Saturday, November 11, 2023

07.21 – வேட்களம் (திருவேட்களம்) - இசைமலி தாளிணை

07.21 – வேட்களம் (திருவேட்களம்)

2016-01-19

வேட்களம் (திருவேட்களம்) (சிதம்பரத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(வஞ்சி விருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(யாப்புக் குறிப்பைக் கீழே காண்க)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.2 - "அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்")

(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


1)

இசைமலி தாளிணை ஏத்துமதி

அசைவறச் சடைமிசை அணியரனூர்

விசைமலி கணைதொடு வேட்டுவனாய்

விசயனுக் கருளிய வேட்களமே.


இசை மலி தாள் இணை ஏத்து மதி - புகழ் மிக்க இரு-திருவடிகளை வணங்கிய சந்திரனுடைய; (இசை - புகழ்);

அசைவு அறச் சடைமிசை அணி அரன் ஊர் - கலக்கம் தீரும்படி சடையின்மேல் அணிந்த சிவபெருமான் உறையும் இடம்; (அசைவு - சலனம்; தளர்ச்சி; வருத்தம்);

விசை மலி கணை தொடு வேட்டுவன் ஆய் - விரைந்து செல்லும் அம்பை ஏவும் வேடன் ஆகி; (விசை - வேகம்);

விசயனுக்கு அருளிய வேட்களமே - அருச்சுனனுக்கு அருளிய திருவேட்களம் ஆகும்;


2)

கானிடை ஆடிடு கழல்தொழுத

கூனிள மதியணி குஞ்சியினான்

மானிணை நோக்குடை மங்கையுறை

மேனியன் ஊர்திரு வேட்களமே.


கானிடை ஆடிடு கழல் தொழுத கூன் இள மதி அணி குஞ்சியினான் - சுடுகாட்டில் திருநடம் செய்யும் திருவடியை வணங்கிய வளைந்த இளம்பிறைச்சந்திரனை அணிந்த சென்னி உடையவன்; (கான் - காடு - சுடுகாடு); (கூன் - வளைவு); (குஞ்சி - தலைமயிர்; தலை);

மான் இணை நோக்குஉடை மங்கை உறை மேனியன் ஊர் திருவேட்களமே - மான் போன்ற பார்வை உடைய உமையை இடப்பக்கம் தாங்கிய திருமேனியன் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


3)

இடைமெலி மங்கையை இடமுடையான்

உடையெனக் கொல்புலி உரிவையினான்

சடையிடை ஆறணி சங்கரனோர்

விடையினன் ஊர்திரு வேட்களமே.


இடைமெலி மங்கையை இடம் உடையான் - மெலிந்த இடையுடைய உமையை இடப்பக்கம் உடையவன்;

உடை எனக் கொல்-புலி உரிவையினான் - கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை உடையாகக் கொண்டவன்; (உரிவை - தோல்);

சடையிடை ஆறு அணி சங்கரன் - கங்காதரன், சங்கரன்;

ர் விடையினன் ஊர் திருவேட்களமே - ஒப்பற்ற இடப வாகனம் உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (ஓர் - ஒப்பற்ற);


4)

கண்ணமர் நெற்றியன் கதிர்மதியக்

கண்ணியன் இடமொரு காரிகையான்

தண்ணதி தங்கிய சடையுடைய

விண்ணவர் கோனிடம் வேட்களமே.


கண் அமர் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

கதிர்-மதியக் கண்ணியன் - கதிர்கள் உடைய திங்களைக் கண்ணி போல முடிமேல் அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

இடம் ஒரு காரிகையான் - அர்த்தநாரீஸ்வரன்; (காரிகை - பெண்);

தண் நதி தங்கிய சடை உடைய விண்ணவர் கோன் இடம் வேட்களமே - குளிர்ந்த கங்கை தங்கிய சடையை உடையவனும் தேவர்கள் தலைவனுமான சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


5)

காருரு மாகரி கதறவுரி

சீருறு விறலினன் சீறரவம்

நீருறு சடையினன் நீள்மதிலெய்

மேருவில் லானிடம் வேட்களமே.


கார் உரு மா கரி கதற உரி சீர் உறு விறலினன் - கரிய உருவம் உடைய பெரிய ஆனை கதறும்படி அதன் தோலை உரித்த புகழ் உடைய வெற்றி உடையவன்; (சீர் - புகழ்; பெருமை); (விறல் - வெற்றி; வீரம்; வலிமை);

சீறு அரவம் நீர் உறு சடையினன் - சீறுகின்ற நாகமும் கங்கையும் இருக்கும் சடையை உடையவன்;

நீள் மதில் எய் மேருவில்லான் இடம் வேட்களமே - பெரிய முப்புரங்களையும் எய்த மேருவில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


6)

பூவன பொன்னடி போற்றியவர்

காவலன் நெற்றியிற் கண்ணுடையான்

தேவருக் கிடர்புரி திரிபுரங்கள்

வேவவெய் தானிடம் வேட்களமே.


பூ அன பொன்னடி போற்றியவர் காவலன் - மலர் போன்ற பொற்பாதத்தை வணங்கிய பக்தர்களைக் காப்பவன்; (அன - அன்ன);

நெற்றியிற் கண் உடையான் - நெற்றிக்கண்ணன்;

தேவருக்கு இடர்புரி திரிபுரங்கள் வேவ எய்தான் இடம் வேட்களமே - தேவர்களுக்கு இன்னல் விளைத்த முப்புரங்களும் வெந்து அழியும்படி ஓர் கணை எய்த சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


7)

கொள்ளியை ஏந்திய கூளிபாட

நள்ளிரு ளில்திரு நடமிடுவான்

தெள்ளிய புனலணி செஞ்சடையான்

வெள்விடை யானிடம் வேட்களமே.


கொள்ளியை ஏந்திய கூளி பாட நள்ளிருளில் திருநடம் இடுவான் - கொள்ளியை ஏந்திப் பேய்கள் பாடிச் சூழ்ந்திருக்க, நள்ளிருளில் கூத்தாடுபவன்; (கூளி - பேய்; பூதம்);

தெள்ளிய புனல் அணி செஞ்சடையான் - தெளிந்த நீரை உடைய கங்கையைச் செஞ்சடையில் ஏற்றவன்;

வெள்விடையான் இடம் வேட்களமே - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்;


8)

வெல்விடை ஊர்தியன் வெற்பிடந்த

வல்லரக் கன்தன வாய்களழ

மெல்விரல் ஊன்றிய விமலனிடம்

வில்விச யற்கருள் வேட்களமே.


வெல்விடை ஊர்தியன் வெற்பு இடந்த வல்-அரக்கன்தன வாய்கள் அழ - வெற்றியுடைய இடபவாகனனது கயிலைமலையைப் பெயர்த்த வலிய அரக்கனான இராவணனுடைய வாய்கள் அழும்படி; (இடத்தல் - பெயர்த்தல்); (தன = தன் + ; - ஆறாம் வேற்றுமை உருபு);

மெல்விரல் ஊன்றிய விமலன் இடம் - மென்மையான திருப்பாத விரலை ஊன்றிய தூயனான சிவபெருமான் உறையும் தலம்;

வில்விசயற்கு அருள் வேட்களமே - வில்லுக்கு விஜயன் என்ற புகழ் உடைய அருச்சுனனுக்கு அருள்புரிந்த திருவேட்களம் ஆகும்;


9)

வாதிடு நான்முகன் மாலறியா

ஆதியில் அந்தமில் ஆரழலன்

மாதிணை மேனியன் மாமறைசொல்

வேதியன் ஊர்திரு வேட்களமே.


வாதிடு நான்முகன் மால் அறியா - வாது செய்த பிரமன் திருமால் இவர்களால் அறியப்படாத;

ஆதி இல் அந்தம் இல் ஆர் அழலன் - ஆதியும் அந்தமும் இல்லாத அரிய சோதி வடிவினன்;

மாது இணை மேனியன் - உமை ஒரு பாகமாக இணைந்த திருமேனியை உடையவன்;

மாமறை சொல் வேதியன் - சிறந்த பெரிய வேதங்களால் சொல்லப்படும் வேதியன்; வேதங்களைப் பாடியருளிய வேதியன்;


10)

மெய்யுரை யாதுழல் வீணர்களின்

பொய்களை நீங்குமின் புந்தியுளீர்

செய்வினை தீரிறை செம்பவள

மெய்யினன் ஊர்திரு வேட்களமே.


மெய் உரையாது உழல் வீணர்களின் பொய்களை நீங்குமின் புந்தி உளீர் - அறிவுடையவர்களே! உண்மையைச் சொல்லாமல் திரிகின்ற துஷ்டர்கள் சொல்லும் பொய்களை நீங்குங்கள்; (வீணன் - பயனற்றவன்; துன்மார்க்கன்); (புந்தி - புத்தி - அறிவு);

செய்வினை தீர் இறை - முன்பு செய்த வினைகளைத் தீர்க்கும் இறைவன்;

செம்பவள மெய்யினன் ஊர் திரு வேட்களமே - செம்பவளம் போல் செம்மேனி உடைய சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (மெய் - மேனி); (சம்பந்தர் தேவாரம் - 1.61.7 - "மலைமகளோர் பாகமாம் மெய்யினான்");


11)

சுடலையின் நீறணி தூயனொரு

புடையணி மாதமர் பொற்புடையான்

அடல்விடை ஊர்தியன் ஆலமணி

மிடறுடை யானிடம் வேட்களமே.


சுடலையின் நீறு அணி தூயன் - சுடுகாட்டுச் சாம்பலை அணியும் தூயவன்;

ஒரு புடை அணி மாது அமர் பொற்பு உடையான் - ஒரு பக்கம் அழகிய மங்கை இருக்கும் குணம் உடையவன்; (பொற்பு - அழகு; தன்மை);

அடல் விடை ஊர்தியன் - வலிய எருதை வாகனமாக உடையவன்;

ஆலம் அணி மிடறு உடையான் இடம் வேட்களமே - விடத்தைக் கண்டத்தில் அணிந்த சிவபெருமான் உறையும் ஊர் திருவேட்களம் ஆகும்; (ஆலம் - நஞ்சு); (மிடறு - கண்டம்);

(ஆலமணிமிடறு - 1. ஆலம் அணி மிடறு; 2. ஆல மணி மிடறு);


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ('விளம் விளம் விளங்காய்');

  • தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா / தானதானா / தனனதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.112.5 -

வீறுநன் குடையவள் மேனிபாகம்

கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்

தேறலுண் டெழுதரு சிவபுரமே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment