Thursday, November 9, 2023

07.18 - கொள்ளிக்காடு - இளவிடை அதன்மிசை

07.18 - கொள்ளிக்காடு

2016-01-02

கொள்ளிக்காடு

--------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - "தானன தானன தான தானன" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்")

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")


1)

இளவிடை அதன்மிசை ஏறி உண்பலி

கொளவரு செல்வனைக் கொன்றைத் தாரனைக்

குளமணி வயல்திகழ் கொள்ளிக் காடுறை

வளர்மதி சூடியை வாழ்த்தி வாழ்மினே.


இளவிடை அதன்மிசை ஏறி - இளமையுடைய இடப வாகனத்தின்மேல் ஏறி;

உண்பலி கொள வரு செல்வனை - பிச்சை ஏற்க வருகின்ற செல்வனை; (பலி - பிச்சை)

கொன்றைத் தாரனை - கொன்றைமாலை அணிந்தவனை; (தார் - மாலை);

குளம் அணி வயல் திகழ் கொள்ளிக்காடு உறை - குளமும் அழகிய வயலும் திகழ்கின்ற திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற; (அணி - அழகு); ("குளம் அணி கொள்ளிக்காடு, வயல் திகழ் கொள்ளிக்காடு" என்று இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.101.9 - "ஐயன் அணிவயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்கு");

வளர்மதி சூடியை வாழ்த்தி வாழ்மினே - வளரும் பிறைச்சந்திரனை அணிந்தவனை வாழ்த்தி வாழுங்கள்; (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);


2)

இரவினில் ஆடியை எய்த்து வந்தடி

பரவிய சுரர்உயப் பரிந்த கண்டனைக்

குரவணி சடையனைக் கொள்ளிக் காடுறை

அரவணி ஐயனை அடைந்து வாழ்மினே.


வினில் ஆடியை - இரவில் திருநடம் செய்பவனை; (ஆடி - ஆடுபவன்);

எய்த்து வந்து அடி பவிய சுரர் உயப் பரிந்த கண்டனை - வருந்தி வந்து திருவடியைத் துதித்த தேவர்கள் உய்யுமாறு இரங்கிய நீலகண்டனை; (எய்த்தல் - வருந்துதல்; துன்புறுதல்); (பரவுதல் - துதித்தல்); (சுரர் - தேவர்); (உய - உய்ய - இடைக்குறையாக வந்தது); (கண்டன் - நீலகண்டன் - ஒருபுடைப்பெயர்; ஏகதேசம்);

குரவு அணி சடையனை - குரா மலரைச் சூடிய சடையனை; (குரவு - குராமலர்);

கொள்ளிக் காடு உறை, ரவு அணி ஐயனை அடைந்து வாழ்மினே - திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற, பாம்பை அணியும் தலைவனைச் சரண்புகுந்து வாழுங்கள்; (அரவு - பாம்பு);


3)

பஞ்சினும் மெல்லடிப் பாவை பங்கனைச்

செஞ்சுடர் வண்ணனைத் தேவ தேவனைக்

குஞ்சியிற் பிறையனைக் கொள்ளிக் காடுறை

மஞ்சனை நாள்தொறும் வாழ்த்தி வாழ்மினே.


பஞ்சினும் மெல்லடிப் பாவை பங்கனை - பஞ்சைவிட மென்மையான பாதம் உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனை; (* பஞ்சின்மெல்லடியாள் - இத்தலத்து இறைவி திருநாமம்);

செஞ்சுடர் வண்ணனை - செந்தழல் போல் செம்மேனி உடையவனை;

குஞ்சியிற் பிறையனை - உச்சிமேல் பிறைச்சந்திரனைச் சூடியவனை; (குஞ்சி - தலை);

மஞ்சனை - மைந்தனை - வீரனை; இளைஞனை; (மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி);


4)

முடிமிசை ஆற்றனை முக்கண் மூர்த்தியைப்

பொடியணி மார்பினில் புற்ற ராவனைக்

கொடிமிசை ஏற்றனைக் கொள்ளிக் காடுறை

அடிகளை அடிதொழ அல்லல் இல்லையே.


முடிமிசை ஆற்றனை - உச்சிமேல் கங்கையைத் தாங்கியவனை;

பொடி - திருநீறு;

புற்றராவனை - புற்றில் வாழும் இயல்பு உடைய பாம்பை அணிந்தவனை;

கொடிமிசை ஏற்றனை - இடபக்கொடி உடையவனை;


5)

மான்றிகழ் கையனை மாக டல்விடம்

தோன்றிடு கண்டனைச் சுடலை நீறணி

கோன்றனை வயலணி கொள்ளிக் காடுறை

தோன்றலைத் துதித்திடத் துயரம் தீருமே.


பதம் பிரித்து:

மான் திகழ் கையனை, மா கடல் விடம்

தோன்றிடு கண்டனைச், சுடலை நீறு அணி

கோன் தனை, வயல் அணி கொள்ளிக்காடு உறை

தோன்றலைத் துதித்திடத் துயரம் தீருமே.


மான் திகழ் கையனை - கையில் மானை ஏந்தியவனை;

மா கடல் விடம் தோன்றிடு கண்டனை - பெரிய கடலில் எழுந்த கொடிய ஆலகால விஷம் (மணி போலத்) தென்படுகின்ற கண்டத்தை உடையவனை;

சுடலை நீறு அணி கோன் தனை - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசும் தலைவனை;

வயல் அணி கொள்ளிக்காடு உறை - வயல் சூழ்ந்த திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற;

தோன்றல் - தலைவன்; அரசன்;


6)

முனிவருக் கருமறை முன்வி ரித்தருள்

புனிதனைக் கோள்களும் போற்றும் பாதனைக்

குனிமதி சூடியைக் கொள்ளிக் காடுறை

இனியனை ஏத்திட என்றும் இன்பமே.


முனிவருக்கு அருமறை முன் விரித்தருள் புனிதனை - சனகாதியருக்கு அரிய மறைப்பொருளை முன்பு விளக்கியருளிய தூயனான தட்சிணாமூர்த்தியை;

கோள்களும் போற்றும் பாதனை - நவக்கிரகங்களும் வணங்கும் திருவடியினனை;

குனி-மதி சூடியை - வளைந்த பிறைச்சந்திரனை அணிந்தவனை; (குனிதல் - வளைதல்; வணங்குதல்);

கொள்ளிக்காடு உறை இனியனை ஏத்திட என்றும் இன்பமே - திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற, இனியவனைத் துதித்தால் எந்நாளும் இன்பமே;


7)

நீர்மலி சடையனை நெற்றிக் கண்ணனைக்

கார்மலி கண்டனைக் கால காலனைக்

கூர்மழு வாளனைக் கொள்ளிக் காடுறை

ஓர்விடைப் பாகனை உன்னி உய்ம்மினே.


மலிதல் - மிகுதல்; நிறைதல்;

கார் - கருமை;

கூர்மழுவாளனை - கூர்மையுடைய மழுவாளை ஏந்தியவனை;

ஓர் விடைப் பாகனை உன்னி உய்ம்மினே - ஒப்பற்ற இடப வாகனம் உடையவனைத் தியானித்து உய்யுங்கள்; (ஓர் - ஒப்பற்ற); (உன்னுதல் - நினைத்தல்; எண்ணுதல்);


8)

வரைபெயர் அரக்கனை வாட ஊன்றிய

அரையனை அறஞ்சொல ஆலின் கீழமர்

குரவனை வயலணி கொள்ளிக் காடுறை

அரவனை அடைந்தவர்க் கல்லல் இல்லையே.


வரை பெயர் அரக்கனை வாட ஊன்றிய அரையனை - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனை அவன் மிகவும் துன்புறுமாறு ஒரு விரலை ஊன்றி நசுக்கிய அரசனை; (வரை - மலை); (பெயர்த்தல் - இடம்விட்டு நீக்குதல்; பிடுங்குதல்); (அரையன் - அரசன்);

அறம் சொல ஆலின் கீழ் அமர் குரவனை - கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து நான்மறை ஓதிய குருவை; (குரவன் - குரு; ஆசிரியன்);

வயல் அணி கொள்ளிக்காடு உறை - வயல் சூழ்ந்த திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற,

அரவனை அடைந்தவர்க்கு அல்லல் இல்லையே - பாம்புகளை அணிந்த சிவபெருமானைச் சரண்புக்கவர்களுக்கு துன்பம் இல்லை;


9)

கழல்முடி நேடிய கண்ணன் நான்முகன்

தொழவுயர் சோதியைத் தோற்றம் இல்லியைக்

குழகனைச் செய்யணி கொள்ளிக் காடுறை

மழவிடைப் பாகனை வாழ்த்தி வாழ்மினே.


கழல் முடி நேடிய கண்ணன் நான்முகன் தொழ உயர் சோதியை - அடியையும் முடியையும் தேடிய திருமாலும் பிரமனும் தன்னை வணங்குமாறு எல்லையின்றி நீண்ட சோதி வடிவினனை;

தோற்றம் இல்லியை - பிறப்பு இல்லாதவனை; (தோற்றம் - பிறப்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.82.4 - "பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர்");

குழகனை - இளைஞனை; அழகனை;

செய் அணி கொள்ளிக்காடு உறை - வயல் சூழ்ந்த திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற,

மழ விடைப் பாகனை வாழ்த்தி வாழ்மினே - இள ஏற்றின்மேல் ஏறிவரும் ஈசனை வாழ்த்தி வாழுங்கள்;


10)

நித்தலும் பொய்யுரை நீசர் சொல்விடும்

அத்தியின் உரியனை அந்த கன்றனைக்

குத்திய சூலனைக் கொள்ளிக் காடுறை

மத்தனை வாழ்த்துமின் மல்கும் இன்பமே.


நித்தலும் பொய் உரை நீசர் சொல் விடும் - எப்பொழுதும் பொய்யே பேசுகின்ற கீழோர் பேசும் சொற்களை மதியாது நீங்குங்கள்; (விடும் - நீங்குங்கள்);

அத்தியின் உரியனை - யானைத்தோலைப் போர்த்தவனை; (அத்தி - யானை); (உரி - தோல்);

அந்தகன்தனைக் குத்திய சூலனை - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தி அழித்தவனை;

கொள்ளிக்காடு உறை மத்தனை வாழ்த்துமின் மல்கும் இன்பமே - திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற, ஊமத்தமலர் அணிந்த சிவபெருமானை வாழ்த்துங்கள்; இன்பமே பெருகும்; (மத்தன் - ஊமத்த மலரைச் சூடியவன்); (மல்குதல் - மிகுதல்; நிறைதல்); (அப்பர் தேவாரம் - 5.4.3 - "மத்தனை ... அத்தனை அடியேன் மறந்து உய்வனோ");


11)

மன்றினில் ஆடியை மதியஞ் சூடியை

அன்றினர் முப்புரம் அழலில் மூழ்கிடக்

குன்றவில் ஏந்தியைக் கொள்ளிக் காடுறை

கொன்றையந் தாரனைக் கும்பிட் டுய்ம்மினே.


மன்றினில் ஆடியை - தில்லை மன்றில் ஆடுகின்ற கூத்தனை;

மதியம் சூடியை - சந்திரனை அணிந்தவனை;

அன்றினர் முப்புரம் அழலில் மூழ்கிடக் குன்றவில் ஏந்தியை - பகைவர்களது முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி மேருமலையை வில்லாக ஏந்தியவனை; (அன்றினர் - பகைவர்); (குன்ற வில் - மலை வில்); (பட்டினத்து அடிகள் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 11.28.16 - "அன்றினர் புரங்கள் அழலிடை அவியக் குன்றுவளைத் தெய்த");

கொள்ளிக்காடு உறை - திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற,

கொன்றையந் தாரனைக் கும்பிட்டு உய்ம்மினே - கொன்றைமாலை அணிந்த சிவபெருமானை வணங்கி உய்யுங்கள்;


பிற்குறிப்பு :

1) யாப்புக் குறிப்பு:

  • கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - "தானன தானன தான தானன" என்ற சந்தம்;

  • முதல் இரு சீர்களில் தானன என்பது தனதன என்றும் வரலாம்;

  • மூன்றாம் சீரில் தான என்பது தனன என்றும் வரலாம்.

  • மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வாரா;

  • (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்")

  • (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")


2) கொள்ளிக்காடு - இத்தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது.

பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment