Saturday, November 11, 2023

07.23 – முதுகுன்றம் (விருத்தாசலம்) - சுடலையில் இருளினில்

07.23 – முதுகுன்றம் (விருத்தாசலம்)

2016-01-23

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" - திருவிராகம் ஒத்த அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - திருவிராகம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது)


1)

சுடலையில் இருளினில் நடமிடு கழலினன்

இடைமெலி மலைமகள் இடமுறை எழிலினன்

அடலெரு தமரரன் அழகிய மதியொடு

படவர வணியிறை பதிபழ மலையே.


சுடலையில் இருளினில் நடம் இடு கழலினன் - சுடுகாட்டில் நள்ளிருளில் திருநடம் செய்யும் திருவடியினன்;

இடை மெலி மலைமகள் இடம் உறை எழிலினன் - மெலிந்த இடையை உடைய உமாதேவி இடப்பக்கம் உறையும் அழகிய திருமேனி உடையவன்;

அடல் எருது அமர் அரன் - வலிய இடபத்தை ஊர்தியாக விரும்பும் ஹரன்; (அடல் - வலிமை);

அழகிய மதியொடு பட-அரவு அணி இறை பதி பழமலையே - அழகிய சந்திரனையும் படம் உடைய நாகத்தையும் அணியும் இறைவன் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (பதி - உறைவிடம்; ஊர்); (பழமலை - முதுகுன்றம் - விருத்தாசலம்);


2)

துன்னிய மலர்கொடு துணையடி தொழுமவர்

நன்னிலை பெறவருள் அரனிமை யவர்பதி

சென்னியில் அணிமதி திரைநதி குரவொடு

பன்னகம் அணியிறை பதிபழ மலையே.


துன்னிய மலர்கொடு துணையடி தொழும்அவர் நன்னிலை பெற அருள் அரன் - நெருங்கத் தொடுத்த மலர்களால் இருதிருவடிகளைத் தொழும் பக்தர்கள் நற்கதி பெற அருளும் ஹரன்; (துன்னுதல் - செறிதல்);

இமையவர் பதி - தேவர்கள் தலைவன்; (பதி - தலைவன்);

சென்னியில் அணி மதி, திரை நதி, குரவொடு பன்னகம் அணி இறை பதி பழமலையே - திருமுடிமேல் அழகிய திங்கள், அலையுடைய கங்கை, குரா மலர் இவற்றோடு பாம்பையும் பூணும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (அணி - அழகிய); (திரை - அலை); (குரவு - குராமலர்); (பன்னகம் - பாம்பு);


3)

சாந்தலர் மணமலி தமிழ்கொடு தொழவினை

மாய்ந்துயர் கதிபெற வரமருள் இனியவன்

ஏந்திழை இடமமர் எழிலவன் நிலவொடு

பாந்தளும் அணியிறை பதிபழ மலையே.


சாந்து, அலர், மணம் மலி தமிழ்கொடு தொழ - சந்தனம், பூக்கள், மணமிக்க தமிழ்ப்பாமாலைகள் இவற்றால் வணங்கினால்; (சாந்து - கலவைச்சந்தனம் - Sandal paste); (அலர் - பூ); (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

வினை மாய்ந்து உயர் கதி பெற வரம் அருள் இனியவன் - அவ்வடியவர்களுடைய வினைகள் அழிந்து அவர்கள் சிவலோகம் அடைய வரம் அருளும் இனியவன்;

ஏந்திழை இடம் அமர் எழிலவன் - உமையை இடப்பக்கம் பாகமாக விரும்பிய அழகன்; (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.110.5 - "கரியுரி போர்த்துகந்த எழிலவன்");

நிலவொடு பாந்தளும் அணி இறை பதி பழமலையே - சந்திரனையும் பாம்பையும் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பாந்தள் - பாம்பு);


4)

அடைவது சுதையென அலைகடல் கடையவும்

விடமெழ வெருவிய சுரரடி தொழுதெழ

உடனொரு மணியென மிடறிடு பரனதி

படர்சடை அணியிறை பதிபழ மலையே.


அடைவது சுதை என அலைகடல் கடையவும் விடம் எழ - அமுதத்தை அடைவோம் என்று எண்ணிக் கடலைக் கடைந்தபோது நஞ்சு தோன்றவும்; (சுதை - அமுதம்); (அலைகடல் - அலைக்கின்ற கடல்);

வெருவிய சுரர் அடி தொழுதெழ - அஞ்சிய தேவர்கள் ஈசன் திருவடியை வணங்கவும்; (வெருவுதல் - அஞ்சுதல்); (சுரர் - தேவர்கள்);

உடன் ஒரு மணி என மிடறு இடு பரன் -உடனே அவ்விடத்தை உண்டு ஒப்பற்ற நீலமணி போலக் கண்டத்தில் இட்ட பரமன்;

நதி படர்சடை அணி இறை பதி பழமலையே - கங்கையைப் படரும் சடையில் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்;


5)

கையினில் உழைமழு கனலெரி யிவைதரி

செய்யவன் ஒருவிடை திகழ்கொடி உடையவன்

மையணி மிடறினன் வளர்மதி அதனொடு

பையர வணியிறை பதிபழ மலையே.


கையினில் உழை, மழு, கனல்-ரி இவை தரி செய்யவன் - கையில் மான், மழு, ஒளி வீசும் நெருப்பு இவற்றைத் தாங்கும் செம்மேனியன்; (உழை - மான்); (கனல் எரி - கனல்கின்ற தீ); (செய் - சிவப்பு); (அப்பர் தேவாரம் - 4.37.5 - "காடிட மாக நின்று கனலெரி கையில் ஏந்திப்");

ஒரு விடை திகழ் கொடி உடையவன் - ஒப்பற்ற இடபக்கொடி உடையவன்;

மை அணி மிடறினன் - கறையை அணிந்த கண்டம் உடையவன்; (மை - கருநிறம்; கறை);

வளர்-மதி அதனொடு பை-அரவு அணி இறை பதி பழமலையே - இளம் திங்களையும் படம் உடைய பாம்பையும் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பை - பாம்பின் படம்);


6)

மணிமலர் மறைமொழி இவைகொடு மலரடி

பணிபவர் அருவினை பறைதர அருள்பதி

துணிமதி அதனொடு சுழிநதி மணமலர்

பணிமுடி அணியிறை பதிபழ மலையே.


மணிமலர் மறைமொழி இவைகொடு மலரடி பணிபவர் அருவினை பறைதர அருள் பதி - அழகிய பூக்கள், வேதமந்திரங்கள் இவற்றால் மலர் போன்ற திருவடியைத் தொழும் அன்பர்களது அரிய வினைகளெல்லாம் அழிய அருளும் தலைவன்; (மணி - அழகு); (மறை - வேதம்); (பறைதல் - அழிதல்); (தருதல் - ஒரு துணைவினை); (பதி - தலைவன்);

துணிமதி அதனொடு சுழிநதி மணமலர் பணி முடி அணி இறை பதி பழமலையே - பிறைச்சந்திரனோடு சுழிகள் உடைய கங்கையையும் வாசமலர்களையும் நாகப்பாம்பையும் திருமுடியில் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (துணிமதி - நிலாத்துண்டம்); (துணி - துண்டம்; துணிதல் - வெட்டுண்ணுதல்); (சுழி - நீர்ச்சுழி - Whirl, vortex, eddy); (சுழித்தல் - 2. To form whirlpools, eddies; நீர்ச்சுழியுண்டாதல்);(பணி - நாகம்); (பெரிய புராணம் - சண்டேசுர நாயனார் புராணம் - 12.20.56 - "துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்");


7)

காய்கணை கொடுதிரி புரமெரி சிலையினன்

ஆய்மலர் கொடுதொழும் அடியவர் அருவினை

மாய்தர அருளரன் மலைமகள் அவள்பதி

பாய்விடை அமரிறை பதிபழ மலையே.


காய்கணைகொடு திரிபுரம் எரி-சிலையினன் - எரிக்கும் அம்பினால் முப்புரங்களை எரித்த வில்லை உடையவன்; (காய்தல் - சுடுதல்; எரித்தல்; அழித்தல்); (கணை - அம்பு); (சிலை - வில்);

ஆய்மலர் கொடு தொழும் அடியவர் அருவினை மாய்தர அருள் அரன் - ஆய்ந்து எடுத்த சிறந்த பூக்களால் வணங்கும் பக்தர்களது அரிய வினைகள் அழிய அருளும் ஹரன்; (ஆய்தல் - தெரிந்தெடுத்தல் - To select, choose); (மாய்தர - மாய; தருதல் - ஒரு துணைவினை);

மலைமகள் அவள் பதி - உமாபதி; (பதி - தலைவன்; கணவன்); (அவள் - பகுதிப்பொருள்விகுதி);

பாய்விடை அமர் இறை பதி பழமலையே - பாய்ந்து செல்லக்கூடிய இடபத்தை ஊர்தியாக விரும்பிய இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பதி - தலம்);


8)

அருவரை எறிதச முகனழ நெரிதரு

திருவிரல் உடையவன் நிருபமன் அழிவிலன்

உருகிய மனமுடை அடியவர் இடர்துடை

பரிவுடை அரனுறை பதிபழ மலையே.


அருவரை எறி தசமுகன் அழ நெரிதரு திருவிரல் உடையவன் - கயிலாயமலையைப் பெயர்த்து வீச முயன்ற இராவணனை அவன் அழுமாறு நசுக்கிய திருவிரல் உடையவன்; (அரு வரை - அரிய மலை - கயிலாயமலை); (நெரித்தல் - நசுக்குதல்); (தருதல் - ஒரு துணைவினை) (சம்பந்தர் தேவாரம்- 1.125.8 - "கரமிரு பதுமுடி யொருபது முடையவன் உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை");

நிருபமன் - ஒப்பில்லாதவன்;

அழிவு இலன் - அழிவற்றவன்;

உருகிய மனம் உடை அடியவர் இடர் துடை பரிவு உடை அரன் உறை பதி பழமலையே - மனம் உருகும் அடியவர்களது துன்பங்களைத் தீர்க்கும் கருணை உடைய ஹரன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (துடைத்தல் - நீக்குதல்); (பரிவு - அன்பு; இரக்கம்);


9)

தரையகழ் அரியுயர் அயனிவர் தொழுமெரி

அரையினில் உரிவையும் அரவமும் அணியரன்

அரகர எனவனு தின(ம்)நினை பவர்மகிழ்

பரகதி தருமிறை பதிபழ மலையே.


தரை அகழ் அரி, உயர் அயன் இவர் தொழும் எரி - (அடிமுடி தேடி) நிலத்தை அகழ்ந்த திருமால், மேலே உயர்ந்த பிரமண் இவர்கள் இருவரும் வணங்கிய சோதி;

அரையினில் உரிவையும் அரவமும் அணி அரன் - அரையில் தோலும் பாம்பும் அணிந்த ஹரன்; (உரிவை - தோல்); (அரவம் - பாம்பு);

அரகர என அனுதினம் நினைபவர் மகிழ் பரகதி தரும் இறை பதி பழமலையே - அரகர என்று தினமும் நினைந்து வழிபடும் அன்பர்கள் விரும்புகின்ற பரகதியை அளிக்கும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (மகிழ்தல் - விரும்புதல்); (பரகதி - மேலான நிலை - முக்தி); (தினநினை - தினம் நினை; புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);


10)

கலிமிகு வழியுரை கசடர்கள் அறிகிலர்

மெலிவுறு மதிதனை முடிமிசை அணியரன்

ஒலிகழல் அடிதொழ உயர்வினை அருளிறை

பலிதிரி பரனுறை பதிபழ மலையே.


கலி மிகு வழி உரை கசடர்கள் அறிகிலர் - துன்பம் மிகுந்த மார்க்கங்களைச் சொல்கின்ற கீழோர் அறியமாட்டார்கள்; (கலி - துன்பம்; வஞ்சகம்); (கசடர் - குற்றமுள்ளவர்);

மெலிவுறு மதிதனை முடிமிசை அணி அரன் - தேய்ந்து வாடிய சந்திரனைத் திருமுடிமேல் அணிந்த ஹரன்; (மெலிதல் - உடல் மெலிதல்; வருந்துதல்);

ஒலி-கழல் அடி தொழ உயர்வினை அருள் இறை - ஒலிக்கும் கழலை அணிந்த திருவடியை வணங்கினால் உயர்வை அருளும் இறைவன்;

பலி திரி பரன் உறை பதி பழமலையே - பிச்சைக்கு உழலும் பரமன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பலி - பிச்சை);


11)

வகைபல மலர்கொடு வழிபடும் அடியவர்

அகமகிழ் வுறவினை அறவருள் அரனடி

புகைமலர் கொடுசுரர் தொழவொரு நகைகொடு

பகைமதில் எரியிறை பதிபழ மலையே.


வகை பல மலர்கொடு வழிபடும் அடியவர் அகமகிழ்வு உற, வினை அற, அருள் அரன் - பலவகைப் பூக்களால் வழிபடும் அடியவர்கள் மனம் மகிழவும் அவர்கள் வினைகள் அழியவும் அருளும் ஹரன்;

அடி புகை மலர்கொடு சுரர் தொழ, ஒரு நகைகொடு பகை மதில் எரி இறை பதி பழமலையே - திருவடியைத் தூபத்தாலும் பூக்களாலும் தேவர்கள் போற்றவும் அவர்களுக்கு இரங்கி ஒரு சிரிப்பால் பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (புகை - நறும்புகை - தூபம்); (நகை - சிரிப்பு);


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு :

சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.

முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.

பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".

முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.


2) சம்பந்தர் தேவாரம் - 1.123.5 -

பிடியத னுருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகண பதிவர வருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment