுக்கால் பாடல் அடிகளின் அமைப்பு:
தானன தானன தானன தானன
தானன தானன தானா
தானன தானன தானன தானன
தானன தானன தானா



தானன வரும் இடத்தில் தனதன வரலாம். அதேபோல் தானா வரும் இடத்தில் தனனா வரலாம்.
தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்.
1, 3-ஆம் அடிகளின் ஈற்றில் உள்ள தானன என்பது தானனா என்றும் ஒரோவழி (சில சமயம்) வரலாம்.



இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).



(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - (திருமுக்கால்) -
திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி யரவுடை யீரே
படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
அடைவது மமருல கதுவே

)