Monday, November 6, 2023

07.16 – பொது - "வினை மாய்த்தருள் ஈசன்" - பொற்பதம் ஏத்து

07.16 – பொது - "வினை மாய்த்தருள் ஈசன்"

2015-12-26

7.16 - பொது - "வினை மாய்த்தருள் ஈசன்"

------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தானன தானன தானன தானா - சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

"லிங்காஷ்டகம்" என்ற துதியின் சந்தத்தில்)


* சந்தம் கெடாத இடங்களில், படிப்போர் வசதி கருதிப், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;

* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

பொற்பதம் ஏத்துசு ரர்க்கருள் ஈசன்

வெற்பினை வில்லென ஏந்திய ஈசன்

நற்புனல் அஞ்சடை வைத்தருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பொற்பதம் ஏத்து சுரர்க்கு அருள் ஈசன் - பொன் போன்ற திருவடியைத் துதித்த தேவர்களுக்கு அருளிய ஈசன்;

வெற்பினை வில் என ஏந்திய ஈசன் - மேருமலையை வில்லாக ஏந்திய ஈசன்; - முப்புரம் எரித்ததைச் சுட்டியது; (வெற்பு - மலை);

நற்புனல் அஞ்சடை வைத்தருள் ஈசன் - கங்கையை அழகிய சடையில் தாங்கும் ஈசன்; (அம் - அழகு);

வாழ்த்திடுவோம் வினை மாய்த்து அருள் ஈசன் - நம் வினையையெல்லாம் அழித்து அருளும் ஈசனைப் போற்றுவோம்;


2)

தக்கனை முண்டம ரிந்தருள் ஈசன்

அக்கணி ஆரமெ னப்புனை ஈசன்

சக்கரம் அச்சுத னுக்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


தக்கனை முண்டம் அரிந்து அருள் ஈசன் - தக்கன் செய்த வேள்வியை அழித்து அவன் தலையை வெட்டி அருளிய ஈசன்; (முண்டம் - தலை); (அரிதல் - வெட்டுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.109.6 - "தக்கனைத் தலையரி தழலுருவர்");

அக்கு அணி ஆரம் எனப் புனை ஈசன் - எலும்பை அழகிய மாலை போலப் பூணும் ஈசன்;

சக்கரம் அச்சுதனுக்கு அருள் ஈசன் - திருமாலுக்க்ச் சக்கராயுதத்தை அருளிய ஈசன்;


3)

பொங்கெரி மேனியில் நீறணி ஈசன்

ஐங்கணை வேள்பட நோக்கிய ஈசன்

மங்கல மேவிர திக்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பொங்கு எரி மேனியில் நீறு அணி ஈசன் - பொங்குகின்ற தீப் போன்ற செம்மேனியில் திருநீற்றை அணிந்த ஈசன்; (எரி - நெருப்பு ); (மேனியினீறணி = மேனியில் நீறு அணி); (அப்பர் தேவாரம் - 4.112.5 - "முழுத்தழல் மேனித் தவளப் பொடியன்");

ஐங்கணை வேள் பட நோக்கிய ஈசன் - ஐந்து மலர்க்கணைகள் ஏவும் மன்மதன் அழியும்படி அவனை நெற்றிக்கண்ணால் பார்த்த ஈசன்; (வேள் - காமன்); (படுதல் - அழிதல்; சாதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று");

மங்கலமே இரதிக்கு அருள் ஈசன் - வழிபாடு செய்த இரதிக்கு இரங்கி அவளுக்கு நன்மை (/தாலி பாக்கியம்) அருளி, அவள் கணவனான மன்மதனுக்கு மீண்டும் உயிர் தந்த ஈசன்; (மங்கலமேவிரதிக்கருள் = 1. மங்கலமே இரதிக்கு அருள்; 2. மங்கலம் மேவு இரதிக்கு அருள்); (மங்கலம் - சுபம்; நன்மை; தாலி); (மேவுதல் - விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.60.9 - "காமனை ஈடழித்திட் டவன் காதலி சென்றிரப்பச் சேமமே உன்றனக்கென் றருள் செய்தவன்");


4)

போர்புரி வேழமு ரித்தருள் ஈசன்

நீர்புரி செஞ்சடை ஏற்றருள் ஈசன்

பேர்பல சொல்லடி யார்க்கருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


போர் புரி வேழம் உரித்தருள் ஈசன் - போர் செய்த யானையின் தோலை உரித்தருளிய ஈசன்;

நீர் புரி செஞ்சடை ஏற்றருள் ஈசன் - கங்கையை முறுக்கேறிய செஞ்சடையில் தாங்கியருளிய ஈசன்; (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல் - To be twisted; to curl); (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "புரிசடையாய் புண்ணியனே");

பேர் பல சொல் அடியார்க்கு அருள் ஈசன் - பல திருநாமங்களையும் சொல்லி வணங்கும் அடியவர்களுக்கு அருள்கின்ற ஈசன்;


5)

வலியச லந்தர னைத்தடி ஈசன்

எலியையு(ம்) மாவலி ஆக்கிய ஈசன்

நலிவிலன் ஓர்விடை ஏறிய ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வலிய சலந்தரனைத் தடி ஈசன் - வலிமை மிகுந்த சலந்தராசுரனை அழித்தவன்; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

எலியையும் மாவலி ஆக்கிய ஈசன் - (திருமறைக்காட்டில், ஈசன் சன்னிதியில் இருந்த விளக்குத் திரியைத் தற்செயலாகத் தூண்டிய) ஓர் எலியைப் பின்னர் மகாபலியாகப் பிறப்பித்தவன்; (மாவலி - மகாபலி); (அப்பர் தேவாரம் - 4.49.8 - "நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக் கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட);

நலிவு இலன் ஓர் விடை ஏறிய ஈசன் - துன்பமும் அழிவும் இல்லாதவன், ஒப்பற்ற இடப வாகனம் உடைய ஈசன்; (நலிவு - துன்பம்; அழிவு); (ஓர் - ஒப்பற்ற; ஒரு);


6)

அந்தக னைச்செறு வேலுடை ஈசன்

மந்திர மாமறை ஓதிய ஈசன்

சந்திர னைத்தரி தாழ்சடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


அந்தகனைச் செறு வேல் உடை ஈசன் - அந்தகாசுரனை அழித்த சூலத்தை உடைய ஈசன்; (அந்தகன் - அந்தகாசுரன்); (செறுதல் - அழித்தல்; வெல்லுதல்); (வேல் - திரிசூலம்);

மந்திர மாமறை ஓதிய ஈசன் - மந்திரங்களையுடைய வேதங்களைப் பாடியருளியவன்; வேதமந்திரங்கள் பாடுகின்ற ஈசன்; (சம்பந்தர் தேவாரம் - 3.15.1 - "மந்திர மறையவை வானவரொடும் இந்திரன் வழிபட நின்ற எம்மிறை");

சந்திரனைத் தரி தாழ்சடை ஈசன் - சந்தரனை அணிந்த தாழும் சடையை உடையவன்; (தாழ்சடை - தொங்குகின்ற சடை);


7)

நான்முகன் ஓர்தலை கொய்தருள் ஈசன்

மான்மறி மாமழு ஏந்திய ஈசன்

தேன்மலி மாமலர் ஆர்சடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


நான்முகன் ஓர் தலை கொய்தருள் ஈசன் - பிரமனுடைய தலைகளில் ஒன்றைக் கிள்ளியருளிய ஈசன்; (சம்பந்தர் தேவாரம் - 1.105.7 - "பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே");

மான்மறி மாமழு ஏந்திய ஈசன் - கையில் மான்கன்றையும் பெரிய மழுவையும் ஏந்தியவன் ஈசன்; (மறி - கன்று);

தேன் மலி மாமலர் ஆர் சடை ஈசன் - தேன் நிறைந்த அழகிய மலர்களைச் சடையில் அணிந்த ஈசன்; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; அணிதல்);


8)

பத்துமு கன்தனை ஊன்றிய ஈசன்

மத்திடு மாகடல் நஞ்சணி ஈசன்

சத்தியை வாமமி ருத்திய ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


பத்துமுகன்தனை ஊன்றிய ஈசன் - தசமுகனை (இராவணனை) நசுக்கிய ஈசன்; (ஊன்றுதல் - அமுக்குதல்);

மத்திடு மா கடல் நஞ்சணி ஈசன் - கடைந்த பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (மத்திடுதல் - கடைதல்); (மாகடனஞ்சணி = மா கடல் நஞ்சு அணி); (சம்பந்தர் தேவாரம் - 3.69.1 - "மாகடல்விடம் தானமுது செய்தருள் புரிந்தசிவன்");

சத்தியை வாமம் இருத்திய ஈசன் - உமையை இடப்பக்கம் விரும்பி ஏற்ற ஈசன்; (சத்தி - சக்தி - உமை); (வாமம் - இடப்பக்கம்); (இருத்துதல் - இருக்கச்செய்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.33.3 - "மலைமங்கையொரு பாகத் துளங்கொள இருத்திய ஒருத்தன்");


9)

ஏனமும் அன்னமு(ம்) நேடிய ஈசன்

கானக(ம்) மாநடம் ஆடிடும் ஈசன்

போனக மாவிடம் உண்டருள் ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


ஏனமும் அன்னமும் நேடிய ஈசன் - பன்றியும் அன்னமுமாய்த் திருமலும் பிரமனும் அடியும் முடியும் தேடிய ஈசன்; (ஏனம் - பன்றி); (நேடுதல் - தேடுதல்);

கானகம் மா நடம் ஆடிடும் - சுடுகாட்டில் பெரிய திருநடம் செய்கின்ற; (கானகம் - காடு - இங்கே சுடுகாடு); (மா - அழகு; பெருமை);

போனகமா விடம் உண்டருள் ஈசன் - உணவாகக் ஆலகால விடத்தை உண்ட ஈசன்; (போனகம் - உணவு); (போனகமா - போனகமாக - கடைக்குறையாக வந்தது);


10)

புன்னெறி யார்க்கிலன் ஆகிய ஈசன்

தன்னடி யார்க்கொரு நற்றுணை ஈசன்

வன்னம னைக்கழ லாலுதை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


புன்னெறியார்க்கு இலன் ஆகிய ஈசன் - சிறுநெறியாளர்களுக்கு அருள் இல்லாத ஈசன்; சிறுநெறியாளர்களால் அறியப்படாத ஈசன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன்");

தன் அடியார்க்கு ஒரு நல் துணை ஈசன் - தன் பக்தர்களுக்கு ஒப்பற்ற நல்ல துணை ஆன ஈசன்;

வன் நமனைக் கழலால் உதை ஈசன் - கொடிய கூற்றுவனைக் கழல் அணிந்த திருவடியால் உதைத்த ஈசன்;


11)

வெண்பொடி மார்பிலி லங்கிடும் ஈசன்

தண்புன லைச்சடை வைத்தருள் ஈசன்

பெண்புடை யில்திகழ் அன்புடை ஈசன்

.. வாழ்த்திடு வோம்வினை மாய்த்தருள் ஈசன்.


வெண் பொடி மார்பில் இலங்கிடும் ஈசன் - வெண்மையான திருநீறு மார்பில் திகழ்கின்ற ஈசன்;

தண் புனலைச் சடை வைத்து அருள் ஈசன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் வைத்த ஈசன்;

பெண் புடையில் திகழ் அன்பு உடை ஈசன் - உமாதேவி ஒரு பக்கத்தில் திகழும்படி அன்பு உடைய ஈசன்;


பிற்குறிப்புகள் :

1) இப்பதிகத்தில் சிவபெருமானின் அட்டவீரட்டச் செயல்களும் சுட்டப்பெறுகின்றன;

திரிபுரம் எரித்தது (திருவதிகை), ஜலந்தரனை வதம் செய்தது (திருவிற்குடி), தக்கன் வேள்வியை அழித்து (திருப்பறியலூர்), மன்மதனை எரித்தது (திருக்குறுக்கை), காலனை அழித்தது (திருக்கடவூர்), யானையை வதம் செய்தது (திருவழுவூர்), அந்தகனை அழித்தது (திருக்கோவலூர்), பிரமன் தலையைக் கொய்தது (திருக்கண்டியூர்) ஆகிய எட்டுத் தலங்களே வீரட்டத் தலங்களாகும்.


2) யாப்புக் குறிப்பு: மூவடிமேல் ஓரடி வைப்பு - இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் மூன்றடிகளால் அமைந்து அதன் மேல் ஓர் அடி (எல்லாப் பாடல்களிலும் அவ்வடியே) அமைந்து வருகின்றது. ஆகவே, "மூவடிமேல் ஓரடி வைப்பு";

எல்லா அடிகளும் "தானன தானன தானன தானா" என்ற சந்தம். வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

சில பாடல்களில் முதற்சீர் "தனதன" என்றும் வரலாம்.

தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின / மெல்லின ஒற்றுகள் அலகிடப்படா.

ஐகாரக் குறுக்கம் நிகழும் இடங்களில் அது குறில் போல அலகிடப்படும்.


3) திருமுறைகளில் நாலடிமேல் வைப்பு, ஈரடிமேல் வைப்பு, போன்ற அமைப்பு உடைய பதிகங்களைக் காணலாம். உதாரணமாக:

சம்பந்தர் தேவாரம் - 3.4.1 - "இடரினும் தளரினும் எனதுறுநோய்";

சம்பந்தர் தேவாரம் - 3.6.1 - "கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர்";

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்";

திருநாவுக்கரசர் தேவாரம் - 4.3.1 - "மாதர்ப் பிறைக்கண்ணி யானை";


4) சமஸ்கிருதத்தில் உள்ள லிங்காஷ்டகம் - அதன் யாப்பு :

Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்ம முராரி சுரார்சித லிங்கம்.

(Lingashtakam meter info provided by J.K. Mohana Rao):

brahma murAri surArchita liMgaM - taraMgaka / dOdhaka

dinakarakOTi prabhAkara liMgaM - kamalavilAsinI / tAmarasa / lalitapadA

suraguru suravara pUjita liMgaM - kamalalOchanA / kamalAkshI / chaMDI

parAtparaM paramAtmaka liMgaM - unknown

Some stanzas like 3, 5, 7 are mixtures of different metres. Such mixed metres are called upajAti in Sanskrit.

last one (phalasruthi) is SlOka


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment