03.04 – சிவன் சிலேடைகள்
2006-04-14
3.4.26 - சிவன் - மாட்டுவண்டி - சிலேடை
--------------------------------------------------------------------
எருதூர்தி இட்டம்போல் இங்குமங்கும் சென்று
வரும்காட்சி யும்கிட்டும் மக்கள் பருகுவரின்
பச்சிறு மாபொருள் வையார் அறிவுடையோர்
மெச்சுவண்டி வான்கயிலை வேந்து.
சொற்பொருள்:
ஊர்தி - 1. வாகனம்;
இட்டம் - இஷ்டம்;
இங்குமங்கும் - 1. பல இடங்களுக்கும்; / 2. பூலோகமும் வானுலகமும்;
மக்கள் - 1. குழந்தைகள்; / 2. மனிதர்கள்;
பருகுதல் - அனுபவித்தல்;
இன்பு - இன்பம்;
அச்சிறு மாபொருள் - 1. அச்சு இறும் மா பொருள்; அச்சு இறுமா பொருள்; / 2) அச் சிறு மா பொருள்;
இறுமா - இறுமாறு - இறும்படி;
இறுதல் - முறிதல்;
மா - பெரிய;
வையார் - 1. வைக்கமாட்டார்கள்; (வைத்தல்) / 2. இகழமாட்டார்கள் (வைதல்);
மெச்சுதல் - புகழ்தல்;
வேந்து - மன்னன்; இறைவன்;
இலக்கணக் குறிப்பு: "செய்யும்" என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள "உம்" விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.
மாட்டுவண்டி:
எருதூர்தி - காளைமாட்டைக் கொண்டு இயங்கும் வாகனம்.
இட்டம் போல் இங்கும் அங்கும் சென்று வரும் காட்சியும் கிட்டும் - (வண்டியோட்டியின்) விருப்பம் போல அங்குமிங்கும் போய்வரும் காட்சியைக் காணலாம்;
மக்கள் பருகுவர் இன்பு - (அவ்வண்டியில் சென்றால்) குழந்தைகளுக்கு இன்பம் உண்டாகும்;
அச்சு இறுமா பொருள் வையார் அறிவுடையோர் - அறிவுள்ளவர்கள் வண்டியின் அச்சு முறியும்படி பெரும்பொருளை ஏற்றமாட்டார்கள்;
(அறிவுடையோர்) மெச்சு வண்டி - (இவை சுற்றுப்புறத்தை அதிகம் மாசுபடுத்தாமையால், அறிஞர்கள்) புகழ்கின்ற மாட்டுவண்டி;
சிவன்:
எருதூர்தி - இடபவாகனம் உடையவன்;
இட்டம் போல் இங்கும் அங்கும் சென்று வரும் - தன் திருவுள்ளம்போல் எவ்வுலகிற்கும் சென்றுவருவான்;
காட்சியும் கிட்டும் மக்கள் பருகுவர் இன்பு - அவன் தரிசனம் கிட்டும் மக்களுக்குப் பேரின்பம் வரும்;
அச்-சிறு மா பொருள் வையார் அறிவுடையோர் - அந்த நுண்மையும் பெருமையும் உடைய மெய்ப்பொருளை அறிவுடையோர் இகழமாட்டார்கள்; (சம்பந்தர் தேவாரம் - 2.20.8 - "பெரியாய் சிறியாய் பிறையாய்");
(அறிவுடையோர்) மெச்சு வான்-கயிலை வேந்து - அறிவுடையோர் புகழ்கின்ற, அழகிய கயிலைமலைக்கு இறைவன்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment