Saturday, November 11, 2023

07.20 – சிக்கல் - கானிலலை ஆனையுரி

07.20 – சிக்கல்

2016-01-17

சிக்கல்

----------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தானதன தானதன தானதன தானா" என்ற சந்தம்) (திருவிராகம் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருவிராகம் - "முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்")


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

கானிலலை ஆனையுரி போர்த்தவிறை கையில்

மானிலகு சூல(ம்)மழு வாளுடைய மைந்தன்

தேனிலவு சோலையணி சிக்கலுறை செல்வன்

வானிலவு சூடிகழல் வாழ்த்தவரும் இன்பே.


பதம் பிரித்து:

கானில் அலை ஆனை உரி போர்த்த இறை; கையில்

மான் இலகு சூலம் மழுவாள் உடைய மைந்தன்;

தேன் நிலவு சோலை அணி சிக்கல் உறை செல்வன்;

வான் நிலவு சூடி கழல் வாழ்த்த வரும் இன்பே.


கானில் அலை ஆனை உரி போர்த்த இறை - காட்டில் திரியும் யானையின் தோலைப் போர்வையாக அணிந்த இறைவன்;

கையில் மான், இலகு சூலம், மழுவாள் உடைய மைந்தன் - கையில் மானையும் ஒளி திகழும் சூலத்தையும் மழுவையும் உடைய வீரன்; (இலகுதல் - விளங்குதல்);

தேன் நிலவு சோலை அணி சிக்கல் உறை செல்வன் - வண்டுகள் இருக்கும் சோலை திகழும் சிக்கலில் உறையும் செல்வன்; (தேன் - வண்டு, தேனீ); (நிலவுதல் - தங்குதல்; நிலைத்து இருத்தல்); (செல்வன் - வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான்);

வான் நிலவு சூடி கழல் வாழ்த்த வரும் இன்பே - வானில் விளங்கும் அழகிய வெண்பிறைச் சந்திரனை அணிந்தவன் திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்; (வானிலவு - வான் நிலவு / வால் நிலவு); (வான் - வானம்; அழகு); (வால் - இளமை; வெண்மை); (நிலவு - சந்திரன்)


2)

அங்கியினை ஏந்திநடம் ஆடுமரன் நாகம்

அங்கமணி ஆரழகன் அஞ்சடையில் நீரன்

தெங்குமலி சோலையணி சிக்கலுறை செல்வன்

மங்கையொரு பங்கனடி வாழ்த்தவரும் இன்பே.


அங்கியினை ஏந்தி நடம் ஆடும் அரன் - தீயைக் கையில் ஏந்தித் திருநடம் செய்யும் ஹரன்; (அங்கி - நெருப்பு);

நாகம் அங்கம் அணி ஆரழகன் - பாம்பையும் எலும்பையும் அணியும் அரிய அழகன்; (அங்கம் - எலும்பு);

அம் சடையில் நீரன் - அழகிய சடையில் கங்கையை உடையவன்;

தெங்கு மலி சோலை அணி சிக்கல் உறை செல்வன் - தென்னஞ்சோலை சூழ்ந்த சிக்கலில் உறையும் செல்வன்;

மங்கை ஒரு பங்கன் அடி வாழ்த்த வரும் இன்பே - அர்த்தநாரீஸ்வரன் திருவடியை வாழ்த்தினால் இன்பம் வந்தடையும்;


3)

வென்றிவிடை ஊர்தியுடை வேந்தனடி யாரைக்

கொன்றுவிட எண்ணிவரு கூற்றையுதை கோமான்

தென்றலினில் வாசமலி சிக்கலுறை செல்வன்

கொன்றையணி கூத்தனடி கூறவரும் இன்பே.


வென்றி விடை ஊர்தி உடை வேந்தன் அடியாரைக் - வெற்றியுடைய இடப ஊர்தி உடைய சிவபெருமானுடைய அடியவரான மார்க்கண்டேயரை;

கொன்றுவிட எண்ணி வரு கூற்றை உதை கோமான் - கொல்லக் கருதி அவரிடம் வந்த காலனை உதைத்த தலைவன்; (கோமான் - தலைவன்);

தென்றலினில் வாசம் மலி சிக்கல் உறை செல்வன் - தென்றலில் மணம் கமழும் சிக்கலில் உறையும் செல்வன்;

கொன்றை அணி கூத்தன் அடி கூற வரும் இன்பே - கொன்றையை அணிந்த கூத்தப்பெருமானுடைய திருவடியைப் புகழ்ந்தால் இன்பம் வந்தடையும்;


4)

வந்தடியில் வீழ்மதியை வாழமுடி வைத்தான்

கந்தமலர் அம்புதொடு காமனையெ ரித்தான்

செந்தமிழின் ஆரமொலி சிக்கலுறை செல்வன்

நந்தியவன் நாமமணி நாவர்மகிழ் வாரே.


வந்து அடியில் வீழ் மதியை வாழ முடி வைத்தான் - திருவடியில் வீழ்ந்து வணங்கிய சந்திரனைக் காத்துத் தன் தலைமேல் அணிந்தவன்;

கந்தமலர் அம்பு தொடு காமனை எரித்தான் - வாசமலரை அம்பாகத் தொடுக்கும் மன்மதனை எரித்தவன்;

செந்தமிழின் ஆரம் ஒலி சிக்கல் உறை செல்வன் - செந்தமிழ்ப் பாமாலைகள் ஒலிக்கின்ற சிக்கலில் உறையும் செல்வன்; (ஆரம் - மாலை);

நந்திஅவன் நாமம் அணி நாவர் மகிழ்வாரே - நந்தி என்ற பெயர் உடைய சிவபெருமானின் திருப்பெயர்களை நாவில் அணிந்தவர்கள் இன்புறுவார்கள்;


5)

துன்றியிமை யோர்தொழுது தூமலர்கள் தூவ

அன்றினவர் மூவரணம் அட்டபரன் அன்பர்

தென்றமிழி னால்பரவு சிக்கலுறை செல்வன்

என்றுமுள ஈசனடி ஏத்தவரும் இன்பே.


துன்றி இமையோர் தொழுது தூ மலர்கள் தூவ - நெருங்கித் தேவர்கள் தூய மலர்களைத் தூவி வணங்கவும் அவர்களுக்கு இரங்கி; (துன்றுதல் - நெருங்குதல்);

அன்றினவர் மூ அரணம் அட்ட பரன் - பகைவர்களது முப்புரங்களை அழித்த பரமன்; (அன்றினவர் - பகைவர்); (அடுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 6.88.4 - "அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ");

அன்பர் தென் தமிழினால் பரவு சிக்கல் உறை செல்வன் - பக்தர்கள் இனிய தமிழான தேவாரம் பாடிப் போற்றும் சிக்கலில் உறையும் செல்வன்; (தென்றமிழ் - தென் தமிழ்); (தென் - இனிமை);

என்றும் உள ஈசன் அடி ஏத்த வரும் இன்பே - அழிவற்றவனான சிவபெருமான் திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;


6)

மங்கலமெ லாமருளு(ம்) மன்னனரு நஞ்சை

நுங்கிமணி ஆக்கியவன் நூல்திகழு(ம்) மார்பன்

திங்களணி சென்னியிறை சிக்கலுறை செல்வன்

எங்களரன் அங்கழலை ஏத்தவரும் இன்பே.


மங்கலம் எலாம் அருளும் மன்னன் - எல்லா நலங்களையும் அருளும் தலைவன்;

அரு-நஞ்சை நுங்கி மணி ஆக்கியவன் - உண்ணற்கு அரிய கொடிய விடத்தை உண்டு கண்டத்தில் மணியாகச் செய்தவன்; (நுங்குதல் - விழுங்குதல்); (சுந்தரர் தேவாரம் - 7.51.11 - "வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய நுங்கி");

நூல் திகழும் மார்பன் - மார்பில் முப்புரி நூல் அணிந்தவன்;

திங்கள் அணி சென்னி இறை - சந்திரனை முடிமேல் அணிந்த இறைவன்;

சிக்கல் உறை செல்வன் - சிக்கலில் உறையும் செல்வன்;

எங்கள் அரன் அம் கழலை ஏத்த வரும் இன்பே - எம் சிவபெருமானுடைய அழகிய திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;


7)

கூறரிவை ஆகியவன் நீறணிகு ணத்தன்

ஆறரவம் ஆர்சடையன் ஆரமென மார்பில்

சீறரவம் ஆருமிறை சிக்கலுறை செல்வன்

ஏறமரும் எந்தையடி ஏத்தவரும் இன்பே.


கூறு அரிவை ஆகியவன் - ஒரு பாகம் பெண் ஆகியவன்; (அரிவை - பெண்);

நீறு அணி குணத்தன் - (சந்தனம் முதலியன பூசாமல்) திருநீற்றைப் பூசும் குணம் உடையவன்;

ஆறு அரவம் ஆர் சடையன் - கங்கையும் பாம்பும் பொருந்திய சடையை உடையவன்; (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்);

ஆரம் என மார்பில் சீறு அரவம் ஆரும் இறை - மாலைபோல மார்பில் சீறும் பாம்பை அணியும் இறைவன்;

சிக்கல் உறை செல்வன் - சிக்கலில் உறையும் செல்வன்;

ஏறு அமரும் எந்தை அடி ஏத்த வரும் இன்பே - இடப வாகனனான எம் தந்தையின் திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்;


8)

தண்மதியி லாதுமலை தன்னையசை மூடன்

புண்மிகவும் ஆகவிரல் ஊன்றியபு ராணன்

திண்மதில்கள் அட்டவிறை சிக்கலுறை செல்வன்

வெண்மதியன் நற்கழலை வேண்டவரும் இன்பே.


தண் மதி இலாது மலைதன்னை அசை மூடன் - (தணிந்த சிந்தை இல்லாமல்) கடும் சினத்தோடு கயிலையை அசைத்த அறிவற்ற இராவணனை;

புண் மிகவும் ஆக விரல் ஊன்றிய புராணன் - அவன் மிகவும் புண்ணாகும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கிய பழையவன்; (இலக்கணக்குறிப்பு: "மூடற் புண்....ஊன்றிய புராணன்" - உயர்திணையில் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள "ன்" ஒற்று "ற்" என்று திரியும்; இப்பாடலில் அந்த முதற்சொல் அடி ஈற்றில் உள்ளதால், படிப்போர் வசதி கருதி "மூடன்" என்றே காட்டப்பெற்றது);

திண் மதில்கள் அட்ட இறை - வலிய முப்புரங்களை அழித்த இறைவன்;

சிக்கல் உறை செல்வன் - சிக்கலில் உறையும் செல்வன்;

வெண்மதியன் நற்கழலை வேண்ட வரும் இன்பே - வெண்திங்களை அணிந்த சிவபெருமானுடைய நல்ல திருவடியைப் பணிந்து பிரார்த்தித்தால் இன்பம் வந்தடையும்;


9)

போதனரி காண்பரிய பொங்கழல தானான்

ஓதமுமிழ் நஞ்சுதனை உண்டமணி கண்டன்

சீதமலி சோலையணி சிக்கலுறை செல்வன்

போதமுரை ஆலனடி போற்றவரும் இன்பே.


போதன் அரி காண்பு அரிய பொங்கு அழல்அது ஆனான் - தாமரைப்பூவில் இருக்கும் பிரமனாலும் திருமாலாலும் காண்பதற்கு அரிய, எல்லையில்லாத சோதி ஆனவன்; (போது - பூ; போதன் - பூவில் இருக்கும் பிரமன்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.9 - "போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்");

ஓதம் உமிழ் நஞ்சுதனை உண்ட மணிகண்டன் - கடல் கக்கிய விடத்தை உண்ட நீலகண்டன்; (ஓதம் - கடல்);

சீதம் மலி சோலை அணி சிக்கல் உறை செல்வன் - குளிர்ச்சி மிக்க சோலை சூழ்ந்த சிக்கலில் உறையும் செல்வன்; (சீதம் - குளிர்ச்சி)

போதம் உரை ஆலன் அடி போற்ற வரும் இன்பே - ஞானம் உரைத்த கல்லாலின்கீழ் அமர்ந்த தட்சிணாமூர்த்தி ஆன சிவபெருமான் திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்; (போதம் - ஞானம்); (ஆல் - ஆலமரம்; ஆலன் - ஆலமரத்தின்கீழ் இருப்பவன்); (அப்பர் தேவாரம் - 4.88.1 - "பூந்துருத்திம் மகிழும் ஆலனை ஆதிபுராணனை நாமடி போற்றுவதே");


10)

வீணருரை வெற்றுமொழி விட்டொழிமின் வில்லின்

நாணரவ மாகநகர் மூன்றவிய எய்தான்

சேணணவு சோலையணி சிக்கலுறை செல்வன்

பூணரவன் நம்பனடி போற்றவரும் இன்பே.


வீணர் உரை வெற்று மொழி விட்டு ஒழிமின் - வீணர்கள் சொல்லும் பொருளற்ற வார்த்தைகளை மதிக்கவேண்டா;

வில்லின் நாண் அரவம் ஆக, நகர் மூன்று அவிய எய்தான் - ஏந்திய மேருவில்லின் நாண் பாம்பு ஆக, முப்புரங்களும் அழியக் கணை எய்தவன்;

சேண் அணவு சோலை அணி சிக்கல் உறை செல்வன் - வானளாவு சோலை சூழ்ந்த சிக்கலில் உறையும் செல்வன்; (சேண் - ஆகாயம்); (அணவுதல் - அணுகுதல்);

பூண் அரவன் நம்பன் அடி போற்ற வரும் இன்பே - நாகாபரணனும் விரும்பத்தக்கவனும் ஆன சிவபெருமான் திருவடியைப் போற்றினால் இன்பம் வந்தடையும்; (பூண் - ஆபரணம்; பூண்தல் - அணிதல்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);


11)

பூவரவம் ஆறுபிறை பொற்சடையில் ஏற்றான்

மூவரணம் ஆரழலில் மூழ்கநகை செய்து

தேவரிடர் தீர்த்தவிறை சிக்கலுறை செல்வன்
சேவடியை வாழ்த்துமவர் செல்வமுடை யோரே.


பூ அரவம் ஆறு பிறை பொற்சடையில் ஏற்றான் - பொன் போன்ற சடையில் மலர்களையும், பாம்பையும், கங்கையையும், பிறைச்சந்திரனையும் அணிந்தவன்;

மூ அரணம் ஆர் அழலில் மூழ்க நகைசெய்து - முப்புரங்களும் தீயில் மூழ்கி அழியுமாறு சிரித்து;

தேவர் இடர் தீர்த்த இறை - தேவர்களின் துன்பத்தைத் தீர்த்த கடவுள்;

சிக்கல் உறை செல்வன் - சிக்கலில் உறையும் செல்வன்;

சேவடியை வாழ்த்தும்அவர் செல்வம் உடையோரே - சிவபெருமான் சேவடியை வாழ்த்தும் அன்பர்கள் செல்வம் உடையவர்களே; (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "சிற்றம் பலமேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment