07.19 – கள்ளில் - (திருக்கண்டலம்)
2016-01-11
கள்ளில் - (இக்காலத்தில் "திருக்கண்டலம்")
(சென்னைக்கு வடமேற்கே உள்ள தலம்)
------------------
(வஞ்சித்துறை - தானா தானனா; - திருவிருக்குக்குறள் அமைப்பு)
(தானா என்பது தனனா என்றும் வரும்)
(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்")
(சம்பந்தர் தேவாரம் - 1.95.2 - "கருதார் புரமெய்வர் எருதே யினிதூர்வர்")
1)
புவியோர் போற்றிடத்
தவியா வாழ்வருள்
சிவனார் மேயது
கவினார் கள்ளிலே.
தவியா வாழ்வு - தவிக்கும் நிலை இல்லாத வாழ்வு - இன்ப வாழ்வு;
சிவனார் மேயது - சிவன் உறைவது;
கவின் ஆர் கள்ளில் - அழகிய திருக்கள்ளில்;
2)
இருதாள் ஏத்துவார்க்
கருள்வார் அண்ணலார்
எருதூர் ஈசனார்
கருதூர் கள்ளிலே.
இரு-தாள் ஏத்துவார்க்கு அருள் வார்-அண்ணலார் - இரண்டு திருவடிகளைத் துதிப்பவர்களுக்கு அருளைச் சொரியும் பெருமானார்; (வார்தல் - சொரிதல்)
எருது ஊர் ஈசனார் - இடப வாகனத்தின்மேல் ஏறிச் செல்லும் ஈசனார்;
கருது ஊர் கள்ளிலே - விரும்பி உறையும் தலம் திருக்கள்ளில்;
3)
கூரார் சூலனார்
காரார் கண்டனார்
நீரார் வேணியார்
ஊராம் கள்ளிலே.
கூர் ஆர் - கூர்மை பொருந்திய;
கார் ஆர் - கரிய;
நீர் ஆர் - கங்கை பொருந்திய;
வேணியார் - சடையினார்;
4)
படநா கத்தினை
வடமாப் பூண்டவர்
இடமோர் மங்கையார்
இடமாம் கள்ளிலே.
படநாகத்தினை வடமாப் பூண்டவர் - படம் உடைய நாகத்தை மார்பில் மாலை போல அணிந்தவர்; (வடமா - வடமாக - மாலையாக; (வடம் - கயிறு; சரம்; மணிவடம்);
5)
பிறையார் சென்னியாய்
இறைவா என்பவர்
குறைதீர் அங்கணன்
உறைவாம் கள்ளிலே.
பிறை ஆர் சென்னியாய் - சந்திரசேகரனே;
இறைவா என்பவர் - இறைவனே என்பவர்களுடைய;
குறை தீர் அங்கணன் - குறைகளைத் தீர்க்கும் அருட்கண் உடையவன்;
உறைவு ஆம் கள்ளில் - உறையும் இடம் திருக்கள்ளில்;
6)
நரரோ டும்பரும்
பரவும் தாளினன்
அரவம் சூடிய
அரனூர் கள்ளிலே.
நரரோடு உம்பரும் பரவும் தாளினன் - மனிதரும் தேவரும் போற்றும் திருவடியினன்;
அரவம் சூடிய அரன் ஊர் கள்ளில் - நாகத்தை முடிமேல் அணிந்த ஹரன் உறையும் ஊர் திருக்கள்ளில்;
7)
சுரும்பார் கொன்றையாய்
கரும்பே காவெனத்
தரும்பே ரன்பினன்
விரும்பூர் கள்ளிலே.
"சுரும்பு ஆர் கொன்றையாய்; கரும்பே; கா" என - "வண்டுகள் ஒலிக்கும் கொன்றையை அணிந்தவனே; கரும்பு போல்பவனே; காத்தருளாய்" என்று இறைஞ்சினால்;
தரும் பேர் அன்பினன் - அருள் தரும் பேரன்பு உடையவன்;
விரும்பு ஊர் கள்ளில் - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் திருக்கள்ளில்;
8)
முடிகள் பத்தினன்
படிய ஊன்றினார்
துடியார் கையினர்
குடியாம் கள்ளிலே.
முடிகள் பத்தினன் படிய ஊன்றினார் - பத்துத்தலையினனான இராவணன் அவனது ஆணவம் அடங்கி வணங்கும்படி திருப்பாத விரலை ஊன்றி நசுக்கியவர்; (படிதல் - கீழ்ப்படிதல்; வணக்கக்குறியாகக் கீழேவிழுதல்);
துடி ஆர் கையினர் - கையில் உடுக்கையை ஏந்தியவர்; (துடி - உடுக்கை);
குடி ஆம் கள்ளிலே - அப்பெருமான் உறைவிடம் திருக்கள்ளில்; (குடி - வாழ்விடம்);
குறிப்பு: "முடிகள் பத்தினன்" என்ற பிரயோகத்தை ஒட்டிய சில பழம் பிரயோகங்கள்:
1. சம்பந்தர் தேவாரம் - 1.79.3 - "எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரியிடை மூன்றினர்"; 2. கல்லாடம் - செய்யுள் 95 - "பெருநிலத் தேவர்கண் மறைநீ ருகுப்ப....." - அடி-25 - "வுழறேர் பத்தினன் மகவென நாறி" = "உழல் தேர் பத்தினன் மகவு என நாறி" = ஓடுகின்ற தேர் பத்தையுடையோன் என்னும் பொருள்படும் பெயரையுடைய தயரதனுக்கு மகனாகத் தோன்றி;
(https://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=70&pno=664 )
3. கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - மேருப் படலம் - 48 - "அன்ன காலை யதுநன்று நன்றெனாத் ... ... சென்னி நான்கினன் செல்லுதல் மேயினான்")
9)
அயன்மால் நேடிட
உயர்ந்தான் கந்தனைப்
பயந்தான் சார்வென
நயந்தான் கள்ளிலே.
அயன் மால் நேடிட உயர்ந்தான் - பிரமனும் விஷ்ணுவும் தேடுமாறு சோதியாகி உயர்ந்தான்; (நேடுதல் - தேடுதல்);
கந்தனைப் பயந்தான் - முருகனைப் பெற்றவன்; (பயத்தல் - பெறுதல் - To beget);
சார்வு என நயந்தான் கள்ளில் - அப்பெருமான் உறைவிடமாகக் கள்ளிலை விரும்பினான்; (சார்வு - இடம் - Place, residence);
10)
நீற்றைப் பூசிடார்
கூற்றைத் தள்ளுவீர்
ஏற்றன் கள்ளிலைப்
போற்றி வாழ்மினே.
கூற்று - பேச்சு;
ஏற்றன் - இடப வாகனன்;
வாழ்மின் - வாழுங்கள்;
11)
வெள்ளம் சேர்சடை
வள்ளல் மேவிய
கள்ளில் கைதொழ
விள்ளும் பாவமே.
வெள்ளம் சேர் சடை வள்ளல் மேவிய - கங்கை பொருந்திய சடையையுடைய வள்ளலான சிவபெருமான் உறைகின்ற; (வெள்ளம் - நீர் - கங்கை);
கள்ளில் கைதொழ - திருக்கள்ளிலைக் கைகூப்பி வணங்கினால்;
விள்ளும் பாவமே - நம் பாவங்கள் நீங்கும்; (விள்ளுதல் - நீங்குதல்);
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment